பூமகள் இலம்பகம்
 
2327.
  • கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட
  • கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றி
  • கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்
  • கண் ஆடு யானை அவர் கை தொழச் சென்று புக்கான்
   
2328.
  • கூடு ஆர் புலியும் முழைக் கோளரி ஏறும் அன்ன
  • கூடார் மெலியக் கொலை வேல் நினைந்தானை ஏத்திக்
  • கூடு ஆர மாலைக் குவி மென் முலைக் கோதை நல்லார்
  • கூடாரம் மாட மயில் போலக் குழீஇ யினாரே
   
2329.
  • மாலைச் செற்றான் மக்களொடு எல்லாம் உடனே இம்
  • மாலைச் செற்றான் வைந் நுனை அம்பின் இவன் என்பார்
  • மாலைக்கு இன்றே மாய்ந்தது மாயாப் பழி என்பார்
  • மாலைக்கு ஏற்ற வார் குழல் வேய்த்தோள் மடநல்லார்
   
2330.
  • நாகம் நெற்றி நல் மணி சிந்தும் அருவி போல்
  • நாகம் நெற்றி நல் மணி ஓடை நற விம்மும்
  • நாகம் நெற்றி நல் மலர் சிந்தி நளிர் செம்பொன்
  • நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் மடநல்லார்
   
2331.
  • கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் நெடுமாடம்
  • கோடிப் பட்டின் கொள் கொடி கூடப் புனைவாரும்
  • கோடித் தானைக் கொற்றவன் காண்பான் இழை மின்னக்
  • கோடிச் செம்பொன் கொம்பரின் முன் முன் தொழுவாரும்
   
2332.
  • அம்பு உகை வல் வில் ஆர் கழல் மள்ளர் திறல் ஏத்த
  • அம்பு கைக் கொண்டால் ஆர் இவற்கு ஈண்டு நிகர் ஆவார்
  • அம் புகை ஆர்ந்த அம் துகில் அல்குல் அவிர் கோதாய்
  • அம்பு கைக் காணாம் ஐயனைக் கையில் தொழுது என்பார்
   
2333.
  • மைத் துன நீண்ட மா மணி மாடம் மிசை ஏறி
  • மைத்து உன நீண்ட வாள் தடம் கண்ணார் மலர் தூவ
  • மைத்துன மன்னர் மால் களிறு ஏறிப் புடை சூழ
  • மைத் துன நீண்ட மாமணி வண்ண அவன் ஒத்தான்
   
2334.
  • ஊது வண்டு அரற்றும் உயர் தாமரைப்
  • போது பூங் கழுநீரொடு பூத்து உடன்
  • வீதி மல்கின போல் மிளிர் வேல் கணும்
  • மாதரார் முகப் பூவும் அலர்ந்தவே
   
2335.
  • வீணை வித்தகன் வேந்து அடு வீங்கு தோள்
  • காணும் காரிகையார் கதிர் வெம் முலைப்
  • பூணும் ஆரமும் ஈன்று பொன் பூத்து அலர்ந்து
  • யாணர் ஊர் அமராபதி போன்றதே
   
2336.
  • தேம் பெய் கற்பகத் தாரவன் சேர்தலும்
  • பூம் பெய் கோதை புரிசைக் குழாம் நலம்
  • ஓம்பு திங்கள் உலந்து சுடர் கண்ட
  • ஆம்பல் ஆய் மலர்க் காடு ஒத்து அழிந்ததே
   
2337.
  • மாகம் முழக்கின் மணி நாகம் பதைப்பவே போல்
  • ஆகம் மறவர் அகன் கோயில் புக்கு அம் பொன் மாலைத்
  • தோகை மடவார் துவர் வாய் துடித்து அஞ்ச வெம்பா
  • வேகம் உடைத்தாய் விழியாத் தொழித்து ஏகுக என்றார்
   
2338.
  • செய் பாவை அன்னார் சிலம்பு ஆர்க்கும் மென் சீறடியார்
  • செய் பூந் தவிசின் மிசை அல்லது சேறல் இல்லார்
  • மை ஆர்ந்த கண்ணீர் மணிப் பூண் முலை பாய விம்மா
  • வெய்தா மடவார் வெறு வெம் நிலத்து ஏகினாரே
   
2339.
  • நெருப்பு உற்ற போல நிலம் மோந்துழிச் செய்ய ஆகிப்
  • பருக்கு என்ற கோலம் மரல் பல் பழம் போன்று கொப்புள்
  • வருத்தம் மிழற்றிப் பசும் பொன் சிலம்பு ஓசை செய்யச்
  • செருக்கு அற்ற பஞ்சி மலர்ச் சீறடி நோவச் சென்றார்
   
2340.
  • பொன் பூண் சுமந்து பொரு கோட்டை அழித்து வெம்போர்
  • கற்பான் எழுந்த முலையார் களம் கண்டு நீங்கி
  • நல் பூண் அணிந்த முலையார் நிலை கால் சரிந்து
  • நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையி னாரும்
   
2341.
  • செங் கால் குழவி தழீஇயினார் திங்கள் புக்க நீரார்
  • அம் கான் முலையின் அரும்பால் வரப் பாயினாரும்
  • பைங் காசும் முத்தும் பவழத்தொடு பைம் பொன் ஆர்ந்த
  • பொங்கார் முலையார் திரு முற்றம் நிறைந்து புக்கார்
   
2342.
  • பெய் ஆர் முகிலில் பிறழ் பூங் கொடி மின்னின் மின்னா
  • நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரி மாலை சோரக்
  • கையார் வளையார் புலி கண் உறக் கண்டு சோரா
  • நையாத் துயரா நடுங்கும் பிணை மான்கள் ஒத்தார்
   
2343.
  • வட்டம் மலர்த் தார் அவனால் அருள் பெற்று வான் பொன்
  • பட்டம் அணிந்தாள் இவர் தங்களுள் யாவள் என்ன
  • மடடு ஆர் அலங்கல் அவன் மக்களும் தானும் மாதோ
  • பட்டார் அமருள் பசும் பொன் முடி சூழ என்றார்
   
2344.
  • மால் ஏறு அனையானொடு மக்களுக்கு அஃதோ என்னா
  • வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து
  • சேல் ஏறு சின்னீர் இடைச் செல்வன போன்று செங் கண்
  • மேல் ஏறி மூழ்கிப் பிறழ்ந்து ஆழ்ந்த இறந்து பட்டாள்
   
2345.
  • ஐ வாய் அரவின் அவிர் ஆர் அழல் போன்று சீறி
  • வெய்யோன் உயிர்ப்பின் விடுத்தேன் என் வெகுளி வெம் தீ
  • மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்பட்டு
  • உய்யா என நீர் உடன்று உள்ளம் உருகல் வேண்டா
   
2346.
  • மண் கேழ் மணியின் நுழையும் துகில் நூலின் வாய்த்த
  • நுண் கேழ் நுசுப்பின் மடவீர் நும்மை நோவ செய்யேன்
  • ஒண் கேழ்க் கழுநீர் ஒளி முத்தம் உமிழ்வதே போல்
  • பண் கேழ் மொழியீர் நெடுங் கண் பனி வீழ்த்தல் வேண்டா
   
2347.
  • என் உங்கட்கு உள்ளம் இலங்கு ஈர் வளைக் கையினீரே
  • மன் இங்கு வாழ்வு தருதும் அவற்றானும் வாழ்மின்
  • பொன் இங்குக் கொண்டு புறம் போகியும் வாழ்மின் என்றான்
  • வில் நுங்க வீங்கி விழுக் கந்து என நீண்ட தோளான்
   
2348.
  • தீத் தும்மும் வேலான் திரு வாய் மொழி வான் முழக்கம்
  • வாய்த்து அங்குக் கேட்டு மட மஞ்ஞைக் குழாத்தின் ஏகிக்
  • காய்த் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார்
  • சேய்ச் செந் தவிசு நெருப்பு என்று எழும் சீறடியார்
   
2349.
  • காது ஆர் குழையும் கடல் சங்கமும் குங்குமமும்
  • போது ஆர் அலங்கல் பொறையும் பொறை என்று நீக்கித்
  • தாது ஆர் குவளைத் தடம் கண் முத்து உருட்டி விம்மா
  • மாது ஆர் மயில் அன்னவர் சண்பகச் சாம்பல் ஒத்தார்
   
2350.
  • ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் எல்லாம்
  • காய் பொன் கடிகைக் கதிர்க் கை விளக்கு ஏந்தி மள்ளர்
  • மேய் பொன் அறையும் பிறவும் விரைந்து ஆய்ந்த பின்றைச்
  • சேய் பொன் கமல மகள் கை தொழச் சென்று புக்கான்
   
2351.
  • முலை ஈன்ற பெண்ணைத் திரள் தாமங்கள் தாழ்ந்து முற்றும்
  • மலை ஈன்ற மஞ்சின் மணிப் பூம் புகை மல்கி விம்மக்
  • கலை ஈன்ற சொல்லார் கமழ்பூ அணைக் காவல் கொண்டார்
  • கொலை ஈன்ற வேல் கண்ணவர் கூடிய மார்பற்கு அன்றே
   
2352.
  • போர்க் கோலம் நீக்கிப் புகழப் பொன்னின் எழுதப் பட்ட
  • வார்க் கோல மாலை முலையார் மண்ணுறுப்ப ஆடி
  • நீர்க் கோலம் செய்து நிழல் விட்டு உமிழ் மாலை மார்பன்
  • தார்க் கோலம் மான் தேர்த் தொகை மாமன் தொழுது சொன்னான்
   
2353.
  • எண் கொண்ட ஞாட்பின் இரும்பு எச்சில் படுத்த மார்பர்
  • புண் கொண்டு போற்றிப் புறம் செய்க எனப் பொற்ப நோக்கிப்
  • பண் கொண்ட சொல்லார் தொழப் பாம்பு அணை அண்ணல் போல
  • மண் கொண்ட வேலான் அடி தைவர வைகினானே
   
2354.
  • வாள்களாலே துகைப்பு உண்டு
  • வரை புண் கூர்ந்த போல் வேழம்
  • நீள் கால் விசைய நேமித் தேர்
  • இமைத்தார் நிலத்தில் காண்கலாத்
  • தாள் வல் புரவி பண் அவிழ்த்த
  • யானை ஆவித்தாங்கு அன்ன
  • கோள்வாய் எஃகம் இடம் படுத்த
  • கொழும்புண் மார்பர் அயா உயிர்த்தார்
   
2355.
  • கொழுவாய் விழுப்புண் குரைப்பு
  • ஒலியும் கூந்தல் மகளிர் குழை சிதறி
  • அழுவார் அழுகைக் குரல் ஒலியும்
  • அதிர் கண் முரசின் முழக்கு ஒலியும்
  • குழுவாய்ச் சங்கின் குரல் ஒலியும்
  • கொலை வல் யானைச் செவிப் புடையும்
  • எழுவார் யாழும் ஏத்து ஒலியும்
  • இறைவன் கேளாத் துயில் ஏற்றான்
   
2356.
  • தொடித் தோள் மகளிர் ஒரு சாரார் துயரக் கடலுள் அவர் நீந்த
  • வடிக் கண் மகளிர் ஒரு சாரார் வரம்பு இல் இன்பக் கடல் நீந்தப்
  • பொடித்தான் கதிரோன் திரை நெற்றிப் புகழ் முப்பழ நீர்ப் பளிங்கு அளைஇக்
  • கடிப்பூ மாலையவர் ஏந்தக் கமழ் தாமரைக் கண் கழீஇயினான்
   
2357.
  • முனைவன் தொழுது முடி துளக்கி முகந்து செம்பொன் கொள வீசி
  • நினையல் ஆகா நெடு வாழ்க்கை வென்றிக் கோலம் விளக்கு ஆகப்
  • புனையப் பட்ட அஞ்சனத்தைப் புகழ எழுதிப் புனை பூணான்
  • கனை வண்டு ஆர்க்கும் அலங்கலும் கலனும் ஏற்பத் தாங்கினான்
   
2358.
  • முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ மொய் ஆர் மணிச் செப்பில்
  • உறைந்த வெண் பட்டு உடுத்து ஒளி சேர் பஞ்ச வாசம் கவுள் கொண்டு
  • செறிந்த கழுநீர்ப் பூப் பிடித்துச் சேக்கை மரீஇய சிங்கம் போல்
  • அறிந்தார் தமக்கும் அநங்கனாய் அண்ணல் செம்மாந்து இருந்தானே
   
2359.
  • வார் மீது ஆடி வடம் சூடிப் பொற்பு ஆர்ந்து இருந்த வன முலையார்
  • ஏர் மீது ஆடிச் சாந்து எழுதி இலங்கு முந்நீர் வலம்புரி போல்
  • கார் மீது ஆடிக் கலம் பொழியும் கடகத் தடக்கைக் கழலோனை
  • போர் மீது ஆடிப் புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார்
   
2360.
  • தொல்லை நால் வகைத் தோழரும் தூ மணி நெடுந் தேர்
  • மல்லல் தம்பியும் மாமனும் மது விரி கமழ் தார்ச்
  • செல்வன் தாதையும் செழு நகரொடு வள நாடும்
  • வல்லைத் தொக்கது வளம் கெழு கோயிலுள் ஒருங்கே
   
2361.
  • துளங்கு வெண் மதி உகுத்த வெண் கதிர் தொகுத்தது போல்
  • விளங்கு வெள்ளி அம் பெரு மலை ஒழிய வந்து எழிலார்
  • வளம் கொள் மா நகர் மழகதிர் குழீஇயின போலக்
  • களம் கொண்டு ஈண்டினர் கதிர்முடி விஞ்சையர் பொலிந்தே
   
2362.
  • எண்ணம் என் இனி எழில் முடி அணிவது துணிமின்
  • கண்ண னாரொடு கடிகையும் வருக என வரலும்
  • பண்ணினார் முடி பழிச்சிய மணி பொனில் குயிற்றி
  • அண்ணல் ஆய் கதிர் அலம்வரப் புலமகள் நகவே
   
2363.
  • விரியும் மாலையன் விளங்கு ஒளி முடியினன் துளங்கித்
  • திருவில் மால் வரைக் குலவியது அனையது ஓர் தேம் தார்
  • அருவி போல்வது ஓர் ஆரமும் மார்பிடைத் துயல
  • எரியும் வார் குழை இமையவன் ஒருவன் வந்து இழிந்தான்
   
2364.
  • கொம்மை ஆர்ந்தன கொடி பட எழுதின குவிந்த
  • அம்மை ஆர்ந்தன அழகிய மணிவடம் உடைய
  • வெம்மை செய்வன விழுத்தகு முலைத் தடம் உடைய
  • பொம்மல் ஓதியர் பொழி மின்னுக் கொடி என இழிந்தார்
   
2365.
  • மையல் யானையின் படு மதம் கெடப் பகட்டு அரசன்
  • செய்த மும் மதம் போல் திசை திசைதொறும் கமழும்
  • தெய்வ வாசத்துத் திருநகர் வாசம் கொண்டு ஒழிய
  • வெய்யர் தோன்றினர் விசும்பிடைச் சிறப்போடும் பொலிந்தே
   
2366.
  • வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்து கை விதிர்ப்பப்
  • பருதி போல்வன பால் கடல் நூற்று எட்டுக் குடத்தால்
  • பொருவில் பூ மழை பொன் மழையொடு சொரிந்து ஆட்டி
  • எரி பொன் நீள் முடி கவித்தனன் பவித்திரன் தொழுதே
   
2367.
  • தேவ துந்துபி தேவர்கட்கு ஓகை உய்த்து உரைப்பான்
  • ஆவி அம் புகை அணி கிளர் சுண்ணமோடு எழுந்த
  • நாவின் ஏத்தினர் அரம்பையர் நரம்பு ஒலி உளர்ந்த
  • காவல் மன்னரும் கடிகையும் கடவது நிறைத்தார்
   
2368.
  • திருவ மா மணிக் காம்பொடு திரள் வடம் திளைக்கும்
  • உருவ வெண் மதி இது என வெண் குடை ஓங்கிப்
  • பரவை மா நிலம் அளித்தது களிக் கயல் மழைக் கண்
  • பொருவில் பூ மகள் புணர்ந்தனன் இமையவன் எழுந்தான்
   
2369.
  • மின்னும் கடல் திரையின் மா மணிக்கை
  • வெண் கவரி விரிந்து வீசப்
  • பொன் அம் குடை நிழற்றப் பொன் மயம் ஆம்
  • உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற
  • மன்னர் முடிஇறைஞ்சி மா மணி அம்
  • கழல் ஏந்தி அடி ஈடு ஏத்தச்
  • சின்ன மலர்க் கோதைத் தீம் சொலார்
  • போற்றி இசைப்பத் திருமால் போந்தான்
   
2370.
  • மந்தார மா மாலை மேல் தொடர்ந்து
  • தழுவ வராத் தாமம் மல்கி
  • அந்தோ என்று அம் சிறை வண்டு ஏக்கற
  • இன்புகை போய்க் கழுமி ஆய் பொன்
  • செந்தாமரை மகளே அல்லது பெண்
  • சாராத திருவின் மிக்க
  • சிந்தா மணி ஏய்ந்த சித்திர மா
  • மண்டபத்துச் செல்வன் புக்கான்
   
2371.
  • பைங் கண் உளை எருத்தின் பல் மணி வாள்
  • எயிற்றுப் பவள நாவின்
  • சிங்க ஆசனத்தின் மேல் சிங்கம் போல்
  • தேர் மன்னர் முடிகள் சூழ
  • மங்குல் மணிநிற வண்ணன் போல்
  • வார் குழைகள் திருவில் வீசச்
  • செங் கண் கமழ் பைந்தார்ச் செழுஞ் சுடர் போல்
  • தேர் மன்னன் இருந்தான் அன்றே
   
2372.
  • வார் பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்பத்
  • தார் பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி
  • ஊர் பிணி கோட்டம் சீப்பித்து உறாதவன் ஆண்ட நாட்டைப்
  • பார் பிணி கறையின் நீங்கப் படா முரசு அறைவி என்றான்
   
2373.
  • கடவுளர் இடனும் காசு இல் கணி பெறு நிலனும் காமர்
  • தடவளர் முழங்கும் செந்தீ நான் மறையாளர் தங்கள்
  • இடவிய நிலத்தோடு எல்லாம் இழந்தவர்க்கு இரட்டி ஆக
  • உடன் அவை விடுமின் என்றான் ஒளி நிலா உமிழும் பூணான்
   
2374.
  • என்றலும் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி
  • வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றிப் பைம் பொன்
  • குன்று கண்டு அனைய கோலக் கொடி நெடு மாட மூதூர்ச்
  • சென்று இசை முழங்கக் செல்வன் திரு முரசு அறைவிக் கின்றான்
   
2375.
  • ஒன்றுடைப் பதினை யாண்டைக்கு உறுகடன் இறைவன் விட்டான்
  • இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீர் ஆகி வாழ்மின்
  • பொன்றுக பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் என்ன
  • மன்றல மறுகு தோறும் அணி முரசு ஆர்த்தது அன்றே
   
2376.
  • நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் நோய் கொளச் சாம்பினீர்க்கும்
  • பூக்குழல் மகளிர்க் கொண்டான் புறக் கணித்து இடப்பட்டீர்க்கும்
  • கோத் தரு நிதியம் வாழக் கொற்றவன் நகரோடு என்ன
  • வீக்குவார் முரசம் கொட்டி விழு நகர் அறைவித்தானே
   
2377.
  • திருமகன் அருளப் பெற்றுத் திரு நிலத்து உறையும் மாந்தர்
  • ஒருவனுக்கு ஒருத்தி போல உளம் மகிழ்ந்து ஒளியின் வைகிப்
  • பரு வரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய இப்பால்
  • பெரு விறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசல் உற்றேன்