பதுமையார் இலம்பகம்
 
1166.
  • வீட்டரும் சிறையில் தேவன் விடுத்து உயக் கொள்ளப் பட்ட
  • கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான் கொல் என்னில்
  • கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் கூடிய பளிங்கில் தோன்றும்
  • தீட்டரும் படிவம் அன்னான் திறம் கிளந்து உரைத்தும் அன்றே
   
1167.
  • விலங்கி வில் உமியும் பூணான் விழுச் சிறைப்பட்ட போழ்தும்
  • அலங்கல் அம் தாரினான் வந்து அருஞ் சிறை விடுத்த போழ்தும்
  • புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றிப் பொன் ஆர்ந்து
  • உலம் கலந்து உயர்ந்த தோளான் ஊழ் வினை என்று விட்டான்
   
1168.
  • வானரம் உகள நாக மலர் துதைந்து ஒழுக அஞ்சித்
  • தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் எனச் சென்று மொய்க்கும்
  • கான் அமர் அருவிக் குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள்
  • மேல் நிமிர்ந்து ஏறி ஆங்குத் தேவன் வெற்பு ஏறினானே
   
1169.
  • திங்களைத் தெளித்திட்ட அன்ன பால் கடல் திரை செய் தெண்ணீர்
  • வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் உரிமை தன்னால்
  • மங்கல வகையின் ஆட்டி மணி அணி கலங்கள் சேர்த்திப்
  • பங்கய நெடுங் கணாளைப் பவித்திர குமரன் என்றான்
   
1170.
  • பொன் அணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும்
  • பின்னிய முத்த மாலைப் பிணையல் தாழ் குடையின் நீழல்
  • கன்னியர் கவரி வீசக் கனமணிக் குழை வில் வீச
  • இன்னிசைக் கூத்து நோக்கி இருந்தனன் திலகம் அன்னான்
   
1171.
  • இரு மலர்க் குவளை உண்கண் இமைப்பு இலாப் பயத்தைப் பெற்ற
  • அரி மலர்த் தாரினான் தன் அழகு கண்டு அளிய என்னாத்
  • திரு மலர்க் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப
  • எரி மணிப் பூணினானும் இன்னணம் இயம்பினானே
   
1172.
  • பிணிக் குலத்து அகம் வயின் பிறந்த நோய் கெடுத்து
  • அணித் தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான்
  • கணிப்பு அருங் குணத் தொகைக் காளை என்றனன்
  • மணிக் கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான்
   
1173.
  • கடல் சுறவு உயரிய காளை அன்னவன்
  • அடற்கு அரும் பகை கெடுத்து அகன்ற நீள் நிலம்
  • மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி நாம்
  • கொடுக்குவம் எனத் தெய்வ மகளிர் கூறினார்
   
1174.
  • செரு நிலத்து அவன் உயிர் செகுத்து மற்று எனக்கு
  • இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ
  • திரு நிலக் கிழமையும் தேவர் தேயமும்
  • தரும் நிலத்து எமக்கு எனில் தருகும் தன்மையீர்
   
1175.
  • மண்மிசைக் கிடந்தன மலையும் கானமும்
  • நண்ணுதற்கு அரியன நாடும் பொய்கையும்
  • கண் மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு
  • எண்ணம் ஒன்று உளது எனக்கு இலங்கு பூணினாய்
   
1176.
  • ஆற்றினது அமைதி அங்கு அறியக் கூறினான்
  • ஊற்றுநீர்க் கூவலுள் உறையும் மீன் அனார்
  • வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார்
  • போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு
   
1177.
  • இம் மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் இருண்டு தோன்றும்
  • அம் மலை அரண பாதம் என்ப அதன் தாள் வாய்த் தோன்றும்
  • தம் வினை கழுவு கின்றார் சாரணர் தரணி காவல்
  • வெம்மையின் அகன்று போந்து விழைவு அறத் துறந்து விட்டார்
   
1178.
  • சிந்தையில் பருதி அன்னார் சேவடி இறைஞ்ச லோடும்
  • வெம் திறல் இயக்கி தோன்றி விருந்து எதிர் கொண்டு பேணித்
  • தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த காலைச்
  • சந்துடைச் சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய்
   
1179.
  • அங்கு நின்று அகன்றபின் ஐ ஐங் காவதம்
  • வெம் களி விடும் மத வேழப் பேர் இனம்
  • தங்கிய காடு அது தனிச் செல்வார் இலை
  • கங்கையின் கரையது கடலின் தோன்றுமே
   
1180.
  • புனல் எரி தவழ்ந்து எனப் பூத்த தாமரை
  • வனம் அது வாள் என வாளை பாய்வன
  • மனம் மகிழ் பெருந் தடம் வலத்து இட்டு ஏகுதி
  • இன மலர்த் தாரினாய் இரண்டு காதமே
   
1181.
  • காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து
  • ஏந்தல் நின் தோள் என இரண்டு குன்று போய்ப்
  • பூந் துகில் மகளிரில் பொலிந்து போர்த்தது ஓர்
  • பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே
   
1182.
  • இள வெயில் மணிவரை எறித்திட்டு அன்னது ஓர்
  • அளவு அரு குங்குமத்து அகன்ற மார்பினாய்
  • களவினின் அணி நலம் கவர்ந்த கள்வ என்று
  • உளர் மணிக் கொம்பனார் உருகி நைபவே
   
1183.
  • பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என
  • முழங்கு அழல் வேட்கையின் முறுகி ஊர்தரத்
  • தழும் பதம் இது எனச் சார்ந்து புல்லலும்
  • பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆபவே
   
1184.
  • கண்ட பேய் நகரின் நீங்கிக் காவதம் கடந்து தோன்றும்
  • வெண்டலைப் புணரி வீசிக் கிடந்த பொன் தீவிற்று ஆகிக்
  • கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடிக் கரும்பு உடுத்தவேலி
  • நுண் துகில் நுழைந்த அல்குல் பவளம் ஒத்து இனியது ஒன்றே
   
1185.
  • படு மழை பருவம் பொய்யாப் பல்லவ தேயம் என்னும்
  • தட மலர்க் குவளைப் பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு
  • இடை நெறி அசைவு தீர இருந்து அவண் ஏகல் உற்றால்
  • கட நெறி கடத்தற்கு இன்னாக் கல் அதர் அத்தம் உண்டே
   
1186.
  • நுதி கொண்டன வெம் பரல் நுண் இலை வேல்
  • பதி கொண்டு பரந்தன போன்று உளவால்
  • விதி கண்டவர் அல்லது மீது செலார்
  • வதி கொண்டது ஓர் வெவ் வழல்வாய் சொலின் வேம்
   
1187.
  • குழவிப் பிடி குஞ்சரம் மாழ்கும் எனத்
  • தழுவிச் சுடு வெவ் அழல் தாங்குவன
  • கெழுவிப் பெடையைக் கிளர் சேவல் தழீஇத்
  • தொழுதிச் சிறகில் துயர் ஆற்றுவன
   
1188.
  • கலை இன் பிணை கன்றிடும் என்று கசிந்து
  • இலையின் நிழல் அவ்வயின் இன்மையான்
  • நிலையின் நிழல் தான் அது நின்று கொடுத்து
  • உலையும் வெயில் நின்று உருகும் உரவோய்
   
1189.
  • கட நாகம் மதம் கலந்து உக்க நிலத்து
  • உடை நாண் என மின் என ஒண்மணி அம்
  • பட நாகம் அழன்று பதைத்து வரும்
  • மடனாம் அயலார் மனம் வைப்பதுவே
   
1190.
  • நெறியில் தளர்வார் தம நெஞ்சு உருகிப்
  • பொறியில் தளர்வார் புரிவார் சடையார்
  • அறி மற்றவர் தாபதர் அவ்வழியார்
  • கறை முற்றிய காமரு வேலவனே
   
1191.
  • குலை வாழை பழுத்த கொழும் பழனும்
  • நிலை மாத்தன தேம் உறும் தீம் கனியும்
  • பலவு ஈன்றன முள் உடை அள் அமிர்தும்
  • மலை யாற்று அயல் யாவும் மடுத்து உளவே
   
1192.
  • வளர் பைம் பொனும் வாள் ஒளி நீள் மணியும்
  • ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும்
  • தளர்வு ஒன்று இலர் தாபதர் தாம் விழையும்
  • குளிர் கொண்டது ஓர் சித்திர கூடம் அதே
   
1193.
  • முழவின் இசை மூரி முழங்கு அருவி
  • கழையின் துணி சந்தொடு கல் என ஈர்த்து
  • இழியும் வயிரத்தொடு இனம் மணி கொண்டு
  • அழியும் புனல் அஞ்சனமா நதியே
   
1194.
  • இது பள்ளி இடம் பனிமால் வரைதான்
  • அது தௌ அறல் யாறு உவை தேமரமாக்
  • கதி தள்ளி இராது கடைப்பிடி நீ
  • மதி தள்ளி இடும் வழை சூழ் பொழிலே
   
1195.
  • வருந்தும் நீர்மை அம் மாதவர் பள்ளியுள்
  • குருந்தம் ஏறிய கூர் அரும்பார் முல்லை
  • பொருந்து கேள்வரைப் புல்லிய பொன் அனார்
  • மருங்கு போன்று அணி மாக் கவின் கொண்டதே
   
1196.
  • குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய்
  • வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின்
  • அரவ வண்டொடு தேன் இனம் யாழ் செயும்
  • பரவை மா நிலம் பன்னிரு காதமே
   
1197.
  • ஆங்கு அவ் எல்லை இகந்து அடு தேறலும்
  • பூங் கள் பொன் குடமும் நிறைத்து ஈண்டிய
  • ஏங்கு கம்பலத்து இன்னிசை சூழ் வயல்
  • தாங்கு சீர்த் தக்க நாட்டு அணி காண்டியே
   
1198.
  • பாளைவாய் கமுகின் நெற்றி படு பழம் உதிர விண்டு
  • நீள் கழைக் கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி
  • வாளை வாய் உறைப்ப நக்கி வராலொடு மறலும் என்ப
  • காளை நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடே
   
1199.
  • அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழிப்
  • பொங்கு பூஞ் சண்பகப் போது போர்த்து உராய்
  • அங்கு அந்நாட்டு அரிவையர் கூந்தல் நாறித் தேன்
  • எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே
   
1200.
  • மின் உடை மணிபல வரன்றி மேதகு
  • தன் உடை நலம் பகிர்ந்து உலகம் ஊட்டலின்
  • பொன் உடைக் கலை அல்குல் கணிகைப் பூம்புனல்
  • மன் உடை வேலினாய் வல்லை நீந்தினால்
   
1201.
  • யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும்
  • மான மாக் கவரி வெண் மயிரின் வேய்ந்தன
  • தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய
  • கானவர் குரம்பை சூழ் காடு தோன்றுமே
   
1202.
  • கடுந் துடிக் குரலொடு கடையும் கள் குரல்
  • நெடுந் கை மான் குரல் மணி அருவி நீள் குரல்
  • அடும் புலிக் குரலொடு மயங்கி அஞ்சிய
  • இடும்பை மான் குரல் விளி எங்கும் மிக்கவே
   
1203.
  • பொன் அணி திகிரி அம் செல்வன் பொற்பு உடைக்
  • கன்னிய மகளிரின் காண்டற்கு அரியன
  • நல் மணி புரித்தன வாவி நான்கு உள
  • கல் நவில் தோளினாய் காட்டு வாயவே
   
1204.
  • அருங் கலச் சேயிதழ் ஆர்ந்த வாவி ஒன்று
  • இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று
  • ஒருங்கு நோய் தீர்ப்பது ஒன்று அமிர்தம் அல்லது ஒன்று
  • அரும்பு அவிழ் குவளை நீர் வாவி ஆகுமே
   
1205.
  • கை அடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
  • பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர்
  • ஐ எனத் தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து
  • உய்வகை அரிது என உடலம் கொள்பவே
   
1206.
  • அண்ணல் மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து அவண்
  • மண்ணின் மேல் மாந்தர்கள் மொய்க்கும் வாவியை
  • எண்ணம் ஒன்று இன்றியே இடத்து இட்டு ஏகினால்
  • துண் எனச் சிலையவர் தொழுது காண்பவே
   
1207.
  • பாடல் வண்டு யாழ் செயும் பசும் பொன் கிண்கிணித்
  • தோடு அலர் கோதை மின் துளும்பும் மேகலை
  • ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல் போல்
  • ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐங் காதமே
   
1208.
  • கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகைப்
  • போது வேய்ந்து இனமலர் பொழிந்து கற்புடை
  • மாதரார் மனம் எனக் கிடந்த செந்நெறி
  • தாதின் மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்பவே
   
1209.
  • மணி இயல் பாலிகை அனைய மாச்சுனை
  • அணி மணி நீள் மலர் அணிந்தது ஆயிடை
  • இணை மலர்ப் படலிகை போலும் ஈர்ம் பொழில்
  • கணை உமிழ் சிலையினாய் கண்டு சேறியே
   
1210.
  • இலைப் பொலி பூண் முலை எரி பொன் மேகலைக்
  • குலத்தலை மகளிர் தம் கற்பின் திண்ணிய
  • அலைத்து வீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ்
  • வலத்தது வனகிரி மதியின் தோன்றுமே
   
1211.
  • கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடிப்
  • பெரியவன் திருமொழி பிறழ்தல் இன்றியே
  • மரியவர் உறைதலின் மதன கீதமே
  • திரிதரப் பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே
   
1212.
  • ஏற்றரு மணிவரை இறந்து போனபின்
  • மாற்றரு மணநெறி மகளிர் நெஞ்சமே
  • போல் பல கவர்களும் பட்டது ஆயிடை
  • ஆற்றல் சால் செந்நெறி அறியக் கூறுவாம்
   
1213.
  • சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அச்சுனை
  • மருங்கில் ஓர் மணிச் சிலா வட்டம் உண்டு அவண்
  • விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின்
  • மருங்கில் ஓர் செந்நெறி வகுக்கப் பட்டதே
   
1214.
  • கைம் மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம்
  • மொய்ம் மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
  • வைம் மலர்த்து இலங்கும் வெள்வேல் மத்திம தேயம் ஆளும்
  • கொய்ம் மலர்த் தாரினானைக் கண்ணுறு குணம் அது என்றான்
   
1215.
  • மண் அகம் காவல் மன்னன் மாதரம் பாவை மாசு இல்
  • ஒண் நுதல் மகளைத் தந்து ஈங்கு உறைக என ஒழுகும் நாளுள்
  • வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற
  • அண்ணல் நின் தோழர் எல்லாம் அவ்வழி அடைவர் என்றான்
   
1216.
  • நெட்டிடை நெறிகளும் நிகர் இல் கானமும்
  • முட்டுடை முடுக்கரும் மொய் கொள் குன்றமும்
  • நட்புடை இடங்களும் நாடும் பொய்கையும்
  • உட்பட உரைத்தனன் உறுதி நோக்கினான்
   
1217.
  • செல்கதி மந்திரம் செவியில் செப்பிய
  • மல்லல் அம் குமரனை வாழ நாட்டவே
  • வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க எனச்
  • சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே
   
1218.
  • கடுந் தொடைக் கவர் கணைக் காமன் காமுறப்
  • படும் குரல் தரும் இது பாம்பும் அல்லவும்
  • கடுந் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய
  • உடம்பு இது தரும் என உணரக் கூறினான்
   
1219.
  • கந்தடு களிறு கொல்லும் கருவரை உழுவை அன்னான்
  • மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைந்தார்
  • இந்திரன் தன்னை நோக்கி இயக்கியர் குழாத்தை நோக்கிச்
  • சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான்
   
1220.
  • மனைப் பெரும் கிழத்தி மாசு இல் மலை மகள் தன்னை யான் சென்று
  • எனைத் தொரு மதியின் ஆம் கொல் எய்துவது என்று நெஞ்சில்
  • நினைத்தலும் தோழன் நக்கு நிழல் உமிழ்ந்து இலங்கு செம்பொன்
  • பனைத் திரண்டு அனைய தோளாய் பன்னிரு மதியின் என்றான்
   
1221.
  • ஆறு இரு மதியின் எய்தி அரட்டனை அடர்த்து மற்று உன்
  • வீறு உயர் முடியும் சூடி விழு நிலக் கிழமை பூண்டு
  • சாறு அயர்ந்து இறைவன் பேணிச் சார்பு அறுத்து உய்தி என்று
  • கூறினன் கதிர்கள் பொங்கும் குளிர் மணி முடியினானே
   
1222.
  • சொல்திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
  • வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறு வேறு உரைப்பக் கேட்டே
  • சுற்றிய தோழி மாரை விடுத்தனன் தொழுது நின்றான்
  • கற்பக மரமும் செம் பொன் மாரியும் கடிந்த கையான்
   
1223.
  • சேட்டு இளம் செங் கயல் காப்பச் செய்து வில்
  • பூட்டி மேல் வைத்து அன புருவப் பூ மகள்
  • தீட்டிரும் திரு நுதல் திலமே என
  • மோட்டிரும் கதிர் திரை முளைத்தது என்பவே
   
1224.
  • அழல் பொதிந்த நீள் எஃகின்
  • அலர்தார் மார்பற்கு இம்மலை மேல்
  • கழல் பொதிந்த சேவடியால்
  • கடக்கல் ஆகாது என எண்ணிக்
  • குழல் பொதிந்த தீம் சொல்லார்
  • குழாத்தின் நீங்கிக் கொண்டு ஏந்தி
  • நிழல் பொதிந்த நீள் முடியான்
  • நினைப்பில் போகி நிலத்து இழிந்தான்
   
1225.
  • வண் தளிர்ச் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி
  • விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை
  • மண் கருதும் வேலானை மறித்தும் காண்க எனப் புல்லிக்
  • கொண்டு எழுந்தான் வானவனும் குருசில் தானே செலவு அயர்ந்தான்
   
1226.
  • வாள் உழலை பாய்ந்து இளைய வள நாகிட்டு இனம் என்னும்
  • தாள் ஒழியப் போரேறு தனியே போந்தது என எண்ணி
  • நீள் அருவிக் கண்ணீர் வீழ்த்து அலறி வண்ணம் கரிந்து உருகிக்
  • கோள் உழுவை அன்னாற்கு குன்றமும் நின்று அழுதனவே
   
1227.
  • மிக்கார் தம் கேட்டின் கண் மேன்மை இல்லாச் சிறியார் போல்
  • நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கைத்
  • தக்கார் போல் கைம் மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே
  • தொக்கார் போல் பல் மாவும் மயிலும் தோன்றித் துளங்கினவே
   
1228.
  • கொல்லை அகடு அணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை
  • முல்லை முறுவலித்து நகுதிர் போலும் இனி நும்மைப்
  • பல்லை உகுத்திடுவம் என்று பைம் போது அலர் சிந்தித்
  • தொல்லை நிறம் கருகித் தும்பி பாய்ந்து துகைத்தனவே
   
1229.
  • தோடு ஏந்து பூங் கோதை வேண்டேம் கூந்தல் தொடேல் எம் இல்
  • பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல்
  • கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்டக் கூடா பிடி நிற்கும்
  • காடு ஏந்து பூஞ் சாரல் கடந்தான் காலின் கழலானே
   
1230.
  • காழகம் ஊட்டப்பட்ட கார் இருள் துணியும் ஒப்பான்
  • ஆழ் அளை உடும்பு பற்றிப் பறித்து மார்பு ஒடுங்கி உள்ளான்
  • வாழ் மயிர்க் கரடி ஒப்பான் வாய்க்கு இலை அறிதல் இல்லான்
  • மேழகக் குரலினான் ஓர் வேட்டுவன் தலைப் பட்டானே
   
