வேற்றுமை நயமென்பார், "வீற்று வீற்றாக வேதனை கொள்வ"தென்றார். வேதனை
- உணர்வு. வேதனை கொள்வதென்பது ஒரு சொல்லால் உணர்தலென்னும் பொருளதாயிற்று. பொன்றக் கெடாப் பொருள் - நித்தப் பொருள்; முதற் பொருள் என்றலுமாம் நித்தப்
பொருளின் நித்தத்துவத்துக்குரிய காரணங் காண்டலும், அதனால் அத்தன்மை யெய்துதலும்
உணர்தலாகாமையானும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புமாகிய காரண மூன்றுங்
கூடிச் செம்மை நிறமாகிய காரியத்தைப் பயத்தல் எவ்வாறென வறிதல் கூடாமை யானும்,
"ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்குள்ளம் தான் இலையென்றல்" என்றார்.
புரிவின்மை - உணரவாராமை; புரிதல் - விளங்குதல். உள்ளத்தின் செயல் உணர்தலால்
ஒற்றுமை நயத்தால் "உள்ளம்" என்றார், மடவோரும் ஏளிதினுணர்வதாகலின், இயல்பு
நலத்தை, "நல்ல இயல்பு நயம்" என்றார்.
228-34.இவற்றின்
நாம் கொள்பயன்-இந்நால்வகை நயங்களாலும் நாம் கொள்ளும் பயன்களாவன; தொக்க
பொருள் அலது ஒன்று இல்லை என்றும் - எல்லாம் காரண காரியமாய்த் தொக்க பொருள்களேயன்றித்
தனியே ஒன்று கிடையாதென்றும்; அப் பொருளிடைப் பற்று ஆகாதென்றும் - அப்பொருள்களிடத்தே
பற்று வைத்தல் கூடாதென்றும்; செய்வானொடு கோட்பாடு இலை என்றும் - வினை முதலாகிய
கருத்தாவொடு செய்கைக்கு இயைபு கொள்ளுதல் இல்லை யென்றும்; எய்து காரணத்தால்
காரியம் என்றும் - பொருந்துகின்ற காரணத்தினால் காரியம் பிறக்குமென்றும்;
அதுவும் அன்று அது அலாததுமன்று என்றும் - அது காரண காரியமுமன்று அல்லாதது மன்று
என்றும்; விதிமுறை - முறை முறையாக; தொகையினால் நான்கும் விரிந்த - தொகை
முதலியவற்றால் நான்காய் விரிந்தன எ - று.
காரண
காரியமாய்த் தொக்கவற்றை ஒற்றுமை நயத்தால் ஒன்றாய்க் காண்டலின், எல்லாம்
தொக்க பொருள் எனத் துணிவது ஒற்றுமை நயத்தாலாம் பயன் என்றார். ஒற்றுமை
நயத்தாற் சுகமென்றும் துக்கமென்றும் தோன்றுவன வேற்றுமை நயத்தால் பல்வேறு
கூறுகளாய் வேறுபட்டுத் தோன்றுதலின், "அப் பொருளிடைப் பற்றாகா" தென்பது பயனாயிற்று.
செய்வோனாகிய காரணத்தால் நிகழும் செய்கையும் கருமமும் புரிவின்மை நயத்தால்
உணர வாராமையின், "செய்வானொடு கோட்பாடிலை" யென்பது பயனாயிற்று. நெல்வித்தினின்று
நெல் முளை தோன்றக் காணும் இயல்பு நயத்தலால் காரணத்தினின்று காரியம் பிறக்கு
மென்ற உணர்வும், வித்து முளையாகாமையும், முளை வித்தின் வேறன்றென்பதும் பயனாயின.
இவ்வாறு ஒவ்வொரு நயமும் முறையே பயனை விளைத்தலின், "விதி முறை விரிந்த"
என்றார். விரிந்த: அன் பெறாது முடிந்த அஃறிணைப் பன்மை முற்றுவினை.
|