சச்சந்தன் வரலாறு
 
157.
  • நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
  • அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
  • கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
  • சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான்
   
158.
  • வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
  • திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான்
  • நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்
  • கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே
   
159.
  • கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை
  • ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
  • தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
  • காதலால் களிக்கின்றது இவ் வையமே
   
160.
  • தருமன் தண் அளியால் தனது ஈகையால்
  • வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
  • அருமையால் அழகின் கணை ஐந்து உடைத்
  • திருமகன் திரு மா நில மன்னனே
   
161.
  • ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
  • தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
  • தேனை மாரி அன்னான் திசை காவலன்
  • வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்
   
162.
  • செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
  • மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
  • அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
  • வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்
   
163.
  • உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
  • அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண்
  • பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
  • அரிய தேவரும் ஏத்து அரு நீரளே
   
164.
  • எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
  • ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
  • கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள்
  • வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே
   
165.
  • குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
  • அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும்
  • தொழுதாற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல்
  • ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே
   
166.
  • வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
  • நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்
  • கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்
  • பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே
   
167.
  • சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம்
  • பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
  • மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
  • போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே
   
168.
  • மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
  • உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த
  • செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
  • வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே
   
169.
  • ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும்
  • ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம்
  • தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன
  • கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே
   
170.
  • மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
  • அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள்
  • துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள்
  • மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே
   
171.
  • தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல
  • மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண
  • ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
  • ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே
   
172.
  • அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
  • கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
  • உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
  • உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே
   
173.
  • மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப்
  • பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
  • கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
  • இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே
   
174.
  • வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி
  • வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி
  • தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
  • மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே
   
175.
  • பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா
  • ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
  • நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும்
  • மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே
   
176.
  • ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
  • நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்
  • சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
  • வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே
   
177.
  • பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
  • நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக
  • இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
  • அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே
   
178.
  • அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்
  • பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு
  • ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்
  • திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே
   
179.
  • என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
  • இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி
  • ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
  • மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே
   
180.
  • இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
  • அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக்
  • கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர்
  • செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான்
   
181.
  • மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
  • தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன்
  • ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்
  • மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான்
   
182.
  • வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
  • உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள்
  • பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
  • விண்டலர் கோதைக்கு விசயை என்பவே
   
183.
  • அரு மணி மரகதத்து அங் கண் நாறிய
  • எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத்
  • திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப்
  • பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே
   
184.
  • கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
  • சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள்
  • வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள்
  • குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள்
   
185.
  • இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல்
  • மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின்
  • மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
  • கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே
   
186.
  • முந்து நாம் கூறிய மூரித் தானை அக்
  • கந்து கொல் கடாக் களி யானை மன்னவன்
  • பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல்
  • தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே
   
187.
  • மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
  • அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
  • கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
  • பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே
   
188.
  • பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும்
  • அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
  • இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
  • சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே
   
189.
  • காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்
  • மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
  • ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
  • தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்
   
190.
  • தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்
  • பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான்
  • மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட
  • மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்
   
191.
  • பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
  • கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
  • தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக
  • உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்
   
192.
  • பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்
  • களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்த கண்ணாள்
  • ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
  • அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான்
   
193.
  • துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
  • நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்
  • அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
  • பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார்
   
194.
  • துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன்
  • அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை
  • வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு
  • அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே
   
195.
  • இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்
  • தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக்
  • குழை முகக் கொடியொடு குருதி வேலினான்
  • மழை முகில் மாரியின் வைகும் என்பவே
   
196.
  • படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும்
  • கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும்
  • இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
  • கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே
   
197.
  • கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச்
  • செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய
  • துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
  • ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே
   
198.
  • மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
  • பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
  • விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
  • ஒள் நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே
   
199.
  • குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும்
  • தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள்
  • திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம்
  • பைங் கதிர் மதியில் தௌளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே
   
200.
  • களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான்
  • ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
  • பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
  • வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான்
   
201.
  • அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
  • வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
  • விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
  • இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான்
   
202.
  • அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்ட
  • வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
  • கண் அகன் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி
  • மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான்
   
203.
  • எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும்
  • தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய்
  • கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம்
  • பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான்
   
204.
  • வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக்
  • கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன
  • உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
  • நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்
   
205.
  • எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான்
  • முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
  • தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
  • மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான்
   
206.
  • காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ
  • நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
  • பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
  • பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான்
   
207.
  • பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
  • அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
  • விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித்
  • திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே
   
208.
  • கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை
  • மைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக்
  • கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப்
  • பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே
   
209.
  • நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன்
  • பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
  • வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள்
  • கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான்
   
210.
  • காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
  • வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
  • ஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே
  • நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான்
   
211.
  • படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
  • வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி
  • இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
  • நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்
   
212.
  • ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும்
  • கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
  • பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
  • ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான்
   
213.
  • அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்கு
  • அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
  • அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
  • விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான்
   
214.
  • மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்
  • பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டே
  • வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
  • பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான்
   
215.
  • இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
  • முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
  • புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள்
  • மனமாம் நெறி ஓடிய மன்னவனே
   
216.
  • கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
  • முலையார் தடமும் முனியாது படிந்து
  • உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர்
  • மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே
   
217.
  • விரி மா மணி மாலை விளங்கு முடித்
  • திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
  • எரி மா மணி மார்பனும் ஏந்திழையும்
  • அரு மா மணி நாகரின் ஆயினரே
   
218.
  • நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
  • உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
  • அற ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
  • கறை வேல் கணினாள் கனவு உற்றனளே
   
219.
  • பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள்
  • துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின்
  • அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடை
  • வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே
   
220.
  • பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன்
  • கண் கழூஉச் செய்து கலை நல தாங்கி
  • விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
  • வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள்
   
221.
  • இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
  • எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
  • வெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத்
  • தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே
   
222.
  • தான் அமர் காதலி தன்னொடு மா வலி
  • வானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும்
  • தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக்
  • கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்
   
223.
  • தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
  • முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
  • ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
  • வைத்தது போல வளர்ந்ததை அன்றே
   
224.
  • வார் குழை வில் இட மா முடி தூக்குபு
  • கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
  • பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
  • ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான்
   
225.
  • நன்முடி நின் மகனாம் நறு மாலைகள்
  • அன்னவனால் அமரப்படும் தேவியர்
  • நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப்
  • பின்னதனால் பயன் பேசலன் விட்டான்
   
226.
  • இற்று அதனால் பயன் என் என ஏந்திழை
  • உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
  • மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
  • அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள்
   
227.
  • காவி கடந்த கண்ணீரொடு காரிகை
  • ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப்
  • பாவி என் ஆவி வருத்துதியோ எனத்
  • தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான்
   
228.
  • தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள்
  • கண் மலர்த் தாள் கனவின் இயில் மெய் எனும்
  • பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப்
  • பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான்
   
229.
  • காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க்
  • கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத்
  • தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
  • போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள்
   
230.
  • பண் கனியப் பருகிப் பயன் நாடகம்
  • கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செல
  • விண் கனியக் கவின் வித்திய வேல் கணி
  • மண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள்
   
231.
  • கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்
  • கண் பசலை பூத்த காமம்
  • விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள்
  • பெய்து இருந்த பொன் செப்பே போல்
  • அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று
  • ஆய்ந்த அவனிச்ச மாலை
  • பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்
  • நங்கை நலம் தொலைந்ததே
   
232.
  • தூம்பு உடை நெடுங் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
  • தேம்புடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக
  • ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
  • ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான்
   
233.
  • காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட
  • நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
  • கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
  • ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்
   
234.
  • அந்தரத்தார் மயனே என ஐயுறும்
  • தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
  • வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்
  • எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான்
   
235.
  • பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
  • நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
  • அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
  • செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே
   
236.
  • பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய
  • கோல நல் மாமயிலும் கொடு சென்றவன்
  • ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
  • ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான்
   
237.
  • நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
  • கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
  • மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர்
  • பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன்
   
238.
  • ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
  • மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
  • பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
  • ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்
   
239.
  • பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி
  • விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
  • புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
  • கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே
   
240.
  • காதி வேல் வல கட்டியங் காரனும்
  • நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல்
  • ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்
  • கோது செய் குணக் கோதினுள் கோது அனான்
   
241.
  • மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம்
  • என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல்
  • துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
  • என்னை யான் செய்வ கூறுமின் என்னவே
   
242.
  • அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
  • உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
  • கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான்
  • தரும தத்தன் என்பான் இது சாற்றினான்
   
243.
  • தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
  • குவளையே அளவுள்ள கொழுங் கணாள்
  • அவளையே அமிர்தாக அவ் அண்ணலும்
  • உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்
   
244.
  • விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது
  • பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்
  • எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
  • தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே
   
245.
  • தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
  • பின்னை வெளவில் பிறழ்ந்திடும் பூ மகள்
  • அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப்
  • பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே
   
246.
  • திலக நீள் முடித் தேவரும் வேந்தரும்
  • உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
  • குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
  • பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்
   
247.
  • அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல்
  • வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
  • மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
  • அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ
   
248.
  • உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
  • கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
  • இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
  • அறங்கள் வெளவ அதன் புறம் காக்கலார்
   
249.
  • யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின்
  • தேவர் என்பது தேறும் இவ் வையகம்
  • காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
  • நாவினும் உரையார் நவை அஞ்சுவார்
   
250.
  • தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ
  • ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
  • வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
  • மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே
   
251.
  • வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
  • ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
  • வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு
  • ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்
   
252.
  • குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்
  • நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
  • பிழைப்பிலாள் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா
  • இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார்
   
253.
  • நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
  • கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும்
  • அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
  • குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்
   
254.
  • பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
  • குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல்
  • இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
  • நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான்
   
255.
  • கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி
  • நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப்
  • பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
  • ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான்
   
256.
  • தார்ப் பொலி தரும தத்தன்
  • தக்கவாறு உரப்பக் குன்றில்
  • கார்த்திக விளக்கு இட்டு அன்ன வியர்த்துப் பொங்கி
  • கடி கமழ் குவளப் பந்தார்
  • போர்த்த தன் அகலம் எல்லாம்
  • பொள் என வியர்த்ப் பொங்கி
  • நீர்க் கடல் மகரப் பேழ்வாய் மதனன்
  • மற்று இதனச் சொன்னான்
   
257.
  • தோளினால் வலியர் ஆகித்
  • தொக்கவர் தலைகள் பாற
  • வாளினால் பேசல் அல்லால்
  • வாயினால் பேசல் தேற்றேன்
  • காள மேகங்கள் சொல்லிக்
  • கருனையால் குழைக்கும் கைகள்
  • வாள் அமர் நீந்தும் போழ்தின்
  • வழு வழுத்து ஒழியும் என்றான்
   
258.
  • நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய்
  • எல்லாம் வியர்த்து நொய்தின்
  • வண் முத்தம் நிரை கொள் நெற்றி
  • வார் முரி புருவம் ஆக்கிக்
  • கண் எரி தவழ வண்கை
  • மணி நகு கடகம் எற்றா
  • வெண் நகை வெகுண்டு நக்குக்
  • கட்டியங் காரன் சொன்னான்
   