1231.
  • கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழுந் தடி நறவொடு ஏந்திப்
  • பிடி முதிர் முலையினாள் தன் தழைத் துகில் பெண்ணினோடும்
  • தொடு மரைத் தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற
  • வடி நுனை வேலினான் கண்டு எம்மலை உறைவது என்றான்
   
1232.
  • மாலை வெள் அருவி சூடி மற்று இதா தோன்றுகின்ற
  • சோலை சூழ் வரையின் நெற்றிச் சூழ் கிளி சுமக்கல் ஆற்றா
  • மாலை அம் தினைகள் காய்க்கும் வண் புனம் அதற்குத் தென்மேல்
  • மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான்
   
1233.
  • ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி
  • மோழலம் பன்றியோடு முளவுமாக் காதி அட்ட
  • போழ் நிணப் புழுக்கல் தேன் நெய் பொழிந்து உகப் பெய்து மாந்தித்
  • தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான்
   
1234.
  • ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து
  • ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழிமின் என்னக்
  • கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன்தேன் கை விட்டால்
  • ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும் கொல் என்றான்
   
1235.
  • ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ
  • ஊன் தினாது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ
  • ஊன்றி இவ் இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன
  • ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்
   
1236.
  • உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர்கதி சேறி ஏடா
  • குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உணக் காட்டுள் இன்றே
  • இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய்
  • இறுதிக் கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான்
   
1237.
  • என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கிச்
  • சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று
  • குன்று உறை குறவன் போகக் கூர் எரி வளைக்கப் பட்ட
  • பஞ்சவர் போல நின்ற பகட்டு இனப் பரிவு தீர்த்தான்
   
1238.
  • இலங்கு ஒளி மரகதம் இடறி இன் மணி
  • கலந்து பொன் அசும்பு கான்று ஒழுகி மான் இனம்
  • சிலம்பு பாய் வருடையொடு உகளும் சென்னி நீள்
  • விலங்கல் சென்று எய்தினான் விலங்கல் மார்பினான்
   
1239.
  • அந்தர அகடு தொட்டு அணவு நீள் புகழ்
  • வெந்து எரி பசும் பொனின் விழையும் வெல் ஒளி
  • மந்திர வாய்மொழி மறு இல் மாதவர்
  • இந்திரர் தொழும் அடி இனிதின் எய்தினான்
   
1240.
  • முனிவரும் முயன்று வான் கண் மூப்பு இகந்து இரிய இன்பக்
  • கனி கவர் கணனும் ஏத்தக் காதி கண் அரிந்த காசு இல்
  • தனி முதிர் கடவுள் கோயில் தான் வலம் கொண்டு செல்வான்
  • குனி திரை முளைத்த வெய்யோன் குன்று சூழ்வதனை ஒத்தான்
   
1241.
  • தண் கயம் குற்ற போதும் தாழ்சினை இளிந்த வீயும்
  • வண் கொடிக் கொய்த பூவும் வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தித்
  • திண் புகழ் அறிவன் பாதம் திருந்து கைத் தலத்தின் ஏற்றிப்
  • பண்பு கொள் குணம் கொள் கீதம் பாணியில் பாடுகின்றான்
   
1242.
  • ஆதி வேதம் பயந்தோய் நீ
  • அலர் பெய்ம் மாரி அமைந்தோய் நீ
  • நீதி நெறியை உணர்ந்தோய் நீ
  • நிகர் இல் காட்சிக்கு இறையோய் நீ
  • நாதன் என்னப் படுவோய் நீ
  • நவை செய் பிறவிக் கடலகத்து உன்
  • பாத கமலம் தொழுவேங்கள்
  • பசை யாப்பு அவிழப் பணியாயே
   
1243.
  • இன்னாப் பிறவி இகந்தோய் நீ
  • இணை இல் இன்பம் உடையோய் நீ
  • மன்னா உலகம் மறுத்தோய் நீ
  • வரம்பு இல் காட்சிக்கு இறையோய் நீ
  • பொன்னார் இஞ்சிப் புகழ் வேந்தே
  • பொறியின் வேட்கைக் கடல் அழுந்தி
  • ஒன்னா வினையின் உழல்வேங்கள்
  • உயப்போம் வண்ணம் உரையாயே
   
1244.
  • உலகம் மூன்று உடையோய் நீ
  • ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ
  • திலகம் ஆய திறலோய் நீ
  • தேவர் ஏத்தப் படுவோய் நீ
  • அலகை இல்லாக் குணக் கடலே
  • யாரும் அறியப்படாய் ஆதி
  • கொலை இல் ஆழி வலன் உயர்த்த
  • குளிர் முக்குடையின் நிழலோய் நீ
   
1245.
  • அடி உலகம் ஏத்தி அலர் மாரி தூவ
  • முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே
  • முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று
  • கடி மதிலும் கட்டு அழித்த காவலன் நீ அன்றே
   
1246.
  • முரண் அவிய வென்று உலகம் மூன்றினையும் மூன்றின்
  • தரணி மேல் தந்து அளித்த தத்துவன்தான் யாரே
  • தரணி மேல் தந்து அளித்தான் தண் மதி போல் நேமி
  • அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீ அன்றே
   
1247.
  • தீரா வினை தீர்த்துத் தீர்த்தம் தெரிந்து உய்த்து
  • வாராக் கதி உரைத்த வாமன்தான் யாரே
  • வாராக் கதி உரைத்த வாமன் மலர் ததைந்த
  • கார் ஆர் பூம் பிண்டிக் கடவுள் நீ அன்றே
   
1248.
  • அம் மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர்
  • பொன் மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரே
  • வெம் மலைத் தெய்வதம் விருந்து செய்தபின்
  • செம்மல் போய்ப் பல்லவ தேயம் நண்ணினான்
   
1249.
  • அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்கு உடைக்
  • கரிய வாய் நெடிய கண் கடைசி மங்கையர்
  • வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர்
  • இருவரை வினாய் நகர் நெறியின் முன்னினான்
   
1250.
  • அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரைப்
  • பன்மலர்க் கிடங்கு சூழ் பசும் பொன் பாம்புரிக்
  • கன்னி மூது எயில் கடல் உடுத்த காரிகை
  • பொன் அணிந்து இருந்து எனப் பொலிந்து தோன்றுமே
   
1251.
  • அகில் தரு கொழும் புகை மாடத்து ஆய் பொனின்
  • முகில் தலை விலங்கிய மொய் கொள் நீள் கொடிப்
  • பகல் தலை விலங்கு சந்திராபம் பான்மையின்
  • இகல் தலை விலங்கு வேல் காளை எய்தினான்
   
1252.
  • மலர் அணி மணிக்குடம் மண்ணும் நீரொடு
  • பலர் நலம் பழிச்சுபு பரவ ஏகினான்
  • அலர் கதிர் கரும்பிளை மடுப்ப ஆய்நகர்
  • உலகு அளந்தான் என உள்புக்கான் அரோ
   
1253.
  • சந்தனக் காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை
  • வந்து வீழ்மாலை நாற்றி மணி அரங்கு அணிந்து வானத்து
  • இந்திர குமரன் போல இறை மகன் இருந்து காண
  • அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்று கின்றார்
   
1254.
  • குழல் எடுத்து யாத்து மட்டார்
  • கோதையின் பொலிந்து மின்னும்
  • அழல் அவிர் செம் பொன் பட்டம்
  • குண்டலம் ஆரம் தாங்கி
  • நிழல் அவிர் அல்குல் காசு
  • சிலம்பொடு சிலம்ப நீள்தோள்
  • அழகி கூத்து ஆடுகின்றாள்
  • அரங்கின்மேல் அரம்பை அன்னாள்
   
1255.
  • தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயிலத் தண்பூங்
  • கண்ணொடு புருவம் கை கால் கலை அல்குல் நுசுப்புக் காமர்
  • ஒண்ணுதல் கொண்ட ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி
  • வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே
   
1256.
  • பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும்
  • கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற
  • ஓடு அரி நெடுங் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா
  • ஈடு அமை பசும் பொன் சாந்தம் இலயமா ஆடுகின்றாள்
   
1257.
  • வாள் நுதல் பட்டம் மின்ன வார் குழை திருவில் வீசப்
  • பூண் முலைப் பிறழப் பொன் தோடு இடவயின் நுடங்க ஒல்கி
  • மாண் இழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள்
  • காண் வரு குவளைக் கண்ணால் காளை மேல் நோக்கினாளே
   
1258.
  • நோக்கினாள் நெடுங் கண் என்னும்
  • குடங்கையால் நொண்டு கொண்டு
  • வாக்கு அமை உருவின் மிக்கான்
  • வனப்பினைப் பருக இப்பால்
  • ஆக்கிய இலயம் நீங்கிற்று அணங்கு
  • அனாள் நெடும் கண் பில்கி
  • வீக்கு வார் முலையின் நெற்றி
  • வெண் முத்தம் சொரிந்த அன்றே
   
1259.
  • செருக் கயல் நெடுங் கணாள்
  • அத் திருமகன் காண்டல் அஞ்சி
  • நெருக்கித் தன் முலையின் மின்னும்
  • நிழல் மணி வடத்தை மாதர்
  • பொருக்குநூல் பரிந்து சிந்தாப்
  • பூ எலாம் கரிந்து வாடத்
  • தரிக்கிலாள் காமச் செந் தீ
  • தலைக் கொளச் சாம்பினாளே
   
1260.
  • கன்னிமை கனிந்து முற்றிக்
  • காமுறக் கமழும் காமத்து
  • இன் நறுங் கனியைத் துய்ப்பான்
  • ஏந்தலே பிறர்கள் இல்லை
  • பொன்னினால் உடையும் கற்பு என்று
  • உரைத்தவர் பொய்யைச் சொன்னார்
  • இன்னிசை இவற்கு அலால்
  • என் நெஞ்சு இடம் இல்லை என்றாள்
   
