விமலையார் இலம்பகம்
 
1889.
  • முருகு கொப்புளிக்கும் கண்ணி
  • முறி மிடை படலை மாலைக்
  • குருதி கொப்புளிக்கும் வேலான்
  • கூந்தல் மா இவர்ந்து செல்ல
  • உருவ வெம் சிலையினாற்குத் தம்பி
  • இஃது உரைக்கும் ஒண் பொன்
  • பருகு பைங் கழலினாருள்
  • பதுமுகன் கேட்க என்றே
   
1890.
  • விழு மணி மாசு மூழ்கிக் கிடந்தது இவ் உலகம் விற்பக்
  • கழுவினீர் பொதிந்து சிக்கக் கதிர் ஒளி மறையக் காப்பின்
  • தழுவினீர் உலகம் எல்லாம் தாமரை உறையும் செய்யாள்
  • வழுவினார் தம்மைப் புல்லாள் வாழ்க நும் கண்ணி மாதோ
   
1891.
  • தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
  • அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
  • பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
  • ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே
   
1892.
  • தோய் தகை மகளிர்த் தோயின் மெய் அணி நீக்கித் தூய் நீர்
  • ஆய் முது மகளிர் தம்மால் அரில்தபத் திமிரி ஆட்டி
  • வேய் நிறத் தோளினார்க்கு வெண் துகில் மாலை சாந்தம்
  • தான் நல கலங்கள் சேர்த்தித் தடமுலை தோய்க என்றான்
   
1893.
  • வண்ணப் பூமாலை சாந்தம் வால் அணி கலன்கள் ஆடை
  • கண் முகத்து உறுத்தித் தூய்மை கண்டலால் கொள்ள வேண்டா
  • அண்ணல் அம் புள்ளோடு எல்லா ஆயிரம் பேடைச் சேவல்
  • உண்ணு நீர் அமிழ்தம் காக்க ஊகமோடு ஆய்க என்றான்
   
1894.
  • அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் ஓர் அருவிக் குன்றின்
  • குஞ்சரம் புலம்பி வீழக் கூர் நுதி எயிற்றில் கொல்லும்
  • பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா
  • அஞ்சித் தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்
   
1895.
  • பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாயர் ஒத்தும்
  • அருந்தவர் போன்று காத்தும் அடங்கலால் ஆமை போன்றும்
  • திருந்து வேல் தெவ்வர் போலத் தீது அற எறிந்தும் இன்ப
  • மருந்தினால் மனைவி ஒத்தும் மதலையைக் காமின் என்றான்
   
1896.
  • பூந் துகில் மாலை சாந்தம் புனை கலம் பஞ்ச வாசம்
  • ஆய்ந்து அளந்து இயற்றப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம்
  • மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று ஆங்கு
  • ஏந்து பூண் மார்பன் ஏவ இன்னணம் இயற்றினானே
   
1897.
  • சிறு கண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொளத்
  • துறுகல் என்று உணர்கலாத் துள்ளி மந்தி மக
  • நறிய சந்தின் துணி நாற வெந்தனகள் கொண்டு
  • எறிய எள்கி மயிர்க் கவரிமா இரியுமே
   
1898.
  • புகழ் வரைச் சென்னி மேல் பூசையின் பெரியன
  • பவழமே அனையன பல் மயிரப் பேர் எலி
  • அகழும் இங்குலிகம் அஞ்சன வரைச் சொரிவன
  • கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே
   
1899.
  • அண்ணல் அம் குன்றின் மேல் வருடை பாய்ந்து உழக்கலின்
  • ஒண் மணி பல உடைந்து ஒருங்கு அவை தூளியாய்
  • விண் உளு உண்டு என வீழும் மா நிலமிசைக்
  • கண் அகன் மரம் எலாம் கற்பகம் ஒத்தவே
   
1900.
  • மானிடம் பழுத்தன கிலுத்தம் மற்று அவற்று அயல்
  • பால் முரண் பயம்பிடைப் பனை மடிந்த அனையன
  • கானிடைப் பாந்தள் கண் படுப்பன துயில் எழ
  • ஊன் உடைப் பொன் முழை யாளி நின்று உலம்புமே
   
1901.
  • சாரல் அம் திமிசிடைச் சந்தனத் தழை வயின்
  • நீர தீம் பூ மரம் நிரந்த தக்கோலமும்
  • ஏர் இலவங்கமும் மின் கருப்பூரமும்
  • ஒரு நாவி கலந்து ஓசனை கமழுமே
   
1902.
  • மைந்தரைப் பார்ப்பன மா மகள் மாக் குழாம்
  • சந்தனம் மேய்வன தவழ் மதக் களிற்று இனம்
  • அந்தழைக் காடு எலாம் திளைப்ப ஆமான் இனம்
  • சிந்த வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள
   
1903.
  • வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்து உராய்ப்
  • பொருப்பு எலாம் பொன் கிடந்து ஒழுகி மேல் திருவில் வீழ்ந்து
  • ஒருக்கு உலாய் நிலமிசை மிளிர்வ ஒத்து ஒளிர் மணி
  • திருக் கிளர் ஒளி குலாய் வானகம் செகுக்குமே
   
1904.
  • வீழ் பனிப் பாறைகள் நெறி எலாம் வெவ் வெயில்
  • போழ்தலின் வெண்ணெய் போல் பொழிந்து மட்டு ஒழுகுவ
  • தாழ் முகில் சூழ் பொழில் சந்தனக் காற்று அசைந்து
  • ஆழ் துயர் செய்யும் அவ் அருவரைச் சாரலே
   
1905.
  • கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து
  • ஏகல் ஆகா நிலத்து அல்கி விட்டு எழுந்து போய்த்
  • தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர்
  • நாக நன் காவினுள் நயந்து விட்டார்களே
   
1906.
  • பூத்து அகில் தவழும் போர்வை பூசு சாந்து ஆற்றிப் பொன் நூல்
  • கோத்து நீர் பிலிற்றும் காந்தம் குங்கும வைரப் பொன் கோய்
  • சாத்துறி பவழக் கன்னல் சந்தன ஆல வட்டம்
  • நீத்தவர் இடத்து நாற்றி நிழல் மணி உலகம் செய்தார்
   
1907.
  • நித்தில முலையினார் தம் நெடுங் கணால் நோக்கப் பெற்றும்
  • கைத் தலம் தீண்டப் பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க
  • வைத்து அலர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிர் இல்லை என்பார்
  • பித்து அலர் ஆயின் பேய்கள் என்றலால் பேசலாமோ
   
1908.
  • பொறி மயில் இழியும் பொன் தார் முருகனின் பொலிந்து மாவின்
  • நெறிமையின் இழிந்து மைந்தன் மணிக்கை மத்திகையை நீக்கி
  • வெறுமையின் அவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால்
  • அறி மயில் அகவும் கோயில் அடிகளைச் செவ்வி என்றான்
   
1909.
  • எல் இருள் கனவில் கண்டேன் கண் இடன் ஆடும் இன்னே
  • பல்லியும் பட்ட பாங்கர் வரும் கொலோ நம்பி என்று
  • சொல்லினள் தேவி நிற்பப் பதுமுகன் தொழுது சேர்ந்து
  • நல் அடி பணிந்து நம்பி வந்தனன் அடிகள் என்றான்
   
1910.
  • எங்ஙணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னாப்
  • பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணிக் கடகம் ஆர்ந்த
  • தங்கு ஒளித் தடக்கை கூப்பித் தொழுது அடி தழுவி வீழ்ந்தான்
  • அங்கு இரண்டு அற்பு முன்னீர் அலை கடல் கலந்தது ஒத்தார்
   
1911.
  • திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனைக் கண்ட போழ்தே
  • வரு பனி சுமந்த வாள்கண் வனமுலை பொழிந்த தீம் பால்
  • முருகு உடை மார்பில் பாய்ந்து முழு மெயும் நனைப்ப மாதர்
  • வருக என் களிறு என்று ஏத்தி வாங்குபு தழுவிக் கொண்டாள்
   
1912.
  • காளையாம் பருவம் ஓராள் காதல் மீக் கூர்தலாலே
  • வாளையாம் நெடிய கண்ணாள் மகனை மார்பு ஒடுங்கப் புல்லித்
  • தாள் ஐயா முன்பு செய்த தவத்தது விளைவு இலாதேன்
  • தோள் அயாத் தீர்ந்தது என்றாள் தொழுதகு தெய்வம் அன்னாள்
   
1913.
  • வாள் திறல் குருசில் தன்னை வாள் அமர் அகத்துள் நீத்துக்
  • காட்டகத்து உம்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்
  • சேட்டு இளம் பருதி மார்பின் சீவக சாமியீரே
  • ஊட்டு அரக்கு உண்ட செந் தாமரை அடி நோவ என்றாள்
   
1914.
  • கெடல் அருங் குரைய கொற்றம் கெடப் பிறந்ததுவும் அன்றி
  • நடலையுள் அடிகள் வைக நட்பு உடையவர்கள் நைய
  • இடை மகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்பக்
  • கடல் அகத்து அழுந்த வேண்டா களைக இக் கவலை என்றான்
   
1915.
  • யான் அலன் ஒளவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும்
  • கோன் அலன் தந்தை கந்துக் கடன் எனக் குணத்தின் மிக்க
  • பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற
  • மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழச் சொன்னாள்
   
1916.
  • எனக்கு உயிர்ச் சிறுவன் ஆவான் நந்தனே ஐயன் அல்லை
  • வனப்புடைக் குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்திப்
  • புனக் கொடி மாலையோடு பூங் குழல் திருத்திப் போற்றார்
  • இனத்து இடை ஏறு அனானுக்கு இன் அளி விருந்து செய்தாள்
   
1917.
  • சிறகரால் பார்ப்புப் புல்லித் திரு மயில் இருந்ததே போல்
  • இறைவி தன் சிறுவர் தம்மை இரு கையினாலும் புல்லி
  • முறை முறை குமரர்க்கு எல்லாம் மொழி அமை முகமன் கூறி
  • அறு சுவை அமிர்தம் ஊட்டி அறுபகல் கழிந்த பின் நாள்
   
1918.
  • மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம்
  • குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை
  • விரவு பூம் பொழில் வேறு இருந்து ஆய் பொருள்
  • உருவ மாதர் உரைக்கும் இது என்பவே
   
1919.
  • நலிவு இல் குன்றொடு காடு உறை நன்பொருள்
  • புலி அனார் மகள் கோடலும் பூமி மேல்
  • வலியின் மிக்கவர் தம் மகள் கோடலும்
  • நிலை கொள் மன்னர் வழக்கு என நேர்பவே
   
1920.
  • நீதியால் அறுத்து அந்நிதி ஈட்டுதல்
  • ஆதி ஆய அரும் பகை நாட்டுதல்
  • மோதி முள்ளொடு முள்பகை கண்டிடல்
  • பேது செய்து பிளந்திடல் பெட்டதே
   
1921.
  • ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
  • கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்
  • சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ
  • கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே
   
1922.
  • வென்றி ஆக்கலும் மேதகவு ஆக்கலும்
  • அன்றியும் கல்வி யோடு அழகு ஆக்கலும்
  • குன்றி னார்களைக் குன்று என ஆக்கலும்
  • பொன் துஞ்சு ஆகத்தினாய் பொருள் செய்யுமே
   
1923.
  • பொன்னின் ஆகும் பொருபடை அப்படை
  • தன்னின் ஆகும் தரணி தரணியில்
  • பின்னை ஆகும் பெரும் பொருள் அப் பொருள்
  • துன்னும் காலைத் துன்னாதன இல்லையே
   
1924.
  • நிலத்தின் நீங்கி நிதியினும் தேய்ந்து நம்
  • குலத்தில் குன்றிய கொள் கையம் அல்லதூஉம்
  • கலைக் கணாளரும் இங்கு இல்லை காளை நீ
  • வலித்தது என் என வள்ளலும் கூறுவான்
   
1925.
  • எரியொடு நிகர்க்கும் ஆற்றல்
  • இடிக் குரல் சிங்கம் ஆங்கு ஓர்
  • நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி
  • நல் துணையோடு என் ஆம்
  • பரிவொடு கவல வேண்டா
  • பாம்பு அவன் கலுழன் ஆகும்
  • சொரி மதுச் சுரும்பு உண் கண்ணிச்
  • சூழ் கழல் நந்தன் என்றான்
   
1926.
  • கெலுழனோ நந்தன் என்னாக்
  • கிளர் ஒளி வனப்பினானைக்
  • கலுழத் தன் கையால் தீண்டிக்
  • காதலின் களித்து நோக்கி
  • வலி கெழு வயிரத் தூண் போல்
  • திரண்டு நீண்டு அமைந்த திண் தோள்
  • கலி கெழு நிலத்தைக் காவாது
  • ஒழியுமோ காளைக்கு என்றாள்
   
1927.
  • இடத்தொடு பொழுது நாடி
  • எவ்வினைக் கண்ணும் அஞ்சார்
  • மடப்படல் இன்றிச் சூழும்
  • மதி வல்லார்க்கு அரியது உண்டோ
  • கடத்து இடைக் காக்கை ஒன்றே
  • ஆயிரம் கோடி கூகை
  • இடத்து இடை அழுங்கச் சென்று ஆங்கு
  • இன் உயிர் செகுத்தது அன்றே
   
1928.
  • இழை பொறை ஆற்ற கில்லாது
  • இட்டிடை தளர நின்ற
  • குழை நிற முகத்தினார் போல்
  • குறித்ததே துணிந்து செய்யார்
  • முழை உறை சிங்கம் பொங்கி
  • முழங்கி மேல் பாய்ந்து மை தோய்
  • வழை உறை வனத்து வன்கண்
  • நரி வலைப்பட்டது அன்றே
   
