சீவகன் பிறப்பு
 
298.
  • களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
  • வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
  • சுளிமுகக் களிறு அனான் சொல் நய நெறியில் போய
  • கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன்
   
299.
  • எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
  • அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
  • வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
  • எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள்
   
300.
  • மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம்
  • பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி எங்கும்
  • காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல்
  • பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே
   
301.
  • மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து பேயும்
  • அஞ்சும் அம் மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
  • பஞ்சிமேல் வீழ்வதே போல் பல் பொறிக் குடுமி நெற்றிக்
  • குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே
   
302.
  • வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
  • ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
  • ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
  • சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள்
   
303.
  • உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
  • கண்டு இனித் தெள்க என்று காட்டுவாள் போல ஆகி
  • விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
  • வெண்தலை பயின்ற காட்டுள் விளங்கு இழை தமியள் ஆனாள்
   
304.
  • இருள் கெட இகலி எங்கும் மணிவிளக்கு எரிய ஏந்தி
  • அருள் உடை மனத்த வாகி அணங்கு எலாம் வணங்கி நிற்பப்
  • பொரு கடல் பருதி போலப் பொன் அனான் பிறந்த போழ்தே
  • மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே
   
305.
  • பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கித்
  • தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
  • வீங்கு இள முலைகள் விம்மித் திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
  • வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள்
   
306.
  • கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின்
  • காமர்சாலை தளி நிறுமின்
  • சிறை செய் சிங்கம் போல் மடங்கிச்
  • சேரா மன்னர் சினம் மழுங்க
  • உறையும் கோட்டம் உடன் சீமின்
  • ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
  • இறைவன் சிறுவன் பிறந்தான் என்று
  • ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின்
   
307.
  • மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல்
  • பண்டம் தலை திறந்திட்டு
  • ஆடை செம் பொன் அணிகலங்கள் யாவும்
  • யாரும் கவர்ந்து எழு நாள்
  • வீடல் இன்றிக் கொளப் பெறுவார் விலக்கல்
  • வேண்டா வீழ்ந்தீர்க்குக்
  • கோடி மூன்றோடு அரைச் செம் பொன்
  • கோமான் நல்கும் என அறைமின்
   
308.
  • அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள்
  • அகன் கோயில்
  • ஒருங்கு கூடிச் சாதகம் செய்து ஒகை அரசர்க்கு
  • உடன் போக்கிக்
  • கரும் கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள்
  • கொள வீசி
  • விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன் காண
  • இஃதோஒ பிறக்குமா
   
309.
  • வெவ் வாய் ஓரி முழவு ஆக
  • விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
  • ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில்
  • நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட
  • எவ்வாய் மருங்கும் இருந்து
  • இரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
  • இவ்வாறு ஆகிப் பிறப்பதோ
  • இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே
   
310.
  • பற்றா மன்னன் நகர்ப் புறமால்
  • பாயல் பிணம் சூழ் சுடு காடால்
  • உற்றார் இல்லாத் தமியேனால்
  • ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்
  • மற்று இஞ் ஞாலம் உடையாய்
  • நீ வளரும் ஆறும் அறியேனால்
  • எற்றே இது கண்டு ஏகாதே
  • இருத்தியால் என் இன் உயிரே
   
311.
  • பிறந்த நீயும் பூம் பிண்டிப் பெருமான்
  • அடிகள் பேர் அறமும்
  • புறந்தந்து என்பால் துயர்க் கடலை நீந்தும்
  • புணை மற்று ஆகாக்கால்
  • சிறந்தார் உளரேல் உரையாயால்
  • சிந்தா மணியே கிடத்தியால்
  • மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன்
  • மம்மர் நோயின் வருந்துகோ
   
312.
  • அந்தோ விசயை பட்டன கொண்டு
  • அகம்கை புறம்கை ஆனால் போல்
  • கந்தார் களிற்றுத் தம் கோமான்
  • கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
  • வந்தால் போலப் புறம் காட்டுள்
  • வந்தாள் தமியே என மரங்கள்
  • சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி
  • சேர் கண்ணீர் சொரிந்தனவே
   
313.
  • அடர் பொன் பைம் பூண் அரசு அழிய
  • அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
  • இடர் கொள் நெஞ்சத்து இறைவியும்
  • இருங் கண் ஞாலத்து இருள் பருகிச்
  • சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய
  • குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த
  • படர் தீர் அந்தி அது ஒத்தாள்
  • பணை செய் கோட்டுப் படா முலையாள்
   
314.
  • தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
  • யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில்
  • தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும்
  • கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே
   
315.
  • விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக்
  • கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
  • எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம்
  • செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள்
   
316.
  • பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
  • நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
  • கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
  • காவி அம் கண்ணினாய் யாம் மறைவது கருமம் என்றாள்
   
317.
  • சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
  • பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி
  • மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள்
  • நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள்
   
318.
  • ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
  • தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக்
  • காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக்
  • கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள்
   
319.
  • நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக்
  • கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
  • புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
  • ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள்
   
320.
  • நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
  • கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனத்
  • காளக உடையினன் கந்து நாமனும்
  • வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்
   
321.
  • வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
  • தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
  • நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
  • ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே
   
322.
  • அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
  • மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
  • பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை
  • விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்
   
323.
  • புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்
  • வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்
  • துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்
  • சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே
   
324.
  • என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
  • அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
  • நுன் பழம் பகை தவ நூறுவாய் என
  • இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்
   
325.
  • ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
  • அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
  • வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி
  • விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான்
   
326.
  • மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
  • பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்
  • தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு
  • இன் உடை அருள் மொழி இனிய செப்பினான்
   
327.
  • பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
  • அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
  • திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
  • வருந்தல் நீ எம் மனை வருக என்னவே
   
328.
  • கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்
  • உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
  • வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
  • வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்
   
329.
  • சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
  • விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
  • எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்
  • கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார்
   
330.
  • அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
  • எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
  • கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று
  • உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான்
   
331.
  • திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்
  • பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
  • இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
  • செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே
   
332.
  • நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
  • புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
  • கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து
  • அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்
   
333.
  • பொறி அறு பாவையின் பொம் என விம்மி
  • வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
  • இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
  • நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்
   
334.
  • பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே
  • திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்
  • ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
  • தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே
   
335.
  • மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
  • பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்
  • துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
  • அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்
   
336.
  • அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
  • குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்
  • தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
  • நமர் அது மற்றது நண்ணலம் ஆகி
   
337.
  • வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
  • கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
  • தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று
  • உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்
   
338.
  • பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
  • மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
  • அருள் உடை மாதவர் அத்திசை முன்னி
  • இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள்
   
339.
  • உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
  • இருவிலும் எறி மா மகரக் குழைத்
  • திருவிலும் இவை தேமொழி மாதரைப்
  • பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே
   
340.
  • சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத்
  • திருவில் கை போய் மெய் காப்ப
  • இலங்கு பொன் கிண்கிணியும் கலையும்
  • ஓங்க எறிவேல் கண்
  • மலங்க மணி மலர்ந்த பவளக் கொம்பு
  • முழு மெய்யும்
  • சிலம்பி வலந்தது போல்
  • போர்வை போர்த்துச் செல்லுற்றாள்
   
341.
  • பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
  • அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
  • குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்துயிரா
  • வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே
   
342.
  • தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்
  • குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
  • கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
  • இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே
   
343.
  • எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்
  • மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்
  • தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
  • அல்லல் வெவ்வினை போல அகன்றதே
   
344.
  • நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை
  • மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
  • அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ
  • நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள்
   
345.
  • வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்
  • கையினான் அடி தைவரக் கண் மலர்ந்து
  • ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
  • மொய் கொள் பூமி முளைப்பது போலவே
   
346.
  • தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
  • மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
  • நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
  • ஆவித்து ஆற்றுகிலாது அழுதிட்டவே
   
347.
  • கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
  • உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
  • இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
  • செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே
   
348.
  • வாள் உறை நெடுங் கணாளை மா தவ மகளிர் எல்லாம்
  • தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத்
  • தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று
  • நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார்
   
349.
  • திருந்து தகரச் செந் நெருப்பில் தேன்
  • தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
  • கருங் காழ் அகிலின் நறும் புகையில்
  • கழுமிக் கோதை கண் படுக்கும்
  • திருந்து நானக் குழல் புலம்பத்
  • தேனும் வண்டும் இசைப் புலம்ப
  • அரும் பொன் மாலை அலங்கலோடு
  • ஆரம் புலம்ப அகற்றினாள்
   
350.
  • திங்கள் உகிரில் சொலிப்பது போல்
  • திலகம் விரலின் தான் நீக்கிப்
  • பைம்பொன் மகர குண்டலமும்
  • பாவை கழுத்தின் அணிகலமும்
  • வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி
  • வேல் கண் பாவை பகை ஆய
  • அம் கண் முலையின் அணி முத்தும்
  • அரும்பொன் பூணும் அகற்றினாள்
   
351.
  • பஞ்சி அனைய வேய் மென் தோள்
  • பகுவாய் மகரம் கான்றிட்ட
  • துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம்
  • தொழுதேன் உம்மை எனத் துறந்து
  • அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை
  • கை உடைத்து மணிக் காந்தள்
  • அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ்
  • அரும் பொன் ஆழி அகற்றினாள்
   
352.
  • பூப் பெய் செம் பொன் கோடிகமும்
  • பொன் ஆர் ஆல வட்டமும்
  • ஆக்கும் அணி செய் தேர்த்தட்டும்
  • அரவின் பையும் அடும் அல்குல்
  • வீக்கி மின்னும் கலை எல்லாம்
  • வேந்தன் போகி அரம்பையரை
  • நோக்கி நும்மை நோக்கான் நீர்
  • நோவது ஒழிமின் எனத் துறந்தாள்
   
353.
  • பிடிக்கை போலும் திரள் குறங்கின்
  • அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
  • அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல்
  • மோதிரத்தோடு அகற்றிய பின்
  • கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல்
  • கொள்ளத் தோன்றி அணங்கு அலற
  • உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம்
  • உரவோன் சிறுவன் உயர்க எனவே
   
354.
  • பால் உடை அமிர்தம் பைம் பொன்
  • கலத்திடைப் பாவை அன்ன
  • நூல் அடு நுசுப்பின் நல்லார்
  • ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
  • சேல் அடு கண்ணி காந்தள் திருமணித்
  • துடுப்பு முன் கை
  • வால் அடகு அருளிச் செய்ய
  • வனத்து உறை தெய்வம் ஆனாள்
   
355.
  • மெல் விரல் மெலியக் கொய்த
  • குள நெல்லும் விளைந்த ஆம்பல்
  • அல்லியும் உணங்கும் முன்றில்
  • அணில் விளித்து இரிய ஆமான்
  • புல்லிய குழவித் திங்கள்
  • பொழி கதிர்க் குப்பை போலும்
  • நல் எழில் கவரி ஊட்ட
  • நம்பியை நினைக்கும் அன்றே
   
356.
  • பெண்மை நாண் வனப்புச் சாயல்
  • பெரு மட மாது பேசின்
  • ஒண்மையின் ஒருங்கு கூடி
  • உருவு கொண்ட அனைய நங்கை
  • நண்ணிய நுங்கட்கு எல்லாம்
  • அடைக்கலம் என்று நாடும்
  • கண்ணிய குலனும் தெய்வம்
  • கரந்து உரைத்து எழுந்தது அன்றே
   
357.
  • உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை
  • மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்
  • சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்
  • குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள்
   
358.
  • நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
  • வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
  • பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று
  • இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள்
   
359.
  • தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
  • மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
  • ஆனியம் பல ஆசையில் செல்லுமே
  • தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே
   
360.
  • மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
  • கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர
  • விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்
  • பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன்
   
361.
  • கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
  • மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
  • போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
  • சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்
   
362.
  • மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
  • ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்
  • போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
  • மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்
   
363.
  • அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்
  • பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்
  • செம் பொன் தேரும் வேழம் ஊர்ந்து நிதி சிந்தி
  • நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே
   
364.
  • பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து
  • எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்
  • கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்
  • செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே
   
365.
  • மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்
  • அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்
  • கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்
  • இணை வேல் உண்கண் நந்தையும் இன்பக் கொடி ஒத்தாள
   
366.
  • சாதிப் பைம் பொன் தன் ஒளி வெளவித் தகை குன்றா
  • நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
  • போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
  • ஆதிக் காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்
   
367.
  • நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
  • மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
  • பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
  • அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்
   
368.
  • முழவு எனத் திரண்ட திண் தோள்
  • மூரி வெம் சிலையினானும்
  • அழல் எனக் கனலும் வாள் கண்
  • அவ் வளைத் தோளி னாளும்
  • மழலை யாழ் மருட்டும் தீம் சொல்
  • மதலையை மயில் அம் சாயல்
  • குழை முக ஞானம் என்னும்
  • குமரியைப் புணர்க்கல் உற்றார்
   
369.
  • அரும் பொனும் மணியும் முத்தும்
  • காணமும் குறுணி ஆகப்
  • பரந்து எலாப் பிரப்பும் வைத்துப்
  • பைம் பொன் செய் தவிசின் உச்சி
  • இருந்து பொன் ஓலை செம் பொன்
  • ஊசியால் எழுதி ஏற்பத்
  • திருந்து பொன் கண்ணியாற்குச்
  • செல்வியைச் சேர்த்தினாரே
   
370.
  • நாமகள் நலத்தை எல்லாம்
  • நயந்து உடன் பருகி நல் நூல்
  • ஏ முதல் ஆய எல்லாப் படைக்
  • கலத் தொழிலும் முற்றிக்
  • காமனும் கனிய வைத்த புலம்
  • கரை கண்டு கண் ஆர்
  • பூ மகள் பொலிந்த மார்பன்
  • புவிமிசைத் திலம் ஒத்தான்
   
371.
  • மின் தௌத்து எழுதி அன்ன
  • விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
  • பொன் தௌத்து எழுதி அன்ன
  • பூம் புறப் பசலை மூழ்கிக்
  • குன்று ஒளித்து ஒழிய நின்ற
  • குங்குமத் தோளினாற்குக்
  • கன்று ஒளித்து அகல வைத்த
  • கறவையின் கனிந்து நின்றார்
   
372.
  • விலை பகர்ந்து அல்குல் விற்கும்
  • வேலினும் வெய்ய கண்ணார்
  • முலை முகந்து இளையர் மார்பம்
  • முரிவிலர் எழுதி வாழும்
  • கலை இகந்து இனிய சொல்லார்
  • கங்குலும் பகலும் எல்லாம்
  • சிலை இகந்து உயர்ந்த திண் தோள்
  • சீவகற்கு அரற்றி ஆற்றார்
   
373.
  • வான் சுவை அமிர்த வெள்ளம்
  • வந்து இவண் தொக்கது என்னத்
  • தான் சுவைக் கொண்டது எல்லாம்
  • தணப்பு அறக் கொடுத்த பின்றைத்
  • தேன் சுவைத்து அரற்றும் பைந்
  • தார்ச் சீவக குமரன் என்ற
  • ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு
  • உறுதி ஒன்று உரைக்கல் உற்றான்
   
374.
  • நூல் நெறி வகையின் நோக்கி
  • நுண்ணிதின் நுழைந்து தீமைப்
  • பால் நெறி பலவும் நீக்கிப்
  • பருதி அம் கடவுள் அன்ன
  • கோன் நெறி தழுவி நின்ற
  • குணத்தொடு புணரின் மாதோ
  • நால் நெறி வகையில் நின்ற
  • நல் உயிர்க்கு அமிர்தம் என்றான்
   
375.
  • அறிவினால் பெரிய நீரார்
  • அருவினை கழிய நின்ற
  • நெறியினைக் குறுகி இன்ப
  • நிறை கடல் அகத்து நின்றார்
  • பொறி எனும் பெயர ஐ வாய்ப்
  • பொங்கு அழல் அரவின் கண்ணே
  • வெறி புலம் கன்றி நின்றார்
  • வேதனைக் கடலுள் நின்றார்
   
376.
  • கூற்றுவன் கொடியன் ஆகிக்
  • கொலைத் தொழில் கருவி சூழ்ந்து
  • மாற்ற அரும் வலையை வைத்தான்
  • வைத்ததை அறிந்து நாமும்
  • நோற்று அவன் வலையை
  • நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
  • ஆற்று உறப் போதல் தேற்றாம்
  • அளியம் ஓஒ பெரியமே காண்
   
377.
  • பேர் அஞர் இடும்பை எல்லாம்
  • பிளந்திடும் பிறப்பு நீக்கும்
  • ஆர் அமிர்து அரிதில் பெற்றாம்
  • அதன் பயன் கோடல் தேற்றாம்
  • ஓரும் ஐம் பொறியும் ஓம்பி
  • உள பகல் கழிந்த பின்றைக்
  • கூர் எரி கவரும் போழ்தில்
  • கூடுமோ குறித்த எல்லாம்
   