1261.
  • கருஞ் சிறைப் பறவை ஊர்திக்
  • காமரு காளை தான் கொல்
  • இரும் சுறவு உயர்த்த தோன்றல்
  • ஏத்த அருங் குருசில் தான் கொல்
  • அரும் பெறல் குமரன் என்று ஆங்கு
  • அறிவு அயர்வுற்று நின்றாள்
  • திருந்து இழை அணங்கு மென்
  • தோள் தேசிகப் பாவை அன்னாள்
   
1262.
  • போது எனக் கிடந்த வாள் கண்
  • புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது
  • யாது இவள் கண்டது என்று
  • ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி
  • மீது வண்டு அரற்றும் கண்ணி
  • விடலையைத் தானும் கண்டான்
  • காதலில் களித்தது உள்ளம்
  • காளையைக் கொணர்மின் என்றான்
   
1263.
  • கை வளர் கரும்பு உடைக் கடவுள் ஆம் எனின்
  • எய் கணை சிலையினோடு இவன்கண் இல்லையால்
  • மெய் வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று
  • ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார்
   
1264.
  • மந்திரம் மறந்து வீழ்ந்து
  • மா நிலத்து இயங்கு கின்ற
  • அந்தர குமரன் என்று ஆங்கு
  • யாவரும் அமர்ந்து நோக்கி
  • இந்திர திருவற்கு உய்த்தார்க்கு
  • இறைவனும் எதிர் கொண்டு ஓம்பி
  • மைந்தனை மகிழ்வ கூறி
  • மைத்துனத் தோழன் என்றான்
   
1265.
  • போது அவிழ் தெரியலானும் பூங் கழல் காலினானும்
  • காதலின் ஒருவர் ஆகிக் கலந்து உடன் இருந்த போழ்தின்
  • ஊது வண்டு உடுத்த மாலை உணர்வு பெற்று இலயம் தாங்கிப்
  • போது கண்டு அனைய வாள் கண் புருவத்தால் கலக்குகின்றாள்
   
1266.
  • தேன் உகுக்குகின்ற கண்ணித் திருமகள் ஆட இப்பால்
  • ஊன் உகுக்குகின்ற வைவேல் ஒரு மகன் உருமின் தோன்றி
  • வான் உகுக்குகின்ற மீன் போல் மணி பரந்து இமைக்கும் மார்பில்
  • கான் உகுக்குகின்ற பைந்தார்க் காவலன் தொழுது சொன்னான்
   
1267.
  • கொய்தகைப் பொதியில் சோலைக் குழவிய முல்லை மௌவல்
  • செய்ய சந்து இமயச் சாரல் கருப்புரக் கன்று தீம்பூக்
  • கை தரு மணியின் தெண்ணீர் மதுக் கலந்து ஊட்டி மாலை
  • பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே
   
1268.
  • பவழம் கொள் கோடு நாட்டிப் பைம் பொனால் வேலி கோலித்
  • தவழ் கதிர் முத்தம் பாய்த்தித் தன்கையால் தீண்டி நன்னாள்
  • புகழ் கொடி நங்கை தன்பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை
  • அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ
   
1269.
  • வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடிக்
  • கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக எனக் குனிந்த வில் கீழ்
  • அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி
  • கம்பலம் போர்த்த போலும் கடி மலர்க் காவு புக்காள்
   
1270.
  • நற விரி சோலை ஆடி நாள் மலர்க் குரவம் பாவை
  • நிறைய பூத்து அணிந்து வண்டும் தேன்களும் நிழன்று பாட
  • இறைவளைத் தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து
  • பெறல் அரும் பாவை கொள்வாள் பெரிய தோள் நீட்டினாளே
   
1271.
  • நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி
  • அங்கு உறை அரவு தீண்டி ஓளவையோ என்று போகக்
  • கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர்
  • செங் கயல் கண்ணி தோழி திருமகள் சென்று சேர்ந்தாள்
   
1272.
  • அடிகளுக்கு இறைஞ்சி ஐயன்
  • அடிகளைத் தொழுது நங்கை
  • அடிகளைப் புல்லி ஆரத்
  • தழுவிக் கொண்டு ஒளவைமாரை
  • கொடி அனாய் என்னை நாளும்
  • நினை எனத் தழுவிக் கொண்டு
  • மிடை மின்னின் நிலத்தைச் சேர்ந்தாள்
  • வேந்த மற்று அருளுக என்றான்
   
1273.
  • பதுமையைப் பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்திக்
  • கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க எனக் குருசில் ஏகிக்
  • கதும் எனச் சென்று நோக்கி காய் சினம் கடிதற்கு ஒத்த
  • மதி மிகுத்து அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான்
   
1274.
  • வள்ளல் தான் வல்ல எல்லாம் மாட்டினன் மற்றும் ஆங்கண்
  • உள்ளவர் ஒன்றலாத செயச் செய ஊறு கேளாது
  • அள் இலைப் பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன
  • வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே
   
1275.
  • பைங்கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம்
  • நங்கையைச் செற்றது ஈங்குத் தீர்த்து நீர் கொள்மின் நாடும்
  • வங்க மா நிதியம் நல்கி மகள் தரும் மணிசெய் மான்தேர்
  • எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடிமுரசு எருக்கினானே
   
1276.
  • மண்டலி மற்றிது என்பார் இராசமா நாகம் என்பார்
  • கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில்
  • பிண்டித்துப் பெருகிற்று என்பார் பெருநவை அறுக்கும் விஞ்சை
  • எண்தவப் பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார்
   
1277.
  • சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார்
  • குரைபுனல் இடுதும் என்பார் கொந்தழல் உறுத்தும் என்பார்
  • இரை என வருந்தக் கவ்வி என்பு உறக் கடித்தது என்பார்
  • உரையன்மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார்
   
1278.
  • கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார்
  • தெய்வதம் பரவி எல்லாத் திசைதொறும் தொழுது நிற்பார்
  • உய்வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார்
  • மையல் அம் கோயில் மாக்கள் மடை திறந் திட்டது ஒத்தார்
   
1279.
  • வெந்து எரி செம் பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார்
  • மந்திரம் மறையும் வல்லார் எழாயிரர் மறு இல் வாய்மை
  • அந்தரத்து அறுவை வைப்பார் அந்தணர் அங் கை கொட்டிப்
  • பைந்தொடிப் பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார்
   
1280.
  • பாம்பு எழப் பாம்பு கொண்டால் பகவற்கும் அரிது தீர்த்தல்
  • தேம்பிழி கோதைக்கு இன்று பிறந்த நாள் தெளிமின் என்று
  • காம்பு அழி பிச்சம் ஆகக் கணி எடுத்து உரைப்பக் கல்லென்
  • தூம்பு அழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது அன்றே
   
1281.
  • நங்கைக்கு இன்று இறத்தல் இல்லை நரபதி நீயும் கோண்மோ
  • கொங்கலர் கோங்கின் நெற்றிக் குவி முகிழ் முகட்டின் அங்கண்
  • தங்கு தேன் அரவயாழின் தான் இருந்து ஆந்தை பாடும்
  • இங்கு நம் இடரைத் தீர்ப்பான் இளையவன் உளன் மற்று என்றான்
   
1282.
  • பன்மணிக் கடகம் சிந்தப்
  • பருப்புடை பவளத் தூண் மேல்
  • மன்னவன் சிறுவன் வண்கை
  • புடைத்து மாழாந்து சொன்னான்
  • இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி
  • என்னோடு அங்கு இருந்த நம்பி
  • தன்னைக் கூய்க் கொணர்மின் என்றான்
  • தர வந்து ஆங்கு அவனும் கண்டான்
   
1283.
  • பறவை மா நாகம் வீழ்ந்து பல உடன் பதைப்ப போன்றும்
  • சிறகுறப் பரப்பி மஞ்ஞை செருக்குபு கிடந்த போன்றும்
  • கறவை கன்று இழந்த போன்றும் கிடந்து அழுகின்ற கண்ணார்
  • இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான்
   
1284.
  • ஊறு கொள் சிங்கம் போல உயக்கமோடு இருந்த நம்பி
  • கூறினான் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து மற்று உன்
  • வீறு உயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி இன்னே
  • நாறு பூங் கொம்பனாளை நோக்கு என நம்பி சொன்னான்
   
1285.
  • புற்று இடை வெகுளி நாகம்
  • போக்கு அறக் கொண்டதேனும்
  • மற்று இடையூறு செய்வான்
  • வானவர் வலித்ததேனும்
  • பொன் தொடிக்கு இறத்தல் இல்லை
  • புலம்பு கொண்டு அழேற்க என்றான்
  • கற்று அடிப்படுத்த விஞ்சைக்
  • காமரு காமன் அன்னான்
   
1286.
  • பொழிந்து நஞ்சு உகுத்தல் அச்சம்
  • இரை பெரு வெகுளி போகம்
  • கழிந்து மீது ஆடல் காலம்
  • பிழைப்பு என எட்டின் ஆகும்
  • பிழிந்து உயிர் உண்ணும் தட்டம்
  • அதட்டம் ஆம் பிளிற்றின் உம்பர்
  • ஒழிந்து எயிறு ஊனம் செய்யும்
  • கோள் என மற்றும் சொன்னான்
   
1287.
  • அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை
  • நந்தியா வட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்
  • தந்தியாம் உரைப்பின் தாழைத் தடமலர் வணிகன் நாறும்
  • பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான்
   
1288.
  • கன்னியைக் கடித்த நாகம்
  • கன்னியே கன்னி நோக்கம்
  • அன்னதே அரசர் சாதி மூன்று
  • எயிறு அழிந்தி ஆழ்ந்த
  • கொன்னும் மா நாகம் கொண்டால்
  • கொப்புள் ஆம் விரலின் தேய்த்தால்
  • மன்னிய தௌ மட்டாயின்
  • மண்டலிப் பாலது என்றான்
   
1289.
  • குன்று இரண்டு அனைய தோளான்
  • கொழுமலர்க் குவளைப் போது அங்கு
  • ஒன்று இரண்டு உருவம் ஓதி
  • உறக்கிடை மயிலனாள் தன்
  • சென்று இருண்டு அமைந்த கோலச்
  • சிகழிகை அழுத்திச் செல்வன்
  • நின்று இரண்டு உருவம் ஓதி
  • நேர்முகம் நோக்கினானே
   