1929.
  • ஊழி வாய்த் தீயோடு ஒப்பான்
  • பதுமுகன் உரைக்கும் ஒன்னார்
  • ஆழிவாய்த் துஞ்ச மற்று எம்
  • ஆற்றலான் நெருங்கி வென்று
  • மாழை நீள் நிதியம் துஞ்சும்
  • மாநிலக் கிழமை எய்தும்
  • பாழியால் பிறரை வேண்டேம்
  • பணிப்பதே பாணி என்றான்
   
1930.
  • பொரு அருங் குரைய மைந்தர் பொம் என உரறி மற்று இத்
  • திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள்
  • எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர்
  • வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார்
   
1931.
  • கார் தோன்றவே மலரும் முல்லை கமலம் வெய்யோன்
  • தேர் தோன்றவே மலரும் செம்மல் நின் மாமன் மற்று உன்
  • சீர் தோன்றவே மலரும் சென்று அவன் சொல்லி னோடே
  • பார் தோன்ற நின்ற பகையைச் செறற்பாலை என்றாள்
   
1932.
  • நன்று அப் பொருளே வலித்தேன் மற்று அடிகள் நாளைச்
  • சென்று அப் பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி
  • அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் நீமே
  • வென்றிக் களிற்றான் உழைச் செல்வது வேண்டும் என்றான்
   
1933.
  • வேல் தைவந்து அன்ன நுதி வெம் பரல் கானம் உன்னி
  • நூற்று ஐவரோடு நடந்தாள் நுதி வல் வில் மைந்தன்
  • காற்றின் பரிக்கும் கலிமான் மிசைக் காவல் ஓம்பி
  • ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினானே
   
1934.
  • மன்றற்கு இடன் ஆம் மணிமால் வரை மார்பன் வான் கண்
  • நின்று எத்திசையும் மருவிப் புனல் நீத்தம் ஓவாக்
  • குன்றும் குளிர் நீர்த் தடம் சூழ்ந்தன கோல யாறும்
  • சென்று அப் பழனப் படப்பைப் புனல் நாடு சேர்ந்தான்
   
1935.
  • காவின் மேல் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
  • வாவியுள் இனமலர் உயிர்த்த வாசமும்
  • பூ விரி கோதையர் புனைந்த சாந்தமும்
  • ஏவலாற்கு எதிர் எதிர் விருந்து செய்தவே
   
1936.
  • கரும்பின் மேல் தொடுத்த தேன் கலிகொள் தாமரைச்
  • சுரும்பின் வாய்த் துளித்தலின் துவைத்த வண்டொடு
  • திருந்தி யாழ் முரல்வது ஓர் தெய்வப் பூம் பொழில்
  • பொருந்தினான் புனை மணிப் பொன் செய் பூணினான்
   
1937.
  • பொறை விலங்கு உயிர்த்தன பொன் செய் மா மணிச்
  • செறி கழல் இளைஞரும் செல்லல் நீங்கினார்
  • நறை விரி கோதையர் நாம வேலினாற்கு
  • அறு சுவை நால் வகை அமுதம் ஆக்கினார்
   
1938.
  • கட்டியின் அரிசியும் புழுக்கும் காணமும்
  • புட்டில் வாய்ச் செறித்தனர் புரவிக்கு அல்லவும்
  • நெட்டு இரும் கரும்பொடு செந் நெல் மேய்ந்து நீர்
  • பட்டன வள நிழல் பரிவு தீர்ந்தவே
   
1939.
  • குழி மதுக் குவளை அம் கண்ணி வார் குழல்
  • பிழி மதுக் கோதையார் பேண இன் அமுது
  • அழி மதக் களிறு அனான் அயின்ற பின்னரே
  • கழி மலர் விழித்த கண் கமலம் பட்டவே
   
1940.
  • எரி மணி இமைத்தன எழுந்த தீம் புகை
  • புரி நரம்பு இரங்கின புகன்ற தீங் குழல்
  • திரு மணி முழவமும் செம் பொன் பாண்டிலும்
  • அரு மணியின் குரல் அரவம் செய்தவே
   
1941.
  • தெளித்த இன் முறுவல் அம் பவளம் செற்ற வாய்க்
  • களிக் கயல் மழைக் கணார் காமம் காழ் கொளீஇ
  • விளித்த இன் அமிர்து உறழ் கீதம் வேனலான்
  • அளித்த பின் அமளி அம் சேக்கை எய்தினான்
   
1942.
  • தீங் கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும்
  • வீங்கு எழில் தோள்களும் மிடைந்து வெம் முலை
  • பூங் குளிர் தாரொடு பொருது பொன் உக
  • ஈங்கனம் கனை இருள் எல்லை நீந்தினான்
   
1943.
  • கனை கதிர்க் கடவுள் கண் விழித்த காலையே
  • நனை மலர்த் தாமரை நக்க வண் கையால்
  • புனை கதிர்த் திருமுகம் கழுவிப் பூ மழை
  • முனைவனுக்கு இறைஞ்சினான் முருக வேள் அனான்
   
1944.
  • நாள் கடன் கழித்த பின் நாம வேலினான்
  • வாள் கடி எழில் நகர் வண்மை காணிய
  • தோள் பொலி மணிவளைத் தொய்யில் மாதரார்
  • வேட்பது ஓர் வடிவொடு விரைவின் எய்தினான்
   
1945.
  • அலத்தகக் கொழுங் களி இழுக்கி அம் சொலார்
  • புலத்தலின் களைந்த பூண் இடறிப் பொன் இதழ்
  • நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து நீள் நகர்
  • செலக் குறைபடாதது ஓர் செல்வம் மிக்கதே
   
1946.
  • கத்திகைக் கழுநீர் கமழ் கோதையர்
  • பத்தியில் படு சாந்து அணி வெம் முலை
  • சித்தியில் படர் சிந்தை யினாரையும்
  • இத் திசைப் படர் வித்திடு நீரவே
   
1947.
  • வஞ்சி வாட்டிய வாள் மின் நுசுப்பினார்
  • பஞ்சி ஊட்டிய பாடகச் சீறடி
  • குஞ்சி சூட்டிய மைந்தர் குழாம் அலால்
  • இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லையே
   
1948.
  • மின்னின் நீள் கடம்பின் நெடு வேள் கொலோ
  • மின்னும் ஐங்கணை வார் சிலை மைந்தனோ
  • என்னனோ அறியோம் உரையீர் எனாப்
  • பொன் அம் கொம்பு அனையார் புலம்பு எய்தினார்
   
1949.
  • விண் அகத்து இளையான் அன்ன மெய்ப் பொறி
  • அண்ணலைக் கழி மீன் கவர் புள் என
  • வண்ண வார் குழல் ஏழையர் வாள் நெடுங்
  • கண் எலாம் கவர்ந்து உண்டிடு கின்றவே
   
1950.
  • புலாத் தலைத் திகழும் வை வேல்
  • பூங் கழல் காலி னானை
  • நிலாத் தலைத் திகழும் பைம் பூண்
  • நிழல் மணி வடத்தோடு ஏந்திக்
  • குலாய்த் தலைக் கிடந்து மின்னும்
  • குவி முலை பாய வெய்தாய்க்
  • கலாய்த் தொலைப் பருகுவார் போல்
  • கன்னியர் துவன்றி னாரே
   
1951.
  • வேல் நெடுங் கண்கள் அம்பா வில் படை சாற்றி எங்கும்
  • தேன் நெடுங் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய
  • மான் நெடும் மழைக் கண் நோக்கி வானவர் மகளும் ஒப்பாள்
  • பால் நெடுந் தீம் சொல்லாள் பாவை பந்து ஆடுகின்றாள்
   
1952.
  • குழல் மலிந்த கோதை மாலை பொங்க வெம் கதிர்ம் முலை
  • நிழல் மலிந்த நேர் வடம் நிழல்படப் புடைத்தர
  • எழில் மணிக் குழை வில் வீச இன் பொன் ஓலை மின் செய
  • அழல் மணிக் கலாபம் அம் சிலம்பொடு ஆர்ப்ப ஆடுமே
   
1953.
  • அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை
  • மங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன்
  • பொங்கி மீது எழுந்து போய்ப் பிறழ்ந்து பாய்தல் இன்றியே
  • செங்கயல் கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியுமே
   
1954.
  • மாலையுள் கரந்த பந்து வந்து கைத் தலத்த ஆம்
  • ஏல நாறு இரும் குழல் புறத்த வாள் முகத்த ஆம்
  • நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம்
  • மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே
   
1955.
  • கொண்டு நீங்கல் கோதை வேய்தல் குங்குமம் அணிந்துராய்
  • எண் திசையும் ஏணி ஏற்று இலங்க நிற்றல் பத்தியின்
  • மண்டிலம் வரப் புடைத்தல் மயிலின் பொங்கி இன்னணம்
  • வண்டும் தேனும் பாட மாதர் பந்து மைந்துற்று ஆடுமே
   
1956.
  • பந்து மைந்துற்று ஆடுவாள் பணை முலையில் குங்குமம்
  • சுந்தரப் பொடி தெளித்த செம் பொன் சுண்ணம் வாள் நுதல்
  • தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை
  • இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே
   
1957.
  • நன் மணிச் சிலம்பினோடு கிண் கிணிந் நகந் நகும்
  • மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து
  • பொன் மலர்ந்த கோதை பந்து பொங்கி ஒன்று போந்து பாய்ந்து
  • மின் மலர்ந்த வேலினான் முன் வீதி புக்கு வீழ்ந்ததே
   
1958.
  • வீழ்ந்த பந்தின் மேல் விரைந்து மின்னின் நுண் நுசுப்பினாள்
  • சூழ்ந்த காசு தோன்ற அம் துகில் நெகிழ்ந்து பூங்குழல்
  • தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து வெம் முலைகள் தைவரப்
  • போழ்ந்து அகன்ற கண்ணி வந்து பூங்கொடியின் நோக்கினாள்
   
1959.
  • மந்தார மாலை மலர் வேய்ந்து மகிழ்ந்து தீம்தேன்
  • கந்தாரம் செய்து களி வண்டு முரன்று பாடப்
  • பந்து ஆர்வம் செய்து குவளைக் கண் பரப்பி நின்றாள்
  • செந் தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள்
   
1960.
  • நீர் தங்கு திங்கள் மணி நீள் நிலம் தன்னுள் ஓங்கிச்
  • சீர் தங்கு கங்கைத் திரு நீர்த் தண் துவலை மாந்திக்
  • கார் தங்கி நின்ற கொடி காளையைக் காண்டலோடு
  • பீர் தங்கிப் பெய்யா மலரின் பிறிது ஆயினாளே
   
1961.
  • பெண்பா லவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாணும்
  • திண்பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல்
  • கண்பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன்
  • மண்பால் இழிந்த மலர் ஐங் கணை மைந்தன் என்றாள்
   
1962.
  • என்றாள் நினைந்தாள் இது போலும் இவ் வேட்கை வண்ணம்
  • சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்கல் ஆவது
  • அன்றாய் அரிதாய் அகத்தே சுட்டு உருக்கும் வெம்தீ
  • ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது என்றாள்
   
1963.
  • நிறை யாதும் இல்லை நெருப்பின் சுடும் காமம் உண்டேல்
  • குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை
  • பறையாய் அறையும் பசப்பு என்று பகர்ந்து வாடி
  • அறை வாய்க் கடல் போல் அகன் காமம் அலைப்ப நின்றாள்
   
1964.
  • நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள்
  • அம் செங் கழுநீர் அலர்ந்த மதி வாள் முகத்தே
  • வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க மாதோ
  • தஞ்சம் வழங்கித் தலைக் கொண்டது காம வெம் தீ
   
1965.
  • பூ உண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி எய்ய
  • ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்கொல் என்னா
  • மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக்
  • கோ உண்ட வேலான் குழைந்து ஆற்றலன் ஆயினானே
   
1966.
  • காமக் கடுநோய்க் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இவ்
  • ஈமத்தினோடும் உடனே சுட ஏகல் ஆற்றான்
  • தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல் தாதை
  • பூ மொய்த்து இருந்த கடை மேல் புலம்பு உற்று இருந்தான்
   
1967.
  • நாவி நோய் செய்த நறும் குழலாள் நாள் நீலக்
  • காவி நோய் செய்த கருங் கயல் கண் பூங்கொடி என்
  • ஆவி நோய் செய்த அணங்கு என்று அறியாதேன்
  • மேவி நோய் தீர வினாத் தருவார் இல்லையே
   
1968.
  • தௌ நீர்ப் பனிக் கயத்து மட்டு அவிழ்ந்த தேம் குவளைக்
  • கண் நீர்மை காட்டிக் கடல் போல் அகன்ற என்
  • உள் நீர்மை எல்லாம் ஒரு நோக்கினில் கவர்ந்த
  • பெண் நீர்மை மேல் நாள் பிறந்தும் அறியுமோ
   
1969.
  • கருங் குழலும் செவ் வாயும் கண் மலரும் காதும்
  • அரும்பு ஒழுகு பூண் முலையும் ஆர் உயிர்க்கே கூற்றம்
  • விருந்தினராய் வந்தாரை வெற்று உடலா நோக்கும்
  • பெருந் திருவி யார் மகள் கொல் பேர் யாது ஆம் கொல்லோ
   
1970.
  • வார் உடுத்த வெம் முலைய வண்டார் பூங் கோதையைப்
  • பேர் கொடுத்தார் பெண் என்றார் கூற்றமே என்றிட்டால்
  • தார் உடுத்த நீள் மார்பர் தம் உயிர் தாம் வேண்டுபவேல்
  • நீர் உடுத்த இந் நகரை நீத்திட்டு ஒழியாரோ
   
1971.
  • பைங் கண் மணி மகர குண்டலமும் பைந் தோடும்
  • திங்கள் முகத்து இலங்கச் செவ் வாய் எயிறு இலங்கக்
  • கொங்கு உண் குழல் தாழக் கோட்டு எருத்தம் செய்த நோக்கு
  • எங்கு எங்கே நோக்கினும் அங்கு அங்கே தோன்றுமே
   
1972.
  • வாள் ஆர் மதி முகத்த வாளோ வடுப் பிளவோ
  • தாள் ஆர் கழுநீரோ நீலமோ தாமரையோ
  • நீள் வேலோ அம்போ கயலோ நெடுங் கண்ணோ
  • கோள் ஆர்ந்த கூற்றமோ கொல்வான் தொடங்கினவே
   
1973.
  • என்றாம் கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து
  • ஒன்றார்க் கடந்தான் புலம்பு உள் கொண்டு இருத்தலோடும்
  • அன்றே அமைந்த பசும் பொன் அடர் ஆறு கோடி
  • குன்றாமல் விற்றான் குளிர் சாகர தத்தன் என்பான்
   
1974.
  • திரு மல்க வந்த திருவே எனச் சேர்ந்து நாய்கன்
  • செரு மல்கு வேலாய்க்கு இடமால் இது என்று செப்ப
  • வரி மல்கி வண்டு உண்டு அறை மா மலர்க் கண்ணி மைந்தன்
  • எரி மல்கு செம் பொன் நிலம் மாமனொடு ஏறினானே
   
1975.
  • நம்பன் சிறிதே இடை தந்து இது கேட்க நாளும்
  • அம் பொன் நகருள் அமைந்தேன் மற்று எனக்கு அமைந்தாள்
  • கம்பம் இலாதாள் கமலைக்கு விமலை என்பாள்
  • செம் பொன் வியக்கும் நிறத்தாள் திரு அன்ன நீராள்
   
1976.
  • பூம்பாவை வந்து பிறந்தாள் அப்பிறந்த போழ்தே
  • ஆம்பால எல்லாம் அறிவார் அன்று எழுதி இட்டார்
  • தூம்பு யாதும் இல்லக் குளம் போன்றது என் தோமில் பண்டம்
  • கூம்பாத செல்வக் கொடியே இது கேண்மோ என்றான்
   
1977.
  • மங்கைக்கு உரியான் கடை ஏறும் வந்து ஏறலோடும்
  • வங்கம் நிதியம் உடன் வீழும் மற்று அன்றி வீழாது
  • எங்கும் தனக்கு நிகர் இல்லவன் ஏற்ற மார்பம்
  • நங்கைக்கு இயன்ற நறும் பூ அணைப் பள்ளி என்றான்
   
1978.
  • ஏழ் ஆண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு எய்தி நின்றாள்
  • வீழா நிதியும் உடன் வீழ்ந்தது வில் வலாய்க்கே
  • ஊழாயிற்று ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கிச்
  • சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான்
   
1979.
  • ஏற்ற கைத் தொடி வீழ்ந்து என ஏந்தலைத்
  • தேற்றினான் திருமா நலம் செவ்வனே
  • தோற்ற மாதரும் தோன்றலைக் காண்டலும்
  • ஆற்றினாள் தனது ஆவியும் தாங்கினாள்
   
1980.
  • அம் பொன் கொம்பு அனையாளையும் வார் கழல்
  • செம் பொன் குன்று அனையானையும் சீர் பெறப்
  • பைம் பொன் நீள் நகர்ப் பல் இயம் ஆர்த்து எழ
  • இம்பர் இல்லது ஓர் இன்பம் இயற்றினார்
   
1981.
  • கட்டில் ஏறிய காமரு காளையும்
  • மட்டு வாய் அவிழ் மா மலர்க் கோதையும்
  • விட்டு நீங்குதல் இன்மையின் வீவு இலார்
  • ஒட்டி ஈர் உடம்பு ஓர் உயிர் ஆயினார்
   
1982.
  • நிலவு வெண் கதிர் நீர்மைய பூந் துகில்
  • கலவம் கண் புதையாது கனற்றலின்
  • உலகம் மூன்றும் உறு விலைத்து என்பவே
  • புலவு வேல் கண்ணினாள் முலைப் போகமே
   
1983.
  • தேன் அவாம் கமழ் கண்ணியும் தெவ்வர் தம்
  • ஊன் அவாம் கதிர் வேல் உறு காளையும்
  • கான் அவாம் கடி நாறும் மென் பள்ளி மேல்
  • வான் அவாம் வகையால் வைகி னார்களே
   
1984.
  • வெண் மதி நெற்றி தேய்த்து விழுத் தழும்பு இருப்ப நீண்ட
  • அண்ணல் நல் மாடத்து அங்கண் அகில் புகை அமளி ஏறிப்
  • பண் அமை மகர வீணை நரம்பு உரீஇப் பாவை பாட
  • மண் அமை முழவுத் தோளான் மகிழ்ச்சியுள் மயங்கினானே
   
1985.
  • இன்னரிச் சிலம்போடு ஏங்கிக் கிண்கிணி இகலி ஆர்ப்பப்
  • பொன் அரி மாலை தாழப் பூஞ்சிகை அவிழ்ந்து சோரப்
  • மின் இரும் கலாபம் வீங்கி மிளர்ந்து கண் இரங்க வெம்பித்
  • துன் அருங் களி கொள் காமக் கொழுங் கனி சுவைத்து விள்ளான்
   
1986.
  • தொழித்து வண்டு இமிரும் கோதை
  • துணை முலை முள்கப் பூம்பட்டு
  • அழித்து மட்டு ஒழுகும் தாரான்
  • மணி வள்ளத்து ஆய்ந்த தேறல்
  • எழில் பொலி மாதர்க்கு ஏந்த
  • இனிதினின் நுகர்ந்து காமக்
  • கொழித் திரை கடலுள் மூழ்கிக்
  • கோதை கண் துயின்ற அன்றே
   
1987.
  • பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும்
  • தூசு உலாம் அல்குல் தீண்டத் துயில் கண்கள் விழித்த தோற்றம்
  • வாச வான் குவளை மெல்ல வாய் விடா நின்றது ஒக்கும்
  • ஏசுவது ஒன்றும் இல்லா இணை வட முலையி னாட்கே
   
1988.
  • கங்குல் பால் புகுந்த கள்வன் இவன் எனக் கதுப்பில் தாழ்ந்த
  • தொங்கலான் முன் கை யாத்துச் சொல்லு நீ வந்தது என்ன
  • நங்கை யான் பசித்து வந்தேன் எப் பொருள் நயப்பது என்றாட்கு
  • அம் கலுழ் மேனியாய் நின் அணிநல அமிழ்தம் என்றான்
   
1989.
  • செயிர்த்தவள் சிவந்து நோக்கிச்
  • சீறடி சென்னி சேர்த்தி
  • அயிர்ப்பது என் பணி செய்வேனுக்கு
  • அருளிற்றுப் பொருள் அது என்ன
  • உயிர்ப்பதும் ஓம்பி ஒன்றும்
  • உரையலை ஆகி மற்று இப்
  • பயிர்ப்பு இல் பூம் பள்ளி வைகு
  • பகட்டு எழில் மார்ப என்றாள்
   
1990.
  • உள் இழுது உடைய வெம்பி உற்பல உருவு கொண்ட
  • வெள்ளியில் புனைந்த கோல விளக்கு ஒளி வெறுவிது ஆக
  • வள் இதழ்க் கோதை வல்லான் வட்டிகை நுதியின் வாங்கிப்
  • பள்ளி மேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாளே
   
1991.
  • மங்கையர் பண்ணிய மருத யாழ் குழல்
  • நங்கையைப் பிரியும் இந் நம்பி இன்று என
  • அங்கு அதற்கு இரங்கின ஆரும் பேதுறக்
  • கங்குல் போய் நாள் கடன் கழிந்தது என்பவே
   
1992.
  • ஏந்து பூங் கோதைகள் திருத்தி ஏர் படச்
  • சாந்து கொண்டு இள முலை எழுதித் தையல் தன்
  • காந்தள் அம் முகிழ் விரல் கையினால் பிடித்து
  • ஆய்ந்து அவட்கு இது சொலும் அலங்கல் வேலினான்
   
1993.
  • பூவினுள் தாழ் குழல் பொன் செய் ஏந்து அல்குல்
  • மாவினுள் தாழ் தளிர் மருட்டும் மேனியாய்
  • காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன்
  • ஏவினுள் தாழ் சிலை எறிந்த கோலினே
   
1994.
  • என்று அவன் உரைத்தலும் எழுது கண்மலர்
  • நின்ற நீர் இடை மணிப் பாவை நீந்தலின்
  • மன்றல் நாறு அரிவையைத் தெருட்டி மா மணிக்
  • குன்று அனான் கொடியவள் குழைய ஏகினான்