235--7.வினா
விடை நான்குள - வினாக்கடகுரிய விடை நான்கு வகையாக உள்ளன ; துணிந்து சொல்லல்-அவை
ஒரு தலையாய்த் துணிந்து கூறலும் ; கூறிட்டு மொழிதல் - பல கூறு செய்து ஒவ்வொன்றாய்க்
கூறலும் ; வினாவினை விடுத்தல் - வினா வெதிர் வினவுமாற்றால் விடை யிறுத்தலும்
; வாய் வாளாமை யென-வாய் பேசாமையு மென்பனவாகும் எ - று.
வினா
விடை யென்று இவ்வாசிரியர் கூறியது தொடுக்கும் வினாவிற்கு விடுக்கும் விடை
யென்னும் பொருளதாகக் கொண்டு, "செப்பினும் வினாவினும் வழாஅ லோம்பல்" (தொல்.
சொல். 13) என்புழிச் செப்பின்கண் அடக்கி, "செப்பு நான்கு வகைப்படும்,
துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல்
என" என்று தெய்வச்சிலையார் கூறுகின்றார். வாளாதிருத்தலை வாளாமை
யென்றார் ; உண்ணாதிருத்தலை உண்ணாமை யென்றாற் போல "வினாவுஞ் செப்பே வினாவெதிர்
வரினே" (தொல். சொல். 14) என்பவாகலின், வினா விடுத்தலினும் வினாவின்
விடுத்தலென்பது சீரிதாத லறிக.
238--9.தோன்றியது
கெடுமோ கெடாதொ என்றால்-தோன்றிய தொரு பொருள் கெடுமோ கெடாதோ என்று
வினாவினால் ; கேடுண்டு என்ற துணிந்து சொலல் ஆகும் - விடை தோன்றியதற்குக்
கேடுண்டு என ஒருதலையாய்த் துணிந்து கூறுதல் துணிந்து சொல்லுதலாம் எ - று.
தோன்றின்
மறைதல் கண்கூடாதலின், தோன்றியது கெடுமோ கெடாதோ என்று வினவுவோர்க்குக்
கெடுமெனத் துணிந்து கூறல் செப்பாயிற்று. தெய்வச்சிலையாரும் "துணிந்து
கூறலாவது தோன்றியது கெடுமோ என்ற வழி, கெடுமென்றல்" என்பர். தோன்றியது
கெடுதற்கு, "தோற்றமுண்டேல் மரணமுண்டு" (7 : 2) என நம்பி யாரூரரும்
கூறியருளுதல் காண்க.
240-3.செத்தான்
பிறப்பானோ பிறவானோ என்று-செத்தவனைக் குறித்து ஒருவன் இவன் மீட்டும் பிறப்பானோ
பிறக்கமாட்டானோ என்று கேட்ட வழி ; செப்பின் - அவற்கிறுக்கும் விடையில்
; பற்றிறந்தானோ அன்மகனோ எனல் - அவன் பற்றறத் துறந்தவனோ அல்லனோ எனப்
பகுத்துத் துறந்தவனாயின் பிறவானென்றும், அல்லனாயின் பிறப்பானென்றும் கூறல்
; கூறிட்டு மொழிதல் - கூறு செய்து விடுத்தலென ; மிக விளம்புவர்-விளங்கச்
சான்றோர் சொல்லுவார்கள் எ - று.
பிறப்புப்
பிறவாமைகட்கு வேண்டும் காரணம் விளங்காமையின் கூறிடல் வேண்டிற்று. "பற்றிறந்தானோ
அன்மகனோ எனல்" கூறிட்டு வினாவிக் காரணம் பெற்று, செவ்விய விடையிறுப்பான்
பற்றிறந்தானாயின் பிறவானென்றும், அன்மகனாயின் பிறப்பானென்றும் மொழிவான்.
|