கடவுள் வாழ்த்து
 
1.
  • மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
  • தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
  • ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
  • தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே
   
2.
  • செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
  • அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
  • வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
  • அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்
   
3.
  • பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான்
  • தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
  • சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
  • நல் மாண்பு பெற்றே ன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்
   
4.
  • கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
  • நற்பால் அழியும் நகை வெண் மதி போல் நிறைந்த
  • சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப்
  • பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார்
   
5.
  • முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
  • அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
  • இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே
  • பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார்