இலக்கணையார் இலம்பகம்
 
2378.
  • அலங்கல் ஏந்திய குங்கும அருவரை மார்பன்
  • கலந்த காரிகையவர்களைத் தருக என அருள
  • இலங்கு மாலை வெள் அருவிய எழில் வரை மணந்த
  • புலம்பு நீள் சுரம் போய்க் கொணர்ந்து அருளொடும் கொடுத்தார்
   
2379.
  • மோடு கொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியாப்
  • பாடு வண்டொடு பறவையும் நடுக்குறும் காப்பின்
  • மாட மா மணிச் சிவிகையின் மயில் என இழிந்தார்
  • வீடு கண்டவர் போன்று மின்னிடு கொடி அனையார்
   
2380.
  • அன்று சூடிய மாலையர் ஆடிய சாந்தர்
  • பொன்றி வாடிய மேனியர் பொன் நிறை சுருங்கார்
  • சென்று காதலன் திரு விரி மரை மலர் அடி மேல்
  • ஒன்றி வீழ்ந்தனர் குவளைக் கண் உவகை முத்து உகவே
   
2381.
  • இலங்கு பூண் வரை மார்பு உற எடுத்து அவன் முயங்க
  • மலங்கி வாள் கண்கள் வருபனி சுமந்து உடன் வெருவிக்
  • கலங்கு நீர் இடைக் கலக்கு உறு கருங் கயல் இணை போல்
  • புலம்பி ஓடின செவி உற நெடியன பொலிந்தே
   
2382.
  • வேனல் வாய்ப் பட்டு விரி முகை தளிரொடு கரிந்த
  • கானக் கார் முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல
  • மான மங்கையர் வாட்டமும் பரிவும் தம் கணவன்
  • தேன் நெய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து ஒளி சிறந்தார்
   
2383.
  • சேல் உண் கண்ணியர் சிலம்பொடு திலகமும் திருத்தி
  • மாலை நல்லன மதுக் கமழ் தகையன மிலைச்சிக்
  • கோல மென்முலைக் குங்குமம் இடு கொடி எழுதிச்
  • சோலை வேய் மருள்தோள் முத்தும் தொழு தக அணிந்தார்
   
2384.
  • நஞ்சி மேய்ந்து இளங் களிக் கயல் மதர்ப்பன போல
  • அஞ்சி வாள் கண்கள் மதர்த்தன அலர்ந்து உடன் பிறழப்
  • பஞ்சு சூழ் மணிமேகலை பரிந்து அவை சொரிய
  • வஞ்சி நுண் இடை கவின் பெற வைகினன் மாதோ
   
2385.
  • அரி பொன் கிண்கிணி அணிகிளர் சிலம்பொடு சிலம்பும்
  • திருவச் சீறடிச் செழு மலர்க் கொழுங் கயல் மழைக் கண்
  • உருவ நுண் இடை ஒளி மணி வருமுலை உரு ஆர்
  • எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம்
   
2386.
  • ஆழி மால் கடல் அகன் பெருங் கேள்விகள் துறைபோய்
  • ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான்
  • சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான்
  • வேழ வேந்தற்கு விழுப் பெருங் கணி விரித்து உரைத்தான்
   
2387.
  • ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர் பெருநாளால்
  • வீங்கு வெள்ளி அம் குன்று என விளங்கு ஒளி உடைய
  • தேம் கொள் மாலையும் திலகமும் அணிந்த திண் குணத்த
  • பாங்கின் பண்ணின நூற்று எட்டுப் படு மதக் களிறே
   
2388.
  • விளங்கு வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் பூசித்
  • துளங்கு மஞ்சிகை துளைச் சிறு காதினுள் துளங்க
  • வளம் கொள் மாலைகள் சூடி முத்து அணிந்து வண் முரசம்
  • களம் கொள் வேழத்தின் ஏற்றினர் கடி முரசு அறைவான்
   
2389.
  • கேள்மின் கேள்மின்கள் யாவரும் இனியன கேள்மின்
  • பூண்மின் நித்தில மணி வடம் பூசுமின் சாந்தம்
  • வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர்
  • ஆணம் ஆகிய அருவிலை வண்ணப் பட்டு உடுமின்
   
2390.
  • பிள்ளை வெண் பிறைச் சிறு நுதல் பெரும் பட்டம் அணிமின்
  • உள்ள மேனியும் ஒளிர் மணிக் கலங்களின் புனைமின்
  • வள்ளல் வாய்மொழி ஆன் படு பால் அமிர்து அல்லால்
  • உள்ளம் மேவினும் பிற உணப் பெறீர் எழு நாளும்
   
2391.
  • வாழை மல்கிய மணிக் குலைக் கமுகொடு நடுமின்
  • தாழ நாற்றுமின் தாமங்கள் அகில் குடம் பரப்பி
  • யாழின் பாடலும் ஆடலும் அரங்கு தோறும் இயற்றிப்
  • போழும் மால் விசும்பு எனப் பல பொலங்கொடி எடுமின்
   
2392.
  • மாலை வாள் முடி மன்னவன் மணவினை எழு நாள்
  • சீலம் இல்லன சினக் களிறு அகற்றுக என்று அணிந்த
  • கோலம் ஆர் முரசு இடி உமிழ் தழங்கு என முழங்க
  • நீல மாக் கடல் நெடு நகர் வாழ்க என அறைந்தார்
   
2393.
  • முரசம் ஆர்ந்தபின் மூ இரு நாள்கள் போய்
  • விரைவோடு எங்கணும் வெள் வளை விம்மின
  • புரை இல் பொன் மணி யாழ் குழல் தண்ணுமை
  • அரவ வானின் அதிர்ந்த அணி முழா
   
2394.
  • விண் விளக்குவ போல் விரி பூந் துகள்
  • கண் விளக்கிக் கலந்த வெண் சாந்தினால்
  • மண் விளக்கி மலர்ப் பலி சிந்தினார்
  • பண் விளக்கிய பைங்கிளி இன் சொலார்
   
2395.
  • ஆய்ந்த மோட்டின ஆன்படு பால் உலை
  • போந்து பொங்கிய ஆவியினால் பொலிந்து
  • ஏந்து மாடங்கள் தாம் இழின் என்பன
  • பூந் துகில் புறம் போர்த்தன போன்றவே
   
2396.
  • திருவின் நல்லவர் செம் மலர்ச் சீறடி
  • பரவி ஊட்டிய பஞ்சு அரத்தக் களி
  • விரவி மீ நிலம் சேர்ந்து ஒளி பூத்து உராய்க்
  • குருதி வான் நிலம் கொண்டது போன்றதே
   
2397.
  • பால் வெண் திங்கள் மணிக்கை படுத்தவை
  • போலும் ஆடியில் நோக்கிப் பொலம் கலக்
  • கோலம் செய்பவர் கோல வெறிப்பினால்
  • மாலை வண்டினம் மாலைக் கண் கொண்டவே
   
2398.
  • போக மா மழை போழ்ந்து புதத் தொறும்
  • மாகம் ஏந்துவ போல் மணித் தோரணம்
  • ஆக நாற்றின தாமம் மணிக் குடம்
  • ஏக மாநகர் வீதி நிரைத்தவே
   
2399.
  • ஆடல் மங்கையர் கிண்கிணி ஆர்ப்பு ஒலி
  • பாடல் இன் ஒலி பண் அமை யாழ் ஒலி
  • மோடு கொள் முழவின் முழக்கு ஈண்டிய
  • மாட மா நகர் மாக் கடல் ஒத்ததே
   
2400.
  • சுந்தரத் துகள் பூந் துகள் பொன் துகள்
  • அந்தரத்து எழும் இன் புகையால் அரோ
  • இந்திரன் நகர் சாறு அயர்ந்து இவ்வழி
  • வந்து இருந்தது போல் மலிவு உற்றதே
   
2401.
  • நிரந்து கன்னலும் நெய்யும் நீந்தப் பெய்து
  • இரந்து பால் அமிர்து எங்கும் ஊட்டுவார்
  • பரந்து பூந் துகில் பல் மணிக் கலம்
  • சுரந்து கொள்க எனச் சுமக்க நல்குவார்
   
2402.
  • வருக்கையின் பழம் வாழையின் கனி
  • திருக் கொள் மாங் கனி தெளித்த தேறலை
  • கருப்புச் சாற்றொடு கலந்து கை செய்து
  • புரிந்த தெங்கு இள நீரும் பூரிப்பார்
   
2403.
  • கூந்தல் ஏந்திய கமுகம் காய்க் குலை
  • ஆய்ந்த மெல் இலை பளிதம் ஆதியா
  • மாந்தர் கொள்ளை கொண்டு உண்ண மா நிலம்
  • ஏந்தலாம் படித்து அன்றி ஈட்டுவார்
   
2404.
  • தூமம் ஆர்ந்தன துப்புரவ்வுகள்
  • ஏமம் ஆயின ஏந்தி நிற்றலால்
  • நாம நல் நகர் நல் பொன் கற்பகம்
  • காம வல்லியும் களம் கொண்டிட்டதே
   
2405.
  • வழு இல் மாந்தரும் மாவும் மல்கிய
  • தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா
  • முழுதும் மண்மகள் முற்றும் வாய் திறந்து
  • அழுதிட்டாள் நெய்யும் பாலும் ஆகவே
   
2406.
  • கொடி எழுந்து அலமரும் கோயில் வாயில்கள்
  • மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும்
  • மடி இரும் துகில் உடை மாக் கணாடியும்
  • புடை திரள் பூரண குடமும் பூத்தவே
   
2407.
  • கடி மலர் மங்கையர் காய் பொன் கிண்கிணி
  • உடை மணி பொன் சிலம்பு ஒலிக்கும் கோயிலுள்
  • குடை நிழல் மன்னர் தம் கோதைத் தாது வேய்ந்து
  • அடி நிலம் பெறாதது ஓர் செல்வம் ஆர்ந்ததே
   
2408.
  • துளங்கு பொன் குழைகளும் தோடும் சுண்ணமும்
  • கிளர்ந்து அகில் சாந்து பூக் கமழ்ந்து கேழ்கிளர்
  • இளங் கதிர் எறி மணிப் பூணும் ஆரமும்
  • விளங்கி மேல் உலகினை வெறுப்பித் திட்டதே
   
2409.
  • விரிந்து வான் பூத்து என விதானித்து ஆய் கதிர்
  • அருங் கலப் பொடியினால் ஆய் பொன் பூ மகள்
  • மருங்குல் போல் குயிற்றிய நகரில் மங்கலப்
  • பெருந் தவிசு அடுத்தனர் பிணையல் மாலையார்
   
2410.
  • நலம் கிளர் காணமும் மணியும் நன் பொனும்
  • வலம்புரி முத்தமும் குவித்த மங்கலம்
  • இலங்கின மணி விளக்கு எழுந்த தீம் புகை
  • கலந்த ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினர்
   
2411.
  • மங்கலப் பெருங் கணி வகுத்த ஓரையால்
  • மங்கல மன்னவன் வாழ்த்த ஏறலும்
  • மங்கல அச்சுதம் தெளித்து வாய் மொழி
  • மங்கலக் கருவி முன் உறுத்தி வாழ்த்தினார்
   
2412.
  • முழங்கின இன்னியம் மொய்த்தது ஏத்து ஒலி
  • கொழுங் கயல் கண்ணினார் கொண்டு பொன் அகல்
  • இழிந்தனர் திரு மயிர் ஏற்ப நீரதில்
  • நிழன்றன சாமரை நிரை சங்கு ஆர்த்தவே
   
2413.
  • பால் கடல் முளைத்த ஓர் பவளப் பூங் கொடி
  • போல் சுடர்ந்து இலங்கு ஒளிப் பொன் செய் கோதையை
  • நாள் கடி மயிர் வினை நன் பொன் தாமரைப்
  • பூக் கடி கோயிலாள் புலம்ப ஆக்கினார்
   
2414.
  • விரைத் தலை மாலை சூட்டி மின் அனார் அம் கை சேப்ப
  • அரைத்த சாந்து அணிந்த கோட்ட ஆயிரத்து எட்டு வேழம்
  • நிரைத்தன மண்ணு நீர்க்கு முரசொடு முழவம் விம்ம
  • வரைத் தலை துவலை போன்று மதம் நிலம் நனைப்ப அன்றே
   
2415.
  • கான் முகம் புதைத்த தௌ நீர் கவர்ந்து பொன் குடங்கள் ஆர்த்தி
  • ஊன் முகம் புதைத்த வேல் கண்ணவர் களிற்று உச்சி ஏற்றி
  • வான் முகம் புதைத்த பல் மீன் மதி என மருண்டு நோக்கத்
  • தேன் முகம் புதைத்த மாலைக் குடை நிழல் திருவில் தந்தார்
   
2416.
  • இழைத்த பொன் நகரின் வெள்ளி
  • இடு மணை மன்னர் ஏத்தக்
  • குழைப் பொலிந்து இலங்கு காதின்
  • கொற்றவன் இருந்த பின்றை
  • மழைக் கவின்று எழுந்த வார் கொள்
  • மணி நிற அறுகை நெய் தோய்த்து
  • எழில் குழை திருவில் வீச
  • மகளிர் நெய் ஏற்று கின்றார்
   
2417.
  • மின் உமிழ் வைரக் கோட்டு விளங்கு ஒளி இமயம் என்னும்
  • பொன் நெடுங் குன்றம் போலப் பூமி மேல் நிலவி வையம்
  • நின் அடி நிழலின் வைக நேமி அம் செல்வன் ஆகி
  • மன்னுவாய் திருவோடு என்று வாழ்த்தி நெய் ஏற்றினாரே
   
2418.
  • நீடு நிர் மணி நீரும் அல்லவும்
  • ஆடு நீரன அத்தும் மண்களும்
  • ஊடு மின் அனார் உரிஞ்சி ஆட்டினார்
  • கூடி இன்னியம் குழுமி ஆர்த்தவே
   
2419.
  • திருவ மன்னவன் சென்னித் தேர் மன்னர்
  • பொரு வெண் பொன் குடம் உமிழும் பொங்கு நீர்
  • பருதி தன் ஒளி மறையப் பால் மதி
  • சொரியும் தீம் கதிர்த் தோற்றம் ஒத்தவே
   
2420.
  • துளங்கு மா மணித் தூண்கள் நான்கினால்
  • விளங்கு வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலை சூழ்
  • வளம் கொள் மா மணிக் கூடம் சேர்த்தினார்
  • இளங் கதிர் கொலோ இருந்தது என்னவே
   
2421.
  • ஆய்ந்த பால் நிறம் ஆய் பொன் கம்பலம்
  • வேய்ந்த பொங்கு அணை வெண் பொன் கட்டில் மேல்
  • நீந்து நித்தில விதான நீழலாற்கு
  • ஏந்தினார் அணி ஏந்து நீர்மையார்
   
2422.
  • ஈரம் கொன்ற பின் இருள் மணிச் சுடர்
  • நீர வாய் நிழல் உமிழும் குஞ்சியை
  • ஆர் அகில் புகை வெறியினால் அமைத்து
  • ஏர் படச் செய்தார் எழுதிற்று என்னவே
   
2423.
  • ஈடு இல் சந்தனம் ஏந்து தாமரைத்
  • தோடின் பயில்வினால் பூசித் தூமலர்
  • வீடு பெற்றன இன்றொடு என்னவே
  • சூடினான் அரோ சுரும்பு உண் கண்ணியே
   
2424.
  • மல் பக மலர்ந்து அகன்ற மார்பின் மேல்
  • வில் பகக் குலாய் ஆரம் வில் இடக்
  • கற்பகம் மலர்ந்து அகன்றதோ எனப்
  • பொற்பு அகப் பொலங் கலங்கள் தாங்கினான்
   
2425.
  • உருவம் ஆர்ந்தன உரோமப் பட்டு உடுத்து
  • எரியும் வார் குழை சுடர இந்திர
  • திருவில் அன்ன தார் திளைப்பத் தேம் குழல்
  • அரி பெய் கண்ணியர்க்கு அநங்கன் ஆயினான்
   
2426.
  • தா இல் தாழ் வடம் தயங்க நீர் உறீஇ
  • மேவி அச்சுதம் தெளித்த பின் விரைந்து
  • ஆவியும் புகை சுழற்றி ஆடியும்
  • வீவு இல் வெம் சுடர் விளக்குக் காட்டினார்
   
2427.
  • உவரி மாக் கடல் ஒல் என் வெண் திரை
  • இவரி எழுவ போன்று இலங்கு வெண் மயிர்க்
  • கவரித் தொகை பல வீசும் காவலர்
  • இவர் இத் தொகை என்பது இன்றி ஆயினார்
   
2428.
  • அறுகு வெண்மலர் அளாய வாச நீர்
  • இறைவன் சேவடி கழுவி ஏந்திய
  • மறுவில் மங்கலம் காட்டினார் மணக்
  • குறைவு இல் கை வினைக் கோலம் ஆர்ந்ததே
   
2429.
  • ஊன் நிமிர் கதிர் வெள் வேல் உறை கழித்தன போலும்
  • தேன் இமிர் குவளைக் கண் திரு மகள் அனையாளை
  • பால் நிமிர் கதிர் வெள்ளி மணைமிசைப் பலர் வாழ்த்தி
  • வான் நிமிர் கொடி அன்னார் மணி அணை மிசை வைத்தார்
   
2430.
  • வரை விளை வளர் பொன்னே வலம்புரி ஒரு மணியே
  • திரை விளை அமிர்தமே திரு விழை என ஏத்தி
  • வரை வளை முழ விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால்
  • அரை விளை கலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே
   
2431.
  • கள் அவிழ் கமழ் கோதைக் காவலன் திருமகளை
  • வெள் அணி மதயானை விழு மணிக் குடம் ஏற்றித்
  • தௌ அறல் மண்ணு நீர் ஆட்டினர் தேமலர் மேல்
  • ஒள் இழையவள் ஒத்தாள் உருவ நுண் நுசுப்பினாள்
   
2432.
  • வான் மலர் நுரை சூடி மணி அணி கலன் சிந்தாத்
  • தான் இள மணல் எக்கர்த் தவழ் கதிர் மணி ஆரம்
  • ஏனைய நறுஞ் சுண்ணம் குங்குமம் இடும் களியாத்
  • தேன் இனம் இசை பாடத் தீம் புனல் நடந்ததே
   
2433.
  • நான்ற பொன் மணி மாலை நகுகதிர்ப் பவளத் தூண்
  • ஊன்றின ஒளிமுத்த மண்டபத்து ஒளிர் திங்கள்
  • கான்றன கதிர் காய்த்தும் வட்டணைக் கதிர் முத்தம்
  • ஈன்ற பொன் விதானத்தின் நீழல் உய்த்து இரீஇயினரே
   
2434.
  • மை அணி மதயானை மத்தக அகல் அல்குல்
  • நெய் அணி குழல் மாலை நிழல் உமிழ் குழை மங்கை
  • மெய் அணி கலன் மாலை மின் இரும்துகில் ஏந்திக்
  • கை அணி குழல் மாலைக் கதிரி முலையவர் சூழ்ந்தார்
   
2435.
  • அவ் வளை அவிர் ஆழிக் கால் பொலிந்து அழகார்ந்த
  • மை விளை கழுநீர்க் கண் விலாசியும் அணி அல்குல்
  • கைவளை அலங்கார மாலையும் கமழ் கோதை
  • நை வளம் மிகு சாயல் நங்கையைப் புனைகின்றார்
   
2436.
  • யானையுள் அரசன் தன் அணிகிளர் வல மருப்பு ஈர்ந்து
  • ஊனம் இல் ஒளிர் செம் பொன் பதித்து ஒளி மணி அழுத்தி
  • வான் மணம் உறச் செய்த மங்கல மணிச் சீப்புத்
  • தான் முகில் கழிமதி போல் தன் உறை நீக்கினாளே
   
2437.
  • மை நூற்ற அனைய மா வீழ் ஓதி
  • வகுத்தும் தொகுத்தும் விரித்தும்
  • கைந் நூல் திறத்தின் கலப்ப வாரிக்
  • கமழும் நானக் கலவை
  • ஐந் நூல் திறத்தின் அகிலின்
  • ஆவி அளைந்து கமழ ஊட்டி
  • எந் நூல் திறமும் உணர்வாள் எழில்
  • ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள்
   
2438.
  • கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு
  • அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லைச் சூட்டு மிலைச்சித்
  • திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி
  • விரும்பும் முத்தம் மாலை நான்ற விழுப்பொன் மகரம் செறித்தாள்
   
2439.
  • கள்ளும் தேனும் ஒழுகும் குவளைக் கமழ் பூ நெரித்து வாங்கிக்
  • கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளித் திலகம் திகழப் பொறித்துத்
  • தௌளும் மணிசெய் சுண்ணம் இலங்கத் திரு நீர் நுதலின் அப்பி
  • உள்ளம் பருகி மதர்த்த வாள் கண் உருவம் மையில் புனைந்தாள்
   
2440.
  • நாகம் மருப்பின் இயன்ற தோடும் நலம் கொள் சுறவுக் குழையும்
  • போக நீக்கிப் பொரு இல் திருவில் உமிழ்ந்து மின்னுப் பொழியும்
  • ஏகம் ஆகி எரியும் மணியின் இயன்ற கடிப்பு வாங்கி
  • மேக விசும்பின் தேவர் விழைய விளங்கச் சேர்த்தினாளே
   
2441.
  • விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை தெளிர்க்கும் முன்கை
  • நலம் கிளர் பவளம் நன் பொன் விரல் மணி ஆழி மின்னக்
  • கலம் தின்று பணைத்த தோளும் கவின் வளர் கழுத்தும் ஆர்ந்த
  • வலம்புரி ஈன்ற முத்தம் மணி நிலா நக்க அன்றே
   
2442.
  • மா மணி முகடு வேய்ந்த மரகத மணிச் செப்பு அன்ன
  • தூ மணி முலைகள் தம்மைத் தொழுதகக் கமழும் சாந்தின்
  • காமரு காம வல்லிக் கொடி கவின் கொண்டு பூத்துத்
  • தூ மணிக் கொழுந்து மென் தோள் துயல் வர எழுதினாளே
   
2443.
  • நாண் சுமக்கல் ஆகாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவப்
  • பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கிப்
  • பாண் குலாய் வண்டு பாடும் படுகணை மறந்து காமன்
  • காண்கிலேன் கடிய என்னா உருகி மெய் கரந்திட்டனே
   
2444.
  • அவாக் கிடந்து அகன்ற அல்குல் அணிகிளர் திருவில் பூப்பத்
  • தவாக் கதிர்க்காசு கண்டார் ஆவியைத் தளரச் சூட்டிக்
  • கவாய்க் கிடந்து அணங்கு நாறும் கண் கொளாப் பட்டு உடுத்தாள்
  • உவாக் கதிர்த் திங்கள் அம் மென் கதிர்விரித்து உடுத்தது ஒத்தாள்
   
2445.
  • இடைச் செறி குறங்கு கௌவிக் கிம்புரி இளக மின்னும்
  • புடைச் சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்போடு ஆர்ப்ப
  • நடைச் சிறுபாதம் கோல மணிவிரல் அணிந்து நாகத்து
  • உடைச் சிறு நாவின் தோகை இரீஇயினள் மாலை சேர்ந்தாள்
   
2446.
  • அம் மலர் அடியும் கையும் அணிகிளர் பவழ வாயும்
  • செம் மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு அம் கேழ்
  • விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதியிட்டாள்
  • அம்மலர்க் கண்டம் உள் இட்டு அரிவையைத் தெரிவை தானே
   
2447.
  • வாள் மதர் மழைக் கண் நோக்கி வருமுலைத் தடமும் நோக்கிக்
  • காண் வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கிப்
  • பாணு வண்டு அரற்றும் கோலச் சிகழிகைப் படியும் நோக்கி
  • ஆண் விருப்புற்று நின்றார் அவ்வளைத் தோளினாரே
   
2448.
  • தெருள்கலான் படைத்தவன் காணில் செவ்வனே
  • மருள்கலா தவர்களும் மருள்வர் மம்மர் நோய்
  • இருள் இலார் எங்ஙனம் உய்வர் இன்னதால்
  • அருள் இலார் அவள் நலம் அணிந்த வண்ணமே
   
2449.
  • அலர்ந்த அம் தாமரை அல்லிப் பாவையைப்
  • புலந்து கண் சிவந்தன போன்று நீர் பிரிந்து
  • இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி ஏந்து பொன்
  • மலர்ந்தது ஓர் கற்பக மணிக் கொம்பு ஆயினாள்
   
2450.
  • இருள் துணித்து இடை இடை இயற்றி வெண் நிலாச்
  • சுருள் துணித்து ஒரு வழித் தொகுத்தது ஒத்ததே
  • மருள் தகு மல்லிகை மாலை வல்லவன்
  • பொருள் தகத் தொடுத்தன புனைந்த பூஞ்சிகை
   
2451.
  • கோ மகள் உருவம் ஆய்க் கூற்றம் போந்தது
  • போமின் உம் உயிர் உயக் கொண்டு போய் மனம்
  • காமினம் எனக் கலை சிலம்பு கிண்கிணி
  • தாம் மனும் வாயினால் சாற்றுகின்றவே
   
2452.
  • அருள் இலார் இவள் தமர் அன்னர் ஆயினும்
  • உருள் திரை உலகு எலாம் உருளும் இன்று எனக்
  • கருதின கவரி சாந்து ஆற்றி வெண் குடை
  • அரிவையை மறைத்தன ஆல வட்டமே
   
2453.
  • கரும்பே தேனே அமிர்தே காமர் மணி யாழே
  • அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமே
  • சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும்
  • பெரும் பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே
   
2454.
  • அம் மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும்
  • வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத
  • பொம்மென் இலவப் பூம் போது அன நின் அடி போற்றி
  • இம்மென் கலையார் இடு என்று ஏத்த ஒதுங்கினாள்
   
2455.
  • தூமாண் தூமக் குடம் ஆயிரம் ஆய்ச் சுடர் பொன் தூண்
  • தாம் ஆயிரம் ஆய்த் தகையார் மணித் தூண் ஒரு நூறு ஆய்ப்
  • பூ மாண் தாமத் தொகையால் பொலிந்த குளிர் பந்தர்
  • வேமானியர் தம் மகளின் விரும்ப நனி சேர்ந்தாள்
   
2456.
  • தேன் ஆர் காமன் சிலையும் கணையும் திறை கொண்ட
  • வான் ஆர் மதிவாள் முகமும் மடமான் மதர் நோக்கும்
  • கோனார் மகள் தன் வடிவும் நோக்கிக் குடை மன்னர்
  • ஆனார் கண் ஊடு அழல் போய் அமையார் ஆனாரே
   
2457.
  • வண்டு அலர் கோதை வாள் கண் வனமுலை வளர்த்த தாயர்
  • கண்டு உயிர் உண்ணும் கூற்றம் கயிறு உரீஇக் காட்டி யிட்டார்
  • உண்டு உயிர் சிலர் கண் வாழ்க என்று உத்தரா சங்கம் வைத்தார்
  • தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ
   
2458.
  • கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினைக் காமர் செவ்வாய்
  • ஒள் நுதல் உருவக் கோலத்து ஒருபிடி நுசுப்பின் தீம் சொல்
  • வண்ணித்தல் ஆவது இல்லா வரு முலை மதர்வை நோக்கின்
  • பெண் உடைப் பேதை நீர்மைப் பெருந் தடம் கண்ணிற்று அம்மா
   
2459.
  • அரத்தகம் அகம் மருளிச் செய்த சீறடி அளிய தம்மால்
  • குரல் சிலம்பு ஒலிப்பச் சென்னிக் குஞ்சிமேல் மிதிப்ப நோற்றான்
  • திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம்
  • தரித்திலம் தவத்தை என்று தார் மன்னர் ஏமுற்றாரே
   
2460.
  • கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின் மேல் பிறந்து கூர்வேல்
  • சீவகன் என்னும் செந்நீர்ப் பவள மா கடலுள் பாய்வான்
  • பூ உந்தி அமுத யாறு பூங் கொடி நுடங்கப் போந்து
  • தாஇரி வேள்விச் சாலை மடுவினுள் தாழ்ந்தது அன்றே
   
2461.
  • சாண் இடை நெடிய வாள் கண் தளை அவிழ் குவளை பூப்பப்
  • பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலாச் சுளிவின் மேலும்
  • நாண் அட நடுங்கிக் கையால் நகைமுகம் புதைத்த தோற்றம்
  • சேண் இடை அரவு சேர்ந்த திங்களை ஒத்தது அன்றே
   
2462.
  • முத்து உமிழ் திரைகள் அங்கம் மொய் கொள் பாதாலம் முத்தீ
  • ஒத்தன வேலை வேள்வி ஒலிகடல் நான்கும் நாண
  • வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி
  • வித்தி மேல் உலகத்து இன்பம் விளைத்து மெய்கண்ட நீரார்
   
2463.
  • தரு மணல் தருப்பை ஆர்ந்த சமிதை இம் மூன்றினானும்
  • விரி மலர் அணிந்த கோல வேதிகை இயற்றி ஆன் நெய்
  • ஒரு மணி அகலுள் பெய்தோர் பொன் அகல் ஆர்ந்த தூபம்
  • இருமணி அகலுள் நீர் பெய்து இடவயின் இரீஇயினாரே
   
2464.
  • நெல் பொரி நிறையப் பெய்து நிழல் உமிழ் செம் பொன் மூழிக்
  • கல் புரி கடவுள் ஆன் பால் அவியொடு கலப்ப வைத்து
  • முன் பெரியானை ஆகத் தருப்பையான் முடிந்து மூன்று
  • பொன் புரி வரையும் பொய்தீர் சமிதைகள் இரண்டும் வைத்தார்
   
2465.
  • மந்திர விதியின் மாண்ட சிறு விரல் தருப்பை சூழ்ந்து
  • முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால்
  • மந்திரித்து அமைய முக்கால் மண்ணி மற்று அதனை நீக்கிச்
  • சிந்தித்து மறையின் செந்தீத் தண்டிலத்து அங்கண் வைத்தார்
   
2466.
  • தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு
  • எண் திசையவரும் ஏத்தத் துடுப்பு நெய் சொரித லோடும்
  • கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப
  • தெண் திரை வேலி எங்கும் திருவிளை யாட மாதோ
   
2467.
  • கரை உடைத் துகிலில் தோன்றும் காஞ்சன வட்டின் முந்நீர்த்
  • திரை இடை வியாழம் தோன்றத் திண் பிணி முழவும் சங்கும்
  • முரசொடு முழங்கி ஆர்ப்ப மொய் கொள் வேல் மன்னர் ஆர்ப்ப
  • அரசருள் அரசன் ஆய் பொன் கலச நீர் அம் கை ஏற்றான்
   
2468.
  • குளிர்மதி கொண்ட நாகம் கோள் விடுக்கின்றதே போல்
  • தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த
  • ஒளிர் வளைக் கையைச் செல்வன் விடுத்து அவள் இடக்கை பற்றி
  • வளர் எரி வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே
   
2469.
  • விளங்கு ஒளி விசும்பில் பூத்த
  • அருந்ததி காட்டி ஆன் பால்
  • வளம் கொளப் பூத்த கோல
  • மலர் அடி கழீஇய பின்றை
  • இளங் கதிர்க் கலத்தின் ஏந்த
  • அயினி கண்டு அமர்ந்து இருந்தான்
  • துளங்கு எயிற்று உழுவை தொல் சீர்த்
  • தோகையோடு இருந்தது ஒத்தான்
   
2470.
  • பொன் அம் காழில் பொலிந்த முத்து விதானம் புணர்ந்து தேன்
  • மன்னு மாலை பல தாழ்ந்து மணப்புகை விம்மி மல்கிய
  • அன்னத் தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆகப்
  • பன்னிச் சொன்ன பதின் ஐந்தும் படுத்தார் பாவை மார்களே
   
2471.
  • பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
  • கனி மயிர் குளிர்ப்பன கண் கொளாதன
  • எலி மயிர்ப் போர்வை வைத்து எழினி வாங்கினார்
  • ஒலி மயிர்ச் சிகழிகை உருவக் கொம்பு அனார்
   
2472.
  • விழுத்தகு மணிச் செவி வெண்பொன் கைவினை
  • எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும்
  • தொழில்பட வைத்தனர் துளும்பும் மேகலைக்
  • கழித்த வேல் இரண்டு கண்ட அனைய கண்ணினார்
   
2473.
  • அம் கருங்காலி சீவி ஊறவைத்து அமைக்கப் பட்ட
  • செங் களி விராய காயும் செம் பழுக் காயும் தீம் தேன்
  • எங்கணும் குளிர்ந்த இன்னீர் இளம் பசுங் காயும் மூன்றும்
  • தம் களி செய்யக் கூட்டித் தையலார் கை செய்தாரே
   
2474.
  • கை செய்து கமழும் நூறும் காழ்க்கும் வெள் இலையும் காமம்
  • எய்த நன்கு உணர்ந்த நீரார் இன் முக வாசம் ஊட்டிப்
  • பெய்த பொன் செப்பும் மாலைப் பெருமணிச் செப்பும் சுண்ணம்
  • தொய் அறப் பெய்த தூ நீர்த் தொடு கடல் பவளச் செப்பும்
   
2475.
  • தா மணி நானச் செப்பும் சலஞ்சலக் கலன் பெய் செப்பும்
  • தூ மணித் துகில்கள் ஆர்த்த வலம்புரித் துலங்கு செப்பும்
  • காமநீர்க் காம வல்லி கவின் கொண்டு வளர்ந்ததே போல்
  • நாம வேல் நெடுங் கண் பாவை நயப்பன ஏந்தினாரே
   
2476.
  • விரி கதிர் ஆரம் மின்னித் தார் எனும் திருவில் வீசிக்
  • குரிசில் மா மேகம் பெய்த கொழும் புயல் காம மாரி
  • அரிவைதன் நெஞ்சம் என்னும் அகன் குளம் நிறைந்து வாள் கண்
  • கரி அமை சேறு சிந்திக் கலிங்குகள் திறந்த அன்றே
   
2477.
  • தோக்கை அம் துகிலினாள் தன் துணை முலை பொருது சேந்த
  • ஏக்கு ஒசிவு இலாத வில்லான் இடு கொடி அகலம் இன் தேன்
  • தேக்கி வண்டு இமிரும் கோதை செல்வன் தார் உழக்க நைந்து
  • பூக் கொய்து துவண்ட கொம்பின் பொற்பினள் ஆயினாளே
   
2478.
  • அணித் தகு பவளம் ஏற்பக் கடைந்து முத்து அழுத்தி அம் பொன்
  • துணித்து அடி விளிம்பு சேர்த்தித் தொழு தகச் செய்த வண்கை
  • மணிச் சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆல வட்டம்
  • பணித் தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித் தாரே
   
2479.
  • சேந்து நீண்ட செழுந் தாமரைக் கண்களின்
  • ஏந்தி மாண்ட முலைக் கண்களின் எழுதிச்
  • சாந்தம் ஆகம் எழுதித் தகை மாமலர்
  • ஆய்ந்து சூட்டி அவன் அஞ்சலி செய்தான்
   
2480.
  • மணிசெய் வீணை மழலைக் குழல் பாண்டிலொடு
  • அணி செய் கோதையவர் பாடிய கீதம்
  • பணிவு இல் சாயல் பருகிப் பவளக் கொடி
  • மணியும் முத்தும் மலர்ந்திட்டது ஒத்தாளே
   
2481.
  • எய்த்து நீர்ச்சிலம்பு இன் குரல் மேகலை
  • வித்தி மாதர் வருத்தம் விளைத்தாள் எனத்
  • தத்து நீர்த் தவளைக் குரல் கிண்கிணி
  • உய்த்து ஓர் பூசல் உடன் இட்டன அன்றே
   
2482.
  • ஏந்தி நாங்கள் உடனே இடு பூசலை
  • வேந்தர் வேந்தன் கொடுங் கோலினன் ஆகி
  • ஆய்ந்து கேட்டும் அருளான் என்று அவிந்தன
  • சாந்தம் ஏந்து முலையாள் கலம் தாமே
   
2483.
  • வீடு மலி உலகினவர் போல விளையாடும்
  • தோடு மலி கோதையொடு துதைந்த வரை மின் போல்
  • ஆடு கொடி அணிந்த உயர் அலங்கல் வரை மார்பன்
  • கூடு மயிர் களையும் வகை கூறல் உறுகின்றேன்
   
2484.
  • உச்சி வரை வளர்ந்து இளமை ஒழிந்த உயர் திண் காழ்
  • இச் சவிய அல்ல என எழுதியவை ஊன்றிக்
  • கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம்
  • நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார்
   
2485.
  • முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மத யானை
  • மத்தகமும் திருமகள் தன் வடிவும்பட மாதோ
  • ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி நகர் இழைத்தார்
  • மொய்த்து எரி செம் பொன் துகளின் நூல் முடிவு கண்டார்
   
2486.
  • உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் அருங் கலங்கள்
  • கொழுந்து படக் கூப்பி நனி ஆயிர மரக்கால்
  • செழுந்து படச் செந் நெல் நிறைத்து அம் நுண் கொடி அறுகின்
  • கொழுந்து குறைத்து அணிந்து கொலை வேல் கணவர் அமைத்தார்
   
2487.
  • செங் கயல் இரட்டை திருவார் சுடர் கணாடி
  • பொங்கு கொடி வார் முரசம் தோட்டி புணர் கும்பம்
  • மஙகலங்கள் எட்டும் இவை மணியின் புனைந்து ஏந்தி
  • அம் கயல் கண் அரிவையர்கள் தென் கிழக்கில் நின்றார்
   
2488.
  • வெள் உருவ மாலை வட கீழ் இருவர் மின் போல்
  • ஒள் உருவ வாள் உருவி நின்றனார் தென் மேல்பால்
  • உள் உருக நோக்கி உயர் உழுத்து அகலும் ஏந்திக்
  • கள் உருவ மாலையவர் கை தொழுது நின்றார்
   
2489.
  • தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணித் தாலம்
  • ஆர வட மேல்திசைக் கண் இருந்த அவிர் பஞ்சிச்
  • சீர் நிறைய வரை அகலம் திருத்தத் திரு நோக்கும்
  • வார முறைக் கருவி வடக்கு இருந்தன கண் மாதோ
   
2490.
  • பால் நுரையின் நொய்ய அணைப் பைங் கதிர்கள் சிந்தித்
  • தான் இரவி திங்களொடு சார்ந்து இருந்ததே போல்
  • வேல் நிரை செய் கண்ணியொடு மெல் என இருந்தான்
  • வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமானே
   
2491.
  • குள நெல் முன்றில் கனி தேன் சொரி சோலைக் குளிர் மணி
  • வளமை மல்கி எரிய மடமந்தி கை காய்த்துவான்
  • இளமை ஆடி இருக்கும் வனத்து ஈர்ஞ் சடை மாமுனி
  • கிளையை நீங்கிக் கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான்
   
2492.
  • ஆய்ந்த கேள்வி அவன் கான் முளையாய் வழித் தோன்றினான்
  • தோய்ந்த கேள்வித் துறை போய் அலங்காமும் தோற்றினான்
  • வேந்தன் தன்னால் களிற்று ஊர்தி சிறப்பொடு மேயினான்
  • வாய்ந்த கோலம் உடையான் பெரு மஞ்சிகர்க்கு ஏறு அனான்
   
2493.
  • நித்தில வடமும் பூணும் ஆரமும் நிழன்று தாழ
  • ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆடப்
  • பைத்து அரவு அல்குல் பாவை கரக நீர் சொரியப் பாங்கின்
  • வித்தகன் பூசி வெள் வேல் வேந்தனுக்கு இறைஞ்சினானே
   
2494.
  • நச்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி
  • வச்சிர வண்ணன் காப்ப வாழியர் ஊழி என்னா
  • அச்சுதம் கொண்டு மன்னன் அடி முடித் தெளித்து நங்கை
  • உச்சி வண்டு இமிரும் மாலை ஒளி முடிச் சிதறினனே
   
2495.
  • வாக்கினில் செய்த பொன் வாள் மங்கல விதியின் ஏந்தி
  • ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வலக் கவுள் உறுத்தி ஆர்ந்த
  • தேன்கண் இன் அகிலின் ஆவி தேக்கிடும் குழலினாளை
  • நோக்கலன் நுனித்து நொய்தா இடக் கவுள் உறுத்தினானே
   
2496.
  • ஆய்ந்த பொன் வாளை நீக்கி அவிர் மதிப் பாகக் கல்மேல்
  • காய்ந்த வாள் கலப்பத் தேய்த்துப் பூ நிறீஇக் காமர் பொன் ஞாண்
  • தோய்ந்த தன் குறங்கில் வைத்துத் துகிலினில் துடைத்துத் தூய்தா
  • வாய்ந்த கைப் புரட்டி மாதோ மருள்தகப் பற்றினானே
   
2497.
  • ஏற்றியும் இழித்தும் இடை ஒற்றியும்
  • போற்றிச் சந்தனம் பூசுகின்றான் எனக்
  • கூற்று அனான் முகம் கோலம் செய்தான் கடல்
  • தோற்றும் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே
   
2498.
  • கோதைப் பாரத்தி னாலும் தன் நாணினும்
  • ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும்
  • பாதம் நோக்கிய பால்மதி வாள்முகம்
  • ஏதம் இன்றி எடுத்தனள் மெல்லவே
   
2499.
  • உருவச் செங் கயல் ஒள் நிறப் புள் வெரீஇ
  • இரியல் உற்றன போன்று இணைக் கண்மலர்
  • வெருவி ஓட விசும்பில் குலாவிய
  • திருவில் போல் புருவங்கள் திருத்தினான்
   
2500.
  • ஆரம் மின்ன அருங் குயம் தான் களைந்து
  • ஓரும் ஒண் திறல் கத்தரிகைத் தொழில்
  • நீரின் செய்து அடி ஏத்துபு நீங்கினான்
  • தாரன் மாலைத் தயங்கு இணர்க் கண்ணியான்
   
2501.
  • அன்னப் பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும்
  • மன்னர் குடை நடுக்கும் மாலை வெள் வேல் மறவோனும்
  • மின்னும் மணிக் குடத்தின் வேந்தர் ஏந்தப் புனல் ஆடிப்
  • பொன் அம் கடி மலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே
   
2502.
  • எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து
  • தம் சுற்றம் வேண்டாத முலைக் கீழ் வாழ்வு தளர்கின்ற
  • நஞ்சு உற்ற வேல் நெடுங் கண் பாவை நல்கூர் சிறு நுசுப்பிற்கு
  • அஞ்சு உற்றுழிப் புலர்ந்து ஆங்கு அணிந்தார் அம் மணி வடமே
   
2503.
  • சுடுமண் மிசை மாரி சொரியச் சூழ்ந்து சுமந்து எழுந்து
  • நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி
  • துடி நுண் இடை பெருந் தோள் துவர்வாய் ஏழை மலர் மார்பன்
  • கடி நல் மலர்ப் பள்ளி களிப்பக் காமக் கடல் ஆழ்ந்தான்
   
2504.
  • வழங்கு தாரவன் மார்பு இடை மட்டு உகப்
  • புழுங்கு கோதை பொற்பின் திறம் பேசலாம்
  • விழுங்கு மேகம் விடாது தழீஇக் கிடந்து
  • ஒழிந்த மின்னுக் கொடி ஒத்து ஒழிந்திட்டாள்
   
2505.
  • தாம மார்பனும் தையலும் மெய் உணர்வு
  • ஆம் இது என்று அறியாது களித்தவர்
  • தூமம் கொப்புளிக்கும் துகில் சேக்கை மேல்
  • காமன் அப்பு அணைக் கள் உக வைகினார்
   
2506.
  • மாதர் தன் வனப்பு நோக்கி மகிழ்ந்து கண் இமைத்தல் செல்லான்
  • காதலித்து இருப்பக் கண்கள் கரிந்து நீர் வரக் கண்டு அம்ம
  • பேதைமை பிறரை உள்ளி அழுபவர்ச் சேர்தல் என்றாள்
  • வேதனை பெருகி வேல்கண் தீ உமிழ்ந்திட்ட அன்றே
   
2507.
  • நாறு சாந்து அழித்து மாலை பரிந்து நன் கலன்கள் சிந்திச்
  • சீறுபு செம்பொன் ஆழி மணிவிரல் நெரித்து விம்மா
  • ஏறியும் இழிந்தும் ஊழ் ஊழ் புருவங்கள் முரிய நொந்து
  • தேறு நீர் பூத்த செந் தாமரை முகம் வியர்த்து நின்றாள்
   
2508.
  • இற்றது என் ஆவி என்னா எரிமணி இமைக்கும் பஞ்சிச்
  • சிற்றடிப் போது புல்லித் திருமகன் கிடப்பச் சேந்து
  • பொற்ற தாமரையின் போந்து கருமுத்தம் பெழிபவே போல்
  • உற்று மை கலந்து கண்கள் வெம்பனி உகுத்த அன்றே
   
2509.
  • கொண்ட பூண் நின்னைச் சார்ந்து
  • குலாய்க் கொழுந்து ஈன்ற கொம்பே
  • கண்டு கண் கரிந்து நீராய்
  • உகுவது கரக்கலாமே
  • பண்டியான் செய்த பாவப்
  • பயத்தை யார்க்கு உரைப்பென் தேன்காள்
  • வண்டுகாள் வருடி நங்கை
  • வரம் தர மொழிமின் என்றான்
   
2510.
  • பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக்
  • காவலன் மடந்தை உள்ளம் கல் கொலோ இரும்பு கொலோ
  • சாவம் யாம் உருகி ஒன்றும் தவறு இலன் அருளும் நங்கை
  • பாவை என்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே
   
2511.
  • பெற்ற கூழ் உண்டு நாளும் பிணி உழந்து இருத்தும் பேதாய்
  • முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள்
  • பொன்தொடி தத்தையீரே பொத்தும் நும் வாயை என்றே
  • கற்பித்தார் பூவையார் தம் காரணக் கிளவி தம்மால்
   
2512.
  • பழியொடு மிடைந்த தேனும் சீறடி பரவினாற்கு
  • வழிபடு தெய்வம் ஆகி வரம் கொடுத்து அருளல் வேண்டும்
  • ஒழி படைக் களிறு போல உயங்கவும் உருகி நோக்காப்
  • பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரைக் கெடப் பிறந்தாள்
   
2513.
  • ஈன்ற தாய் யானும் ஆக இதனைக் கண்டு உயிரை வாழேன்
  • நான்று யான் சாவல் என்றே நலக் கிளி நூலின் யாப்ப
  • மான்ற அவள் மருண்டு நக்காள் வாழிய வரம் பெற்றேன் என்று
  • ஆன்று அவன் ஆரப் புல்லி அணிநலம் பரவினானே
   
2514.
  • நிறை ஓத நீர் நின்று நீள் தவமே செய்யினும் வாழி நீலம்
  • அறையோ அரிவை வரி நெடுங் கண் ஓக்கிலையால் வாழி நீலம்
  • கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி நின்
  • வண்ணம் இதுவோ மது உண்பார் சேரியையோ வாழி நீலம்
   
2515.
  • பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை என்னும்
  • மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு
  • நாண்குலாய்க் கிடந்த நங்கை நகை முக அமுதம் ஈந்தாள்
  • பூண்குலாய்க் கிடந்த மார்பின் பொன் நெடுங் குன்று அனாற்கே
   
2516.
  • நலம் குவித்த அனைய மாதர் நல் நலம் ஆய எல்லாம்
  • புலம்புவித்து அருளின் நீங்கிப் பகைப்புலம் புக்க வேந்தின்
  • கலங்குவித்த அனைய நம்பி கவர்ந்திடக் கலாபம் ஏங்கச்
  • சிலம்பு நெந்து இரங்கத் தேன்தார் பரிந்து தேன் எழுந்தது அன்றே
   
2517.
  • திரு நிறக் காம வல்லி திருக் கவின் கொண்டு பூத்துக்
  • பெருநிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததே போல்
  • அரு நிறக் குருசில் மார்பத்து அசைந்தனள் அலங்கல் வேலும்
  • நெரி புறத் தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள்
   
2518.
  • மணிக்கண் மாமயில் சாயல் மாதரும்
  • அணிக் கந்து அன்ன தோள் அரச சீயமும்
  • பிணித்த காதலால் பின்னிச் செல்வுழிக்
  • கணித்த நாள்கள் ஏழ் கழிந்த காலையே
   
