கேமசரியார் இலம்பகம்
 
1412.
  • வானின் வழங்கும் வண் கை மணி செய் ஆர மார்பின்
  • தேனும் வழங்கும் பைந்தார் விசையை சிறுவன் தேம் கொள்
  • நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய
  • கானம் வழங்கல் மேவிக் காலின் ஏகினானே
   
1413.
  • சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர் தம்
  • இலை கொள் பூந் தார் உழுத இன்ப வருத்தம் நீங்க
  • முலை கொள் கண்கள் கண்ணின் எழுதி உள்கும் மொய்ம்பன்
  • மலை கொள் கானம் உன்னி மகிழ்வொடு ஏகுகின்றான்
   
1414.
  • கனி கொள் வாழைக் காட்டுள் கருமை மெழுகியவை போன்று
  • இனிய அல்லா முகத்த முசுவும் குரங்கும் இரியத்
  • துனிவு தீர நோக்கித் தோன்றல் செல்லும் முன்னால்
  • பனி வெண் திரை சூழ் கடல் போல் பழுவம் தோன்றிற்று அவனே
   
1415.
  • பருகுவாரின் புல்லிப் பயம் கண் மாறத் துறக்கும்
  • முருகு விம்மு குழலார் போல மொய் கொள் தும்பி
  • உருவப் பூங் கொம்பு ஒசியப் புல்லித் தீம் தேன் பருகி
  • அருகு வாய் விட்டு ஆர்ப்ப அண்ணல் மெல்லச் சென்றான்
   
1416.
  • செல்வர் மனத்தின் ஓங்கித் திரு இல் மாந்தர் நெஞ்சின்
  • எல்லை இருளிற்று ஆகிப் பூந்தாது இனிதின் ஒழுகிக்
  • கொல்லும் அரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பின்
  • செல்லச் செல்ல அஃகும் நெறி சேர் சிலம்பு சேர்ந்தான்
   
1417.
  • சுனைகள் கண்களாகச் சூழ்ந்த குவளை விழியா
  • வனையல் ஆகா உருவம் நோக்கி மைந்தற்கு இரங்கி
  • இனைவ போலும் வரையின் அருவி இனிதின் ஆடி
  • நனை கொள் போது வேய்ந்து நாதன் பாடுகின்றான்
   
1418.
  • செய்தான் இருவினையின் பயத்தைச்
  • சேரும் சென்று என்றி
  • எய்தான் அதன் பயத்தைப் பிறனே
  • துய்த்தல் இயல்பு என்றி
  • கொய் தாமம் தாழ்ந்து ஒசிந்த
  • குளிர் பூம் பிண்டிக் கோமானே
  • இஃதே நின் சொல் இயல்பு என்றால்
  • அடியேன் நின்னைத் தொழுதேனே
   
1419.
  • உண்டே தனது இயல்பின் உணரும் காலை உயிர் என்றி
  • உண்டாய அவ் உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி
  • வண்டு ஆர்த்து நாற் காதம் வண்ண மாலை சுமந்து ஒசிந்து
  • கொண்டு ஏந்து பூம் பிண்டிக் கோமான் நின்னைத் தொழுதேனே
   
1420.
  • காதலால் எண் வினையும் கழிப என்றி அக் காதல்
  • ஆதலால் எண் வினையும் கழியா என்றும் அறைதியால்
  • போது உலாய்த் தேன் துளித்துப் பொழிந்து வண்டு திவண்டு உலாம்
  • கோதை தாழ் பூம் பிண்டிக் கோமான் நின்னைத் தொழுதேனே
   
1421.
  • இனிதின் இங்ஙனம் ஏத்தி வலம் கொண்டு
  • முனிவர் சித்திர கூடம் முனாது எனத்
  • தனிதின் ஏகுபு தாபதர் வாழ்வது ஓர்
  • பனி கொள் பூம்பொழில் பள்ளி கண்டான் அரோ
   
1422.
  • புல்லும் அல்லியும் போகு உயர் நீள் கழை
  • நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும்
  • அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா
  • நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான்
   
1423.
  • அரிய கொள்கையர் ஆர் அழல் ஐந்தினுள்
  • மருவி வீடு வளைக்குறும் மாட்சியர்
  • விரிய வேதம் விளம்பிய நாவினர்
  • தெரிவில் தீத் தொழில் சிந்தையின் மேயினார்
   
1424.
  • வள்ளி இன் அமுதும் வரை வாழையின்
  • தௌளு தீம் கனியும் சில தந்த பின்
  • வெள்ள மாரியனாய் விருந்து ஆர்க என
  • உள்ள மாட்சியினார் உவந்து ஓம்பினார்
   
1425.
  • பாங்கின் மாதவர் பால் மதி போன்று இவன்
  • வீங்கு கல்வியன் மெய்ப் பொருள் கேள்வியன்
  • ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம்
  • ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார்
   
1426.
  • ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான்
  • சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான்
  • உய்யுமேல் தொடர்ப் பாட்டின் இங்கு யாவையும்
  • எய்தினார்களும் உய்ப என்று ஓதினான்
   
1427.
  • வீடு வேண்டி விழுக்ச்சடை நீட்டல் மெய்ம்
  • மூடு கூறையின் மூடுதல் வெண் தலை
  • ஓடு கோடல் உடுத்தல் என்று இன்னவை
  • பீடு இலாப் பிறவிக்கு வித்து என்பவே
   
1428.
  • ஏம நல்நெறி எம் நெறி அல் நெறி
  • தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம்
  • காமன் தாதை நெறியின் கண் காளை நீ
  • தீமை உண்டு எனில் செப்பு எனச் செப்பினான்
   
1429.
  • தூங்கு உறிக் கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா
  • பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின்
  • ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல்
  • பாங்கரில் பழங்கள் துய்ப்பப் பழவினை பரியும் அன்றே
   
1430.
  • அல்லியும் புல்லும் உண்டு ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று
  • சொல்லிய வகையின் நோற்பத் துணியும் வெவ் வினைகள் என்னி
  • கல்லுண்டு கடிய வெம்பும் கான் உறை புறவம் எல்லாம்
  • புல்லிய வினையை வென்று புறக் கொடை காணும் அன்றே
   
1431.
  • நீட்டிய சடையம் ஆகி நீர் மூழ்கி நிலத்தில் சேர்ந்து
  • வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னில்
  • காட்டு இடைக் கரடி போகிக் கயம் மூழ்கிக் காட்டில் நின்று
  • வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமின் என்றான்
   
1432.
  • கலைவளர் கிளவியார் தம் காமர் மென் சேக்கை நீங்கி
  • இலைவளர் குரம்பை அங்கண் இரு நிலம் சேக்கை ஆக
  • முலை வளர் ஆகம் தோய முழுவினை முரியும் ஆயின்
  • மலை வளர் குறவர்க்கு அம் மா வினைகளும் மாயும் அன்றே
   
1433.
  • வெண் நிறத் துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற
  • ஒண் நிற உதிரம் தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே
  • பண் நிறக் கிளவியார் தம் பசையினால் பிறந்த பாவம்
  • கண் நிற முலையினர் தம் கலவியால் கழிக்கல் ஆமே
   
1434.
  • நுண் துகில் வேதல் அஞ்சி நெருப்பு அகம் பொதிந்து நோக்கிக்
  • கொண்டு போய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே
  • கண்டத்தின் நாவியார் தம் கடிமனை துறந்து காட்டுள்
  • பண்டைச் செய்தொழிலின் பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே
   
1435.
  • நோய் முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா
  • காய் முதிர் கனியின் ஊழ்த்து வீழும் இவ் யாக்கை இன்னே
  • வேய் முதிர் வனத்தின் வென்றான் உருவொடு விளங்க நோற்றுப்
  • போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரிமின் என்றான்
   
1436.
  • மெய் வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மைப்
  • பொய் வகை இன்றித் தேறல் காட்சி ஐம் பொறியும் வாட்டி
  • உய் வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
  • இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்
   
1437.
  • குன்று அனான் உரைப்பக் கேட்டே பாகத்தார் குடும்பம் நீக்கி
  • இன்று கண் விடுக்கப் பட்டேம் யாம் என எழுந்து போகி
  • வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நல் நெறியைப் பெற்றார்
  • சென்றது பருதி வட்டம் செம்மலும் அசைவு தீர்ந்தான்
   
1438.
  • அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே
  • வசையின் நீங்கியினார் வழிகாட்டலின்
  • திசையும் யாறும் தெரிந்து கொண்டு ஏகினான்
  • மிசையும் இல்லது ஓர் மெய்ப் பொறி யாக்கையான்
   
1439.
  • படம் புனைந்து எழுதிய வடிவில் பங்கயத்
  • தடம் பல தமீஇயது தக்க நாடு அது
  • வடம் கெழு வருமுலை மகளிர் மாமை போன்று
  • இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான்
   
1440.
  • தேம் கயத்து அணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
  • பூங் குழல் மடந்தையர் புனைந்த சந்தமும்
  • ஆங்கு எலாம் அகில் புகை அளாய வாசமும்
  • தாங்கலால் தக்க நாடு ஆயது என்பவே
   
1441.
  • சண்பக நறுமலர் மாலை நாறு சாந்து
  • ஒண் பழுக் காயினோடு உருவ மெல்லிலை
  • உண் பதம் யாவர்க்கும் ஊனம் இல்லது
  • வண் புகழ் நாட்டது வண்ணம் இன்னதே
   
1442.
  • கரும்பு அணி வள வயல் காமர் தாமரை
  • வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல்
  • அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல்
  • சுரும்பு சூழ் இலம்பகத் தோற்றம் ஒத்ததே
   
1443.
  • வண்டு வாழ் கொடுந் துறைக் கன்னி வாளை மேல்
  • நண்டு உகிர் உற்று என நடுங்கி நாணினால்
  • விண்டு ஒளித்து ஊண் துறந்து ஒடுங்கும் வீழ்புனல்
  • கொண்ட பூங் கிடங்கு அணி நகரம் கூறுவாம்
   
1444.
  • அகழ் கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்பு உரி
  • புகழ் தரு மேகலை நாயில் பூண் முலை
  • திகழ் மணிக் கோபுரம் திங்கள் வாள் முகம்
  • சிகழிகை நெடுங் கொடி செல்விக்கு என்பவே
   
1445.
  • நாட்டிய மணி வரை கடைந்து நல் அமிர்து
  • ஊட்டினும் அதனை விட்டு உறைநர் இன்மையால்
  • ஈட்டிய வளநிதி இறை கொள் மாநகர்ச்
  • சூட்டு வைத்து அனையது அச்சுடர்ப் பொன் இஞ்சியே
   
1446.
  • எறி சுறவு இளையவர் ஏந்து பூங்கொடி
  • மறி திரை வரை புரை மாடம் மாக்கலம்
  • பெறல் அருந் திரு அனார் அமுதம் பேர் ஒலி
  • அறை கடல் வள நகர் ஆயது என்பவே
   
1447.
  • மதி அகடு உரிஞ்சும் சென்னி மாட நீள் மறுகு தோறும்
  • பொதி அவிழ் மாலை வீழ்ந்து பொன் செய் நல் கலன்கள் சிந்தி
  • நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்திப்
  • புதியவர்க்கு இயங்கல் ஆகாப் பொற்பொடு பொலிந்தது அன்றே
   
1448.
  • கேமமாபுரம் எனும் கேடில் நல் இசைப்
  • பூமி மேல் திலகம் வைத்து அனைய பொன்னகர்த்
  • தாம நீள் நெடுங் குடைத் தரணி காவலன்
  • நாமம் வேல் நரபதி தேவன் என்பவே
   
1449.
  • அந் நகர்க்கு அரசனே அனைய ஆண் தகை
  • மெய்ந் நிகர் இலாதவன் வேத வாணிகன்
  • கைந் நிகர் அமைந்த வேல் கமழும் தாரினன்
  • மைந் நிகர் மழைக் கணார் மருட்ட வைகுவான்
   
1450.
  • வார் சிலை வடிப்ப வீங்கி வரை எனத் திரண்ட தோளான்
  • சோர் புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் மனைவி பெற்ற
  • சீர்நலம் கடந்த கேமசரி எனத் திசைகள் எல்லாம்
  • பேர் நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக்கு ஆகி நின்றாள்
   
1451.
  • மாசு இலாள் பிறந்த ஞான்றே மதிவலான் விதியின் எண்ணிக்
  • காசு இலாள் கண்ட போழ்தே கதும் என நாணப் பட்டான்
  • தூசுலாம் அல்குலாட்குத் துணைவனாம் புணர்மின் என்று
  • பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான்
   
1452.
  • தாழ்தரு பைம்பொன் மலைத் தட மலர்த் தாம மாலை
  • வீழ் தரு மணி செய்மாலை இவற்றிடை மின்னின் நின்று
  • சூழ் வளைத் தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும்
  • ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே
   
1453.
  • சேயிழை கணவன் ஆகும் திருமகன் திறத்து நாளும்
  • ஆயிரத்து எட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி
  • ஏயின வகையினாலே ஆறு இரண்டு எல்லை ஆண்டு
  • போயின என்ப மற்று அப் பூங்கொடிச் சாயலாட்கே
   
1454.
  • முருக்கிதழ் குலிகம் ஊட்டி
  • வைத்தன முறுவல் செவ்வாய்த்
  • திருக் கவின் நிறைந்த வெம் கண்
  • பணை முலைத் தேம் பேய் கோதைப்
  • புரிக் குழல் பொன் செய் பைம்பூண்
  • புனை இழை கோலம் நோக்கித்
  • தரிக்கலாது உருகி நையும்
  • தடமலர்க் கோதை நற்றாய்
   
1455.
  • மா அடு மருட்டும் நோக்கின்
  • மதி முகம் மழைக் கண் மாசுஇல்
  • பூவொடு புரையும் சாயல்
  • புனை நலம் தனித்து வைக
  • ஏ அடு பிணையின் நோக்கி
  • இறைவளை கழல நின்ற
  • தாய் படும் துயரம் எல்லாம்
  • தார் அவன் நோக்கினானே
   
1456.
  • போது வாய் திறந்த போதே பூம் பொறி வண்டு சேந்தாங்கு
  • ஊதுமே மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே
  • யாது நீ கவல வேண்டா ஆர் அழகு உடைய நம்பி
  • காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறு நாளை என்றான்
   
1457.
  • பொன் நிலத்து எழுந்தது ஓர் பொருவில் பூங்கொடி
  • மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள்
  • பின்னிவிட்டன குழல் பெருங் கண் பேதையூர்
  • துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே
   
1458.
  • மல்லிகை மணம் கமழ் மாலை வார் குழல்
  • சில் சுணங்கு இளமுலைச் சிறுமி தந்தையும்
  • செல்வனைத் திருநகர்ச் சேட்பட்டான் அரோ
  • பல்கதிர் மணி ஒளி பரந்த பூணினான்
   
1459.
  • தென் திசை முளைத்து ஓர் கோலச் செஞ் சுடர்
  • ஒன்றி மற்று உத்தரம் வருவது ஒத்து அவண்
  • மன்றல் கொள் மார்பினான் வந்து ஒர் ஆல் நிழல்
  • நன்று உவந்து இருந்தனன் ஆதல் சிந்தியா
   
1460.
  • குடை கவித்து அனையது கோல மா முடி
  • அடி இணை யாமையின் வடிவு கொண்டன
  • புடைதிரள் விலாவும் வில் வளைந்த பொற்பின்
  • கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே
   
1461.
  • குறங்கு அணி மயிரொடு கோலம் ஆர்ந்தன
  • பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின
  • கறங்கு இசை மணி முழா எருத்தம் காண்தகு
  • மறம் கெழு பெரும்புலி வாயின் வண்ணமே
   
1462.
  • வரை அகன் மார்பிடை வரியும் மூன்று உள
  • புரைதபு பொன் புரை நாவும் முள் உடைத்து
  • அருவரைத் தோள்களும் அமரர் கோன் களிற்று
  • உருவு கொள் தடக்கையின் உருவு கொண்டவே
   
1463.
  • இலங்கு பொன் இறு வரை அனைய ஏந்தலுக்கு
  • அலங்கு இதழ்த் தாமரைக் கொட்டை அன்னதாய்
  • வலம் சுழிந்து அமைவரக் குழிந்த வாய்ப்பொடு
  • நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே
   
1464.
  • தடித்து இறை திரண்டு தம் அளவிற்கு ஏற்ற சூல்
  • கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய
  • கடிப் பகை நுழைவறக் கதிர்த்த கைவிரல்
  • அடுத்த மூக்கு அருமணி வயிரத் தோட்டியே
   
1465.
  • வார்ந்து இலங்கு எயிறு அணிபவழம் மாண்டவாய்
  • ஆர்ந்த பூ அங்கையும் அடியும் தாமரை
  • தேர்ந்தனன் திருமகள் கணவன் ஆம் எனத்
  • தீர்ந்த்தனன் சொல் அளைஇத் தேர் கொண்டு ஏறினன்
   
1466.
  • தேர் இவர் ஊர்ந்தனர் செல்ல இல் தலைக்
  • கூர் உகிர் விடுத்தது ஓர் கோல மாலையைப்
  • பேரிசை வீணையில் சூட்டிப் பெண் கொடிக்
  • காரிகை உலகு உணர் கடவுள் பாடுமே
   
1467.
  • வீங்கு ஓத வண்ணன் விரை ததும்பு பூம் பிண்டித்
  • தேங்கு ஓத முக்குடைக் கீழ்த் தேவர் பெருமானைத்
  • தேவர் பெருமனைத் தேன் ஆர் மலர் சிதறி
  • நாவின் நவிற்றாதார் வீட்டு உலகம் நண்ணாரே
   
1468.
  • அடல் வண்ண ஐம் பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான்
  • கடல் வண்ணன் முக்குடைக் கீழ்க் காசு இன்று உணர்ந்தான்
  • காசுஇன்று உணர்ந்தான் கமல மலர் அடியை
  • மாசு இன்றிப் பாடாதார் வான் உலகம் நண்ணாரே
   
1469.
  • பூத்து ஒழியாப் பிண்டிக் கீழ்ப் பொங்கு ஓத வண்ணனை
  • நாத் தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே,
  • வீட்டுலகம் நண்ணார் வினைக்கள்வர் அலைப்ப
  • ஓட்டிடுப எண் குணனும் கோட்பட்டு உயிராபே
   
1470.
  • முத்து உமிழும் முந்நீர் மணிவண்ணன் மூன்று உலகும்
  • பத்திமையால் பாடப் படுவான் தாள் பாடக் கேட்டு
  • ஒத்து அரம்பை அன்னாள் உவந்து இவளோடு ஒப்பான் ஓர்
  • வித்தகனை இன்னே பெறுக என உரைத்தாள்
   
1471.
  • நிலம் தினக் கிடந்தன நிதியம் நீள் நகர்ப்
  • புலம்பு அறப் பொலிவொடு புக்க காலையே
  • இலங்கு பூங் கொடியன ஏழை நோக்கமும்
  • உலம் கொள் தோள் உறு வலி நோக்கும் ஒத்தவே
   
1472.
  • கண் உறக் காளையைக் காண்டலும் கைவளை
  • மண் உறத் தோய்ந்து அடி வீழ்ந்தன மாமையும்
  • உள் நிறை நாணமும் உடைந்தன வேட்கையும்
  • ஒள்நிறத் தீ விளைத்தாள் உருக்கு உற்றாள்
   
1473.
  • வாக்கு அணங்கு ஆர்மணி வீணை வல்லாற்கு அவள்
  • நோக்கு அணங்காய் மன நோய் செய நொந்தவன்
  • வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடுந் தோளி ஓர்
  • தாக்கு அணங்கோ மகளோ எனத் தாழ்ந்தான்
   
1474.
  • நல்வளத் தாமரை நாணிய வாள்முகம்
  • கொல்வளர் வேற்கணினாள் குழைந்தாள் எனச்
  • சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர்குழல்
  • மல்வளர் மார்பனை வந்து வளைத்தார்
   
1475.
  • நினைப்பரு நீள் நிறை நிப்புதி சேர்ந்து ஆங்கு
  • இனைத்து இடை ஏறு அனையான் எழில் நோக்கிப்
  • புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
  • வனப்பினையே கண்டு வாள்கண் அகன்றாள்
   
1476.
  • வள்ளலை வாச நெய் பூசி மணிக் குடத்து
  • தௌ அறல் நீர் சொரிந்து ஆட்டினர் தேம் புகை
  • உள்ளுற உண்ட கலிங்கம் உடுத்த பின்
  • கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார்
   
1477.
  • மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்த பின்
  • கொங்கு அலர் கோதையர் கெண்டு அகம் எய்தி
  • அம் கதிர்ப் பொன் கலத்து ஆர் அமிர்து எந்தினர்
  • செங் கயல் கண்ணியர் சீரின் அயின்றான்
   
1478.
  • பத்தியில் குயிற்றிய பைம் பொன் திண்ணை மேல்
  • சித்திரத் தவிசினுள் செல்வன் சீர்பெற
  • நித்தில மணி உறழ் கரக நீரினால்
  • அத்துறை விடுத்தனன் அலர்ந்த தாரினான்
   
1479.
  • இளிந்த காய் கமழ் திரை வாசம் ஈண்டி ஓர்
  • பளிங்கு போழ்ந்து அருகு பொன் பதித்த பத்தியின்
  • விளிம்பு முத்து அழுத்திய யவனக் கைவினைத்
  • தெளிந்த பொன் அடைப்பையுள் பாகு சென்றவே
   
1480.
  • பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத்
  • தேசிகம் படத் துடைத்து உமிழ்ந்து தேம் கமழ்
  • வாசம் வாய்க் கொண்டனன் மணி செய் குண்டலம்
  • வீசி வில் விலங்கி விட்டு உமிழ என்பவே
   
1481.
  • பண் உலாம் கிளவி தன் பரவை ஏந்து அல்குல்
  • வண்ண மேகலை இவை வாய்ந்த பூந் துகில்
  • உண்ணிலாய்ப் பசுங் கதிர் உமிழ்வ பாவியேன்
  • கண்ணையும் மனத்தையும் களம் கொண்டு இட்டவே
   
1482.
  • கடி கமழ் குழலினால் கட்டி மெய்யெலாம்
  • நடு ஒசி நோன் சிலைப் புருவத்தால் புடைத்து
  • அடு மலர் நெடுங் கணால் ஆவி போழ்ந்திடாக்
  • கொடியவள் இள முலை கொல்லும் கொல்லுமே
   
1483.
  • கடியன கச்சினால் கட்டப் பட்டன
  • கொடியன குங்குமம் கொட்டப் பட்டன
  • அடி நிலம் பரந்து முத்து அணிந்த வெம் முலை
  • இடை நிலம் செகுப்பன என்னை என் செயா
   
1484.
  • கரிய உள் வெறியன கட்டப் பட்டன
  • புரிவொடு புறத்திடப் பட்ட பூங் குழல்
  • தெரியின் மற்று என் செயா செய்ய நீண்டன
  • பெரிய கண் போலவும் பேது செய்யுமே
   
1485.
  • காதன்மை கண்ணுளே அடக்கிக் கண் எனும்
  • தூதினால் துணி பொருள் உணர்த்தித் தான் தமர்க்கு
  • ஏதின்மை படக் கரந்திட்ட வாள் கண் நோக்கு
  • ஓத நீர் அமுதமும் உலகும் விற்குமே
   
1486.
  • மிகு கொடா முத்தம் சூட்டி
  • மீளிமை தீர்த்து மின்னும்
  • நகு கொடா மணிகள் நல்ல
  • தெளித்துக் கொண்டு எழுதி நன்பொன்
  • முக படாம் வைப்ப ஆள் செற்று
  • அழன்று கண் கரிந்த முல்லைத்
  • தொகு கள் தாம் கோதை வெய்ய
  • துணைமணி முலைகள் தாமே
   
1487.
  • தேன் கறி கற்ற கூழைச்
  • சண்பக மாலை வேல்கண்
  • ஊன் கறி கற்ற காலன்
  • ஒண் மணித் தடக்கை வைவேல்
  • கூன் பிறை நுதல் ஓர் கூற்றம்
  • குவிமுலை நமன் கைப் பாசம்
  • யான் பிறன் அளியன் வாழ்வான்
  • ஆசைப்பட்டு இருக்கின்றேனே
   
1488.
  • திருவிற்கும் கற்பகத் தெரியல் மலையார்
  • உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண் பொன் பூங் கொடி
  • முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய்சடை
  • ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே
   
1489.
  • கலைத் தொகை நலம் பல கடந்த காளை தான்
  • நலத்தகை அவள் நலம் நினைப்ப நாய்கனும்
  • மலைத்தொகை மதம் தவழ் யானை மன்னவன்
  • நிலத்தவர்க்கு அறிவுற நெறியில் செப்பினான்
   
1490.
  • இடி உமிழ் எறிதிரை முழக்கின் பல்லியம்
  • கொடி அணி வியன் நகர் குழுமி ஆர்த்து எழக்
  • கடிமணம் இயற்றினார் கடவுள் நாளினால்
  • வடிமலர்க் கோதையை மைந்தற்கு என்பவே
   
1491.
  • மணிக்குடம் அழுத்திவைத் தனைய தோளினான்
  • கணிக்கு இடம் கொடாநலம் கதிர்த்த காரிகை
  • அணிக்கு இடன் ஆகிய அரிவை தன்னொடும்
  • பிணித்து இடைவிடாது அவன் பெற்ற இன்பமே
   
1492.
  • பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம் முலை
  • ஏந்திய மணிவரை இரக்கம் நீர்த்தரங்கு
  • ஆய்ந்த வன்தோள் இணை நாகம் ஆக வைத்து
  • ஈந்தது அக்கடல் அவற்கு அமுதம் என்பவே
   
1493.
  • சந்தனச் சேற்று இடைத் தாம வார் குழல்
  • பைந்தொடி படா முலை குளிப்பப் பாய்தலின்
  • மைந்தன தார் குழைந்து உடைய வாய் திறந்து
  • அம் சிலம்பு அணி அல்குல் கலையொடு ஆர்த்தவே
   
1494.
  • கோதையும் குழலும் பொங்கக்
  • குவிமுலைக் குழங்கல் மாலைப்
  • போது உகப் பொருது பூணும்
  • பொருகடல் முத்தும் மூழ்கக்
  • காதலும் களிப்பும் மிக்குக்
  • கங்குலும் பகலும் விள்ளார்
  • சாதலும் பிறப்பும் இல்லாத்
  • தன்மை பெற்றவர்கள் ஒத்தார்
   
1495.
  • புனை மலர்த் தாரினானும் போது அணி கொம்பு அனாளும்
  • நனை மலர்க் காவும் அம் தண் வாவியும் நல்ல ஆடிச்
  • சுனை மலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டி
  • வினை நலம் நுகர்ந்து செல்வார் விதியினால் மிக்க நீரார்
   
1496.
  • பொழிந்து உகு காதல் பூண்டு
  • புல்லு கை விடாது செல்லக்
  • கழிந்தன இரண்டு திங்கள்
  • காளையும் மற்று ஓர் நாளால்
  • பிழிந்து கொள்வனைய பெண்மைப்
  • பெய்வளைத் தோளி தன்னோடு
  • அழிந்து வீழ் அருவிக் குன்றில்
  • ஆய் மலர்க் காவு புக்கான்
   
1497.
  • காஞ்சனக் கமுகு காய் பொன் கனிக் குலை வாழை சூழ்ந்து
  • பூஞ்சினை நாகம் தீம் பூ மரக் கருப்பூரச் சோலை
  • மாஞ்சினை மயில்கள் ஆடச் சண்பக மலர்கள் சிந்தும்
  • தீம் சுனை அருவிக் குன்றம் சீர் பெற ஏறினானே
   
1498.
  • தினை விளை சாரல் செவ்வாய்ச் சிறு கிளி மாதர் ஓப்பப்
  • புனை வளைத் தோளி சொல்லைக் கிளி எனக் கிள்ளை போகா
  • நனை விளை கோதை நாணிப் பொன் அரி மலை ஓச்சக்
  • கனை கழல் குருசில் நண்ணிக் கவர் கிளி ஓப்பினானே
   
1499.
  • கொந்து அழல் வேல் கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே
  • செந்தழை அலங்கல் ஏந்திச் சீறடி பரவ வந்தேன்
  • உய்ந்து இனிப் பணி செய்வேனோ உடம்பு ஒழித்து ஏகுவேனோ
  • பைந்தழை அல்குல் பாவாய் பணி எனப் பரவினானே
   
1500.
  • வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
  • பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீம் சொல்
  • வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னாப்
  • பூண் முலை பொதிர்ப்பப் புல்லிப் புனை நலம் பருகினானே
   
1501.
  • திங்கள் அம் குழவி செவ்வான்
  • இடைக் கிடந்து இமைப்பதே போல்
  • குங்குமம் மார்பில் பூண்ட
  • குளிர் கதிர் ஆரம் மின்ன
  • மங்கையோடு இருந்த போழ்து
  • ஓர் மணி வண்டு கண்டு சொன்னான்
  • கங்குல் தன் நீங்கல் உற்றுக்
  • கமழ் மலர் அணிந்த தாரான்
   
1502.
  • மணி வண்டு இம் மாதர் கோதை
  • மது உண வந்த போழ்து அங்கு
  • இணை வண்டு அங்கு இறந்துபாடின்றி
  • இருக்குமே இரங்கல் இன்றாய்த்
  • துணை வண்டு துஞ்சின் நீயும்
  • துஞ்சுவை என்று நின்கண்
  • பணி கொண்டது இன்மையால் தான்
  • பரிவொடும் இருக்கும் அன்றே
   
1503.
  • குழவியாய்ப் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி இப்பால்
  • விழைவு தீர் கிழவன் ஆகி விழுக்கதிர் உலந்து வீழ
  • மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டிக்
  • குழல் புரை கிளவியோடும் கொழும் புகை அமளி சேர்ந்தான்
   
1504.
  • திருத் துயில் பெற்ற மார்பன் திருந்து தார் உழக்க இன்ப
  • வருத்தம் உற்று அசைத்த கோதை வாள் ஒளித் தடம் கண் நீலம்
  • பொருத்தலும் பொன் அனாளைப் புறக்கணித்து எழுந்து போகிப்
  • பருச் சுடர்ப் பவழ நோன் தாழ்ப் பனி மணிக் கதவு சேர்ந்தான்
   
1505.
  • அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி
  • மெல்லவே திறந்து நீக்கி மின்னு விட்டு இலங்கு பைம் பூண்
  • கொல் சின மடங்கல் அன்னான் கொழு நிதி மாடம் நீந்திப்
  • பலகதிர்ப் பருதி போலப் பாய் இருள் ஏகினாளே
   
1506.
  • தாள் உடைத் தடம் கொள் செவ்வித் தாமரைப் போது போலும்
  • வாள் உடை முகத்தினாள் தன் வருமுலைத் தடத்தின் வைகி
  • நாளினும் பெருகுகின்ற நகைமதி அனைய காதல்
  • கேள்வனைக் கனவில் காணாள் கிளர்மணிப் பூணினாளே
   
1507.
  • அரம் தினப் பிறந்த பைம் பொன் அரும்பிய முலையினாளைக்
  • கரந்தவன் கங்குல் நீங்கக் கதிர் வளை அணங்கும் மென்தோள்
  • வரம் தரு தெய்வம் அன்னாள் வைகிருள் அனந்தல் தேறிப்
  • பரந்து எலாத் திசையும் நோக்கிப் பையவே பரிவு கொண்டாள்
   
1508.
  • திருமணி குயின்ற செம்பொன் திருந்து பூங் கொம்பு அனாள் தன்
  • கருமணிப் பாவை அன்னான் கரந்துழிக் காண்டல் செல்லாள்
  • எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு காறும் ஓடி
  • அருமணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள்
   
1509.
  • யாண்டையாய் ஐய அஞ்சினென் ஆருயிர்
  • ஈண்டு உடம்பு ஒழித்து ஏக வலிக்குமால்
  • நீண்ட தோளவனே நிறை யான் இலேன்
  • தீண்டு வந்து எனத் தேனின் மிழற்றினாள்
   
1510.
  • தனியள் ஆவது தக்கதுவோ சொலாய்
  • கனி கொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின்
  • இனியர் மங்கையர் என்பது கூறுவாய்
  • பனி கொள் மாமதி போல் பசப்பு ஊர யான்
   
1511.
  • கழலும் நெஞ்சோடு கை வளை சோருமால்
  • சுழலும் கண்களும் சூடு உறு பொன் என
  • அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
  • நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ
   
1512.
  • திருந்து மல்லிகைத் தேம் கமழ் மாலையான்
  • புரிந்து சூடினும் பூங்கொடி நுண் இடை
  • வருந்துமால் மடவாய் எனும் வஞ்ச நீ
  • கரந்து யான் நையக் காண்டலும் வல்லையோ
   
1513.
  • தொண்டை வாய் இவள் தெய்யில் வன முலை
  • கண்டு தேவர் கனிப என்று ஏத்துவாய்
  • வண்டு கூறிய வண்ணம் அறிந்திலேன்
  • விண்டு தேன் துளிக்கும் விரைத் தாரினாய்
   
1514.
  • முலை வைத்த தடத்திடை முள் கலுறின்
  • தலை வைத்து நிலத்து அடி தைவருவாய்
  • சிலை வித்தகனே தெருளேன் அருளுளாய்
  • உலைவித்தனை என் உயிர் காவலனே
   
1515.
  • கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின்
  • இடன் எத்துணை அத்துணையும் எழுதி
  • உடன் ஒத்து உறைவான் உழை வாரலனேல்
  • மடன் ஒத்து உளது என் உயிர் வாழ்வதுவே
   
1516.
  • பெறும் அன்பினள் என்பது பேசின் அலால்
  • அறும் அன்பினள் என்று அறைவார் இலையால்
  • இறும் என்பொடு நைந்து நைவேற்கு அருளி
  • நறு மென் கமழ் தாரவனே நணுகாய்
   
1517.
  • நுன சீறடி நோவ நடந்து செலேல்
  • எனது ஆவி அகத்து உறைவாய் எனும் நீ
  • புனை தாரவனே பொய் உரைத்தனையால்
  • வினையேன் ஒழியத் தனி ஏகினையே
   
1518.
  • பருமுத்து உறையும் பணை வெம் முலை நின்
  • திரு முத்து அகலம் திளையாது அமையா
  • எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரிபுண்
  • மருமத்து அனலும் வகை செய்தனையே
   
1519.
  • புன மா மயிலே பொழிலே புனலே
  • வனமார் வழையே வரையே திரையே
  • இனமா மணி சூழ் எரி பூணவனைத்
  • துன யான் பெறுகோ தொழுதேன் உரையீர்
   
1520.
  • கொடு வெம் சிலை வாய்க் கணையின் கொடிதாய்
  • நடு நாள் இரவின் நவைதான் மிகுமால்
  • நெடு வெண் நிலவின் நிமிர் தேர் பரியாது
  • அடுமால் வழி நின்று அறனே அருளாய்
   
1521.
  • கயலால் இவை என்று கவிழ்ந்து கிடந்து
  • அயலேன் அறியாமை உரைத்தது எலாம்
  • இயலாததுவோ இனியேற்கு இனியீர்
  • உயலாவது கண்மலர்காள் உரையீர்
   
1522.
  • நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும்
  • பொறி நீர புனைந்து எழுதிப் புகழும்
  • வெறி தாரவன் எவ்வழி ஏகினன் நீர்
  • அறிவீர் உரையீர் அமர் தோள் இணைகாள்
   
1523.
  • இழுதார் சுடர் வேல் இளையான் அகலத்து
  • உழுதீர் உடன் வெம் முலைகாள் வயிரத்
  • தொழுவாய் விடையைக் தொடர்கிற்றிலிர் என்று
  • அழுதாள் தடமாக அணங்கு இழையே
   
1524.
  • தகை வாடிய தன் நிழல் கண் உகுநீர்
  • வகை வாடி வருந்தி அழுவது கண்டு
  • அகையேல் அமர் தோழி அழேல் அவரோ
  • பகையாபவர் என்றனள் பால் மொழியே
   
1525.
  • வெறி மாலைகள் வீழ்ந்து நிலம் புதையப்
  • பொறி மாலை புனை நிழல் காணலளாய்
  • நெறி நாடிய போயினள் நீடினள் கண்டு
  • எறி வால் வலை கொண்டு வரும் இனியே
   
1526.
  • மடமா மயிலே குயிலே மழலை
  • நடைமாண் அனமே நலம் ஆர் கிளியே
  • உடன் ஆடும் என் ஐயனை என்று உருகாத்
  • தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே
   
1527.
  • மல் உறை அலங்கல் மார்பன்
  • பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து
  • கல் உறை நாகு வேய்த் தோள்
  • கதிர் மணி முறுவல் செவ்வாய்
  • வில் உறை புருவ மாதர்
  • வெந்தனள் கிடப்ப மின் தோய்
  • இல் உறை தெய்வம் நோக்கி
  • இரங்கி நின்று உரைக்கும் அன்றே
   