1290.
  • நெடுந் தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோலக்
  • கடுங் கதிர்க் கனலி கோப்பக் கார் இருள் உடைந்ததே போல்
  • உடம்பு இடை நஞ்சு நீங்கிற்று ஒண் தொடி உருவம் ஆர்ந்து
  • குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே
   
1291.
  • நோக்கினாள் நிறையும் நாணும்
  • மாமையும் கவினும் நொய்தில்
  • போக்கினாள் வளையும் போர்த்தாள்
  • பொன்நிறப் பசலை மூழ்கிற்று
  • ஆக்கினாள் அநங்கன் அப்புத்
  • தூணியை அமருள் ஆனாது
  • ஓக்கிய முருகன் எஃகம்
  • ஓர் இரண்டு அனைய கண்ணாள்
   
1292.
  • ஆட்சி ஐம் பொறியாளன் உடம்பு எனும்
  • பூட்சி நீள் கொடிப் புற்றின் அகத்து உறை
  • வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல்
  • வேட்கை நாகத்தின் மீட்டும் கொளப்பட்டாள்
   
1293.
  • மாழ்கி வெய்து உயிர்த்தாள் மடவாள் எனத்
  • தோழி மார்களும் தாயரும் தொக்கு உடன்
  • சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும்
  • வாழி என்றனர் வம்பு அலர் கோதையர்
   
1294.
  • கண்ணின் காணினும் கட்டுரை கேட்பினும்
  • நண்ணித் தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று
  • எண்ணி ஏந்திழை தன்னை உடம்பு எலாம்
  • தண் என் சாந்தம் வைத்தால் ஒப்பத் தைவந்தான்
   
1295.
  • மற்ற மாதர் தன் வாள் தடம் கண்களால்
  • உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில்
  • சுற்றி வள்ளலைச் சோர்வு இன்றி யாத்திட்டாள்
  • அற்றம் இல் அமிர்து ஆகிய அம் சொலாள்
   
1296.
  • விஞ்சையர் வீரன் என்பார் விண்ணவர் குமரன் என்பார்
  • எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார்
  • மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மாமுடிக் குரிசில் நாளை
  • நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையைக் கொடுக்கும் என்பார்
   
1297.
  • விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு
  • இளம் பிறை சூழ்ந்த மின்போல்
  • வளம் கெழு வடத்தைச் சூழ்ந்து
  • வான் பொன் நாண் திளைப்பச் சேந்த
  • இளங் கதிர் முலைகள் தம்மால்
  • இவனை மார்பு எழுதி வைகின்
  • துளங்கு பெண் பிறப்பும் தோழி
  • இனிது எனச் சொல்லி நிற்பார்
   
1298.
  • அருந்தவம் செய்து வந்த
  • ஆயிழை மகளிர் யார் கொல்
  • பெருந்தகை மார்பில் துஞ்சிப்
  • பெண்மையால் பிணிக்கும் நீரார்
  • கருங்கணின் யாமும் கண்டாம்
  • காமனை என்று சொல்லித்
  • திருந்து ஒளி முறுவல் செவ்வாய்த்
  • தீம் சொலார் மயங்கினாரே
   
1299.
  • பல் மலர் படலைக் கண்ணிக்
  • குமரனைப் பாவை நல்லார்
  • மன்னவன் பணியின் வாழ்த்தி
  • வாச நெய் பூசி நல்நீர்
  • துன்னினர் ஆட்டிச் செம்பொன்
  • செப்பினுள் துகிலும் சாந்தும்
  • இன் நறும் புகையும் பூவும்
  • கலத்தொடும் ஏந்தினாரே
   
1300.
  • ஏந்திய ஏற்பத் தாங்கி
  • எரிமணிக் கொட்டை நெற்றி
  • வாய்ந்த பொன் குயிற்றிச் செய்த
  • மரவடி ஊர்ந்து போகி
  • ஆய்ந்த நல் மாலை வேய்ந்த
  • அரும் பெறல் கூடம் சேர்ந்தான்
  • பூந் தொடி மகளிர் போற்றிப்
  • பொன்கலம் பரப்பினாரே
   
1301.
  • கன்னியர் கரக நீரால்
  • தாமரை கழீஇயது ஒப்பப்
  • பொன் அடி கழீஇய பின்றைப்
  • புரிந்து வாய் நன்கு பூசி
  • இன்மலர்த் தவிசின் உச்சி
  • இருந்து அமிர்து இனிதின் கொண்டான்
  • மின் விரிந்து இலங்கு பைம் பூண்
  • வேல் கணார் வேனிலானே
   
1302.
  • வாச நல் பொடியும் நீரும் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்
  • பூசறுத்து அம் கை நீரை மும்முறை குடித்து முக்கால்
  • காசு அறத் துடைத்த பின்றைக் கை விரல் உறுப்புத் தீட்டித்
  • தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான்
   
1303.
  • சீர் கொளச் செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல
  • வார் கழல் குருசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண்
  • போர் கொள்வேல் மன்னன் எல்லாக் கலைகளும் புகன்று கேட்டு
  • நீர் கொள் மாக்கடல் அனாற்கு நிகர் இல்லை நிலத்தில் என்றான்
   
1304.
  • பரிதி பட்டது பன் மணி நீள் விளக்கு
  • எரிய விட்டனர் இன்னியம் ஆர்த்தன
  • அரிய பொங்கு அணை அம் என் அமளிமேல்
  • குரிசில் ஏறினன் கூர்ந்தது சிந்தையே
   
1305.
  • பூங் கண் அவ்வயின் நோக்கம் பொறாத போல்
  • வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின வெம் முலை
  • ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது
  • பாங்கு இலாரின் பரந்து உள அல்குலே
   
1306.
  • முருகு வார் குழலாள் முகிழ் மெல் முலை
  • பெருகு நீர்மையின் பேதுறவு எய்தி நின்று
  • உருகும் நுண் இடை ஓவியப் பாவைதன்
  • அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே
   
1307.
  • புகை அவாவிய பூந்துகில் ஏந்து அல்குல்
  • வகைய ஆம் மணி மேகலை வார் மது
  • முகை அவாவிய மொய் குழல் பாவியேன்
  • பகைய வாய்ப் படர் நோய் பயக் கின்றவே
   
1308.
  • போது உலாம் சிலையோ பொரு வேல் கணோ
  • மாது உலாம் மொழியோ மட நோக்கமோ
  • யாது நான் அறியேன் அணங்கு அன்னவள்
  • காதலால் கடைகின்றது காமமே
   
1309.
  • அண்ணல் அவ்வழி ஆழ் துயர் நோய் உற
  • வண்ண மா மலர்க் கோதையும் அவ்வழி
  • வெண்ணெய் வெம் கனல் மீமிசை வைத்தது ஒத்து
  • உள் நையா உருகா உளள் ஆயினாள்
   
1310.
  • பெயல் மழை பிறழும் கொடி மின் இடைக்
  • கயல் மணிக் கணின் நல்லவர் கை தொழப்
  • பயன் இழைத்த மென் பள்ளியுள் பைந்தொடி
  • மயன் இழைத்த அம் பாவையின் வைகினாள்
   
1311.
  • வணங்கு நோன் சிலை வார் கணைக் காமனோ
  • மணம் கொள் பூமிசை மை வரை மைந்தனோ
  • நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை
  • அணங்குகாள் அறியேன் உரையீர்களே
   
1312.
  • கடை கந்து அன்ன தன் காமரு வீங்கு தோள்
  • அடையப் புல்லினன் போன்று அணி வெம் முலை
  • உடைய ஆகத்து உறு துயர் மீட்டவன்
  • இடையது ஆகும் என் ஆரும் இல் ஆவியே
   
1313.
  • இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி அன்று
  • அறிவின் நாடிய அம் மலை மத்தமா
  • நெறியின் நின்று கடைந்திடப் பட்ட நீர்
  • மறுகும் மா கடல் போன்றது என் நெஞ்சமே
   
1314.
  • நகை வெண் திங்களும் நார்மடல் அன்றிலும்
  • தகை வெள் ஏற்று அணல் தாழ் மணி ஓசையும்
  • பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும்
  • புகை இல் பொங்கு அழல் போல் சுடுகின்றவே
   
1315.
  • பூ மென் சேக்கையுள் நாற்றிய பூந் திரள்
  • தாமம் வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇக்
  • காமர் பேதை தன் கண்தரு காமநோய்
  • யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே
   
1316.
  • மாது யாழ் மழலை மொழி மாதராள்
  • தாதி அவ்வையும் தன் அமர் தோழியும்
  • போது வேய் குழல் பொன் அவிர் சாயலுக்கு
  • யாது நாம் செயல்பாலது என்று எண்ணினார்
   
1317.
  • அழுது நுண் இடை நைய அலர் முலை
  • முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்தபின்
  • தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார்
  • எழுது கொம்பு அனையார் இளையாளையே
   
1318.
  • வேந்து காயினும் வெள் வளை ஆயமோடு
  • ஏந்து பூம் பொழில் எய்தி அங்கு ஆடுதல்
  • ஆய்ந்தது என்று கொண்டு அம் மயில் போல் குழீஇப்
  • போந்தது ஆயம் பொழிலும் பொலிந்ததே
   
1319.
  • அலங்கல் தான் தொடுப்பார் அலர் பூக்கொய்வார்
  • சிலம்பு சென்று எதிர் கூவுநர் செய் சுனை
  • கலங்கப் பாய்ந்து உடன் ஆடுநர் காதலின்
  • இலங்கு பாவை இரு மணம் சேர்த்துவார்
   
1320.
  • தூசு உலாம் நெடுந் தோகையின் நல்லவர்
  • ஊசல் ஆடுநர் ஒண் கழங்கு ஆடுநர்
  • பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர்
  • ஆகி எத்திசையும் அமர்ந்தார்களே
   