2519.
  • சூட்டும் சுண்ணமும் அணிந்து சுந்தரம்
  • ஓட்டி ஒண் பொன் நூல் ஓங்கு தாரொடு
  • பூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்த பின்
  • மோட்டு முத்து ஒளிர் வடம் வளாயினார்
   
2520.
  • பால் நுரை அன பைந்துகில் அணிந்து
  • ஆன் நிரை இனத்து அலங்கல் ஏறு அனான்
  • மான் நிரை இனம் மருளும் நோக்கினார்
  • ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான்
   
2521.
  • சுநந்தை தன் மகன் சுடர் பொன் சூழித் தேன்
  • இனம் கவர்ந்து உண இலிற்றும் மும் மதத்து
  • அநந்தன் அன்ன கை யானை ஏறினான்
  • குனிந்த சாமரை குளிர் சங்கு ஆர்த்தவே
   
2522.
  • இரும் பிடி நூறு சூழ இறு வரை நின்றதே போல்
  • கரும்பொடு காய் நெல் துற்றிக் கருப்புரக் கந்தில் நின்ற
  • சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானைப்
  • பெருந் தகைப் பிணையல் மன்னர் முடிமிதித்து ஏறினானே
   
2523.
  • சட்டகம் பொன்னில் செய்து தண் கதிர் வெள்ளி வேய்ந்து
  • வட்ட நல் வைரம் வாய்ப்ப நிரைத்து மேல் மணிகள் சேர்த்திச்
  • சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற முந்நீர்ப்
  • பட்டவான் பவளக் காம்பின் குடை நிழல் பருதி ஒத்தான்
   
2524.
  • மடல் பனைக் குழாத்தின் பிச்சம் நிரைத்தன மன்னர் சூழ்ந்து
  • புடைக் களிறு ஏறித் திங்கள் பொழிகதிர்க் குப்பை அன்ன
  • எடுத்து எறி கவரி வீச இயம் பல முழங்கி ஆர்ப்பக்
  • கடல் படை வெள்ளம் சூழக் காவலன் வீதி சேர்ந்தான்
   
2525.
  • அடி நிலம் உறுதல் நாணி அருவருத்து அமரின் ஆலித்து
  • இடு மயிர் சிறகர் ஆக எழுந்து மேல் பறப்ப போலப்
  • படு மழைத் துளியின் பாய்மாப் பரந்தன நிரந்த பொன் தேர்
  • இடைநிலம் இன்றி வேழம் ஈண்டின மள்ளர் தொக்கார்
   
2526.
  • கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற
  • இழை முலைத் தடத்தினாள் தன் கணவனைக் காண ஏகிக்
  • கழும் ஒலி அரவ வானம் கனை பெயல் கடல் பெய்த அன்ன
  • குழும் ஒலி அரவம் ஈண்டிக் கொடி நகர் பொலிந்தது அன்றே
   
2527.
  • ஒள் இலைச் சூலம் தெண்ணீர் உலா முகில் கிழிக்கும் மாடக்
  • கொள் கொடிக் குழாத்தினாலும் கொழு நறும் புகையினாலும்
  • தௌளுறு சுண்ணத்தாலும் தேன் மலர்த் துகளினாலும்
  • புள் இனம் பொழுது காணா புலம்பிக் கூடு அடைந்த அன்றே
   
2528.
  • பைந்தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு
  • சிந்தின தழல் என்று அஞ்சிச் சிறை அன்னம் நிலத்தைச் சேரா
  • இந்திர கோபம் ஆம் என்று இள மயில் குனிந்து குத்திச்
  • சிந்தையில் தேம்பத் தாமே திருமணி நக்க அன்றே
   
2529.
  • வெள்ளைமை கலந்த நோக்கின் கிண்கிணி மிழற்றி ஆர்ப்பப்
  • பிள்ளைமை காதல் கூரப் பிறழந்து பொன் தோடு வீழத்
  • துள்ளுபு செலீஇய தோற்றம் தொடு கழல் காமன் காமத்து
  • உள் உயிர் அறியப் பெண்ணாய்ப் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார்
   
2530.
  • தன்நெறி வளரக் காமன் தான் முலை இரண்டும் ஆகி
  • முன்னரே வளர்கின்றால் போல் முகிழ் முலை முத்தம் ஏந்திப்
  • பொன் எறி மணியின் பொங்கிக் குழல் புறம் புடைப்ப ஓடிப்
  • பின் நிறீஇ வைத்த போலப் பெதும்பையர் விதும்பி நின்றார்
   
2531.
  • அணி நிலா வீசும் மாலை அரங்கு புல் எனப் போகித்
  • துணி நிலா வீசும் மாலைப் பிறை நுதல் தோழி சேர்ந்து
  • மணி நிலா வீசும் மாலை மங்கையர் மயங்கி நின்றார்
  • பணி நிலா வீசும் பைம் பொன் கொடி மணி மலர்ந்தது ஒத்தார்
   
2532.
  • வள் உகிர் வரித்த சாந்தின் வன முலை கோக்கினாரை
  • உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கண் கரிந்து பொங்கக்
  • கள் உயிர் உண்ணும் மாலைக் கதுப்பு ஒரு கையின் ஏந்தி
  • நள் இருள் விளக்கு இட்ட அன்ன நங்கைமார் மல்கினாரே
   
2533.
  • மட்டு ஒளித்து உண்ணும் மாந்தர் மாண்பு போல் மறைந்து வண்ணப்
  • பட்டு ஒளித்து ஒழிய அல்குல் பசுங் கதிர்க் கலாபம் தோன்றக்
  • குட்ட நீர்க் குவளைக் கண்கள் விருந்து உண விரும்பி நின்றார்
  • அட்டும் தேன் அணிந்த மாலைப் பவளக் கொம்பு அணிந்தது ஒத்தார்
   
2534.
  • பெரும் பொருள் நீதிச் செங்கோல் பெருமகன் ஆக்கம் போலப்
  • பரந்து இடம் இன்றி மேலால் படா முலை குவிந்த கீழால்
  • அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும்
  • மருங்கு நொந்து ஒழிய வீதி மடந்தையர் இடம் கொண்டாரே
   
2535.
  • செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்து நீர் மாந்தர் போல
  • அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகம் ஆய எல்லாம்
  • நல் கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய
  • ஒல்கிப் போய் மாடம் சேர்ந்தார் ஒரு தடம் குடங்கைக் கண்ணார்
   
2536.
  • கார் வளர் மின்னு வீசும் குண்டலம் காய் பொன் ஓலை
  • ஏர் வளர் பட்டம் ஏற்ப அணிந்து இருள் சுமந்து திங்கள்
  • நீர் வளர் நீலம் பூத்து நிரைத்த போல் நிரைத்த மேலால்
  • வார் வளர் முலையினார்தம் மாழை வாள் முகங்கள் மாதோ
   
2537.
  • குறை அணி கொண்ட வாறே கோதை கால் தொடர ஓடிச்
  • சிறை அழி செம் பொன் உந்தித் தேன் பொழிந்து ஒழுக ஏந்திப்
  • பறை இசை வண்டு பாடப் பாகமே மறைய நின்றார்
  • பிறை அணி கொண்ட அண்ணல் பெண் ஓர் பால் கொண்டது ஒத்தார்
   
2538.
  • பொன் அரி மாலை பூண்டு பூஞ்சிகை குலாவி முன் கை
  • மின் அரிச் சிலம்பு தொட்டு விருப்பொடு விரைந்து போவான்
  • கன்னியர் ஆடி நோக்கித் தம்மைத் தாம் கண்டு நாணிப்
  • பின் அவை அணிந்து செல்வார் இடம் பெறாது ஒழிந்து போனார்
   
2539.
  • முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம்
  • வித்திய வேங்கை வீயும் விழுப்பொனும் விளங்கக் காமத்
  • தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுடச் சுடர்ந்து நின்றார்
  • ஒத்து ஒளிர் காம வல்லி ஒருங்கு பூத்து உதிர்ந்தது ஒத்தார்
   
2540.
  • உகிர் வினை செய்து பஞ்சி ஒள்ளொளி அரத்தம் ஊட்டி
  • அகில் கமழ் அங்கை சேப்ப அரிவையர் அலங்கல் தாங்கி
  • வகிர்படு மழைக்கண் சின்னீர் மாக் கயல் எதிர்ந்தவே போல்
  • முகில் கிழி மின்னின் நோக்கி முரிந்து இடை குழைந்து நின்றார்
   
2541.
  • முனித் தலைக் கண்ணி நெற்றிச் சிறார் முலை முழாலின் பில்கிப்
  • புனிற்றுப் பால் பிலிற்றித் தேமா வடு இறுத்து ஆங்குப் பாய
  • நுனித்துக் கண் அரக்கி நோக்காது ஒசிந்து நின்றார்கள் அன்றே
  • கனிப் பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங் கொம்பு ஒத்தார்
   
2542.
  • அவிர் இழை சுடர முல்லை அலங்கல் அம் கூந்தல் சோரத்
  • தவிர் வெய்ய காமம் தாங்கித் தடமுலைக் கால்கள் சாய
  • இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார்
  • சுவர் செய்து ஆங்கு எழுதப்பட்ட துகிலிகைப் பாவை ஒத்தார்
   
2543.
  • மாரி மா மயில் அனாரும் மைந்தரும் மயங்கினாரே
  • வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி எங்கும்
  • பூரித்துப் புதவம் தோறும் குவளையும் மரையும் பூத்துப்
  • பாரித்துப் பைம் பொன் நாகர் உலகு இவண் வீழ்ந்ததே போல்
   
2544.
  • கோதை தாழ் குடையின் நீழல் கொற்றவன் பருதி ஆக
  • மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த தௌ நீர்க்
  • காதம் நான்கு அகன்ற பொய்கைக் கடிநகர் குவளைப் பூத்துப்
  • பேதுறுகின்ற போன்ற பெருமழைக் கண்கள் மாதோ
   