378.
  • தழங்கு குரல் முரசின் சாற்றித்
  • தத்துவம் தழுவல் வேண்டிச்
  • செழுங் களியாளர் முன்னர்
  • இருள் அறச் செப்பினாலும்
  • முழங்கு அழல் நரகின் மூழ்கும்
  • முயற்சியர் ஆகி நின்ற
  • கொழுங் களி உணர்வினாரைக்
  • குணவதம் கொளுத்தல் ஆமோ
   
379.
  • பவழவாய்ச் செறுவு தன்னுள்
  • நித்திலம் பயில வித்திக்
  • குழவிநாறு எழுந்து காளைக்
  • கொழும் கதிர் ஈன்று பின்னாக்
  • கிழவு தான் விளைக்கும் பைங் கூழ்
  • கேட்டிரேல் பிணி செய் பன்மா
  • உழவிர்காள் மேயும் சீல வேலி
  • உய்த்திடுமின் என்றான்
   
380.
  • சூழ் கதிர் மதியம் அன்ன
  • சுடர் மணிப் பூணினானும்
  • வீழ் தரு கதியின் நீங்கி
  • விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
  • ஊழ் வினை துரத்தலானும்
  • உணர்வு சென்று எறித்தலானும்
  • ஆழ் கடல் புணையின் அன்ன
  • அறிவரன் சரண் அடைந்தான்
   
381.
  • காட்சி நல் நிலையில் ஞானக்
  • கதிர் மணிக் கதவு சேர்த்திப்
  • பூட்சி சால் ஒழுக்கம் என்னும்
  • வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா
  • மாட்சியில் கதிகள் எல்லாம்
  • அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
  • ஆட்சியில் உலகம் ஏறத்
  • திறந்தனன் அலர்ந்த தாரான்
   
382.
  • நல் அறத்து இறைவன் ஆகி
  • நால்வகைச் சரணம் எய்தித்
  • தொல் அறக் கிழமை பூண்ட
  • தொடு கழல் காலினாற்குப்
  • புல் அற நெறிக் கண் நின்று
  • பொருள் வயின் பிழைத்த வாறும்
  • இல்லறத்து இயல்பும் எல்லாம்
  • இருள் அறக் கூறி இட்டான்
   
383.
  • எரி முயங்கு இலங்கு வை வேல்
  • இளையவர் குழாத்தின் நீங்கித்
  • திரு முயங்கு அலங்கல் மார்பின்
  • சீவகன் கொண்டு வேறா
  • விரி மலர்க் கண்ணி கட்டி
  • விழைதக வேய்ந்த போலும்
  • தெரி மலர்க் காவு சேர்ந்து
  • பிறப்பினைத் தெருட்டல் உற்றான்
   
384.
  • பூவையும் கிளியும் மன்னர்
  • ஒற்றென புணர்க்கும் சாதி
  • யாவையும் இன்மை ஆராய்ந்து
  • அம் தளிர்ப் பிண்டி நீழல்
  • பூ இயல் தவிசின் உச்சிப்
  • பொலிவினோடு இருந்த போழ்தில்
  • ஏ இயல் சிலையினானை
  • இப் பொருள் கேண்மோ என்றான்
   
385.
  • வையகம் உடைய மன்னன்
  • சச்சந்தன் அவற்குத் தேவி
  • பை விரி பசும்பொன் அல்குல்
  • பைந்தொடி விசையை என்பாள்
  • செய் கழல் மன்னன் தேர்ந்து
  • தேவியைப் பொறியில் போக்கி
  • மையல் கொள் நெஞ்சில் கல்லா
  • மந்திரி விழுங்கப் பட்டான்
   
386.
  • புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி
  • வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
  • இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி
  • நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள்
   
387.
  • வானத்தின் வழுக்கித் திங்கள்
  • கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
  • கானத்தில் கிடந்ததே போல்
  • கடல் அகம் உடைய நம்பி
  • தானத்து மணியும் தானும்
  • இரட்டுறத் தோன்றி னானே
  • ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி
  • உத்திரட்டாதி யானே
   
388.
  • அருந் தவன் முந்து கூற
  • அலங்கல் வேல் நாய்கன் சென்று
  • பொருந்துபு சிறுவன் கொண்டு
  • பொலிவொடு புகன்று போகத்
  • திருந்திய நம்பி ஆரத்
  • தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
  • அரும் பொனாய் கொண்மோ என்றான்
  • அலை கடல் விருப்பில் கொண்டாள்
   