1321.
  • முருகு விம்மிய மொய் குழல் ஏழைதன்
  • உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட
  • அரிவை ஆடிய காவகம் காணிய
  • எரி கொள் வேலவன் ஏகினன் என்பவே
   
1322.
  • மயிலின் ஆடலும் மந்தியின் ஊடலும்
  • குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண்
  • வெயிலின் நீங்கிய வெண் மணல் தண் நிழல்
  • பயிலும் மாதவிப் பந்தர் ஒன்று எய்தினான்
   
1323.
  • காது சேர்ந்த கடிப் பிணை கையது
  • தாது மல்கிய தண் கழுநீர் மலர்
  • ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண்
  • கோதை வெம் முலை மேல் கொண்ட கோலமே
   
1324.
  • விண் புதைப்பன வெண் மலர் வேய்ந்து உளால்
  • கண் புதைப்பன கார் இரும் பூம் பொழில்
  • சண்பகத்து அணி கோதை நின்றாள் தனி
  • நண்பனை நினையா நறு மேனியே
   
1325.
  • கறந்த பாலினுள் காசு இல் திருமணி
  • நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டு ஆங்கு அவள்
  • மறைந்த மாதவி மாமை நிழற்றலின்
  • சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான்
   
1326.
  • வரையின் மங்கை கொல் வாங்கு இரும் தூங்கு நீர்த்
  • திரையின் செல்வி கொல் தேமலர் பாவைகொல்
  • உரையின் சாயல் இயக்கி கொல் யார் கொல் இவ்
  • விரை செய் கோலத்து வெள்வளைத் தோளியே
   
1327.
  • மாலை வாடின வாள் கண் இமைத்தன
  • காலும் பூமியைத் தோய்ந்தன காரிகைப்
  • பாலின் தீம் சொல் பதுமை இந் நின்றவள்
  • சோலை வேய்மருள் சூழ் வளைத் தோளியே
   
1328.
  • தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை
  • மேவர் தென் தமிழ் மெய்ப் பொருள் ஆதலின்
  • கோவத்து அன்ன மென் சீறடிக் கொம்பு அனாள்
  • பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான்
   
1329.
  • அல்லி சேர் அணங்கு அன்னவட்கு ஆயிடைப்
  • புல்லி நின்ற மெய்ந் நாண் புறப்பட்டது
  • கல் செய் தோளவன் காமரு பேர் உணர்வு
  • எல்லை நீங்கிற்று இயைந்தனர் என்பவே
   
1330.
  • களித்த கண் இணை காம்பு என வீங்குதோள்
  • தெளிர்த்த வெள்வளை சேர்ந்தது மாமையும்
  • தளித்த சுண்ணம் சிதைந்தன குங்குமம்
  • அளித்த பூம் பட்டு அணிந்து திகழ்ந்ததே
   
1331.
  • குவளை ஏய்ந்த கொடுங் குழை கூந்தலுள்
  • திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
  • இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
  • தவள மெல் இணர்த் தண் கொடி முல்லையே
   
1332.
  • பொன் துஞ்சு ஆகத்துப் பூங் கண்கள் போழ்ந்த புண்
  • இன்று இப் பூண் கொள் இள முலைச் சாந்து அலால்
  • அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லையே
  • என்று மாதர் எழில் நலம் ஏத்தினான்
   
1333.
  • கண்ணி வேய்ந்து கருங் குழல் கை செய்து
  • வண்ண மாலை நடுச் சிகையுள் வளைஇச்
  • செண்ண அம் சிலம்பு ஏறு துகள் அவித்து
  • அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் ஆற்றினாள்
   
1334.
  • திங்களும் மறுவும் எனச் சேர்ந்தது
  • நங்கள் அன்பு என நாட்டி வலிப்பு உறீஇ
  • இங்கு ஒளித்திடுவேன் நுமர் எய்தினார்
  • கொங்கு ஒளிக்கும் குழலாய் எனக் கூறினான்
   
1335.
  • மழை இடைக் குளித்திட்டது ஓர் வாள் மினின்
  • தழை இடைக் குளித்தான் தகை வேலினான்
  • இழை இடைக் குளித்து ஏந்திய வெம்முலை
  • வழை இடைக் குளித்தார் வந்து தோன்றினார்
   
1336.
  • மின் ஒர் பூம் பொழில் மேதகச் செல்வது ஒத்து
  • அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி
  • மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள்
  • நல் நலம் அவற்கே வைத்த நங்கையே
   
1337.
  • திங்கள் சூழ்ந்த பல் மீன் எனச் செல் நெறி
  • நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார்
  • அங்கு அவ் ஆயம் அடிப்பணி செய்தபின்
  • தங்கள் காதலினால் தகை பாடினார்
   
1338.
  • தழையும் கண்ணியும் தண் நறு மாலையும்
  • விழைவ சேர்த்துபு மெல் என ஏகினார்
  • முழையுள் மூரி முழங்கு அரி ஏறு அனான்
  • பழைய நண்பனைப் பண்புளி எய்தினான்
   
1339.
  • பூமியை ஆடற்கு ஒத்த பொறியினன் ஆதலானும்
  • மா மகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும்
  • நேமியான் சிறுவன் அன்ன நெடுந்தகை நேரும் ஆயின்
  • நாம் அவற்கு அழகிதாக நங்கையைக் கொடுத்தும் என்றான்
   
1340.
  • மதிதரன் என்னும் மாசுஇல் மந்திரி சொல்லக் கேட்டே
  • உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும்
  • விதிதர வந்தது ஒன்றே விளங்கு பூண் முலையினாளைக்
  • கொதி தரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான்
   
1341.
  • உள் விரித்து இதனை எல்லாம்
  • உரைக்க என மொழிந்து விட்டான்
  • தௌளிதின் தெரியச் சென்று
  • ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி
  • வெள் இலை அணிந்த வேலான்
  • வேண்டியது ஆக என்றான்
  • அள் இலை வேல் கொள் மன்னற்கு
  • அமைச்சன் அஃது அமைந்தது என்றான்
   
1342.
  • பொன்றிய உயிரை மீட்டான் பூஞ்சிகைப் போது வேய்ந்தான்
  • அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான்
  • ஒன்றிய மகளிர் தாமே உற்றவர்க்கு உரியர் என்னா
  • வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே
   
1343.
  • கோப்பெருந் தேவி கொற்றக் கோமகன் இவைகள் நாடி
  • யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்னத்
  • தூப்புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும்
  • பூப் புரிந்து அணிந்து கோயில் புதுவது புனைந்தது அன்றே
   
1344.
  • கணி புனைந்து உரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள்
  • மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
  • அணி உடைக் கமலம் அன்ன அம்கை சேர் முன்கை தன்மேல்
  • துணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார்
   
1345.
  • மழ களிற்று எருத்தில் தந்த மணிக்குடம் மண்ணும் நீரால்
  • அழகனை மண்ணுப் பெய்து ஆங்கு அருங் கடிக்கு ஒத்த கோலம்
  • தொழுதகத் தோன்றச் செய்தார் தூமணிப் பாவை அன்னார்
  • விழுமணிக் கொடி அனாளும் விண்ணவர் மடந்தை ஒத்தாள்
   
1346.
  • கயல் கணாளையும் காமன் அன்னானையும்
  • இயற்றினார் மணம் எத்தரும் தன்மையார்
  • மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய
  • இயற்கை அன்பு உடையார் இயைந்தார்களே
   
1347.
  • வாளும் வேலும் மலைந்து அரியார்ந்த கண்
  • ஆளும் வார் கயல் மைந்தனும் ஆயிடைத்
  • தோளும் தாளும் பிணைந்து உரு ஒன்று எய்தி
  • நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ
   
1348.
  • தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும்
  • பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன்
  • மணிக் கண் வெம் முலை தாம் பொர வாய் அவிழ்ந்து
  • அணிக்கந்து அன்னவன் தார் அங்கு உடைந்ததே
   
1349.
  • பரிந்த மாலை பறைந்தன குங்குமம்
  • கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியின்
  • அரிந்த மேகலை ஆர்த்தன அம்சிலம்பு
  • பிரிந்த வண்டு இளையார் விளையாடவே
   
1350.
  • கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை
  • கழுமு சேக்கையுள் காலையும் மாலையும்
  • தழுவு காதல் தணப்பிலர் செல்பவே
  • எழுமையும் இயைந்து எய்திய அன்பினார்
   
1351.
  • நாறியும் சுவைத்தும் நரம்பின் இசை
  • கூறியும் குளிர் நாடகம் நோக்கியும்
  • ஊறின் வெம் முலையால் உழப்பட்டும் அவ்
  • ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே
   
1352.
  • விரிகதிர் விளங்கு பன்மீன்
  • கதிரொடு மிடைந்து திங்கள்
  • தெரி கதிர் திரட்டி வல்லான்
  • தெரிந்து கோத்தணிந்த போலும்
  • சொரி கதிர் முத்தம் மின்னும்
  • துணை முலைத் தடத்தில் வீழ்ந்தான்
  • புரிகதிர்ப் பொன் செய் மாலைப்
  • புகைநுதிப் புலவு வேலான்
   
1353.
  • எழில் மாலை என் உயிரை
  • யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகிக்
  • குழல் மாலைக் கொம்பு ஆகிக்
  • கூர் எயிறு நாப் போழ்தல் அஞ்சி அஞ்சி
  • உழல் மாலைத் தீம் கிளவி
  • ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள் காறும்
  • நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே
  • நெய் தோய்ந்த தளிரே மேனி
   
1354.
  • மா நீர் மணிமுகிலின் மின்னுக் கொடி
  • நுசுப்பின் மயில் அம் சாயல்
  • ஏ நீர் இரு புருவம் ஏறி
  • இடை மு£¤ந்து நுடங்கப் புல்லித்
  • தூநீர் மலர்மார்பன் தொல்நலம்
  • தான் பருகித் துளும்பும் தேறல்
  • தேனீர் மலர் மாலை தேன்
  • துளித்து மட்டு உயிர்ப்பச் சூட்டினானே
   