1528.
  • புண்ணவாம் புலவு வாள்கைப்
  • பொலன் கழல் புனைந்த பைந்தார்க்
  • கண்ணவாம் வனப்பினானைக்
  • காமனே கண்ட போழ்தும்
  • பண்ணவாம் பவளச் செவ்வாய்ப்
  • படா முலைப் பரவை அல்குல்
  • பெண்ணாவா நிற்கும் என்றால்
  • பிணை அனாட்கு உய்தல் உண்டோ
   
1529.
  • கடத்து இடைக் கவளம் தேன் நெய்
  • கனியைத் தோய்த்து இனியதுற்ற
  • தடக்கையால் கொடுத்துப் புல்லும்
  • தவழ் மதக் களிறு நீங்கின்
  • மடப்பிடிக்கு உய்தல் உண்டோ
  • வால் அடிக் குஞ்சி சூட்டும்
  • கொடைக் கையான் பிரிந்த பின்றைக்
  • கோதையாட்கு உய்தல் உண்டோ
   
1530.
  • முயங்கினான் சொன்ன வண்டாய்
  • முகிழ்முலைத் தெய்வம் சேர
  • உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு
  • ஊனமும் பிரிவும் அஞ்சி
  • இயங்குவான் நீன்ற ஆவி
  • தாங்கினள் என்ப போலும்
  • வயங்கு பொன் ஈன்ற நீலமா
  • மணி முலையினாளே
   
1531.
  • வஞ்ச வாய்க் காமன் சொன்ன
  • மணி நிற வண்டுகாள் நீர்
  • துஞ்சுவேன் துயரம் தீரத்
  • தொழுதகு தெய்வம் ஆவீர்
  • மஞ்சு தோய் செம் பொன் மாடத்து
  • என் மனை தன்னுள் என்றாள்
  • பஞ்சு மேல் மிதிக்கும் போதும்
  • பனிக்கும் சீறடியினாளே
   
1532.
  • நொந்து எடுக்கலாது வீங்கும்
  • வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர்
  • பந்து எடுக்கலாத நங்கை பால்
  • கடை வெண்ணெய்ப் பாவை
  • வெந்து உடன் வெயில் உற்றாங்கு
  • மெலிந்து உக விளங்கும் வெள்ளி
  • வந்து வான் இட்ட சுட்டி
  • வனப்பொடு முளைத்தது அன்றே
   
1533.
  • எரிநுதி உற்ற மாவின் இளந் தளிர் போன்று மாழ்கிப்
  • புரி நரம்பு இசையின் தள்ளிப் புன் கண் உற்று அழுதலாலே
  • அரிகுரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப ஈண்டி
  • திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்
   
1534.
  • விழுத்திணைப் பிறந்து வெய்ய
  • வேட்கை வேர் அரிந்து மெய் நின்று
  • இழுக்கம் ஒன்றானும் இன்றி
  • எய்திய தவத்தின் வந்து
  • வழுக்குதல் இன்றி விண்ணோன்
  • வச்சிர நுதியின் இட்ட
  • எழுத்தனான் தந்த இன்பம்
  • இன்னும் நீ பெறுதி என்றாள்
   
1535.
  • பிறங்கின கெடும் கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின்
  • இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனிப்
  • பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கிக்
  • கறங்கு இசை வண்டு பாடும் கோதை நீ கவலல் என்றாள்
   
1536.
  • எரித்தலைக் கொண்ட காமத்து
  • இன்பம் நீர்ப்புள்ளி அற்றால்
  • பிரிவின் கண் பிறந்த துன்பம்
  • பெருங் கடல் அனையது ஒன்றால்
  • உருகி நைந்து உடம்பு நீங்கின்
  • இம்மையோடு உம்மை இன்றி
  • இருதலைப் பயனும் எய்தார்
  • என்று யாம் கேட்டும் அன்றே
   
1537.
  • மன்னு நீர் மொக்குள் ஒக்கும்
  • மானிடர் இளமை இன்பம்
  • மின்னின் ஒத்து இறக்கும் செல்வம்
  • வெயில் உறு பனியின் நீங்கும்
  • இன்னிசை இரங்கு நல் யாழ்
  • இளியினும் இனிய சொல்லாய்
  • அன்னதால் வினையின் ஆக்கம்
  • அழுங்குவது என்னை என்றாள்
   
1538.
  • பஞ்சு இறை கொண்ட பைம் பொன்
  • கலை புறம் சூழ்ந்து வைத்து
  • நஞ்சு இறை கொண்ட நாகப் படம்
  • பழித்து அகன்ற அல்குல்
  • வெம் சிறைப் பள்ளி ஆக
  • விழுமுலைத் தடத்து வைகத்
  • தம் சிறைப் படுக்கலாதார்
  • தம் பரிவு ஒழிக என்றாள்
   
1539.
  • வாசம் மிக்குடைய தாரான்
  • வண்டினுக்கு உரைத்த மாற்றப்
  • பாசத்தால் ஆக்கப்பட்ட
  • ஆவியள் அல்லது எல்லாம்
  • பேசின் ஓர் பிணையல் மாலை
  • பிசைந்திடப் பட்டது ஒத்தாள்
  • தூசு உலாம் பரவை அல்குல்
  • தூமணிப் பாவை அன்னாள்
   
1540.
  • பை அர விழுங்கப் பட்ட பசுங் கதிர் மதியம் ஒத்து
  • மெய் எரி துயரின் மூழ்க விதிர் விதிர்த்து உருகி நையும்
  • மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து
  • கையரிக் கொண்டும் காணாள் காளையும் காலின் சென்றான்
   
1541.
  • காழகச் சேற்றுள் தீம் பால்
  • கதிர்மணிக் குடத்தின் ஏந்தி
  • வீழ்தரச் சொரிவதே போல்
  • விளங்கு ஒளித் திங்கள் புத்தேள்
  • சூழ் இருள் தொழுதி மூழ்கத்
  • தீம் கதிர் சொரிந்து நல்லார்
  • மாழை கொள் முகத்தின் தோன்றி
  • வளை கடல் முளைத்தது அன்றே
   
1542.
  • ஏறு அனாற்கு இருளை நீங்கக் கை விளக்கு ஏந்தி யாங்கு
  • வீறு உயர் மதியம் தோன்ற விரைவொடு போய பின்றை
  • மாறு இலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த ஆங்கண்
  • ஆறு செல் ஒருவற்கு அண்ணல் அணிகலம் அருளல் உற்றான்
   