389.
  • கரியவன் கன்னற்கு அன்று
  • பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
  • பெரியவன் யாவன் என்ன
  • நீ எனப் பேசலோடும்
  • சொரி மலர்த் தாரும் பூணும்
  • ஆரமும் குழையும் சோரத்
  • திரு மலர்க் கண்ணி சிந்தத்
  • தெருமந்து மயங்கி வீழ்ந்தான்
   
390.
  • கற்பகம் கலங்கி வீழ்ந்த
  • வண்ணம் போல் காளை வீழச்
  • சொல் பகர் புலவன் வல்லே
  • தோன்றலைச் சார்ந்து புல்லி
  • நல் பல குழீஇய தம்மால்
  • நவை அறத் தேற்றத் தேறிக்
  • கல் புனை திணி திண் தோளான்
  • கவலை நீர்க் கடலுள் பட்டான்
   
391.
  • இனையை நீ ஆயது எல்லாம்
  • எம்மனோர் செய்த பாவம்
  • நினையல் நீ நம்பி என்று
  • நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
  • புனை இழை மகளிர் போலப்
  • புலம்பல் நின் பகைவன் நின்றான்
  • நினைவு எலாம் நீங்குக என்ன
  • நெடும் தகை தேறினானே
   
392.
  • மலை பக இடிக்கும் சிங்க
  • மடங்கலின் மூழங்கி மாநீர்
  • அலை கடல் திரையின் சீறி
  • அவன் உயிர் பருகல் உற்றுச்
  • சிலையொடு பகழி ஏந்திக் கூற்று
  • எனச் சிவந்து தோன்றும்
  • இலை உடைக் கண்ணியானை
  • இன்னணம் விலக்கினானே
   
393.
  • வேண்டுவல் நம்பி யான் ஓர்
  • விழுப் பொருள் என்று சொல்ல
  • ஆண் தகைக் குரவீர் கொண்மின்
  • யாது நீர் கருதிற்று என்ன
  • யாண்டு நேர் எல்லை ஆக
  • அவன் திறத்து அழற்சி இன்மை
  • வேண்டுவல் என்று சொன்னான்
  • வில் வலான் அதனை நேர்ந்தான்
   
394.
  • வெவ் வினை வெகுண்டு சாரா
  • விழுநிதி அமிர்தம் இன்னீர்
  • கவ்விய எஃகின் நின்ற
  • கயக்கமில் நிலைமை நோக்கி
  • அவ்வியம் அகன்று பொங்கும்
  • அழல் படு வெகுளி நீக்கி
  • இவ் இயல் ஒருவற்கு உற்றது
  • இற்றெனக் கிளக்கல் உற்றான்
   
395.
  • வான் உறை வெள்ளி வெற்பின்
  • வாரணவாசி மன்னன்
  • ஊன் உறை பருதி வெள் வேல்
  • உலோகமா பாலன் என்பான்
  • தேன் உறை திருந்து கண்ணிச்
  • சிறுவனுக்கு அரசு நாட்டிப்
  • பால் நிறக் குருகின் ஆய்ந்து
  • பண்ணவர் படிவம் கொண்டான்
   
396.
  • வெம் சினம் குறைந்து நீங்க
  • விழுத் தவம் தொடங்கி நோற்கும்
  • வஞ்சம் இல் கொள்கையாற்குப்
  • பாவம் வந்து அடைந்தது ஆகக்
  • குஞ்சரம் முழங்கு தீயில்
  • கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
  • மஞ்சு தோய் குன்றம் அன்ன
  • மாட வீட்டு அகம் புகுந்தான்
   
397.
  • உரை விளையாமை மைந்தன்
  • கேட்கிய உவந்து நோக்கி
  • வரை விளையாடு மார்பன்
  • யார் அவன் வாழி என்ன
  • விரை விளையாடும் தாரோய்
  • யான் என விரும்பித் தீம்பால்
  • திரை விளை அமிர்தம் அன்ன
  • கட்டுரை செல்க என்றான்
   
398.
  • பூத் தின்று புகன்று சேதாப்
  • புணர் முலை பொழிந்த தீம்பால்
  • நீத்து அறச் செல்ல வேவித்து
  • அட்ட இன் அமிர்தம் உண்பான்
  • பாத்தரும் பசும் பொன் தாலம்
  • பரப்பிய பைம் பொன் பூமி
  • ஏத்த அரும் தவிசின் நம்பி
  • தோழரொடு ஏறினானே
   