1355.
  • தேன் அடைந்து இருந்த கண்ணித்
  • தெண்மட்டுத் துவலை மாலை
  • ஊன் அடைந்து இருந்த வேல்கண்
  • ஒண் தொடி உருவ வீணை
  • தான் அடைந்து இருந்த காவில்
  • பாடினாள் தனிமை தீர்வான்
  • கூன் அடைந்திருந்த திங்கள்
  • குளிர் முத்த முலையினாளே
   
1356.
  • வார் தளிர் ததைந்து போது
  • மல்கி வண்டு உறங்கும் காவில்
  • சீர் கெழு குருசில் புக்கான்
  • தேசிகப் பாவை என்னும்
  • கார் கெழு மின்னு வென்ற
  • நுடங்கு இடைக் கமழ் தண் கோதை
  • ஏர் கெழு மயில் அனாளை
  • இடை வயின் எதிர்ப் பட்டானே
   
1357.
  • சிலம்பு எனும் வண்டு பாட மேகலைத் தேன்கள் ஆர்ப்ப
  • நலம் கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக்
  • கலந்தனன் காம மாலை கலையினது இயல்பில் சூட்டப்
  • புலம்பு போய்ச் சாயல் என்னும் புதுத் தளிர் ஈன்றது அன்றே
   
1358.
  • சாந்திடைக் குளித்த வெம்கண் பணை முலைத் தாம மாலைப்
  • பூந்தொடி அரிவை பொய்கைப் பூமகள் அனைய பொற்பின்
  • வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை இவர்கள் நாளும்
  • ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான்
   
1359.
  • இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் ஏக வேலான்
  • அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் முலைப் போகம் நீக்கி
  • எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள் இடை ஏகல் உற்றான்
  • தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கோர் தேராக நின்றான்
   
1360.
  • தயங்கு இணர்க் கோதை தன்மேல் தண் என வைத்த மென்தோள்
  • வயங்கு இணர் மலிந்த தாரான் வருந்துறா வகையின் நீங்கி
  • நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல்
  • இயங்கு இடை அறுத்த கங்குல் இருள் இடை ஏகினானே
   
1361.
  • நீல் நிறக் குழல் நேர் வளைத் தோளியைத்
  • தான் உறக்கு இடை நீத்தலும் தன்பினே
  • வேல் நிறக் கண் விழித்தனள் என்பவே
  • பால் நிறத் துகில் பைஅரவு அல்குலாள்
   
1362.
  • ஆக்கை உள் உறை ஆவி கெடுத்து அவண்
  • யாக்கை நாடி அயர்வது போலவும்
  • சேக்கை நாடித் தன் சேவலைக் காணிய
  • பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள் அரோ
   
1363.
  • புல்லும் போழ்தின் நும் பூண் உறின் நோம் என
  • மல்லல் காளையை வைது மிழற்று வாய்
  • இல்லின் நீக்கம் உரைத்திலை நீ எனச்
  • செல்வப் பைங்கிளி தன்னையும் சீறினாள்
   
1364.
  • ஓவியக் கொடி ஒப்பு அருந் தன்மை எம்
  • பாவை பேதுறப் பாயலின் நீங்கி நீ
  • போவதோ பொருள் என்றிலை நீ எனப்
  • பூவை யோடும் புலம்பி மிழற்றினாள்
   
1365.
  • தன் ஒப்பாரை இல்லானைத் தலைச் சென்று எம்
  • பொன் ஒப்பா ளொடும் போக எனப் போகடாய்
  • துன்னித் தந்திலை நீ எனத் தூச்சிறை
  • அன்னப் பேடையொடு ஆற்றக் கழறினாள்
   
1366.
  • மை இல் வாள் நெடுங் கண் வளராதன
  • மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ
  • ஐயன் சென்றுழிக் கூறுக என்று ஆய்மயில்
  • கையினால் தொழுதாள் கயல் கண்ணினாள்
   
1367.
  • வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள்
  • விளக்குவாய் விளக்கே விளக்காய் இவண்
  • அளித்த காதலொடு ஆடும் என் ஆர் உயிர்
  • ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள்
   
1368.
  • பருகிப் பாயிருள் நிற்பின் அறது எனக்
  • கருகி அவ்விருள் கான்று நின் மெய் எலாம்
  • எரிய நின்று நடுங்கு கின்றாய் எனகு
  • உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள்
   
1369.
  • கோடி நுண் துகிலும் குழையும் நினக்கு
  • ஆடு சாந்தமும் அல்லவும் நல்குவேன்
  • மாடமே நெடியாய் மழை தோய்ந்து உளாய்
  • நாடி நண்பனை நண்ணுக நன்று அரோ
   
1370.
  • ஆடகக் கொழும் பொன் வரை மார்பனைக்
  • கூடப் புல்லி வையாக் குற்றம் உண்டு எனா
  • நீடு எரித் திரள் நீள் மணி தூணொடு
  • சூடகத் திரள் தோள் அணி வாட்டினாள்
   
1371.
  • கொலை கொள் வேலவன் கூடலன் ஏகினான்
  • இலை கொள் பூண் நுமக்கு என்செயும் ஈங்கு எனா
  • மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன்
  • முலை கொள் பேர் அணி முற்றிழை சிந்தினாள்
   
1372.
  • அருங் கலம் கொடி அன்னவன் ஏகினான்
  • இருந்து இவ் ஆகத்து எவன் செய்வீர் நீர் எனா
  • மருங்குல் நோவ வளர்ந்த வன முலைக்
  • கருங் கண் சேந்து கலங்க அதுக்கினாள்
   
1373.
  • மஞ்சு சூழ்வரை மார்பனைக் காணிய
  • துஞ்சல் ஓம்புமின் என்னவும் துஞ்சினீர்
  • அஞ்சனத்தொடு மை அணிமின் என
  • நெஞ்சின் நீள் நெடுங் கண்மலர் சீறினாள்
   
1374.
  • அரக்கு உண் தாமரை அன்ன தன் கண் மலர்
  • விருத்தி மாதர் விலக்க வெரீஇக் கொலோ
  • வருத்தம் உற்றனள் என்று கொல் மேகலை
  • குரல் கொடாது குலுங்கிக் குறைந்ததே
   
1375.
  • துனிவாயின துன்னுபு செய்து அறியேன்
  • தனியேன் ஒரு பெண் உயிர் என்னொடுதான்
  • இனியான் இஙனே உளனே உரையீர்
  • பனியார் மலர் மேல் படு வண்டு இனமே
   
1376.
  • நிரை வீழ் அருவி நிமிர் பொன் சொரியும்
  • வரையே புனலே வழையே தழையே
  • விரையார் பொழிலே விரி வெண் நிலவே
  • உரையீர் உயிர் காவலன் உள் வழியே
   
1377.
  • எரி பொன் உலகின் உறைவீர் இதனைத்
  • தெரிவீர் தெரிவில் சிறு மானிடரின்
  • பரிவு ஒன்றிலிரால் படர்நோய் மிகுமால்
  • அரிதால் உயிர் காப்பு அமரீர் அருளீர்
   
1378.
  • புணர்வின் இனிய புலவிப் பொழுதும்
  • கணவன் அகலின் உயிர் கை அகறல்
  • உணர்வீர் அமரர் மகளீர் அருளிக்
  • கொணர்வீர் கொடியேன் உயிரைக் கொணர்வீர்
   
1379.
  • நகை மா மணி மாலை நடைக் கொடி நின்
  • வகை மா மணி மேகலை ஆயினதேல்
  • அகையாது எனது ஆவி தழைக்கும் எனத்
  • தகை பாட வலாய் தளர்கோ தளர்கோ
   
1380.
  • புனைதார் பொர நொந்து பொதிர்ந்த என
  • வினையார் எரி பூண் முலை கண் குளிர
  • உன கண் மலரால் உழுது ஓம்ப வலாய்
  • நினையாது நெடுந் தகை நீத்தனையே
   
1381.
  • அருள் தேர் வழி நின்று அறனே மொழிவாய்
  • பொருள் தேர் புலன் எய்திய பூங் கழலாய்
  • இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய்
  • உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே
   
1382.
  • மிக ஆயது ஒர் மீளிமை செய்தனனோ
  • உகவா உனது உள்ளம் உவர்த்ததுவோ
  • இகவா இடர் என் வயின் நீத்திட நீ
  • தகவா தகவு அல்லது செய்தனையே
   
1383.
  • குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால்
  • தளர் அன்ன நடையவள் தாங்க லளாய்
  • ஒளிர் பொன் அரிமாலை ஒசிந்து இஙனே
  • மிளிர் மின் என மின் நிலம் எய்தினளே
   
1384.
  • தழும் மாவலி மைந்த எனத் தளரா
  • எழும் ஏழ் அடி ஊக்கி நடந்து செலா
  • விழும் மீ நிலம் எய்தி மிளர்ந்து உருகா
  • அழுமால் அவலித்து அவ் அணங்கிழையே
   
1385.
  • கரப்பு நீர்க் கங்கை அம் கள்
  • கடிமலர்க் கமலப் பள்ளித்
  • திருத் தகு திரைகள் தாக்கச்
  • சேப்புழிச் சேவல் நீங்கப்
  • பரல் தலை முரம்பின் சின்னீர்
  • வறுஞ் சுனைப் பற்று விட்ட
  • அரத்த வாய்ப் பவளச் செந் தாள்
  • பெடை அன்னம் அழுவது ஒத்தாள்
   
1386.
  • மெழுகினால் புனைந்த பாவை
  • வெய்து உறுத்தாங்கு ஓவாது
  • அழுது நைந்து உருகுகின்ற
  • ஆயிடைத் தோழி துன்னிக்
  • கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க்
  • கிளை நரம்பு அனைய சொல்லாள்
  • கழி பெருங் கவலை நீங்கக்
  • காரண நீர சொன்னாள்
   
1387.
  • தௌ அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி
  • அள் உற அளிந்த காமம் அகம் உறப் பிணித்ததேனும்
  • உள் உற வெந்த செம்பொன் உற்ற நீர்ப் புள்ளி அற்றால்
  • கள் உற மலர்ந்த கோதாய் காதலர் காதல் என்றாள்
   
