மண்மகள் இலம்பகம்
 
2102.
  • குடம் புரை செருத்தல் குவளைமேய் கயவாய்க்
  • குவி முலைப் படர் மருப்பு எருமை
  • நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின்
  • நாகு இலைச் சொரிந்த அம் தீம்பால்
  • தடம் சிறை அன்னம் குருகொடு நாரைப்
  • பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம்
  • மடங்கல் போல் திறலார் மா மணி கறங்க
  • வளவயல் புள் எழக் கழிந்தார்
   
2103.
  • புரிவளை அலறிப் பூசல் இட்டு
  • ஈன்ற பொழிகதிர் நித்திலம் உழக்கி
  • வரிவளை சூழும் வலம்புரி இனத்துள்
  • சலஞ்சலம் மேய்வன நோக்கி
  • அரிது உணர் அன்னம் பெடை எனத் தழுவி
  • அன்மையின் அலமரல் எய்தித்
  • திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி
  • நெய்தலும் கைவலத்து ஒழிந்தார்
   
2104.
  • நல்லவர் போல் மலர் பருகும்
  • மோட்டு இள முல்லை மொய்ம் மலர்க் கானம்
  • முருகு வந்து எதிர் கொள நடந்தார்
  • கோட்டு இளங் கலையும் கூடும் மென் பிணையும்
  • கொழுங் கதிர் மணிவிளக்கு எறிப்பச்
  • சேட்டு இளங் கொன்றைத் திரு நிழல் துஞ்சச்
  • செம்பொறி வண்டு அவற்று அயலே
  • நாட்டு இளம் படியார் நகை முகம் பருகும்
   
2105.
  • குழவி வெண் திங்கள் கோட்டின் மேல் பாயக்
  • குளிர்புனல் சடை விரித்து ஏற்கும்
  • அழல் அவிர் சூலத்து அண்ணலே போல
  • அருவிநீர் மருப்பினின் எறியக்
  • கழை வளர் குன்றில் களிறு நின்று ஆடும்
  • கடி நறும் சந்தனச் சாரல்
  • இழை வளர் முலையார் சாயல் போல் தோகை
  • இறை கொள் பூங் குறிஞ்சியும் இறந்தார்
   
2106.
  • ஊன் தலைப் பொடித்த ஆங்கு அனைய செஞ் சூட்டின்
  • ஒளி மயிர் வாரணம் ஒருங்கே
  • கான்றபூங் கடம்பின் கவட்டு இடை வளை வாய்ப்
  • பருந்தொடு கவர்குரல் பயிற்றும்
  • ஆன்ற வெம்பாலை அழல் மிதித்து அன்ன அருஞ்
  • சுரம்சுடர் மறை பொழுதின்
  • ஊன்றினார் பாய் மா ஒளி மதிக் கதிர் போல்
  • சந்தனம் ஒருங்கு மெய் புதைத்தே
   
2107.
  • நிலை இலா உலகில் நின்ற வண் புகழை
  • வேட்டவன் நிதியமே போன்றும்
  • இலை குலாம் பைம் பூண் இள முலைத் தூதின்
  • இன் கனித் தொண்டை அம் துவர்வாய்க
  • கலை வலார் நெஞ்சில் காமமே போன்றும்
  • கடவுளர வெகுளியே போன்றும்
  • உலைவு இலார் நில்லாது ஒரு பகலுள்ளே உருப்புஅவிர் வெம் சுரம் கடந்தார்
   
2108.
  • புதுக் கலம் போலும் பூங் கனி ஆலும்
  • பொன்இணர்ப் பிண்டியும் பொருந்தி
  • மதுக் கலந்து ஊழ்த்துச் சிலம்பி விழ்வன போல்
  • மலர்சொரி வகுளமும் மயங்கிக்
  • கதிர்த்த தண் பூணி கம்புள் தாழ் பீலிக்
  • கனைகுரல் நாரை வண்டானம்
  • எதிர்த்த தண் புனல் சூழ் இன் நதிக் கரைமேல்
  • இளையவர் அயா உயிர்த்து எழுந்தார்
   
2109.
  • அள்ளிலைப் பலவின் அளிந்து வீழ் சுளையும்
  • கனிந்து வீழ் வாழையின் பழனும்
  • புள்ளிவாழ் அலவன் பொறி வரிக் கமஞ் சுழ்ல்
  • ஞெண்டினுக்கு உய்த்து நோய் தணிப்பான்
  • பள்ளி வாய் நந்தும் ஆமையும் பணித்துப்
  • பல் மலர் வழிபடக் குறைக்கும்
  • வெள்ள நீர்ப் படப்பை விதையம் வந்து அடைந்தே
  • வேந்தனுக்கு உணர்த்த முன் விடுத்தார்
   
2110.
  • வீட்டு இடம் தோறும் வில்லக விரல் போல்
  • பொருந்தி நின்று ஒருங்கு எதிர் கொள்க என்று
  • ஏட்டின் மேல் தீட்டித் திரு எழுத்து இட்டு ஆங்கு
  • இறைவனும் தமர்களைப் பணிப்ப
  • நாட்டகத்து அமிர்தும் நளிகடல் அமிர்தும்
  • நல்வரை அமிர்தமும் அல்லாக்
  • காட்டு அகத்து அமிர்தும் காண் வரக் குவவிக்
  • கண் அகன் புறவு எதிர் கொண்டார்
   
2111.
  • பொரு மத யானைப் புணர் மருப்பு ஏய்ப்பப்
  • பொன் சுமந்து ஏந்திய முலையார்
  • எரி மலர்ச் செவ்வாய் திறந்து தேன் ஊற
  • ஏத்துவார் பூக்கள் தூய்த் தொழுவார்
  • வருகுலைக் கமுகும் வாழையும் நடுவார்
  • வரை உமிழ் ஆவி போல் மாடத்து
  • அருநறும் புகையும் ஏந்துவார் ஊர் தோறு
  • அமரரதம் உலகம் ஒத்ததுவே
   
2112.
  • பாடு இன் அருவி பயம் கெழு மாமலை
  • மாட நகரத்து வாயிலும் கோயிலும்
  • ஆடு அம்பலமும் அரங்கமும் சாலையும்
  • சேடனைக் காணிய சென்று தொக்கதுவே
   
2113.
  • பல் கதிர் ஆரமும் பூணும் பருமித்துக்
  • கொல் சின வெம் தொழில் கோடு ஏந்து இளமுலை
  • நல் எழில் மங்கையர் நல் நுதல் சூட்டிய
  • வெல் கதிர்ப் பட்டம் விளங்கிற்று ஒருபால்
   
2114.
  • சுண்ணமும் சூட்டும் சொரிந்து வார் குழல்
  • கண்ணி மகாரோடு கால் சிலம்பு ஆர்த்து எழ
  • அண்ணலைக் காணிய ஆர்வத்தின் போதரும்
  • வண்ண மகளிர் வனப்பிற்று ஒருபால்
   
2115.
  • எதிர் நலப் பூங்கொடி எள்ளிய சாயல்
  • கதிர் நல மங்கையர் கால் தொடர்ந்து ஓட
  • முதிரா இளமுலை முத்தொடு பொங்க
  • அதிர் அரிக் கிண்கிணி ஆர்க்கும் ஒரு பால்
   
2116.
  • கருங் கண் இளமுலை கச்சற வீக்கி
  • மருங்குல் தளர மழை மருள் மாடம்
  • நெருங்க இறை கொண்ட நேர் இழையார் தம்
  • பெருங் கண் அலமரும் பெற்றித்து ஒரு பால்
   
2117.
  • மின்னு குழையினர் கோதையர் மின் உயர்
  • பொன் வரை மாடம் புதையப் பொறி மயில்
  • துன்னிய தோகைக் குழாம் எனத் தொக்கவர்
  • மன்னிய கோலம் மலிந்தது ஒரு பால்
   
2118.
  • பாடல் மகளிரும் பல்கலை ஏந்து அல்குல்
  • ஆடல் மகளிரும் ஆவண வீதிதொறும்
  • ஓட உதிர்ந்த அணிகலம் உக்கவை
  • நீடு இருள் போழும் நிலைமத்து ஒருபால்
   
2119.
  • கோதையும் தாரும் பிணங்கக் கொடுங் குழைக்
  • காதல் மகளிரும் மைந்தரும் காணிய
  • வீதியும் மேலும் மிடைந்து மிடை மலர்த்
  • தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்ததுவே
   
2120.
  • மானக் கவரி மணி வண்டு அகற்ற அங்கு
  • ஆனை எருத்தத்து அமர குமரனின்
  • சேனைக் கடல் இடைச் செல்வனைக் கண்டு உவந்து
  • ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார்
   
2121.
  • தே மலர் அம் கண் திருவே புகுதக
  • மா மலர்க் கோதை மணாளன் புகுதக
  • காமன் புகுதக காளை புகுதக
  • நாம எழில் விஞ்சை நம்பி புகுதக
   
2122.
  • மின் தோய் வரை கொன்ற வேலோன் புகுதக
  • இன்தேன் கமழ் தார் இயக்கன் புகுதக
  • வென்றோன் புகுதக வீரன் புகுதக
  • என்றே நகரம் எதிர் கொண்டதுவே
   
2123.
  • இடி நறுஞ் சுண்ணம் சிதறி எச்சாரும்
  • கடி கமழ் மாலையும் கண்ணியும் சிந்திக்
  • துடி அடு நுண் இடைத் தொண்டை அம் செவ்வாய்
  • வடி அடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்
   
2124.
  • சுரும்பு இமிர் மாலை தொழுவனர் நீட்டி
  • இரும் பிடி நின் நடை கற்ற எமக்கு
  • விரும்பினையாய் விடின் மெல்ல நடமோ
  • கருங் கணில் காமனைக் காண மற்று என்பார்
   
2125.
  • மட நடை பெண்மை வனப்பு என்பது ஓராய்
  • கடு நடை கற்றாய் கணவன் இழப்பாய்
  • பிடி அலை பாவி எனப் பூண் பிறழ்ந்து
  • புடை முலை விம்மப் புலந்தனர் நிற்பார்
   
2126.
  • மயிர் வாய் சிறு கண் பெருஞ் செவி மாத் தாள்
  • செயிர் தீர் திரள் கைச் சிறு பிடி கேள்வன்
  • அயிரா வணத்தொடு சூள் உறும் ஐயன்
  • உயிர் காவலன் கொண்டு உதவ நில் என்பார்
   
2127.
  • கருனைக் கவளம் தருதும் கமழ் தார்
  • அருமை அழகிற்கு அரசனை நாளைத்
  • திரு மலி வீதி எம் சேரிக் கொணர்மோ
  • எரி மணி மாலை இளம்பிடி என்பார்
   
2128.
  • என்னோர் மருங்கினும் ஏத்தி எரிமணிப்
  • பொன் ஆர் கலையினர் பொன் பூஞ் சிலம்பினர்
  • மின் ஆர் குழையினர் கோதையர் வீதியுள்
  • மன்ன குமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்
   
2129.
  • விளங்கு பால் கடலில் பொங்கி
  • வெண் திரை எழுவவே போல்
  • துளங்கு ஒளி மாடத்து உச்சித்
  • துகில் கொடி நுடங்கும் வீதி
  • உளம் கழித்து உருவப் பைந்தார்
  • மன்னவன் கோவில் சேர்ந்தான்
  • இளங் கதிர்ப் பருதி பௌவத்து
  • இறு வரை இருந்தது ஒத்தான்
   
2130.
  • இழை ஒளி பரந்த கோயிலின்
  • இன மலர்க் குவளைப் பொன் பூ
  • விழை தகு கமல வட்டத்து
  • இடை விராய்ப் பூத்தவே போல்
  • குழை ஒளி முகமும் கோலக்
  • கொழுங் கயல் கண்ணும் தோன்ற
  • மழை மின்னுக் குழாத்தின் மாலை
  • மங்கையர் மயங்கி நின்றார்
   
2131.
  • எரிக் குழாம் சுடரும் வை வேல்
  • ஏந்தலைக் கண்டு கோயில்
  • திருக் குழாம் அனைய பட்டத்
  • தேவியர் மகிழ்ந்து செய்ய
  • வரிக் குழாம் நெடுங் கண் ஆரக்
  • கொப்புளித்து உமிழ அம் பூ
  • விரைக் குழாம் மாலைத் தேனும்
  • வண்டும் உண்டு ஒழுக நின்றார்
   
2132.
  • அலங்கல் தாது அவிழ்ந்து சோர
  • அல்குல் பொன் தோரை மின்னச்
  • சிலம்பின்மேல் பஞ்சி ஆர்ந்த
  • சீறடி வலத்தது ஊன்றி
  • நலம் துறை போய நங்கை
  • தோழியைப் புல்லி நின்றாள்
  • இலங்கு ஒளி மணித் தொத்து ஈன்ற
  • ஏந்து பொன் கொடியோடு ஒப்பாள்
   
2133.
  • தாமரைப் போதில் பூத்த தண் நறுங் குவளைப் பூப் போல்
  • காமரு முகத்தில் பூத்த கருமழைத் தடம் கண் தம்மால்
  • தே மலர் மார்பினானை நோக்கினாள் செல்வன் மற்று அப்
  • பூ மலர்க் கோதை நெஞ்சம் மூழ்கிப் புக்கு ஒளித்திட்டானே
   
2134.
  • விண்ணாறு செல்வார் மனம் பேது உறப் போந்து வீங்கிப்
  • பண்ணாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்கக்
  • கண்ணாறு சென்ற களி ஐங் கணைக் காமன் அன்ன
  • புணணாறு வேலான் மனம் மூழ்கினள் பொன் அனாளே
   
2135.
  • மைதோய் வரையின் இழியும் புலி போல மைந்தன்
  • பெய் தாம மாலைப் பிடியின் இழிந்து ஏகி மன்னர்
  • கொய் தாம மாலைக் கொழும் பொன்முடி தேய்த்து இலங்கும்
  • செய்பூங் கழலைத் தொழுதான் சென்னி சேர்த்தினானே
   
2136.
  • பொன் அம் குவட்டின் பொலிவு எய்தித் திரண்ட திண் தோள்
  • மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித்
  • தன் அன்பு கூரத் தடம் தாமரைச் செங் கண் முத்தம்
  • மின்னும் மணிப்பூண் விரை மார்ப நனைப்ப நின்றான்
   
2137.
  • ஆனாது வேந்தன் கலுழ்ந்தான் எனக் கோயில் எல்லாம்
  • தானாதும் இன்றி மயங்கித் தடம் கண் பெய் மாரி
  • தேன் ஆர் மலர் ஈர்த்து ஒழுகச் சிலம்பில் சிலம்பும்
  • கான் ஆர் மயிலின் கணம் போல் கலுழ்வுற்றது அன்றே
   
2138.
  • பகை நரம்பு இசையும் கேளாப்
  • பைங் கதிர்ப் பசும் பொன் கோயில்
  • வகை நலம் வாடி எங்கும்
  • அழு குரல் மயங்கி முந்நீர்
  • அக மடை திறந்ததே போல்
  • அலறக் கோக்கு இளைய நங்கை
  • மிகை நலத் தேவி தானே
  • விலாவணை நீக்கினாளே
   
2139.
  • பல் கதிர் மணியும் பொன்னும் பவழமும் குயிற்றிச் செய்த
  • செல்வப் பொன் கிடுகு சூழ்ந்த சித்திர கூடம் எங்கும்
  • மல்கு பூந் தாமம் தாழ்ந்து மணிப் புகை கமழ வேந்தன்
  • வெல் புகழ் பரவ மாதோ விதி உளி எய்தினானே
   
2140.
  • எரி மணி அடைப்பை செம் பொன்
  • படியகம் இலங்கு பொன்வாள்
  • கருமணி முகடு வேய்ந்த
  • கஞ்சனை கவரி கொண்ட
  • வருமுலை மகளிர் வைத்து
  • வான் தவிசு அடுத்து நீங்கப்
  • பெருமகன் எண்ணம் கொள்வான்
  • அமைச்சரோடு ஏறினானே
   
2141.
  • உலந்த நாள் அவர்க்குத் தோன்றாது
  • ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின்
  • புலந்த வேல் நெடுங் கண் செவ்வாய்ப்
  • புதவி நாள் பயந்த நம்பி
  • சிலம்பும் நீர்க் கடல் அம் தானைச்
  • சீதத்தற்கு அரசு நாட்டிக்
  • குலம் தரு கொற்ற வேலான்
  • கொடி நகர் காக்க என்றான்
   
2142.
  • மாற்றவன் ஒற்றர் ஒற்றா
  • வகையினில் மறைய நம்பிக்கு
  • ஆற்றின தோழர்க்கு எல்லாம்
  • அணிகலம் அடிசில் ஆடை
  • வேற்றுமை இன்றி வேண்டு ஊட்டு
  • அமைத்தனன் அருளி இப்பால்
  • ஏற்று உரி முரசம் நாண
  • எறிதிரை முழக்கின் சொன்னான்
   
2143.
  • கட்டியங் காரன் நம்மைக் காண்பதே கருமம் ஆக
  • ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரைமின் என்னத்
  • தொட்டு மேல் பொறியை நீக்கி மன்னனைத் தொழுது தோன்ற
  • விட்டு அலர் நாகப் பைந்தார் விரிசிகன் கூறும் அன்றே
   
2144.
  • விதையத்தார் வேந்தன் காண்க
  • கட்டியங் காரன் ஓலை
  • புதைய இப் பொழிலைப் போர்த்து ஓர்
  • பொய்ப் பழி பரந்தது என்மேல்
  • கதை எனக் கருதல் செய்யான்
  • மெய் எனத் தானும் கொண்டான்
  • சிதைய என் நெஞ்சம் போழ்ந்து
  • தெளிப்பினும் தெளிநர் யாரே
   
2145.
  • படு மணிப் பைம் பொன் சூழிப் பகட்டு இனம் இரியப் பாய்ந்து
  • கொடி நெடுந் தேர்கள் நூறிக் கொய் உளை மாக்கள் குத்தி
  • இடு கொடி அணிந்த மார்பர் இரு விசும்பு ஏறச் சீறி
  • அடு களிற்று அசனி வேகம் அலமர அதனை நோனான்
   
2146.
  • நூற்றுவர் பாகர் தம்மைப்
  • பிளந்து உயிர் உண்டது என்னும்
  • மாற்றத்தைக் கேட்டுச் சென்று
  • மதக் களிறு அடக்கி மேல் கொண்டு
  • ஆற்றல் அம் கந்து சேர்த்தி
  • யாப்பு உற வீக்கும் போழ்தில்
  • கூற்று என முழங்கி வீழ்த்துக்
  • கொல்லக் கோல் இளகிற்று அன்றே
   
2147.
  • தனக்கு யான் உயிரும் ஈவேன்
  • தான் வரப் பழியும் நீங்கும்
  • எனக்கு இனி இறைவன் தானே
  • இரு நிலக் கிழமை வேண்டி
  • நினைத்துத் தான் நெடிதல் செல்லாது
  • என் சொலே தெளிந்து நொய்தா
  • சினக் களி யானை மன்னன்
  • வருக எனச் செப்பினானே
   
2148.
  • ஒலையுள் பொருளைக் கேட்டே
  • ஒள் எயிறு இலங்கு நக்கக்
  • காலனை அளியன் தானே
  • கையினால் விளிக்கும் என்னா
  • நூல் வலீர் இவனைக் கொல்லும்
  • நுண் மதிச் சூழ்ச்சி ஈதே
  • போல்வது ஒன்று இல்லை என்றான்
  • புனை மணிப் பொன் செய் பூணான்
   
2149.
  • கள்ளத்தால் நம்மைக் கொல்லக்
  • கருதினான் நாமும் தன்னைக்
  • கள்ளத்தால் உயிரை உண்ணக்
  • கருதினேம் இதனை யாரும்
  • உள்ளத்தால் உமிழ வேண்டா
  • உறு படை வந்து கூட
  • வள்ளுவார் முரசம் மூதூர்
  • அறைக என அருளினானே
   
2150.
  • கட்டியங் காரனோடு காவலன் ஒருவன் ஆனான்
  • விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் விளைவ கூறின்
  • ஒட்டலன் இறைவன் சொன்னீர் நா நும அல்ல என்னக்
  • கொட்டினான் தடம் கண் வள் வார்க் குளிறு இடி முரசம் அன்றே
   
2151.
  • விண்டவர் உடலம் கீறிச் சுளித்து நின்று அழலும் வேழம்
  • ஒண் கொடி உருவத் திண்தேர் ஒளி மயிர்ப் புரவி பண்ணி
  • வண் கழல் அணிந்து மள்ளர் வாள் வலம் பிடித்து நாளைத்
  • தெண் திரைப் பரப்பு நாணத் திருநகர்த் தொகுக என்றான்
   
2152.
  • ஏற்று உரி போர்த்த வள் வார் இடி முரசு அறைந்த பின் நாள்
  • காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்பக்
  • கூற்று உடன்று அனைய தானை கொழு நிலம் நெளிய ஈண்டிப்
  • பால் கடல் பரப்பின் வெள் வாள் சுடர் ஒளி பரந்த அன்றே
   
2153.
  • புதை இருள் இரியப் பொங்கிக் குங்குமக் கதிர்கள் ஓக்கி
  • உதையத்தின் நெற்றி சேர்ந்த ஒண் சுடர்ப் பருதி போலச்
  • சுதை ஒளி மாடத்து உச்சி வெண்குடை நீழல் தோன்றி
  • விதையத்தார் வென்றி வேந்தன் விழுப் படை காணும் அன்றே
   
2154.
  • அரும் பனைத் தடக்கை அபரகாத்திரம்
  • வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ
  • கருங் கடல் சங்கும் கறந்த ஆன் பாலும்
  • கனற்றிய காலுகிர் உடைய
  • பெரும் புலி முழக்கின் மாறு எதிர் முழங்கிப்
  • பெருவரை கீண்டிடும் திறல
  • திருந்தி ஏழுறுப்பும் திண் நிலம் தோய்வ
  • தீ உமிழ் தறுகணின் சிறந்த
   
2155.
  • கவிழ் மணிப் புடைய கண் நிழல் நாறின்
  • கனன்று தம் நிழலொடு மலைவ
  • அவிழ் புயல் மேகம் அனைய மும்மதத்த
  • அறுபதிற்று அறுபதாம் நாகம்
  • புகழ் பருந்து ஆர்ப்பப் பூ மதம்
  • பொழிவான் நின்றன இராயிரம் கவுள் வண்டு
  • இகழ் மதம் செறித்த இராயிரத்து ஐந் நூறு
  • இளையவும் அத் துணைக் களிறே
   
2156.
  • குந்தமே அயில்வாள் குனிசிலை மூன்றும்
  • குறைவிலார் கூற்றொடும் பொருவார்
  • அந்தரம் ஆறா யானை கொண்டு
  • ஏறப் பறக்க எனில் பறந்திடும் திறலார்
  • முந்து அமர் தம்முள் முழுமெயும் இரும்பு
  • மேய்ந்திட வெம் சமம் விளைத்தார்
  • கொந்து அழல் அஞ்சாக் குஞ்சரம்
  • இவர்ந்தார் கோடியே விருத்தியா உடையார்
   
2157.
  • குங்கும நறு நீர் பந்தி நின்று ஆடும்
  • குதிரை ஆறு ஆயிரத்து இரட்டி
  • பொங்கு வெண் மயிர் சூழ் பொன் படை
  • பொலிந்த அறுபதின் ஆயிரம் புரவி
  • வெம் கணை தவிர்ப்ப வெள்ளி வெண் படைய
  • வாய்விடின் நிலவரை நில்லாப்
  • பைங்கதிர்க் கொட்டைக் கவரி சூழ்ந்து
  • அணிந்த பகரின் அத் தொகையன பாய்மா
   
2158.
  • வேய்நிறக் கரும்பின் வெண் நிறப் பூப்போல்
  • மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும்
  • தோம் நிலை அரவின் தோற்றமே போலும்
  • சிலைகளும் பிறகளும் துறை போய்
  • ஊனம் ஒன்று இல்லார் உயர் குடிப் பிறந்தார்
  • ஆயிரம் அடுகளம் கண்டார்
  • பால் நிலாப் பூணார் படைத் தொழில்
  • கலிமாப் பண் உறுத்து ஏறினார் அவரே
   
2159.
  • தறுகண் ஆண்மைய தாமரை நிறத்தன தகைசால்
  • மறு இல் வான் குளம்பு உடையன மாளவத்து அகத்த
  • பறையின் ஆலுவ படு சினை நாவலின் கனிபோல்
  • குறைவு இல் கோலத்த குளிர் புனல் சிந்துவின் கரைய
   
2160.
  • பார சூரவம் பல்லவம் எனும் பதிப் பிறந்த
  • வீர ஆற்றல விளை கடுந் தேறலின் நிறத்த
  • பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்து என நாணிச்
  • சோரும் வார் புயல் துளங்க விண் புகுவன துரகம்
   
2161.
  • பீலி மா மயில் எருத்து எனப் பெரு வனப்பு உடைய
  • மாலை மாரட்டத்து அகத்தன வளர் இளங் கிளியே
  • போலும் மேனிய பொரு கடல் கலத்தின் வந்து இழிந்த
  • கோல நீர்ப் பவளக் குளம்புடையன குதிரை
   
2162.
  • இன்ன பொங்கு உளைப் புரவி பண் உறுத்தன இயல் தேர்
  • பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து வெண் மதியம்
  • தன்னை ஊர் கொண்ட தகையன தொகை சொலின் அறு நூறு
  • என்னும் ஈறு உடை இருபதின் ஆயிரம் இறையே
   
2163.
  • நொச்சி மா மலர் நிறத்தன நொடி வரும் முந்நீர்
  • உச்சி மாக் கதிர் போல் சுடும் ஒளிதிகழ் அயில் வாள்
  • எச்சத்து அல்லவும் எறி படை பயின்று தம் ஒன்னார்
  • நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் தேர் மிசை அவரே
   
2164.
  • எயிற்றுப் படை ஆண்மையினின் இடிக்கும் புலி ஒப்பார்
  • பயிற்றிய வில் வாள் பணிக்கும் வேலொடு உடன் வல்லார்
  • துயிற்றிய பல் கேள்வியினர் தூற்றிக் கொளப்பட்டர்
  • அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார்
   
2165.
  • காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார்
  • ஆலும் கடல் தூர்த்தல் மலை அகழ்தல் இவை வல்லார்
  • ஞாலம் அறி ஆண் தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார்
  • மேலும் நுமரால் உரிமையுள் சிறப்புப் பெற்றார்
   
2166.
  • சிங்கத்து உரி போர்த்த செழுங் கேடகமும் வாளும்
  • பொங்கும் அயில் வேலும் பொரு வில்லும் உடன் பரப்பி
  • மங்குல் இடை மின்னும் மதியும் சுடரும் போல
  • வெம் கண் தொழில் கூற்றும் அரண் சேர விரிந்தன்றே
   
2167.
  • செம் பொன் நீள் முடித் தேர் மன்னர் மன்னற்குப்
  • பைம் பொன் ஆழி தொட்டான் படை காட்டினான்
  • அம் பொன் ஒண் கழலான் அயிராவணம்
  • வெம்ப ஏறினன் வெல்க என வாழ்த்தினார்
   
2168.
  • சிறு வெண் சங்கு முரன்றன திண் முரசு
  • அறையும் மாக்கடல் கார் என ஆர்த்தன
  • நெறியின் நல்கின புள்ளும் நிமித்தமும்
  • இறைவன் கண் வலன் ஆடிற்று இயைந்து அரோ
   
2169.
  • மல்லல் யானைக் கறங்கும் மணி ஒலி
  • அல்லது ஐங் கதி மான் கொழுந் தார் ஒலி
  • கல் என் ஆர்ப்பு ஒலி மிக்கு ஒளிர் வாள் மினின்
  • செல்லும் மாக்கடல் போன்றது சேனையே
   
2170.
  • மாலை மாமதி வெண்குடை மல்கிய
  • கோலக் குஞ்சி நிழல் குளிர் பிச்சமும்
  • சோலை ஆய்ச் சொரி மும்மதத்தால் நிலம்
  • பாலை போய் மருதம் பயந்திட்டதே
   
2171.
  • மன்றல் மா மயில் ஆர்த்து எழ மான் இனம்
  • கன்றினோடு கலங்கின கால் பெய
  • வென்றி வேல் படை அஞ்சி வனத்தொடு
  • குன்று எலாம் குடி போவன போன்றவே
   
2172.
  • படுகண் முழவின் இமிழ் அருவி
  • வரையும் காடும் பல போகி
  • இடு மண் முழவின் இசை ஓவா
  • ஏமாங்கத நாட்டு எய்திய பின்
  • நெடு வெண் நிலவின் நெற்றி தோய்
  • நிழலால் செம் பொன் புரிசையே
  • கடி மண் காவல் கருதினான்
  • கோயில் ஆகக் கருதினான்
   
2173.
  • போக மகளிர் வலக் கண்கள்
  • துடித்த பொல்லாக் கனாக் கண்டார்
  • ஆகம் மன்னற்கு ஒளி மழுங்கிற்று
  • அஞ்சத்தக்க குரலினால்
  • கூகை கோயில் பகல் குழறக்
  • கொற்ற முரசம் பாடு அவிந்து
  • மாகம் நெய்த்தோர் சொரிந்து எங்கும்
  • மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே
   
2174.
  • கூற்றம் வந்து புறத்து இறுத்தது அறியான்
  • கொழும் பொன் உலகு ஆள்வான்
  • வீற்று இங்கு இருந்தேன் என மகிழ்ந்து
  • வென்றி வேழம் இரு நூறும்
  • காற்றின் பரிக்கும் தேர் நூறும்
  • கடுங் கால் இவுளி ஆயிரமும்
  • போற்றி விடுத்தான் புனை செம் பொன்
  • படையே அணிந்து புனை பூணான்
   
2175.
  • மன்னன் ஆங்கு ஓர் மத வேழம்
  • வாரி மணாளன் என்பதூஉம்
  • மின்னும் கொடித் தேர் விசயமும்
  • புரவி பவன வேகமும்
  • பொன்னின் புனைந்து தான் போக்க
  • நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி
  • முன் யான் விட்ட இனக் களிற்றின்
  • இரட்டி விடுத்தான் எனப் புகழ்ந்தான்
   
2176.
  • வீங்கு நீர் விதையத்தார் கோன்
  • கட்டியங்காரன் தன்னோடு
  • ஆங்கு அவன் ஒருவன் ஆகி
  • அன்பு எனும் அயில் கொள் வாளால்
  • வாங்கிக் கொண்டு உயிரை உண்பான்
  • வஞ்சத்தால் சூழ்ந்த வண்ணம்
  • ஓங்கு நீர் ஓத வேலிக்கு
  • உணர யாம் உரைத்தும் அன்றே
   
2177.
  • பெரு மகன் காதல் பாவைப் பித்திகைப் பிணையல் மாலை
  • ஒரு மகள் நோக்கினாரை உயிரொடும் போகொடாத
  • திரு மகள் அவட்குப் பாலான் அருந் திரிபன்றி எய்த
  • அரு மகன் ஆகும் என்று ஆங்கு அணி முரசு அறைவித்தானே
   
2178.
  • ஆய் மதக் களிறு திண் தேர் அணி மணிப் புரவி அம் பொன்
  • காய் கதிர்ச் சிவிகை செற்றிக் கலந்தவை நுரைகள் ஆகப்
  • தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர்த் தொக்கதே போல்
  • ஆய் முடி அரச வெள்ளம் அணிநகர் ஈண்டிற்று அன்றே
   
2179.
  • நல்லவள் வனப்பு வாங்க நகை மணி மாலை மார்பர்
  • வில் அன்றே உவனிப்பாரும் வெம் கணை திருத்துவாரும்
  • சொல்லுமின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும்
  • பல் சரம் வழங்குவாரும் பரிவு கொள்பவரும் ஆனார்
   
2180.
  • பிறை எயிற்று எரி கண் பேழ்வாய்ப்
  • பெருமயிர்ப் பைம் பென் பன்றி
  • அறை எனத் திரியும் ஆய் பொன்
  • பூமியின் நிறைந்து மன்னர்
  • உறு கணை ஒன்றும் வில்லும்
  • உடன் பிடித்து உருவ நேமிப்
  • பொறி திரிவதனை நோக்கிப்
  • பூ முடி துளக்கி நின்றார்
   
2181.
  • ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதிக் காதில்
  • காய்ந்து எரி செம் பொன் தோடும் கன மணிக் குழையும் மின்ன
  • வேந்தருள் வினிதை வேந்தன் வெம் சிலை தளர வாங்கி
  • ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அருந் துகள் ஆர்ப்ப எய்தான்
   
2182.
  • குடர் தொடர் குருதிக் கோட்டுக் குஞ்சர நகரத்தார் கோன்
  • சுடர் நுதல் பட்டம் மின்னச் சுரும்பு இமிர் கண்ணி சிந்த
  • அடர் கதிர்ப் பைம் பொன் பூணும் ஆரமும் அகலத்து ஒல்கப்
  • படர் சிலை குழைய வாங்கிப் பன்றியைப் பதைப்ப எய்தான்
   
2183.
  • வார் மதுத் துளிக்கும் மாலை மணி முடித் தொடுத்து நாலக்
  • கார் மதம் கடந்த வண் கைக் காம்பிலிக் காவல் மன்னன்
  • ஏர் மதக் கேழல் எய்வான் ஏறலும் பொறியின் ஏறுண்டு
  • ஆர் மதக் களிற்று வேந்தர்க்கு அரு நகையாக வீழ்ந்தான்
   
2184.
  • முலை வட்டப் பூணும் முத்தும் முள்கலின் கிழிந்து பொல்லா
  • இலை வட்டத் தாம மார்பின் கோசலத்து இறைவன் எய்த
  • குலை வட்டக் குருதி அம்பு வானின் மேல் பூசல் உய்ப்பான்
  • சிலை வட்டம் நீங்கி விண்மேல் செவ்வனே எழுந்தது அன்றே
   
2185.
  • ஊடிய மடந்தை போல உறுசிலை வாங்க வாராது
  • ஆடு எழு அனைய திண் தோள் அவந்தியன் அதனை நோனான்
  • நாடு எழுந்து ஆர்ப்ப மற்று அந் நன் சிலை முறித்திட்டு அம்பை
  • வாடினன் பிடித்து நின்றான் மணமகன் போல நின்றான்
   
2186.
  • பில்கித் தேன் ஒழுகும் கோதைப் பிறர் மனையாள்கண் சென்ற
  • உள்ளத்தை உணர்வின் மிக்கான் ஒழித்திடப் பெயர்ந்ததே போல்
  • மல்லல் நீர் மகத ராசன் துரந்த கோல் மருள ஓடிப்
  • புல்லி அப் பொறியை மோந்து புறக் கொடுத்திட்டது அன்றே
   
2187.
  • தென் வரைப் பொதியில் ஆரம்
  • அகிலொடு தேய்த்த தேய்வை
  • மன் வரை அகலத்து அப்பி
  • மணி வடம் திருவில் வீச
  • மின் என விட்ட கோலை விழுங்கக்
  • கண்டு அழுங்கி வேர்த்துக்
  • கல் மலிந்து இலங்கு திண் தோள்
  • கலிங்கர் கோன் மெலிந்து மீண்டான்
   
2188.
  • கல் மழைப் பொன் குன்று ஏந்திக் கண நிரை அன்று காத்து
  • மன் உயிர் இன்று காக்கும் வாரண வாசி மன்னன்
  • மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் உற்று உறாதாய்
  • மன் உயிர் நடுங்க நாணி மண் புக்கு மறைந்தது அன்றே
   
2189.
  • எரி கதிர்ப் பைம் பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பிப்
  • புரி கழல் அணிந்த நோன் தாள் போதன புரத்து வேந்தன்
  • அரிதினில் திகிரி ஏறித் திரிந்து கண் கழன்று சோர்ந்து
  • விரி கதிர்க் கடவுள் போல வெறு நிலத்து ஒலிப்ப வீழ்ந்தான்
   
2190.
  • மலையச் செஞ் சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும்
  • இலை வைத்த கோதை நல்லார் இளமுலைப் பொறியும் ஆர்ந்து
  • சிலை வைத்த மார்பின் தென்னன் திருமணிப் பன்றி நோக்கித்
  • தலை வைத்தது அம்பு தானும் தரணி மேல் பாதம் வைத்தான்
   
2191.
  • வில் திறல் விசயன் என்பான் வெம் கணை செவிட்டி நோக்கி
  • ஒற்றுபு திருத்திக் கைம்மேல் உருட்டுபு நேமி சேர்ந்தாங்கு
  • உற்ற தன் சிலையின் வாய்ப்பெய்து உடு அமை பகழி வாங்க
  • இற்று வில் முறிந்து போயிற்று இமைப்பினில் இலங்கித்திட்டான்
   
2192.
  • குண்டலம் இலங்க வாங்கிக் குனி சிலை உறையின் நீக்கிக்
  • கொண்டு அவன் கொழும் பொன் தாரும் ஆரமும் மிளிர ஏறிக்
  • கண்டு கோல் நிறைய வாங்கிக் காதுற மிறித லோடும்
  • விண்டு நாண் அற்றது ஆங்கே விசயனும் வீக்கம் அற்றான்
   
2193.
  • உளை வனப்பு இருந்த மான் தேர் ஒளி முடி மன்னர் எல்லாம்
  • வளை வனப்பு இருந்த தோளாள் வருமுலைப் போகம் வேண்டி
  • விளை தவப் பெருமை ஓரார் வில் திறல் மயங்கி யாரும்
  • களைகலார் பொறியை ஆங்கு ஓர் ஆறு நாள் கழிந்த அன்றே
   
2194.
  • பனைக் கை யானை மன்னர் பணியப் பைம் பொன் முடியில்
  • கனைக்கும் சுரும்பு ஆர் மாலை கமழ மதுவும் தேனும்
  • நனைக்கும் கழலோன் சிறுவன் நாம வெள் வேல் வலவன்
  • நினைக்கல் ஆகா வகையான் நேரார் உயிர் மேல் எழுந்தான்
   
2195.
  • காரின் முழங்கும் களிறும் கடலின் முழங்கும் தேரும்
  • போரின் முழங்கும் புரவிக் கடலும் புகை வாள் கடலும்
  • சீரின் முழங்கும் முரசும் அலறும் சிறு வெண் சங்கும்
  • நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான்
   
2196.
  • கல்லார் மணிப் பூண் மார்பின் காமன் இவனே என்ன
  • வில்லார் கடல் அம் தானை வேந்தர் குழாத்துள் தோன்றப்
  • புல்லான் கண்ணின் நோக்கிப் புலி காண் கலையின் புலம்பி
  • ஒல்லான் ஒல்லான் ஆகி உயிர் போய் இருந்தான் மாதோ
   
2197.
  • புலி யாப்புறுத்திக் கொண்டேன் போக்கி விட்ட பிழைப்பும்
  • வலியார் திரள் தோள் மதனன் அவனைப் பிழைத்த பிழைப்பும்
  • நலியும் என்னை நலியும் என்னக் களிற்றின் உச்சி
  • இலையார் கடகத் தடக்கை புடைத்து மெய் சோர்ந்து இருந்தான்
   
2198.
  • மை பூத்து அலர்ந்த மழைக் கண் மாழை மான் நேர் நோக்கின்
  • கொய் பூங் கோதை மடவார் கொற்றம் கொள்க என்று ஏத்தப்
  • பெய் பூங் கழலான் வேழத்து இழிந்து பிறை போல் குலாய
  • செய் பூண் சிலை நாண் எறிந்தான் சேரார் நாள் உக்கனவே
   
2199.
  • கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற வந்து
  • குனி சிலை தோற்ற மன்னர் கொங்கு கொப்புளிக்கும் நீலப்
  • பனி மலர்க் காடு போன்றார் படர் சிலை தொடாத வேந்தர்
  • இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரைக் காடு போன்றார்
   
2200.
  • போர்த் தகல் விசும்பில் வந்து பொறித்திரி பன்றி மூன்றும்
  • நீர்த்தகப் புணர்ந்த போதில் நெடுந் தகை மூன்றும் அற்றுச்
  • சூர்த்துடன் வீழ நோக்கிச் சுடு சரம் சிதற வல்லான்
  • ஓர்த்து ஒன்றே புணர்ப்ப நாடி ஒரு பகல்காறும் நின்றான்
   
2201.
  • பொறியின் மேல் ஏறல் தேற்றான்
  • நாணினால் போதல் செய்யான்
  • நெறியின் வில் ஊன்றி நிற்ப
  • நிழல் மணிப் பன்றி அற்று
  • மறியுமோ என்று முன்னே
  • மணிமுடி சிதறி வீழ்ந்த
  • செறிகழல் மன்னர் நக்குத்
  • தீயத் தீ விளைத்துக் கொண்டார்
   
2202.
  • சிரல் தலை மணிகள் வேய்ந்த
  • திருந்து பொன் திகிரிச் செம்பொன்
  • உரல் தலை உருவப் பன்றி
  • இடம் வலம் திரிய நம்பன்
  • விரல் தலைப் புட்டில் வீக்கி
  • வெம் சிலை கணையோடு ஏந்திக்
  • குரல் தலை வண்டு பொங்கக்
  • குப்புற்று நேமி சேர்ந்தான்
   
2203.
  • ஒள் அழல் வைரப் பூணும்
  • ஒளிர் மணிக் குழையும் மின்ன
  • ஒள் அழல் கொள்ளி வட்டம் போல்
  • குலாய்ச் சுழலப் பொன் ஞாண்
  • ஒள் அழல் நேமி நக்க
  • மண்டலம் ஆக நின்றான்
  • ஒள் அழல் பருதி மேல்
  • ஓர் பருதி நின்று அதனை ஒத்தான்
   
2204.
  • அருந் தவக் கிழமை போல
  • இறாத வில் அறாத நாண்வாய்த்
  • திருந்தினார் சிந்தை போலும்
  • திண் சரம் சுருக்கி மாறாய்
  • இருந்தவன் பொறியும் பன்றி
  • இயல் தரும் பொறியும் அற்று ஆங்கு
  • ஒருங்கு உடன் உதிர எய்தான்
  • ஊழித் தீ உருமொடு ஒப்பான்
   
2205.
  • இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு
  • இரு நிலத்து இடித்து வீழக்
  • கலங்கு தெண் திரையும் காரும்
  • கடுவளி முழக்கும் ஒப்ப
  • உலம்புபு முரசம் கொட்டி
  • ஒய் எனச் சேனை ஆர்ப்பக்
  • குலம் பகர்ந்து அறைந்து
  • கோமான் கோவிந்தன் கூறினானே
   
2206.
  • வான் இடை ஒருவன் தோன்றி
  • மழை என முழங்கிச் சொல்லும்
  • தேன் உடை அலங்கல் வெள்
  • வேல் சீவகன் என்னும் சிங்கம்
  • கான் உடை அலங்கல் மார்பின்
  • கட்டியங் காரன் என்னும்
  • வேல் மிடை சோலை வேழத்து
  • இன் உயிர் விழுங்கும் என்றான்
   
2207.
  • விஞ்சையர் வெம் படை கொண்டு வந்தாய் என
  • அஞ்சுவலோ அறியாய் எனது ஆற்றலை
  • வெம் சமம் ஆக்கிடின் வீக்கு அறுத்து உன்னொடு
  • வஞ்சனை வஞ்சம் அறுத்திடுக என்றான்
   
2208.
  • சூரியன் காண்டலும் சூரிய காந்தம் அஃது
  • ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் அங்ஙனம்
  • பேர் இசையான் இசை கேட்டலும் பெய்ம் முகில்
  • கார் இடி போல் மதனன் கனன்றிட்டான்
   
2209.
  • கால் படையும் களிறும் கலி மாவொடு
  • நூல் படு தேரும் நொடிப்பினில் பண்ணி
  • நால் படையும் தொகுத்தான் மக்கள் நச்சிலை
  • வேல் படை வீரர் ஒர் நூற்றுவர் தொக்கார்
   
2210.
  • வில் திறாலான் வெய்ய தானையும் வீங்குபு
  • செற்று எழுந்தான் படையும் சின மொய்ம்பொடு
  • மற்று அவர் மண்டிய வாள் அமர் ஞாட்பினுள்
  • உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன்
   
2211.
  • அத்த மா மணிவரை அனைய தோன்றல
  • மத்தகத்து அருவியின் மணந்த ஓடைய
  • முத்து உடை மருப்பின் முனைக்கண் போழ்வன
  • பத்தியில் பண்ணின பரும யானையே
   
2212.
  • கோல் பொரு கொடுஞ் சிலை குருதி வெம்படை
  • மேலவர் அடக்குபு வேழம் ஏறலின்
  • மால் இரு விசும்பு இடை மணந்த ஒண் கொடி
  • கால் பொரு கதலிகைக் கானம் ஒத்தவே
   
2213.
  • குடை உடை நிழலன கோலம் ஆர்ந்தன
  • கிடுகு உடைக் காப்பின கிளர் பொன் பீடிகை
  • அடி தொடைக்கு அமைந்தன அரவத் தேர்த் தொகை
  • வடிவு உடைத் துகில் முடி வலவர் பண்ணினார்
   
2214.
  • கொய் உளைப் புரவிகள் கொளீஇய திண் நுகம்
  • பெய் கயிறு அமைவரப் பிணித்து முள்ளுறீஇச்
  • செய் கயிறு ஆய்ந்தன சிலையும் அல்லவும்
  • கை அமைத்து இளைஞரும் கருவி வீசினார்
   
2215.
  • பறந்து இயல் தருக்கின பரவை ஞாட்பினுள்
  • கறங்கு எனத் திரிவன கவரி நெற்றிய
  • பிறந்துழி அறிக எனப் பெரிய நூலவர்
  • குறங்கு எழுத்து உடையன குதிரை என்பவே
   
2216.
  • கொல் நுனைக் குந்தமும் சிலையும் கூர் நுதி
  • மின் நிலை வாளோடு மிலேச்சர் ஏறலின்
  • பொன் அரிப் புட்டிலும் தாரும் பொங்குபு
  • முன் உருத்து ஆர்த்து எழப் புரவி மொய்த்தவே
   
2217.
  • மாலையும் கண்ணியும் மணந்த சென்னியர்
  • ஆலுபு செறி கழல் ஆர்க்கும் காலினர்
  • பாலிகை இடை அறப் பிடித்த பாணியர்
  • சாலிகை உடம்பினர் தறுகணாளரே
   
2218.
  • போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்
  • வயிர் மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையும்
  • நேர் மரப் பலகையும் நிரைத்த தானை ஓர்
  • போர் முகப் புலிக் கடல் புகுந்தது ஒத்ததே
   
2219.
  • பார் நனை மதத்த பல் பேய் பருந்தொடு பரவச் செல்லும்
  • போர் மதக் களிறு பொன் தேர் நான்கரைக் கச்சம் ஆகும்
  • ஏர் மணிப் புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி
  • கார் மலிக் கடல் அம் காலாள் கற்பகத் தாரினாற்கே
   
2220.
  • நிழல் மணிப் புரவித் திண் தேர்
  • நிழல் துழாய்க் குனிந்து குத்தும்
  • அழல் திகழ் கதத்த யானை
  • ஐந்தரைக் கச்சம் ஆகும்
  • எழில் மணிப் புரவி ஏழ் ஆம்
  • இலக்கம் ஏழ் தேவ கோடி
  • கழல் மலிந்து இலங்கும்
  • காலாள் கட்டியங் காரற்கு அன்றே
   
2221.
  • குலம் கெழு மகளிர் தம் கோலம் நீப்பவும்
  • அலங்கு உளைப் புரவியும் களிறும் மாளவும்
  • நிலமகள் நெஞ்சு கையெறிந்து நையவும்
  • புலமகன் சீறினன் புகைந்தது எஃகமே
   
2222.
  • குணில் பொரக் குளிறின முரசம் வெள் வளை
  • பணை பரந்து ஆர்த்தன பம்பை வெம்பின
  • இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்
  • முணையினால் கடல் அக முழக்கம் ஒத்தவே
   
2223.
  • முடி மனர் எழுதரு பருதி மொய் களிறு
  • உடை திரை மாக்கலம் ஒளிறு வாள் படை
  • அடுதிறல் எறி சுறா ஆகக் காய்ந்தன
  • கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்ததே
   
2224.
  • அருங் கணை அடக்கிய ஆவ நாழிகை
  • பெரும் புறத்து அலமரப் பிணித்த கச்சினர்
  • கருங் கழல் ஆடவர் கருவில் வாய்க் கொளீஇக்
  • சொரிந்தனர் கணை மழை விசும்பு தூர்ந்ததே
   
2225.
  • நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும்
  • அணங்கு அருஞ் சரங்களின் அழுத்தி ஐ என
  • மணம் கமழ் வரு புனல் மறலும் மாந்தரின்
  • பிணங்கு அமர் மலைந்தனர் பெற்றி இன்னதே
   
2226.
  • கழித்தனர் கனல வாள் புகைந்து கண்கள் தீ
  • விழித்தன தீந்தன இமைகள் கூற்று எனத்
  • தெழித்தனர் திறந்தனர் அகலம் இன் உயிர்
  • அழித்தனர் அயிலவர் அரவம் மிக்கதே
   
2227.
  • பொரும் களத்து ஆடவர் பொருவில் பைந்தலை
  • அரும் பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன
  • கருங் கனிப் பெண்ணை அம் கானல் கால் பொர
  • இரும் கனி சொரிவன போன்ற என்பவே
   
2228.
  • பணை முனிந்து ஆலுவ பைம் பொன் தாரின
  • கணை விசை தவிர்ப்பன கவரி நெற்றிய
  • துணை அமை இளமைய தோற்றம் மிக்கன
  • இணை மயிர்ப் புரவியோடு இவுளி ஏற்றவே
   
2229.
  • கூர் உளி முகம் பொரக் குழிசி மாண்டன
  • ஆர் ஒளி அமைந்தன ஆய் பொன் சூட்டின
  • கார் ஒளி மின் உமிழ் தகைய கால் இயல்
  • தேரொடு தேர் தம்முள் சிறந்து சேர்ந்தவே
   
2230.
  • அஞ்சனம் எழுதின கவளம் ஆர்ந்தன
  • குஞ்சரம் கூற்றொடு கொம்மை கொட்டுவ
  • அஞ்சன வரை சிறகு உடைய போல்வன
  • மஞ்சு இவர் குன்று என மலைந்த வேழமே
   
2231.
  • மாக் கடல் பெருங் கலம் காலின் மாறு பட்டு
  • ஆக்கிய கயிறு அரிந்து ஓடி எங்கணும்
  • போக்கு அறப் பொருவன போன்று தீப்படத்
  • தாக்கின அரசுவாத் தம்முள் என்பவே
   
2232.
  • விடு சரம் விசும்பிடை மிடைந்து வெய்யவன்
  • படுகதிர் மறைந்து இருள் பரந்தது ஆயிடை
  • அடு கதிர் அயில் ஒளி அரசர் மாமுடி
  • விடுகதிர் மணி ஒளி வெயிலின் காய்ந்தவே
   
2233.
  • பூண் குலாம் வனமுலைப் பூமி தேவி தான்
  • காண்கலேன் கடியன கண்ணினால் எனாச்
  • சேண் குலாம் கம்பலம் செய்யது ஓன்றினால்
  • மாண் குலாம் குணத்தினால் மறைத்திட்டாள் அரோ
   
2234.
  • கலைக் கோட்ட அகல் அல்குல்
  • கணம் குழையார் கதிர் மணிப் பூண்
  • முலைக் கோட்டால் உழப்பட்ட
  • மொய்ம் மலர்த் தார் அகன் மார்பர்
  • மலைக் கோட்ட எழில்
  • வேழம் தவநூறி மதயானைக்
  • கொலைக் கோட்டால் உழப்பட்டுக்
  • குருதியுள் குளித்தனரே
   
2235.
  • மண மாலை மடந்தையர் தம்
  • மெல் விரலால் தொடுத்து அணிந்த
  • இணர் மாலை இரும் குஞ்சி
  • ஈர்ங் குருதிப் புனல் அலைப்ப
  • நிண மாலைக் குடர் சூடி
  • நெருப்பு இமையா நெய்த்தோரில்
  • பிண மாலைப் பேய் மகட்குப்
  • பெரு விருந்து அயர்ந்தனரே
   
2236.
  • தோலாப் போர் மற மன்னர்
  • தொடித் தோள்கள் எடுத்து ஓச்சி
  • மேல் ஆள் மேல் நெருப்பு உமிழ்ந்து
  • மின் இலங்கும் அயில் வாளால்
  • கால் ஆசோடு அற எறிந்த
  • கனை கழல் கால் அலை கடலுள்
  • நீல நீர்ச் சுறா இனம் போல்
  • நெய்த்தோருள் பிறழ்ந்தனவே
   
2237.
  • கருவி ஊடு உளம் கழிந்து கணை மொய்ப்பக் கதம் சிறந்து
  • குருவி சேர் வரை போன்ற குஞ்சரம் கொடி அணிந்த
  • உருவத் தேர் இற முருக்கி உருள் நேமி சுமந்து எழுந்து
  • பருதி சேர் வரை போலப் பகட்டு இனம் பரந்தனவே
   
2238.
  • மாலை வாய் நெடுங் குடை மேல் மதயானைக் கை துணிந்து
  • கோல நீள் கொழுங் குருதி கொள வீழ்ந்து கிடந்தன
  • மேலை நீள் விசும்பு உறையும் வெண் மதியம் விசும்பு இழுக்கி
  • நீல மாசுணத்தோடு நிலத்து இழிந்தது ஒத்தனவே
   
2239.
  • அஞ்சன நிறம் நீக்கி அரத்தம் போர்த்து அமர் உழக்கி
  • இங்குலிக இறு வரை போன்று இனக் களிறு இடை மிடைந்த குஞ்சரங்கள் பாய்ந்திடலின் குமிழிவிட்டு உமிழ் குருதி
  • இங்குலிக அருவி போன்று எவ்வாயும் தோன்றினவே
   
2240.
  • குஞ்சரம் தலை அடுத்துக் கூந்தல் மாக் கால் அணையாச்
  • செஞ் சோற்றுக் கடன் நீங்கிச் சினவுவாள் பிடித்து உடுத்த
  • பஞ்சி மேல் கிடந்து உடை ஞாண் பதைத்து இலங்கக் கிடந்தாரை
  • அஞ்சிப் போந்து இன நரியோடு ஓரி நின்று அலறுமே
   
2241.
  • காதலார்க்கு அமிர்து ஈந்த கடல் பவழக் கடிகை வாய்
  • ஏது இலாப் புள் உண்ணக் கொடேம் என்று வாய் மடித்துக்
  • காது அணிந்த பொன் தோடும் குண்டலமும் நக நகா
  • வீ ததைந்த வரைமார்பர் விஞ்சையர் போல் கிடந்தனரே
   
2242.
  • குடர் வாங்கு குறு நரிகள் கொழு நிணப் புலால் சேற்றுள்
  • தொடர் வாங்கு கத நாய் போல் தோன்றின தொடித் திண்தோள்
  • படர் தீரக் கொண்டு எழுந்த பறவைகள் பட நாகம்
  • உடனே கொண்டு எழுகின்ற உவணப் புள் ஒத்தனவே
   
2243.
  • வரையோடும் உரும் இடிப்ப
  • வளை எயிற்றுக் கொழுங் குருதி
  • நிரை உளை அரி நல் மா
  • நிலமிசைப் புரள்வன போல்
  • புரை அறு பொன் மணி ஓடைப்
  • பொடிப் பொங்கப் பொருது அழிந்து
  • அரைசோடும் அரசுவா
  • அடு களத்து ஆழ்ந்தனவே
   
2244.
  • தடம் பெருங் குவளைக் கண் தாழ் குழலார் சாந்து அணிந்து
  • வடம் திளைப்பப் புல்லிய வரை மார்பம் வாள் புல்ல
  • நடந்து ஒழுகு குருதியுள் நகாக் கிடந்த எரிமணிப் பூண்
  • இடம்படு செவ்வானத்து இளம் பிறைபோல் தோன்றினவே
   
2245.
  • காளம் ஆகு இருளைப் போழ்ந்து கதிர் சொரி கடவுள் திங்கள்
  • கோள் அரா விழுங்க முந்நீர்க் கொழுந் திரைக் குளித்ததே போல்
  • நீள் அமர் உழக்கி யானை நெற்றி மேல் தத்தி வெய்ய
  • வாளின் வாய் மதனன் பட்டான் விசயன் போர் விசயம் பெற்றான்
   
2246.
  • மன்மதன் என்னும் காளை மணி ஒலிப் புரவித் தேர் மேல்
  • வில் மழை சொரிந்து கூற்றின் தெழித்தனன் தலைப் பெய்து ஆர்ப்பக்
  • கொன் மலி மார்பன் பொன் தேர் கொடுஞ் சிலை அறுப்பச் சீறிப்
  • பொன் வரைப் புலியின் பாய்ந்து பூமி மேல் தோன்றினானே
   
2247.
  • நெற்றிமேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்யச்
  • சுற்றுபு மாலை போலத் தோன்றல் தன் நுதலில் சூடிப்
  • பொற்றது ஓர் பவழம் தன் மேல் புனை மணி அழுத்தி ஆங்குச்
  • செற்று எயிறு அழுந்தச் செவ்வாய் கௌவி வாள் உரீஇனானே
   
2248.
  • தோளினால் எஃகம் ஏந்தித் தும்பி மேல் இவரக் கையால்
  • நீள மாப் புடைப்பப் பொங்கி நிலத்து அவன் கவிழ்ந்து வீழக்
  • கீள் இரண்டு ஆகக் குத்தி எடுத்திடக் கிளர் பொன் மார்பன்
  • வாளினால் திருகி வீசி மருப்பின் மேல் துஞ்சினானே
   
2249.
  • நனை கலந்து இழியும் பைந்தார் நான் மறையாளன் பைம் பொன்
  • புனை கலக் குப்பை ஒப்பான் புத்திமா சேனன் பொங்கி
  • வனை கலத் திகிரித் தேர் மேல் மன்னரைக் குடுமி கொண்டான்
  • கனை எரி அழல் அம்பு எய்த கண் நுதல் மூர்த்தி ஒத்தான்
   
2250.
  • செண்பகப் பூங் குன்று ஒப்பான் தேவமா தத்தன் வெய்தா
  • விண்புக உயிரைப் பெய்வான் வீழ்தரு கடாத்த வேழம்
  • மண்பக இடிக்கும் சிங்கம் எனக் கடாய் மகதர் கோமான்
  • தெண் கடல் தானை ஓட நாணி வேல் செறித்திட்டானே
   
2251.
  • சின்னப் பூ அணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன் வாள்
  • மன்னருள் கலிங்கர் கோமான் மத்தகத்து இறுப்ப மன்னன்
  • பொன் அவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான்
  • மின் அவிர் பருதி முந்நீர்க் கோளொடும் வீழ்வது ஒத்தான்
   
2252.
  • கொடுஞ் சிலை உழவன் மான் தேர்க்
  • கோவிந்தன் என்னும் சிங்கம்
  • மடங்க அருஞ் சீற்றத் துப்பின்
  • மாரட்டன் என்னும் பொன் குன்று
  • இடந்து பொன் தூளி பொங்கக்
  • களிற்றொடும் இறங்கி வீழ
  • அடர்ந்து எறி பொன் செய்
  • அம்பின் அழன்று இடித்திட்டது அன்றே
   
2253.
  • கோங்கு பூத்து உதிர்ந்த குன்றின் பொன் அணி புளகம் வேய்ந்த
  • பாங்கு அமை பரும யானைப் பல்லவ தேச மன்னன்
  • தேம் கமழ் தெரியல் தீம் பூந் தாரவன் ஊர்ந்த வேழம்
  • காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது அன்றே
   
2254.
  • கொந்து அழல் பிறப்பத் தாக்கிக் கோடுகள் மிடைந்த தீயால்
  • வெந்தன விலை இலாத சாமரை வீர மன்னன்
  • அந்தரம் புதைய வில்வாய் அருஞ் சரம் பெய்த மாரி
  • குந்தத்தால் விலக்கி வெய்ய கூற்று என முழங்கினானே
   
2255.
  • மற்றவன் உலோக பாலன் வயங்கு பொன் பட்டம் ஆர்ந்த
  • நெற்றி மேல் எய்த கோலைப் பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர்
  • உற்றவன் களிற்றில் பாயத் தோன்றுவான் உதயத்து உச்சி
  • ஒற்றை மாக் கதிரை நீட்டி ஒண் சுடர் இருந்தது ஒத்தான்
   
2256.
  • கொடு மரம் குழைய வாங்கிக் கொற்றவன் எய்த கோல்கள்
  • நெடு மொழி மகளிர் கோல நிழல் மணி முலைகள் நேர்பட்டு
  • உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலில் சிங்கம் போலக்
  • கடல் மருள் சேனை சிந்தக் காம்பிலி மன்னன் வீழ்ந்தான்
   
2257.
  • பொன் நிறக் கோங்கம் பொன் பூங் குன்று எனப் பொலிந்த மேனி
  • நல் நிற மாவின் மேலான் நலம் கொள் தார் நபுலன் என்பான்
  • மின் நிற எஃகம் ஏந்தி வீங்கு நீர் மகதையார் கோன்
  • கொன் நிறக் களிற்றின் நெற்றிக் கூந்தல் மாப் பாய்வித்தானே
   
2258.
  • ஏந்தல் தன் கண்கள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி
  • நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய்
  • காய்ந்திலேன் என்று வல்லே கலின மாக் குன்றின் பொங்கிப்
  • பாய்ந்தது ஓர் புலியின் மற்று ஓர் பகட்டின் மேல் பாய்வித்தானே
   
2259.
  • கைப் படை ஒன்றும் இன்றிக் கை கொட்டிக் குமரன் ஆர்ப்ப
  • மெய்ப் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான்
  • மைப் படை நெடுங் கண் மாலை மகளிர் தம் வனப்பின் சூழ்ந்து
  • கைப் படு பொருள் இலாதான் காமம் போல் காளை மீண்டான்
   
2260.
  • மண் காவலை மகிழாது இவண் உடனே புகழ் ஒழிய
  • விண் காவலை மகிழ்வீர் நனி உளிரோ என விபுலன்
  • வண் கார் இருள் மின்னே உமிழ் நெய் வாயது ஓர் அயில் வாள்
  • கண் காவல கழுகு ஓம்புவது உயரா நனி வினவும்
   
2261.
  • வீறு இன்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான்
  • ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
  • மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான்
  • ஆறு அன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்
   
2262.
  • ஒன்று ஆயினும் பல ஆயினும்
  • ஓர் ஓச்சினுள் எறிய
  • வென்று ஆயின மத வேழமும்
  • உளவோ என வினவிப்
  • பொன் தாழ் வரைப் புலிப் போத்து
  • எனப் புனைதார் மிஞிறு ஆர்ப்பச்
  • சென்றான் இகல் களிறு ஆயிரம்
  • இரியச் சின வேலோன்
   
2263.
  • புடை தாழ் குழை பெருவில் உயர் பொன் ஓலையொடு எரிய
  • உடை நாணொடு கடி வட்டினொடு ஒளிர் வாளினொடு ஒருவன்
  • அடையா நிகர் எறி நீ என அதுவோ என நக்கான்
  • கிடை ஆயினன் இவனே எனக் கிளர் ஆண் அழகு உடையான்
   
2264.
  • இன் நீரின திரைமேல் இரண்டு இள வெம் சுடர் இகலி
  • மின்னோடு அவை சுழன்று ஆயிடை விளையாடு கின்றன போல்
  • பொன் நாணினர் பொருவில் உயர் புனை கேடகம் திரியாக்
  • கொன் வாளினர் கொழுந் தாரினர் கொடி மார்பினர் திரிந்தார்
   
2265.
  • விருந்து ஆயினை எறி நீ என விரை மார்பகம் கொடுத்தாற்கு
  • அரும் பூண் அற எறிந்து ஆங்கு அவன் நினது ஊழ் இனி எனவே
  • எரிந்து ஆர் அயில் இடை போழ்ந்தமை உணராது அவன் நின்றான்
  • சொரிந்தார் மலர் அர மங்கையர் தொமுதார் விசும்பு அடைந்தான்
   
2266.
  • நித்திலக் குப்பை போல நிழல் உமிழ்ந்து இலங்கும் மேனிப்
  • பத்திப் பூண் அணிந்த மார்பின் பதுமுகன் பைம் பொன் சூழி
  • மொய்த்து எறி ஓடை நெற்றி மும் மதக் களிற்றின் மேலான்
  • கைத் தலத்து எஃகம் ஏந்திக் காமுகன் கண்டு காய்ந்தான்
   
2267.
  • மாற்றவன் சேனை தாக்கித் தளர்ந்த பின் வன்கண் மள்ளர்
  • ஆற்றலோடு ஆண்மை தோன்ற ஆர் உயிர் வழங்கி வீழ்ந்தார்
  • காற்றினால் புடைக்கப் பட்டுக் கடல் உடைந்து ஓடக் காமர்
  • ஏற்று இளஞ் சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார்
   
2268.
  • தூசு உலாம் பரவை அல்குல் துணை முலை மகளிர் ஆடும்
  • ஊசல் போல் சேனை ஓடப் பதுமுகன் களிற்றை உந்தி
  • மாசு இல் சீர் மழையின் நெற்றி மா மதி நுழைவதே போல்
  • காய் சின களிற்றின் நெற்றி ஆழி கொண்டு அழுத்தினானே
   
2269.
  • பெரு வலி அதனை நோனான் பிண்டி பாலத்தை ஏந்தி
  • அருவரை நெற்றிப் பாய்ந்த ஆய் மயில் தோகை போலச்
  • சொரி மதக் களிற்றின் கும்பத்து அழுத்தலின் தோன்றல் சீறிக்
  • கருவலித் தடக்கை வாளின் காளையை வெளவி னானே
   
2270.
  • தீ முகத்து உமிழும் வேல் கண் சில்லரிச் சிலம்பினார் தம்
  • காமுகன் களத்து வீழக் கைவிரல் நுதியின் சுட்டிப்
  • பூ முக மாலை மார்பன் பொன் அணி கவசம் மின்னக்
  • கோமுகன் கொலைவல் யானை கூற்று எனக் கடாயினானே
   
2271.
  • சாரிகை திரியும் யானை உழக்கலின் தரணி தன் மேல்
  • ஆர் கலிக் குருதி வெள்ளம் அருந் துகள் கழுமி எங்கும்
  • வீரியக் காற்றில் பொங்கி விசும்பு போர்த்து எழுதப் பட்ட
  • போர் நிலைக் களத்தை ஒப்பக் குருதி வான் போர்த்தது அன்றே
   
2272.
  • சென்றது தடக்கை தூணி சேந்த கண் புருவம் கோலி
  • நின்ற வில் குனிந்தது அம்பு நிமிர்ந்தன நீங்கிற்று ஆவி
  • வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய்ம் மறைத்திட்டு மின்தோய்
  • குன்றின் மேல் பவழம் போலக் கோமுகன் தோன்றினானே
   
2273.
  • பனி வரை முளைத்த கோலப் பருப்புடைப் பவழம் போலக்
  • குனி மருப்பு உதிரம் தோய்ந்த குஞ்சரம் கொள்ள உந்திக்
  • கனி படு கிளவியார் தம் கதிர் முலை பொருது சேந்த
  • துனி வரை மார்பன் சீறிச் சுடுசரம் சிதறி னானே
   
2274.
  • பன்னல் அம் பஞ்சிக் குன்றம்
  • படர் எரி முகந்தது ஒப்பத்
  • தன் இரு கையினாலும் தடக்கை
  • மால் யானையாலும்
  • இன் உயிர் பருகிச் சேனை
  • எடுத்துக் கொண்டு இரிய ஓட்டிக்
  • கொன் முரண் தோன்ற வெம்பிக்
  • கொலைக் களிற்று உழவன் ஆர்த்தான்
   
2275.
  • தருக்கொடு குமரன் ஆர்ப்பத் தன் சிலை வளைய வாங்கி
  • ஒருக்கு அவன் கையும் வாயும் உளம் கிழித்து உடுவம் தோன்ற
  • சுருக்குக் கொண்டிட்ட வண்ணம் தோன்றல் எய்திடு தலோடும்
  • மருப்பு இறக் களிறு குத்தி வயிரம் தான் கழிந்தது அன்றே
   
2276.
  • நித்தில மணி வண்டு என்னும் நெடுமதக் களிறு பாய
  • முத்துடை மருப்பு வல்லே உடைந்து முத்து ஒழுகு குன்றின்
  • மத்தக யானை வீழ்ந்து வயிரம் கொண்டு ஒழிந்தது ஆங்குப்
  • பத்திரக் கடிப்பு மின்னப் பதுமுகன் பகடு பேர்த்தான்
   
2277.
  • பத்திரக் கடிப்பு மின்னப் பங்கியை வம்பின் கட்டிக்
  • கொத்து அலர்த் தும்பை சூடிக் கோவிந்தன் வாழ்க என்னாக்
  • கைத் தலத்து எஃகம் ஏந்திக் காளை போய் வேறு நின்றான்
  • மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது அன்றே
   
2278.
  • மேகலைப் பரவை அல்குல் வெள் வளை மகளிர் செஞ் சாந்து
  • ஆகத்தைக் கவர்ந்து கொண்ட அணிமுலைத் தடத்து வைகிப்
  • பாகத்தைப் படாத நெஞ்சின் பல்லவ தேய மன்னன்
  • சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானே
   
2279.
  • புனை கதிர் மருப்புத் தாடி மோதிரம் செறித்துப் பொன்செய்
  • கனை கதிர் வாளை ஏந்திக் கால் கழல் அணிந்து நம்மை
  • இனையன பட்ட ஞான்றால் இறையவர்கள் நினைப்பது என்றே
  • முனை அழல் முளிபுல் கானம் மேய்ந்து என நீந்தினானே
   
2280.
  • தார் அணி பரவை மார்பில் குங்குமம் எழுதித் தாழ்ந்த
  • ஆரமும் பூணும் மின்ன அருவிலைப் பட்டின் அங் கண்
  • ஏர் படக் கிடந்த பொன் ஞாண் இருள் கெட விழிப்ப வெய்ய
  • பூரண சேனன் வண்கைப் பொருசிலை ஏந்தினானே
   
2281.
  • ஊன் அமர் குறடு போல இரும்பு உண்டு மிகுத்த மார்பில்
  • தேன் அமர் மாலை தாழச் சிலை குலாய்க் குனிந்தது ஆங்கண்
  • மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள்
  • கான் அமர் காமன் எய்த கணை எனச் சிதறினானே
   
2282.
  • வண்டு அலை மாலை தாழ மது உண்டு களித்து வண்கைப்
  • புண் தலை வேலை ஏந்திப் போர்க்களம் குறுகி வாழ்த்திக்
  • கண்படு காறும் எந்தை கட்டியங் காரன் என்றே
  • உண்டு ஒலை ஆர்க வேல் என்று உறுவலி தாக்கினானே
   
2283.
  • கூற்று என வேழம் வீழாக் கொடி நெடுந் தேர்கள் நூறா
  • ஏற்றவர் தம்மைச் சீறா ஏந்திர நூழில் செய்யா
  • ஆற்றல் அம் குமரன் செல்வான் அலை கடல் திரையின் நெற்றி
  • ஏற்று மீன் இரியப் பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான்
   
2284.
  • மாலைக் கண் ஆம்பல் போல மகளிர் தம் குழாத்தில் பட்டார்
  • கோல வாள் போருள் பட்டால் குறு முயல் கூடு கண்டு
  • சாலத் தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை நீரர் ஆயின்
  • ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே
   
2285.
  • முடிச்சடை முனிவன் அன்று கேள்வியில் கொண்ட வேல் கண்
  • மடத்தகை மகளிர் கோல வருமுலை உழக்கச் சேந்து
  • கொடிப் பல அணிந்த மார்பின் கோவிந்தன் வாழ்க என்று
  • நடத்துவான் அவனை நோக்கி நகாச் சிலை பாரித்தானே
   
2286.
  • போர்த்த நெய்த்தோரன் ஆகிப் புலால்
  • பருந்து ஆர்ப்பச் செல்வான்
  • சீர்த் தகையவனைக் கண்டு என்
  • சினவு வேல் இன்னும் ஆர்ந்தின்று
  • ஊர்த்து உயிர் உன்னை உண்ணக்
  • குறை வயிறு ஆரும் என்று ஆங்கு
  • ஆர்த்த வாய் நிறைய எய்தான்
  • அம்பு பெய் தூணி ஒத்தான்
   
2287.
  • மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல
  • அப்பு அணைக் கிடந்த மைந்தன் அருமணித் திருவில் வீசும்
  • செப்பு இள முலையினார் கண் சென்று உலாய் பிறழச் சிந்திக்
  • கைப்பட எடுத்திட்டு ஆடும் பொலம் கழற் காயும் ஒத்தான்
   
2288.
  • புனைகதிர்ப் பொன் செய் நாணின் குஞ்சியைக் கட்டி நெய்த்தோர்
  • நனைகதிர் எஃகம் ஏந்தி நந்தன் வாழ்க என்ன நின்ற
  • வினை ஒளிர் காளை வேலைக் கடக்கலார் வேந்தர் நின்றார்
  • கனைகடல் வேலை எல்லை கடக்கலா வண்ணம் நின்றா
   
2289.
  • நின்ற அப் படை உளானே
  • ஒருமகன் நீலக் குஞ்சி
  • மன்றல மாலை நெற்றி
  • மழ களிறு அன்றி வீழான்
  • வென்று இயங்கு ஒளிறும் வெள்
  • வேல் மின் என வெகுண்டு விட்டான்
  • சென்ற வேல் விருந்து செங் கண்
  • மறவன் நக்கு எதிர் கொண்டானே
   
2290.
  • மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறு மருளின் நோக்கின்
  • தேன் வயிறு ஆர்ந்த கோதைத் தீம் சொலார் கண்கள் போலும்
  • ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் ஒய் எனப் பறித்து நக்கான்
  • கான் வயிறு ஆர்ந்து தேக்கிக் களிவண்டு கனைக்கும் தாரான்
   
2291.
  • விட்டு அழல் சிந்தி வெள் வேல்
  • விசும்பின் வீழ் மின்னின் நொய்தாக்
  • கட்டு அழல் நெடுங் கண் யாதும்
  • இமைத்திலன் மகளிர் ஓச்சும்
  • மட்டு அவிழ் மாலை போல
  • மகிழ்ந்து பூண் மார்பத்து ஏற்றுக்
  • கட்டு அழல் எஃகம் செல்லக்
  • கால் நெறி ஆயினானே
   
2292.
  • கவி மதம் கடந்து காமர் வனப்பு வீற்று இருந்த கண்ணார்
  • குவி முலை நெற்றித் தீம் தேன் கொப்புளித்து இட்ட பைந்தார்ச்
  • செவி மதக் கடல் அம் கேள்விச் சீவகன் கழல்கள் வாழ்த்திச்
  • சவி மதுத் தாம மார்பின் சல நிதி தாக்கினானே
   
2293.
  • குஞ்சரம் குனிய நூறித் தடாயின குருதி வாள் தன்
  • நெஞ்சகம் நுழைந்த வேலைப் பறித்து வான் புண்ணுள் நீட்டி
  • வெம்சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு
  • அஞ்சி மற்ற அரசர் யானைக் குழாத்தொடும் இரிந்திட்டாரே
   
2294.
  • தோட்டு வண்டு ஒலியல் மாலைத் துடி இடை மகளிர் ஆய்ந்த
  • மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை உழுது சாந்தம்
  • கோட்டு மண் கொண்ட மார்பம் கோதை வாள் குளித்து மூழ்கிக்
  • கோட்டு மண் கொள்ள நின்றான் குருசில் மண் கொள்ள நின்றான்
   
2295.
  • எரி மணிக் குப்பை போல இருள் அற விளங்கும் மேனித்
  • திருமணிச் செம் பொன் மார்பின் சீவகன் சிலை கை ஏந்தி
  • அரு மணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி
  • விரி மணி விளங்கு மான் தேர் விண் தொழ ஏறினானே
   
2296.
  • கருவளி முழக்கும் காரும் கனை கடல் ஒலியும் கூடி
  • அருவலிச் சிங்க ஆர்ப்பும் ஆங்கு உடன் கூடிற்று என்ன
  • செருவிளை கழனி மள்ளர் ஆர்ப்பொடு சிவணிச் செம்பொன்
  • புரிவளை முரசம் ஆர்ப்பப் போர்த் தொழில் தொடங்கினானே
   
2297.
  • அரசர் தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி ஆர்க்கும்
  • முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து மாவும்
  • விரை பரித் தேரும் ஈர்த்து வேழம் கொண்டு ஒழுகி வெள்ளக்
  • குரை புனல் குருதி செல்லக் குமரன் வில் குனிந்தது அன்றே
   
2298.
  • கேழ் கிளர் எரி கண் பேழ் வாய்க் கிளர் பெரும்பாம்பி னோடும்
  • சூழ் கதிர்க் குழவித் திங்கள் துறுவரை வீழ்வதே போல்
  • தாழ் இரும் தடக்கை யோடும் தட மருப்பு இரண்டும் அற்று
  • வீழ் தரப் பரந்த அப்பு நிழலில் போர் மயங்கினாரே
   
2299.
  • ஆடவர் ஆண்மை தோற்றும் அணிகிளர் பவழத் திண்கை
  • நீடு எரி நிலைக் கண்ணாடிப் போர்க்களத்து உடைந்த மைந்தர்
  • காடு எரி கவரக் கல் என் கவரிமா விரிந்த வண்ணம்
  • ஓடக் கண்டு உருவப் பைந்தார் அரிச்சந்தன் உரைக்கின்றானே
   
2300.
  • மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரிச் சிலம்பு சூழ்ந்து
  • பஞ்சி கொண்டு எழுதப் பட்ட சீறடிப் பாய்தல் உண்ட
  • குஞ்சி அம் குமரர் தங்கள் மறம் பிறர் கவர்ந்து கொள்ள
  • அஞ்சி இட்டு ஓடிப் போகின் ஆண்மை யார் கண்ணது அம்மா
   
2301.
  • உழை இனம் உச்சிக் கோடு கலங்குதல் உற்ற போதே
  • விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்பக்
  • கழலவர் உள்ளம் அஞ்சிக் கலங்குமேல் அதனை வல்லே
  • மழைமினின் நீக்கி இட்டு வன் கண்ணர் ஆபர் அன்றே
   
2302.
  • தற் புறம் தந்து வைத்த தலைமகற்கு உதவி ஈந்தால்
  • கற்பக மாலை சூட்டிக் கடி அர மகளிர்த் தோய்வர்
  • பொற்ற சொல் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கல் மேல்
  • நிற்பர் தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி என்றான்
   
2303.
  • பச்சிரும்பு எஃகு இட்டாங்குப் படையைக் கூர்ப்பு இடுதலோடும்
  • கச்சையும் கழலும் வீக்கிக் காஞ்சனத் தளிவம் வாய்க்கு இட்டு
  • அச்சு உற முழங்கி ஆரா அண்ணல் அம் குமரன் கையுள்
  • நச்சு எயிற்று அம்பு தின்ன நாள் இரை ஆகல் உற்றார்
   
2304.
  • வடதிசை எழுந்த மேகம்
  • வலன் உராய் மின்னுச் சூடிக்
  • குடதிசைச் சேர்ந்து மாரி
  • குளிறுபு சொரிவதே போல்
  • படர் கதிர்ப் பைம் பொன் திண் தேர்
  • பாங்கு உற இமைப்பின் ஊர்ந்தான்
  • அடர் சிலை அப்பு மாரி
  • தாரை நின்றிட்டது அன்றே
   
2305.
  • அற்று வீழ் தலைகள் யானை
  • உடலின் மேல் அழுந்தி நின்ற
  • பொற்ற திண் சரத்தில் கோத்த
  • பொருசரம் தாள்கள் ஆகத்
  • தெற்றி மேல் பூத்த செந்தாமரை
  • மலர் போன்ற செங் கண்
  • மற்று அத்தாது உரிஞ்சி உண்ணும்
  • வண்டு இனம் ஒத்த அன்றே
   
2306.
  • திங்களோடு உடன் குன்று எலாம்
  • துளங்கி மாநிலம் சேர்வபோல்
  • சங்கம் மத்தகத்து அலமரத்
  • தரணி மேல் களிறு அழியவும்
  • பொங்கு மா நிரை புரளவும்
  • பொலம் கொள் தேர் பல முறியவும்
  • சிங்கம் போல் தொழித்து ஆர்த்து அவன்
  • சிறுவர் தேர்மிசைத் தோன்றினார்
   
2307.
  • சந்தனம் சொரி தண் கதிர்த்
  • திங்கள் அம் தொகை தாம் பல
  • குங்குமக் கதிர்க் குழவி அம்
  • செல்வனோடு உடன்பொருவ போல்
  • மங்குல் மின் என வள்ளல் தேர்
  • மைந்தர் தேரொடு மயங்கலின்
  • வெம் கண் வில் உமிழ் வெம் சரம்
  • மிடைந்து வெம்கதிர் மறைந்ததே
   
2308.
  • குருதிவாள் ஒளி அரவினால்
  • கொள்ளப்பட்ட வெண்திங்கள் போல்
  • திருவ நீர்த் திகழ் வலம்புரி வாய்
  • வைத்து ஆங்கு அவன் தெழித்தலும்
  • பொருவில் கீழ் வளி முழக்கினால்
  • பூமிமேல் சனம் நடுங்கிற்றே
  • அரவ வெம்சிலை வளைந்ததே
  • அண்ணல் கண் அழல் உமிழ்ந்ததே
   
2309.
  • கங்கை மாக்கடல் பாய்வதே போன்று காளை தன் கார்முகம்
  • மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம்சரம் கான்ற பின்
  • நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண நீங்கினார் உயிர் நீள் முழைச்
  • சிங்க ஏறுகள் கிடந்த போல் சிறுவர் தேர் மிசைத் துஞ்சினார்
   
2310.
  • நிவந்த வெண் குடை வீழவும் வேந்தர் நீள் விசும்பு ஏறவும்
  • உவந்து பேய்க் கணம் ஆடவும் ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும்
  • கவந்தம் எங்கணும் ஆடவும் களிறு மாவொடு கவிழவும்
  • சிவந்த சீவக சாமி கண் புருவமும் முரி முரிந்தவே
   
2311.
  • பொய்கை போர்க்களம் புற இதழ் புலவு வாள் படை புல் இதழ்
  • ஐய கொல் களிறு அக இதழ் அரசர் அல்லி தன் மக்களா
  • மையில் கொட்டை அம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையால்
  • பைய உண்டபின் கொட்டை மேல் பவித்திரத் தும்பி பறந்ததே
   
2312.
  • கலை முத்தம் கொள்ளும் அல்குல் கார் மழை மின் அனார் தம்
  • முலை முத்தம் கொள்ளச் சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும்
  • மலை முத்தம் கொள்ளும் மார்பின் மன்னனும் கண்டு காய்ந்தான்
  • சிலை முத்தம் கொள்ளும் திண் தோள் செம்மலும் தீயின் சேந்தான்
   
2313.
  • தன் மதம் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்
  • பின் மதம் செறித்திட்டு அஞ்சிப் பிடி மறந்து இரிந்து போகும்
  • வெல் மதக் களிற்று வெய்ய அசனி வேகத்தின் மேலான்
  • மின் உமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பினானே
   
2314.
  • நல்வினை உடைய நீரார் நஞ்சு உணின் அமுதம் ஆகும்
  • இல்லையேல் அமுதும் நஞ்சாம் இன்னதால் வினையின் ஆக்கம்
  • கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும்
  • அல்லன நினைத்தல் செல்லார் அறிவினால் பெரிய நீரார்
   
2315.
  • அகப்படு பொறியினாரை ஆக்குவார் யாவர் அம்மா
  • மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்யலாமோ
  • நகைக் கதிர் மதியம் வெய்தா நடுங்கச் சுட்டிடுதல் உண்டே
  • பகைக் கதிர்ப் பருதி சந்தும் ஆலியும் பயத்தல் உண்டே
   
2316.
  • புரி முத்த மாலைப் பொன்கோல் விளக்கினுள் பெய்த நெய்யும்
  • திரியும் சென்று அற்ற போழ்தே திருச்சுடர் தேம்பின் அல்லால்
  • எரி மொய்த்துப் பெருகல் உண்டோ இருவினை சென்று தேய்ந்தால்
  • பரிவு உற்றுக் கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார்
   
2317.
  • நல் ஒளிப் பவளச் செவ்வாய் நல்மணி எயிறு கோலி
  • வில்லிட நக்கு வீரன் அஞ்சினாய் என்ன வேந்தன்
  • வெல்வது விதியின் ஆகும் வேல் வரின் இமைப்பேன் ஆயின்
  • சொல்லி நீ நகவும் பெற்றாய் தோன்றல் மற்று என்னை என்றான்
   
2318.
  • பஞ்சி மெல் அடியினார் தம் பாடகம் திருத்திச் சேந்து
  • நெஞ்சு நொந்து அமுத கண்ணீர் துடைத்தலின் நிறைந்த கோல
  • அஞ்சனக் கலுழி அம் சேறு ஆடிய கடக வண்கை
  • வெம்சிலை கொண்டு வெய்ய உரும் என முழங்கிச் சொன்னான்
   
2319.
  • இல்லாளை அஞ்சி விருந்தின் முகம் கொன்ற நெஞ்சின்
  • புல்லாளன் ஆக மறம் தோற்பின் எனப் புகைந்து
  • வில் வாள் அழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கிக்
  • கொல் யானை உந்திக் குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான்
   
2320.
  • தொடுத்த ஆங்கு அவ் அம்பு தொடை வாங்கி விடாத முன்னம்
  • அடுத்து ஆங்கு அவ் அம்பும் சிலையும் அதன் நாணும் அற்றுக்
  • கடுத்து ஆங்கு வீழக் கதிர் வான் பிறை அம்பின் எய்தான்
  • வடித் தாரை வெல் வேல் வயிரம் மணிப் பூணினானே
   
2321.
  • அம்பும் சிலையும் அறுத்தான் என்று அழன்று பொன்வாள்
  • வெம்பப் பிடித்து வெகுண்டு ஆங்கு அவன் தேரின் மேலே
  • பைம் பொன் முடியான் படப் பாய்ந்திடுகு என்று பாய்வான்
  • செம் பொன் உலகின் இழிகின்ற ஓர் தேவன் ஒத்தான்
   
2322.
  • மொய் வார் குழலார் முலைப் போர்க்களம் ஆய மார்பில்
  • செய்யோன் செழும் பொன் சரம் சென்றன சென்றது ஆவி
  • வெய்தா விழியா வெருவத் துவர் வாய் மடியா
  • மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான்
   
2323.
  • கட்டியங் காரன் என்னும் கலி அரசு அழிந்தது ஆங்குப்
  • பட்ட இப் பகைமை நீங்கிப் படைத் தொழில் ஒழிக என்னாக்
  • கொட்டினர் முரசம் மள்ளர் ஆர்த்தனர் குருதிக் கண்ணீர்
  • விட்டு அழுது அவன்கண் ஆர்வம் மண் மகள் நீக்கினாளே
   
2324.
  • ஒல்லை நீர் உலகம் அஞ்ச ஒளி உமிழ் பருதி தன்னைக்
  • கல் எனக் கடலின் நெற்றிக் கவுள் படுத்திட்டு நாகம்
  • பல் பகல் கழிந்த பின்றைப் பல் மணி நாகம் தன்னை
  • வல்லை வாய் போழ்ந்து போந்து ஓர் மழகதிர் நின்றது ஒத்தான்
   
2325.
  • கோட்டு மீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினர் மன்னர் சூழ்ந்தார்
  • மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம்
  • ஆட்டு நீர்க் கடலின் ஆர்த்தது அணிநகர் வென்றி மாலை
  • கேட்டு நீர் நிறைந்து கேடு இல் விசையை கண் குளிர்ந்த அன்றே
   
2326.
  • அணி முடி அரசர் மாலை அழல் நுதி வாள்கள் என்னும்
  • மணி புனை குடத்தின் நெய்த்தோர் மண்ணு நீர் மருள ஆட்டிப்
  • பணை முலைப் பைம் பொன் மாலைப் பாசிழைப் பூமி தேவி
  • இணை முலை ஏகம் ஆக நுகரிய எய்தினானே