1543.
  • எவ்வூரிர் எப்பதிக்குப் போந்தீர் நும்
  • மனைவியர் தாம் எனைவர் மக்கள்
  • ஒவ்வாதார் தாம் எனைவர் ஒப்பார்
  • மற்று எனைவர் நீர் உரைமின் என்றாற்கு
  • இவ்வூரேன் இப்பதிக்குப் போந்தேன்
  • என் மனைவியரும் நால்வர் மக்கள்
  • ஒவ்வாதார் தாம் இல்லை ஒப்பான்
  • ஒருவன் என உரைத்தான் சான்றோன்
   
1544.
  • ஒப்பான் ஒரு மகனே நால்வர்
  • ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன
  • நக்கான் பெருஞ் சான்றோன் நம்பிபோல்
  • யார் உலகில் இனியார் என்ன
  • மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே
  • போலுமால் வினவிக் கேட்பேன்
  • தக்காய் குறித்தது உரை என்றான்
  • தான் உரைப்பக் கேட்கின்றானே
   
1545.
  • நல் தானம் சீலம் நடுங்காத் தவம்
  • அறிவர் சிறப்பு இந் நான்கும்
  • மற்று ஆங்குச் சொன்ன மனைவியர்
  • இந்நால்வர் அவர் வயிற்றுள் தோன்றி
  • உற்றான் ஒருமகனே மேல் கதிக்குக்
  • கொண்டு போம் உரவோன் தன்னை
  • பெற்றார் மகப் பெற்றார் அல்லாதார்
  • பிறர் மக்கள் பிறரே கண்டீர்
   
1546.
  • பட நாகம் தோல் உரித்தால் போல்
  • துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு
  • உடனாக ஐம் பொறியும் வென்றார்க்கு
  • உவந்து ஈதல் தானம் ஆகும்
  • திடனாகத் தீம் தேனும் தௌ மட்டும்
  • உயிர்க் குழாம் ஈண்டி நிற்றற்கு
  • இடனாகும் ஊனும் இவை துறத்தலே
  • சீலம் என்று உரைத்தார் மிக்கார்
   
1547.
  • ஓவாது இரண்டு உவவும் அட்டமியும்
  • பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல்
  • தாவாத் தவம் என்றார் தண்மதி போல்
  • முக்குடைக் கீழ்த் தாதை பாதம்
  • பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு
  • இவற்றால் புனைதல் நாளும்
  • ஏவா இவை பிறவும் பூசனை என்று
  • ஈண்டிய நூல் கரை கண்டாரே
   
1548.
  • இந் நால்வர் துணைவியராக் காதல் மகன்
  • இவனா உடையார் போகிப்
  • பொன் ஆர மார்பின் புரந்தரராய்ப்
  • பூமி முழுவதும் ஆண்டு
  • மன் ஆகி முக்குடைக் கீழ் வாமன் சிறப்பு
  • இயற்றி வரம்பு இல் இன்பம்
  • பின்னா விளைவித்துப் பிறவா
  • உலகு எய்தல் பேசலாமே
   
1549.
  • மட்டார் பூம் பிண்டி வளம் கெழு
  • முக் குடைக் கீழ் மாலே கண்டீர்
  • முட்டாத இன்பப் புதாத் திறக்கும்
  • தாள் உடைய மூர்த்தி பாதம்
  • எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு
  • இவ் உலகில் இன்பமே போல்
  • ஒட்டாவே கண்டீர் வினை அவனைத்
  • தேறாதார்க்கு உணர்ந்தீர் அன்றே
   
1550.
  • வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே
  • செல்லினும் வெகுண்டீர் போல
  • ஆற்று உணாக் கொள்ளாது அடி புறத்து
  • வைப்பீரே அல்லீர் போலும்
  • கூற்றம் கொண்டு ஓடத் தமியே
  • கொடு நெறிக்கண் செல்லும் போழ்தின்
  • ஆற்று உணாக் கொள்ளீர் அழகலால்
  • அறிவு ஒன்றும் இலிரே போலும்
   
1551.
  • அளைவது காமம் அடு நறவு
  • நெய் ஒழுகும் ஊனும் பின்னா
  • விளைவது தீவினையே கண்டீர்
  • இவை மூன்றும் விடுமின் என்றால்
  • தளை அவிழ் கோதையார் தாமம் சேர்
  • வெம் முலை போல் வீங்கிக் கண் சேந்து
  • உளைய உறுதி உரைப்பாரை
  • ஓ பாவம் உணராரே காண்
   
1552.
  • இழுது அன்ன வெள் நிணத்த செந்தடிக்கே
  • ஏட்டைப்பட்டு இரும்பில் போர்த்த
  • பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மரச்
  • செவியர் கேளார் பால் போன்று
  • ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை
  • ஓர்கிலர் ஊன்செய் கோட்டக்கு
  • கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து
  • புள்ளிற்கே புறம் செய்கின்றார்
   
1553.
  • கையால் பொதித் துணையே காட்டக்
  • கயல் கண்ணாள் அதனைக் காட்டாள்
  • ஐயா விளம்பழமே என்கின்றீர் ஆங்கு
  • அதற்குப் பருவம் அன்று என்
  • செய்கோ எனச் சிறந்தாள் போல்
  • சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம்
  • பொய்யே பொருள் உரையா முன்னே
  • கொடுத்து உண்டல் புரிமின் கண்டீர்
   
1554.
  • பனிமதியின் கதிர் பருகும் ஆம்பல் போல்
  • முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினார்
  • துனிவளர் கதிகளுள் தோன்றி நாடகம்
  • கனிய நின்று ஆடுவர் கடை இல் காலமே
   
1555.
  • நிழல் நிமிர் நெடுமதி நிகர் இல் தீங்கதிர்ப்
  • பழன வெண் தாமரை பனிக்குமாறு போல்
  • குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார்
  • தொழ நிமிர்ந்து அமரராய்த் துறக்கம் ஆள்வரே
   
1556.
  • இன்னவாறு உறுதி கூறி
  • எரிமணி வயிரம் ஆர்ந்த
  • பொன் அவிர் கலங்கள் எல்லாம்
  • பொலிவொடு புகன்று நீட்டிச்
  • செல்மின் நீர் என்று கூற
  • வலம் கொண்டு தொழுது சென்றான்
  • வில் மரீஇ நீண்ட தோளான்
  • வெயில் கடம் நீந்தல் உற்றான்