2545.
  • மாந்தரும் மாவும் செல்ல மயங்கி மேல் எழுந்த நீறு
  • தேம் தரு கோதையார் தம் தௌ மட்டுத் துவலை மாற்ற
  • ஆய்ந்த பொன் நகரம் எங்கும் அணிகல ஒளியினாலே
  • காய்ந்து கண் கலக்கப் பூத்த கற்பகம் ஒத்தது அன்றே
   
2546.
  • பெண் பெற்ற பொலிசை பெற்றார் பிணை அனார் பெரிய யாமும்
  • கண் பெற்ற பொலிசை பெற்றாம் இன்று எனக் கரைந்து முந்நீர்
  • மண் பெற்ற ஆயுள் பெற்று மன்னுவாய் மன்ன என்னாப்
  • புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினாரே
   
2547.
  • சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார்
  • தண் என் சந்தன நீர் ஆர்ந்து தேன் துளும்பும்
  • வண்ணப் பந்து எறிவார் வளை ஒலிப்ப ஓச்சிக்
  • கண்ணி இட்டு எறிவார் கலவை நீர் தெளிப்பார்
   
2548.
  • முந்து சூர் தடிந்த முருகன் நம்பி என்பார்
  • ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார்
  • கந்துகன் வளர்த்த சிங்கம் காண்மின் என்பார்
  • சிந்தையில் களிப்பார் சேண் நெடிய கண்ணார்
   
2549.
  • தேசிக முடியும் திருந்து பட்டு உடையும்
  • பாசம் ஆக நின்று பல் மலர்க் கழுநீர்
  • மூசி வண்டு இமிரும் மொய் அலங்கல் தாழக்
  • காசு இல் காமம் செப்பிக் கண்ணினால் இரப்பார்
   
2550.
  • வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றைக்
  • கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார்
  • ஒண்தொடி இவன் தன் உருவு கண்டு வாழ்வார்
  • பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர் போத என்பார்
   
2551.
  • கொழித்து இரை ஓத வேலிக் குமரனைப் பயந்த நங்கை
  • விழுத் தவம் உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார்
  • பிழிப்பொலி கோதை போல் ஆம் பெண்டிரில் பெரியள் நோற்றாள்
  • சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார்
   
2552.
  • சாந்து அகம் கிழிய மாலைத் தடமுலை ஞெமுங்கப் புல்லிச்
  • சேர்ந்து எழும் நங்கை மாரே திரு நங்கை மார்கள் அல்லார்
  • கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான்
  • போந்த அந் நங்கை மார்கள் பொய்ந் நங்கைமார்கள் என்பார்
   
2553.
  • இடம் பட அகன்று நீண்ட இருமலர்த் தடம் கண் என்னும்
  • குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் குவளைக் கொம்பின்
  • உடம்பு எலாம் கண்கள் ஆயின் ஒருவர்க்கும் இன்றி ஏற்ப
  • அடங்க வாய் வைத்திட்டு ஆரப் பருகியிட்டு ஈமின் என்பார்
   
2554.
  • முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானைத்
  • தலை நிலம் புரள வெண் கோடு உண்டதே போன்று தன்கைச்
  • சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த நம்பி
  • நிலவு உமிழ் குடையின் நீழல் துஞ்சுக வையம் என்பார்
   
2555.
  • இந் நகரப் புறம் காட்டில் இவன் பிறந்த வளளாறும்
  • தன் நிகர் இல் வாணிகன் இல் தான் வளர்ந்த வாறும்
  • கைந் நிகர் இல் வேந்தர் தொழப் போந்ததுவும் கண்டால்
  • என்னை தவம் செய்யாது இகழ்ந்து இருப்பது என்பார்
   
2556.
  • பெருமுழங்கு திரை வரைகள் நீந்திப் பிணி உறினும்
  • திரு முயங்கல் இல்லை எனில் இல்லை பொருள் ஈட்டம்
  • ஒரு முழமும் சேறல் இலரேனும் பொருள் ஊர்க்கே
  • வரும் வழி வினாய் உழந்து வாழ்க தவம் மாதோ
   
2557.
  • நஞ்சு குடித்தாலும் நவை இன்று தவம் நின்றால்
  • அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை தவம் உலந்தால்
  • குஞ்சரத்தின் கோட்டு இடையும் உய்வர் தவம் மிக்கார்
  • அஞ்சல் இலர் என்றும் அறனே களைகண் என்பார்
   
2558.
  • முரல் வாய சூல் சங்கம் முட முள் தாழை முகை விம்மும்
  • கரை வாய முத்து ஈன்று கானல் மேயும் கடல் சேர்ப்பன்
  • உரை வாய நகர் பரவப் போகி ஒண் பொன் எயில் சூழ்ந்த
  • விரை வாய பூம் பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தானே
   
2559.
  • அருகு மயில் அகவ அன்னம் ஏங்கக் குயில் கூவக்
  • குருகு பொறை உயிர்க்கும் கொடு முள் தாழை வெண் தோட்டு
  • முருகு பொறை உயிர்க்கும் மொய் பூங்காவில் படை நீக்கித்
  • திருகு கனை கழலான் செம் பொன் கோயில் சேர்ந்தானே
   
2560.
  • திறந்த மணிக் கதவம் திசைகள் எல்லாம் மணம் தேக்கி
  • மறைந்த அகில் புகையான் மன்னர் மன்னன் வலம் செய்து
  • பிறந்தேன் இனிப் பிறவேன் பிறவா தாயைப் பெற்றேன் என்று
  • இறைஞ்சி முடிதுளக்கி ஏத்திக் கையால் தொழுதானே
   
2561.
  • திரு மறு மார்பினை திலகமுக் குடையினை
  • அருமறை தாங்கிய அந்தணர் தாதையை
  • அருமறை தாங்கிய அந்தணர் தாதை நின்
  • எரி புரை மரை மலர் இணை அடி தொழுதும்
   
2562.
  • உலகு உணர் கடவுளை உருகெழு திறலினை
  • நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியினை
  • நிலவிரி கதிர் அணி நிகர் அறு நெறியை நின்
  • அலர் கெழு மரை மலர் இணை அடி தெழுதும்
   
2563.
  • மறு அற உணர்ந்தானை மலம் அறு திகிரியை
  • பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வனை
  • பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வ நின்
  • நறை விரி மரை மலர் நகும் அடி தொழுதும்
   
2564.
  • நந்தா விளக்குப் புறம் ஆக என நான்கு கோடி
  • நொந்தார்க் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்
  • கந்து ஆர் கடாத்த களிறும் கொடித் தேர்கள் நூறும்
  • செந்தாமரை மேல் நடந்தான் அடி சேர்த்தினானே
   
2565.
  • வாடத மாலை மணி மாலை பொன் மாலை முத்த
  • நீடு ஆர மாலை நிழல் மாண்ட பவழ மாலை
  • மாடு ஆர்ந்து இழியும் அருவி மலர் பொற்ப ஏற்றிக்
  • கூடார்க் கடந்தான் வலம் கொண்டு இடம் சென்று புக்கான்
   
2566.
  • உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை
  • வலமருப்பு ஈர்ந்து செய்த மணி கிளர் கட்டில் ஏறி
  • நிலமகள் கணவன் வேந்தர் குழாத்து இடை நிவந்து இருந்தான்
  • புலமகள் புகழப் பொய்தீர் பூ மகள் புணர்ந்து மாதோ
   
2567.
  • எத் துணைத் தவம் செய்தான் கொல் என்று எழுந்து உலகம் ஏத்த
  • வித்திய புகழினாற்கு விருந்து அரசு இயற்றி நாடும்
  • ஒத்தன நல்கித் தன்னை உழந்தனள் வளர்த்த தாய்க்குச்
  • சித்திரத் தேவிப் பட்டம் திருமகன் நல்கினானே
   
2568.
  • இனக் களி யானை மன்னர் இள உடையான் என்று ஏத்தத்
  • தனக்கு இளையானை நாட்டித் தான் தனக்கு என்று கூறிச்
  • சினக் களி யானை மன்னர் மகளிரைச் சேர்த்தி நம்பன்
  • மனக்கு இனிது உறைக என்று வளம் கெழு நாடும் ஈந்தான்
   
2569.
  • ஆழ் கடல் வையத்து இல்லா அருநிதி அரசு நல்ல
  • சூழ் மணி ஆழி செம் பொன் சூட்டொடு கண்ணி காதல்
  • தோழர்கட்கு அருளித் தொல்லை உழந்தவர் தம்மைத் தோன்ற
  • வாழ்க என நிதியும் நாடும் மன்னவன் கொடுப்பித் தானே
   
2570.
  • வளர்த்த கைத் தாயர் தம்மை வருக என அருளித் தங்கள்
  • கிளைக்கு எலாம் சிறப்புச் செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர்
  • விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக்
  • கொளக் கொடுத்து அயா உயிர்த்தான் கொற்றவன் என்ப அன்றே
   
2571.
  • கைத்தலம் மந்தி கொண்ட கைம் மகப் போன்று தன்கண
  • பத்திமை விடாது மேல் நாள் படைக் கலம் நவின்ற பொன்தேர்
  • மைத்துன மன்னர்க்கு எல்லாம் வள நிதி மணி செய் மான் தேர்
  • தத்து நீர் மிசைச் செல் மாவும் தவழ் மதக் களிறும் ஈந்தான்
   
2572.
  • கோமகன் கோல மான் தேர்க் கோவிந்தன் என்னும் கொய்தார்
  • மாமற்கு மடங்கல் ஆற்றல் கட்டியங் காரன் என்ற
  • தீமகன் உடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்துச் செல்வன்
  • ஓவல் இல் கறவை ஒத்தான் உலோக பாலற்கு மாதோ
   