1388.
  • ஓடு அரி ஒழுகி நீண்ட
  • ஒளி மலர் நெடுங் கணாரைக்
  • கூடு அரி உழுவை போல
  • முயக்கு இடைக் குழையப் புல்லி
  • ஆடவர் அழுந்தி வீழ்ந்தும்
  • பிரிவு இடை அழுங்கல் செல்லார்
  • பீடு அழிந்து உருகும் பெண்ணின்
  • பேதையார் இல்லை என்றாள்
   
1389.
  • பேதைமை என்னும் வித்தில்
  • பிறந்து பின் வினைகள் என்னும்
  • வேதனை மரங்கள் நாறி
  • வேட்கை வேர் வீழத்து முற்றிக்
  • காதலும் களிப்பும் என்னும்
  • கவடு விட்டு அவலம் பூத்து
  • மா துயர் இடும்பை காய்த்து
  • மரணமே கனிந்து நிற்கும்
   
1390.
  • தேன் சென்ற நெறியும் தௌ நீர்ச்
  • சிறுதிரைப் போர்வை போர்த்து
  • மீன் சென்ற நெறியும் போல
  • விழித்து இமைப்பவர்க்குத் தோன்றா
  • மான் சென்ற நோக்கின் மாதே
  • மாய்ந்து போம் மக்கள் யாக்கை
  • ஊன் சென்று தேயச் சிந்தித்து
  • உகுவதோ தகுவது என்றாள்
   
1391.
  • பிரிந்தவற்கு இரங்கிப் பேதுற்று
  • அழுத நம் கண்ணின் நீர்கள்
  • சொரிந்தவை தொகுத்து நோக்கின்
  • தொடு கடல் வெள்ளம் ஆற்றா
  • முரிந்த நம் பிறவி மேல் நாள்
  • முற்றிழை இன்னும் நோக்காய்
  • பரிந்து அழுவதற்குப் பாவாய்
  • அடி இட்ட வாறு கண்டாய்
   
1392.
  • அன்பினின் அவலித்து ஆற்றாது
  • அழுவதும் எளிது நங்கள்
  • என்பினின் ஆவி நீங்க
  • இறுவதும் எளிது சேர்ந்த
  • துன்பத்தால் துகைக்கப் பட்டார்
  • துகைத்த அத் துன்பம் தாங்கி
  • இன்பம் என்று இருத்தல் போலும்
  • அரியது இவ் உலகில் என்றாள்
   
1393.
  • மயற்கை இம் மக்கள் யோனிப்
  • பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு
  • இயற்கையே பிரிவு சாதல்
  • இமைப்பிடைப் படாதது ஒன்றால்
  • கயல் கணின் அளவும் கொள்ளார்
  • கவற்சி உள் கவற்சி கொண்டார்
  • செயற்கை அம் பிறவி நச்சுக் கடல்
  • அகத்து அழுந்துகின்றார்
   
1394.
  • இளமையில் மூப்பும் செல்வத்து
  • இடும்பையும் புணர்ச்சிப் போழ்தில்
  • கிளைநரில் பிரிவும் நோயில்
  • காலத்து நோயும் நோக்கி
  • விளை மதுக் கமழும் கோதை
  • வேலினும் வெய்ய கண்ணாய்
  • களைதுயர் அவலம் வேண்டா
  • கண் இமைப்பு அளவும் என்றாள்
   
1395.
  • முத்து இலங்கு ஆகம் தோய்ந்த
  • மொய்ம் மலர்த் தாரினான் நம்
  • கைத்தலத்து அகன்ற பந்தின்
  • கைப்படும் கவல வேண்டா
  • பொத்து இலத்து உறையும் ஆந்தை
  • புணர்ந்து இருந்து உரைக்கும் பொன்னே
  • நித்தில முறுவல் உண்டான்
  • நீங்கினான் அல்லன் கண்டாய்
   
1396.
  • வடிமலர்க் காவின் அன்று
  • வண் தளிர்ப் பிண்டி நீழல்
  • முடி பொருள் பறவை கூற
  • முற்று இழை நின்னை நோக்கிக்
  • கடியது ஓர் கௌவை செய்யும்
  • கட்டு எயிற்று அரவின் என்றேன்
  • கொடியனாய் பிழைப்புக் கூறேன்
  • குழையல் என்று எடுத்துக் கொண்டாள்
   
1397.
  • அலங்கலும் குழலும் தோழி
  • அம் கையின் அடைச்சி அம்பூம்
  • பொலங் கலக் கொடி அனாள்
  • தன் கண் பொழி கலுழி ஒற்றிக்
  • கலந்து அகில் நாறும் அல்குல்
  • கவான் மிசைக் கொண்டிருந்தாள்
  • புலர்ந்தது பொழுது நல்லாள்
  • நெஞ்சமும் புலர்ந்தது அன்றே
   
1398.
  • கண் கனிந்து இனிய காமச் செவ்வியுள் காளை நீங்கத்
  • தெண் பனி அனைய கண்ணீர்ச் சேயிழை தாயர் எல்லாம்
  • தண் பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார்
  • பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி ஆங்குக்
   
1399.
  • சில்லரிச் சிலம்பு சூழ்ந்த
  • சீறடித் திருவின் நற்றாய்
  • முல்லை அம் குழலினாய் நின்
  • முலை முதல் கொழு நன் மேல் நாள்
  • சொல்லியும் அறிவது உண்டோ
  • எனக் குழைந்து உருகி நைந்து
  • மெல் இயல் கங்குல் சொல்லிற்று
  • இற்று என மிழற்று கின்றாள்
   
1400.
  • வினைக்கும் செய் பொருட்கும் வெயில் வெம் சுரம்
  • நினைத்து நீங்குதல் ஆண் கடன் நீங்கினால்
  • கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன்
  • மனைக் கண் வைகுதல் மாண்பொடு எனச் சொன்னாள்
   
1401.
  • விரை செய் தாமரை மேல் விளையாடிய
  • அரைச அன்னம் அமர்ந்துள ஆயினும்
  • நிரை செய் நீல நினைப்பில என்றனன்
  • வரை செய் கோல மணம் கமழ் மார்பினான்
   
1402.
  • பொன் விளைத்த புணர் முலையாள் சொல
  • இன் அளிக் குரல் கேட்ட அசுண மா
  • அன்னள் ஆய் மகிழ்வு எய்துவித்தாள் அரோ
  • மின் வளைத்தன மேகலை அல்குலாள்
   
1403.
  • அன்னம் தான் அவன் தாமரைப் போது நீ
  • நின்னை நீங்கினன் நீங்கலன் காதலான்
  • இன்னதால் அவன் கூறிற்று எனச் சொன்னாள்
  • மன்னன் ஆர் உயிர் மா பெருந் தேவியே
   
1403.
  • அன்னம் தான் அவன் தாமரைப் போது நீ
  • நின்னை நீங்கினன் நீங்கலன் காதலான்
  • இன்னதால் அவன் கூறிற்று எனச் சொன்னாள்
  • மன்னன் ஆர் உயிர் மா பெருந் தேவியே
   
1404.
  • சொரி பனி முருக்க நைந்து
  • சுடர் முகம் பெற்ற போதே
  • பரிவுறும் நலத்த அன்றே
  • பங்கயம் அன்னதே போல்
  • வரி வளைத் தோளி கேள்வன்
  • வரும் என வலித்த சொல்லால்
  • திரு நலம் பிறந்து சொன்னாள்
  • தேனினும் இனிய சொல்லாள்
   
1405.
  • நஞ்சினை அமுதம் என்று
  • நக்கினும் அமுதம் ஆகாது
  • அம் சிறைக் கலாப மஞ்ஞை
  • அணங்கு அரவு அட்டதேனும்
  • அம் சிறைக் கலுழன் ஆகும்
  • மாட்சி ஒன்றானும் இன்றே
  • மஞ்சனுக்கு இனைய நீரேன்
  • வாடுவது என்னை என்றாள்
   
1406.
  • பொய்கையுள் கமலத்து அம் கண்
  • புள் எனும் முரசம் ஆர்ப்ப
  • வெய்யவன் கதிர்கள் என்னும்
  • விளங்கு ஒளித் தடக்கை நீட்டி
  • மை இருள் போர்வை நீக்கி
  • மண்ணக மடந்தை கோலம்
  • பையவே பரந்து நோக்கிப்
  • பனிவரை நெற்றி சேர்ந்தான்
   
1407.
  • செவ்வழி யாழின் ஊறும் தீம்
  • சொலாட்கு உற்றது எல்லாம்
  • அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு
  • அரசனும் அவலம் எய்தி
  • எவ்வழியானும் நாடி
  • இமைப்பினது எல்லை உள்ளே
  • இவ்வழித் தம்மின் என்றான்
  • இவுளித் தேர்த் தானையானே
   
1408.
  • மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதகத்
  • தன் உளே பிறந்தது ஓர் வடிவு தாங்குபு
  • முன்னினான் வடதிசை முகம் செய்து என்பவே
  • பொன் உளே பிறந்த பொன் அனைய பொற்பினான்
   
1409.
  • வீக்கினான் பைங் கழல் நரல வெண் துகில்
  • ஆக்கினான் இரு துணி அணிந்த பல் கலன்
  • நீக்கினான் ஒரு மகற்கு அருளி நீள்நெறி
  • ஊக்கினான் உவவு உறும் மதியின் ஒண்மையான்
   
1410.
  • வேந்தனால் விடுக்கப் பட்டார் விடலையைக் கண்டு சொன்னார்
  • ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே
  • போந்ததும் போய கங்குல் போம் வழிக் கண்டது உண்டேல்
  • யாம் தலைப் படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார்
   
1411.
  • நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடுங் கணாள் காதலானை
  • ஐ இரு திங்கள் எல்லை அகப்படக் காண்பிர் இப்பால்
  • பொய் உரை அன்று காணீர் போமினம் போகி நுங்கள்
  • மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரைமின் என்றான்