399.
  • புடை இரு குழையும் மின்னப்
  • பூந்துகில் செறிந்த அல்குல்
  • நடை அறி மகளிர் ஏந்த
  • நல் அமிர்து உண்ணும் போழ்தின்
  • இடை கழி நின்ற என்னை
  • நோக்கிப் போந்து ஏறுக என்றான்
  • கடல் கெழு பருதி அன்ன
  • பொன் கலத்து எனக்கும் இட்டார்
   
400.
  • கை கவி நறு நெய் பெய்து
  • கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
  • பெய் பெய் என்று உரைப்ப யானும்
  • பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
  • பெய்து தூர்க்கின்ற வண்ணம்
  • விலாப் புடை பெரிதும் வீங்க
  • ஐயன் அது அருளினால் யான்
  • அந்தணர் தொழிலன் ஆனேன்
   
401.
  • சுரும்பு உடை அலங்கல் மாலைச்
  • சுநந்தையும் துணைவன் தானும்
  • விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப
  • வேழ வெந்தீயின் நீங்கி
  • இருந்தனன் ஏம முந் நீர்
  • எறி சுறவு உயர்த்த தோன்றல்
  • கரும்பு உடைக் காளை அன்ன
  • காளை நின் வலைப் பட்டு என்றான்
   
402.
  • நிலம் பொறுக்கலாத செம் பொன்
  • நீள் நிதி நுந்தை இல்லம்
  • நலம் பொறுக்கலாத பிண்டி
  • நான் முகன் தமர்கட்கு எல்லாம்
  • உலம் பொறுக்கலாத தோளாய்
  • ஆதலால் ஊடு புக்கேன்
  • கலம் பொறுக்கலாத சாயல்
  • அவர் உழை நின்னைக் கண்டேன்
   
403.
  • ஐயனைக் கண்ணில் காண
  • யானைத்தீ அதகம் கண்ட
  • பை அணல் நாகம் போல
  • வட்க யான் பெரிதும் உட்கித்
  • தெய்வம் கொல் என்று தேர்வேற்கு
  • அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
  • மொய் குரல் முரசம் நாணும்
  • தழங்கு குரல் முழங்கக் கேட்டேன்
   
404.
  • கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து
  • குலவிய திருவில் போல
  • மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து
  • முருகு கொப்பளிக்கும் தாரோய்
  • கேட்டு அளப் பரிய சொல்லும்
  • கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
  • சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய்
  • சாதகம் செய்த என்றான்
   
405.
  • கோள் இயங்கு உழுவை அன்ன
  • கொடும் சிலை உழவன் கேட்டே
  • தாள் இயல் தவங்கள் தாயாத்
  • தந்தை நீ ஆகி என்னை
  • வாள் இயங்கு உருவப் பூணோய்
  • படைத்தனை வாழி என்ன
  • மீளி அம் களிறு அனாய் யான்
  • மெய்ந்நெறி நிற்பல் என்றான்
   
406.
  • மறு அற மனையின் நீங்கி
  • மா தவம் செய்வல் என்றால்
  • பிற அறம் அல்ல பேசார்
  • பேர் அறிவு உடைய நீரார்
  • துறவறம் புணர்க என்றே
  • தோன்றல் தாள் தொழுது நின்றான்
  • நறவு அற மலர்ந்த கண்ணி
  • நல் மணி வண்ணன் அன்னான்
   
407.
  • கை வரை அன்றி நில்லாக்
  • கடுஞ் சின மடங்கல் அன்னான்
  • தெவ்வரைச் செகுக்கும் நீதி
  • மனத்து அகத்து எழுதிச் செம்பொன்
  • பை விரி அல்குலாட்கும்
  • படுகடல் நிதியின் வைகும்
  • மை வரை மார்பினாற்கும்
  • மனம் உறத் தேற்றி இட்டான்
   
408.
  • அழல் உறு வெண்ணெய் போல
  • அகம் குழைந்து உருகி ஆற்றாள்
  • குழல் உறு கிளவி சோர்ந்து
  • குமரனைத் தமியன் ஆக
  • நிழல் உறு மதியம் அன்னாய்
  • நீத்தியோ எனவும் நில்லான்
  • பழவினை பரிய நோற்பான்
  • விஞ்சையர் வேந்தன் சென்றான்