259.
  • என் அலால் பிறர்கள் யாரே
  • இன்னவை பொறுக்கும் நீரார்
  • உன்னலால் பிறர்கள் யாரே
  • உற்றவற்கு உறாத சூழ்வார்
  • மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு
  • வானவர்க்கு இறைவன் ஆக
  • பொன் எலாம் விளைந்து பூமி
  • பொலிய யான் காப்பல் என்றான்
   
260.
  • விளைக பொலிக அஃதே
  • உரைத்திலம் வெகுள வேண்டா
  • களைகம் எழுகம் இன்னே
  • காவலன் கூற்றம் கொல்லும்
  • வளை கய மடந்தை கொல்லும்
  • தான் செய்த பிழைப்புக் கொல்லும்
  • அளவு அறு நிதியம் கொல்லும்
  • அருள் கொல்லும் அமைக என்றான்
   
261.
  • நிலத் தலைத் திருவனாள் தன்
  • நீப்பரும் காதல் கூர
  • முலைத் தலைப் போகம் மூழ்கி
  • முகிழ் நிலா முடிகொள் சென்னி
  • வெலற்கு அரும் தானை நீத்த
  • வேந்தனை வெறுமை நோக்கிக்
  • குலத்தொடும் கோறல் எண்ணிக்
  • கொடியவன் கடிய சூழ்ந்தான்
   
262.
  • கோன் தமர் நிகளம் மூழ்கிக்
  • கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்
  • ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம்
  • இரு நிதி முகந்து நல்கி
  • ஊன்றிய நாட்டை எல்லாம்
  • ஒரு குடை நீழல் செய்து
  • தோன்றினான் குன்றத்து உச்சிச்
  • சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே
   
263.
  • பருமித்த களிறும் மாவும்
  • பரந்தியல் தேரும் பண்ணித்
  • திருமிக்க சேனை மூதூர்த்
  • தெருவுதொறும் எங்கும் ஈண்டி
  • எரி மொய்த்த வாளும் வில்லும்
  • இலங்கு இலை வேலும் ஏந்திச்
  • செரு மிக்க வேலினான் தன்
  • திருநகர் வளைந்தது அன்றே
   
264.
  • நீள் நில மன்ன போற்றி
  • நெடு முடிக் குருசில் போற்றி
  • பூண் அணி மார்ப போற்றி
  • புண்ணிய வேந்தே போற்றி
  • கோள் நினைக் குறித்து வந்தான்
  • கட்டியங் காரன் என்று
  • சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான்
  • செய்ய கோல் வெய்ய சொல்லான்
   
265.
  • திண் நிலைக் கதவம் எல்லாம்
  • திருந்து தாழ் உறுக்க வல்லே
  • பண்ணுக பசும் பொன் தேரும்
  • படு மதக் களிறும் மாவும்
  • கண் அகன் புரிசை காக்கும்
  • காவலர் அடைக என்றான்
  • விண் உரு மேறு போன்று
  • வெடிபட முழங்கும் சொல்லான்
   
266.
  • புலிப் பொறிப் போர்வை நீக்கிப்
  • பொன் அணிந்து இலங்குகின்ற
  • ஒலிக் கழல் மன்னர் உட்கு
  • உருச் சுடர் வாளை நோக்கிக்
  • கலிக்கு இறை ஆய நெஞ்சின்
  • கட்டியங் காரன் நம்மேல்
  • வலித்தது காண்டும் என்று
  • வாள் எயிறு இலங்க நக்கான்
   
267.
  • நங்கை நீ நடக்கல் வேண்டும்
  • நன் பொருட்கு இரங்கல் வேண்டா
  • கங்குல் நீ அன்று கண்ட
  • கனவு எல்லாம் விளைந்த என்னக்
  • கொங்கு அலர் கோதை மாழ்கிக்
  • குழை முகம் புடைத்து வீழ்ந்து
  • செங் கயல் கண்ணி வெய்ய
  • திருமகற்கு அவலம் செய்தாள்
   
268.
  • மல் அலைத்து எழுந்து வீங்கி
  • மலை திரண்ட அனைய தோளான்
  • அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த
  • அமிர்தம் அன்னாளை எய்திப்
  • புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப்
  • பொம்மல் வெம் முலையினாட்குச்
  • சொல்லுவான் இவைகள் சொன்னான்
  • சூழ் கழல் காலினானே
   
269.
  • சாதலும் பிறத்தல் தானும்
  • தம் வினைப் பயத்தின் ஆகும்
  • ஆதலும் அழிவும் எல்லாம்
  • அவை பொருட்கு இயல்பு கண்டாய்
  • நோதலும் பரிவும் எல்லாம்
  • நுண் உணர்வு இன்மை அன்றே
  • பேதை நீ பெரிதும் பொல்லாய்
  • பெய் வளைத் தோளி என்றான்
   
270.
  • தொல்லை நம் பிறவி எண்ணில்
  • தொடு கடல் மணலும் ஆற்றா
  • எல்லைய அவற்றுள் எல்லாம்
  • ஏதிலம் பிறந்து நீங்கிச்
  • செல்லும் அக் கதிகள் தம்முள்
  • சேரலம் சேர்ந்து நின்ற
  • இல்லினுள் இரண்டு நாளைச்
  • சுற்றமே இரங்கல் வேண்டா
   
271.
  • வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி
  • வாமனால் வடித்த நுண் நூல்
  • உண்டு வைத்து அனைய நீயும்
  • உணர்வு இலா நீரை ஆகி
  • விண்டு கண் அருவி சோர
  • விம் உயிர்த்து இனையை ஆதல்
  • ஒண் தொடி தகுவது அன்றால்
  • ஒழிக நின் கவலை என்றான்
   
272.
  • உரிமை முன் போக்கி அல்லால்
  • ஒளி உடை மன்னர் போகார்
  • கருமம் ஈது எனக்கும் ஊர்தி
  • சமைந்தது கவல வேண்டாம்
  • புரி நரம்பு இரங்கும் சொல்லாய்
  • போவதே பொருள் மற்று என்றான்
  • எரி முயங்கு இலங்கு வாள் கை
  • ஏற்று இளஞ் சிங்கம் அன்னான்
   
273.
  • என்பு நெக்கு உருகி உள்ளம்
  • ஒழுகுபு சோர யாத்த
  • அன்பு மிக்கு அவலித்து ஆற்றா
  • ஆர் உயிர்க் கிழத்தி தன்னை
  • இன்பம் மிக்கு உடைய சீர்த்தி
  • இறைவனது ஆணை கூறித்
  • துன்பம் இல் பறவை ஊர்தி
  • சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்
   
274.
  • நீர் உடைக் குவளையின்
  • நெடுங் கண் நின்ற வெம் பனி
  • வார் உடை முலை முகம்
  • நனைப்ப மாதர் சென்ற பின்
  • சீர் உடைக் குருசிலும்
  • சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
  • பார் உடைப் பனிக்கடல்
  • சுடுவது ஒத்து உலம்பினான்
   
275.
  • முழை முகத்து இடி அரி
  • வளைத்த அன்ன மள்ளரில்
  • குழை முகப் புரிசையுள்
  • குருசில் தான் அகப்பட
  • இழை முகத்து எறி படை
  • இலங்கு வாள் கடல் இடை
  • மழை முகத்த குஞ்சரம்
  • வாரியுள் வளைத்தவே
   
276.
  • அயிலினில் புனைந்த வாள்
  • அழன்று உருத்து உரீஇ உடன்
  • பயில் கதிர்ப் பருமணிப்
  • பன் மயிர்ச் செய் கேடகம்
  • வெயில் எனத் திரித்து
  • விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
  • கயில் அணிக் கதிர் நகைக்
  • கடவுள் ஒத்து உலம்பினான்
   
277.
  • மாரியின் கடுங் கணை சொரிந்து
  • மள்ளர் ஆர்த்த பின்
  • வீரியக் குரிசிலும் விலக்கி
  • வெம் கணை மழை
  • வாரியில் கடிந்து உடன் அகற்ற
  • மற்ற வன்படைப்
  • பேர் இயல் பெருங் களிறு
  • பின்னி வந்து அடைந்தவே
   
278.
  • சீற்றம் மிக்க மன்னவன்
  • சேர்ந்த குஞ்சரம் நுதல்
  • கூற்றரும் குருதிவாள்
  • கோடு உற அழுத்தலின்
  • ஊற்று உடை நெடு வரை
  • உரும் உடன்று இடித்து என
  • மாற்று அரும் மதக் களிறு
  • மத்தகம் பிளந்தவே
   
279.
  • வேல் மிடைந்த வேலியும் பிளந்து
  • வெம் கண் வீரரை
  • வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து
  • வாள் வலை அரிந்து
  • ஊன் உடைக் குருதியுள்
  • உழக்குபு திரி தரத்
  • தேன் மிடைந்த தாரினான்
  • செங்களம் சிறந்ததே
   
280.
  • உப்பு உடைய முந் நீர்
  • உடன்று கரை கொல்வது
  • ஒப்பு உடைய தானையுள்
  • ஒரு தனியன் ஆகி
  • இப்படி இறை மகன்
  • இரும் களிறு நூற
  • அப் படையுள் அண்ணலும்
  • அழன்று களிறு உந்தி
   
281.
  • நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
  • கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
  • ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்
  • காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்
   
282.
  • நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
  • வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
  • மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்
  • கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்
   
283.
  • மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
  • வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்
  • சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்
  • கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்
   
284.
  • புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
  • கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்
  • மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
  • விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே
   
285.
  • ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
  • நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
  • சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்
  • காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே
   
286.
  • குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
  • நின்ற மால் புருவம் போல நெரி முரி புருவம் ஆக்கிக்
  • கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்றும் ஓர் களிற்றில் பாய்ந்து
  • நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான்
   
287.
  • நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
  • நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
  • மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசிந்து மாத்தாள்
  • குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான்
   
288.
  • ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
  • வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்
  • பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்
  • போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்
   
289.
  • போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத்
  • தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
  • வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
  • ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான்
   
290.
  • தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது
  • புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
  • ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல்
  • இருள் பரப்ப ஏஎ பாவம்
  • ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த
  • அறச் செங்கோலாய் கதிரினை
  • வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா
  • நாகமுடன் விழுங்கிற்று அன்றே
   
291.
  • பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்
  • நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்
  • கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்
  • கேடகமும் மறமும் ஆற்றி
  • வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி
  • மந்திர மென் சாந்து பூசி
  • வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்
  • விண்ணோர்க்கு விருந்து ஆயினானே
   
292.
  • செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ்
  • தேம் தேம் என்னும் மணி முழவமும்
  • தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத்
  • தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
  • அம தீம் கிளவியார் ஐந்நூற்றுவர் அவை துறை
  • போய் ஆடல் அரம்பை அன்னார்
  • எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து
  • இரங்கிப் பள்ளி படுத்தார்களே
   
293.
  • மடை அவிழ்ந்த வெள் இலை வேல் அம்பு பாய மணிச்
  • செப்பகம் கடைகின்றவே போல்
  • தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்
  • உள அரங்கி மூழ்கக் காமன்
  • படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்
  • பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்
  • புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்
  • மின்னுப் போல் புலம்பினாரே
   
294.
  • அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு
  • வேந்தன் கிடந்தானைத் தான்
  • கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்
  • கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
  • எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்
  • ஏற்பச் சொரிந்து அலறி எம்
  • பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்
  • பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்
   
295.
  • கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்
  • ஆரம் பரிந்து அலறுவார்
  • நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்
  • நின்று திருவில் வீசும்
  • மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்
  • கையால் வயிறு அதுக்குவார்
  • ஐயாவோ என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது
  • என்பார் கோல் வளையினார்
   
296.
  • பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய்
  • ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத்
  • தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு
  • பிடிகள் போலத் துயர் உழந்து தாம்
  • ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி
  • அடைதும் என்று அழுது போயினார் எம்
  • கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி
  • இனிப் பூவா பிறர் பறிப்பவே
   
297.
  • செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு
  • அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப
  • வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல்
  • எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப்
  • பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை
  • அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
  • எம கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான்
  • பூமகளை எய்தினானே