2573.
  • பேர் இடர் தன்கண் நீக்கிப் பெரும் புணை ஆய தோழற்கு
  • ஓர் இடம் செய்து பொன்னால் அவன் உரு இயற்றி ஊரும்
  • பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம்
  • தார் உடை மார்பன் கூத்துத் தான் செய்து நடாயி னானே
   
2574.
  • ஊன்விளை யாடும் வை வேல் உறுவலி சிந்தித்து ஏற்பத்
  • தான்விளை யாடி மேல் நாள் இருந்தது ஓர் தகை நல் ஆலைத்
  • தேன்விளை யாடும் மாலை அணிந்து பொன் பீடம் சேர்த்தி
  • ஆன்விளை யாடும் ஐந்து ஊர் அதன் புறம் ஆக்கினானே
   
2575.
  • கொட்டமே கமழும் குளிர் தாமரை
  • மொட்டின் வீங்கிய வெம் முலை மொய் குழல்
  • அட்டும் தேன் அழியும் மது மாலையார்
  • பட்டம் எண்மரும் பார் தொழ எய்தினார்
   
2576.
  • பஞ்சி சூழ் அல்குல் பல் வளை வீங்கு தோள்
  • வஞ்சி நுண் இடை வம்பு அணி வெம் முலை
  • விஞ்சையன் மகள் சீறடி வீழ்ந்தனர்
  • அம் சில் ஓதிஅரும்பு அவிழ் கோதையார்
   
2577.
  • வீடு இல் ஐந்தரைக் கோடி விருத்தி மேல்
  • நாடி ஆயிரம் நாள் தொறும் நங்கை மார்க்கு
  • ஆடு சாந்து அடிசில் புறம் ஆக்கினான்
  • கோடு வால் ஒளிக் குங்குமக் குன்று அனான்
   
2578.
  • ஆனை மும் மதம் ஆடிய காடு எலாம்
  • மானை நோக்கியர் வாய் மது ஆடின
  • வேனல் மல்கி வெண் தேர் சென்ற வெம் நிலம்
  • பானல் மல்கி வெண் பால் அன்னம் பாய்ந்தவே
   
2579.
  • மாரி மல்கி வளம் கெழு மண் மகள்
  • வாரி மல்கி வரம்பு இலள் ஆயினாள்
  • ஆரிய அடிசில் தளி ஆன் நெய் வார்ந்து
  • ஏரி ஆயின எங்கணும் என்பவே
   
2580.
  • ஏக வெண் குடை இன் நிழல் தண் அளி
  • மாகமாய்க் கடல் எல்லை நிழற்றலால்
  • போக பூமியும் பொன் கிளர் பூமியும்
  • நாகர் நாகமும் நாணி ஒழித்தவே
   
2581.
  • வண்டு மேய்ந்து வரி முரல் பூஞ் சிகைக்
  • கெண்டை வென்ற கண்ணார்களும் கேள்வரும்
  • உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால்
  • பண்டை ஊழியின் பார் மலி உற்றதுவே
   
2582.
  • செரு நாடு செஞ் சுடர் வேல் திருகு செம் பொன் கனை கழல் கால்
  • திரு நாடு தேம் பைந்தார்ச் செல்வன் செவ்வி பெறாது ஒழிந்து
  • பெரு நாட்டு அருங் கலங்கள் சுமந்து பேரும் இடம் பெறாஅது
  • ஒரு நாட்டு அரசு உணங்க உரவோன் கொற்றம் உயர்ந்ததே
   
2583.
  • வலையவர் முன்றில் பொங்கி வாள் என வாளை பாயச்
  • சிலையவர் குரம்பை அங் கண் மான் இனம் சென்று சேப்ப
  • நிலை திரிந்து ஊழி நீங்கி உத்தர குருவும் ஆகிக்
  • கொலை கடிந்து இவறல் இன்றிக் கோத் தொழில் நடாத்தும் அன்றே
   
2584.
  • கதம் கனல் யானை நெற்றிக் கட்டிய பட்டமே போல்
  • மதம் கமழ் கோதை அல்குல் மனாக் கிடந்து இமைத்துக் காமப்
  • பதம் பல பார்க்கும் சாயல் பாவை மற்று அநங்க மாலை
  • விதம்படக் கருதி மாதர் விளைத்தது விளம்பல் உற்றேன்
   
2585.
  • ஈர்நதண் கோதை இளையார் குழாத்திடையாள்
  • எம் கோன் அடி சேர்வல் என்று
  • ஆர்ந்த செந்தாமரை முகத்தினாள்
  • அடிகள் வந்து ஈங்கு அகன் கடை உளாள்
  • சார்ந்த சாயல் தட மா முலைத்
  • தையல் வல்லே வருக என்றான்
  • சேர்ந்து மன்னர் முடி வைரவில் திளைக்கும்
  • செம் பொன் செறி கழலினான்
   
2586.
  • அருவிலை நன் கலம் செய் போர்வை
  • அன்னம் நாண அடி ஒதுங்கிச் சென்று
  • உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு
  • ஒல்கிக் கோமான் அடி தொழுத பின்
  • மருவு இன் சாயல் மணி மெல் விரல்
  • கூப்பி ஓலை மரபின் நீட்ட
  • இரவி என்ன விளங்கும் ஒளி
  • இறைவன் கொண்டு ஆங்கு அது நோக்குமே
   
2587.
  • அடிகள் கண்டு ஆங்கு உவந்து அருளுக
  • அநங்கமாலை அடி வீழ்ச்சி முன்
  • கொடிய வேலான் கொதித்து அரங்கின் நீக்கிக்
  • கோயில் சிறை வைத்த பின்
  • கடி செய் பைந்தார்க் கமழ் மாலை வேல்
  • கந்துகற்குச் சிறுவ யான் இப்
  • படி அனல் காய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும்
  • பைம் பொன் செறிகழலினாய்
   
2588.
  • என்ன நாளும் அரற்றப் பொறான் விடுப்பப்
  • போகி இன மழைகள் மொய்த்து
  • அன்னம் துஞ்சும் அடிக் குடிலினுள்
  • அன்றி யான் கொண்ட நாடகத்தினைத்
  • துன்னி நம்பி உருவு தீட்டித்
  • தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ
  • மன்னர் மன்ன மதி தோய் குடையாய்
  • மகளிர் காமம் மறைத்து ஒழிதியோ
   
2589.
  • கண்கள் துஞ்சா கதிர் முத்தமே
  • காலும் கை ஆர் வளை கழலுமால்
  • பண் கொள் சொல்லார் மாமை நீங்கிப்
  • பைம் பொன் போர்த்த படா முலைகளும்
  • மண் கொள் வேல் மன்னர் நண்பின்மையை
  • வையக்கு எல்லாம் உடன் அறையவோ
  • பெண்கள் ஆவி விடுத்து ஒழிபவோ
  • பெரியோர் நண்பு அடைந்தார் பெயர்பவோ
   
2590.
  • அறன் நிழல் ஆய் உலகு அளிக்கும் நின்
  • ஆர மாலை அணி வெண் குடைப்
  • புறன் நிழலின் அயலேனோ யான்
  • புல்லா மன்னர் நிணம் பொழியும் வேல்
  • மறன் நிழல் மத யானையாய் வந்த
  • என் தோழி வாமலேகை
  • திறன் அழியாமை இன்னே விடுத்து
  • அருளுக தேர் வேந்தர் வேந்தனே
   
2591.
  • புள்ளும் யாழும் குழலும் ஏங்கப்
  • புனைந்து வல்லான் நினைந்து இயற்றிய
  • பள்ளிச் செம் பொன் படை அமளி மேல்
  • மழலை மணி யாழ் தான் வெளவிக்
  • கொள்ளும் தீம் சொல் அலங்காரப் பூங்
  • கொடியைப் புல்லி மணிக் குவட்டினை
  • எள்ளி வீங்கித் திரண்ட தோள் மேல்
  • குழை வில் வீச இருந்தானே
   
2592.
  • அங் கை சேப்பக் குருகு இரங்க
  • அலங்கல் அம் பூங் குழல் துயல் வர
  • மங்கை நல்லார் பவழ அம்மி
  • அரைத்த சாந்தம் மலர் பெய் மாலை
  • பொங்கு தூமக் கொழு மென்
  • புகை புரிந்த பஞ்சமுக வாசமும்
  • தங்கு தாம மார்பினாற்கும்
  • தையலாட்கும் கொண்டு ஏந்தினாரே
   
2593.
  • அருளும் ஆறு என்னை அநங்கமாலை
  • அடித்தி தோழி அன்றோ எனத்
  • தெருளலான் செல்வக் களி மயக்கின் நால்
  • திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி
  • மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங் கணை
  • உருளும் முத்து ஆர் முகிழ் முலையினாள்
  • உள்ளத்து உவகை தோற்றினாளே
   
2594.
  • முறுவல் திங்கள் முக அரங்கின் மேல்
  • முரிந்து நீண்ட புருவக் கைகள்
  • நெறியின் வட்டித்து நீண்ட உண் கண்
  • சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆடப்
  • பொறி கொள் பூஞ் சிலம்பு மேகலைகளும்
  • புணர்ந்த இன்னியங்கள் ஆர்ப்ப வேந்தன்
  • அறியும் நாடகம் கண்டான் பைந்தார்
  • அலர்ந்து மாதர் நலம் குழைந்ததே
   
2595.
  • நால் மருப்பின் மத யானை நறிய
  • பைந்தாமரை மடந்தையைத்
  • தேன் மதர்ப்பத் திளைத்து ஆங்கு அவன்
  • திருவின் சாயல் நலம் கவர்ந்த பின்
  • ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார்
  • பரவ இவ்வாறு ஒழுகும் அன்றே
  • வான் அகத்தும் நிலத்தும் இல்லா
  • வண்ணம் மிக்க மணிப் பூணினான்
   
2596.
  • நரம்பு மீது இறத்தல் செல்லா நல் இசை முழவும் யாழும்
  • இரங்கு தீம் குழலும் ஏங்கக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்பப்
  • பரந்த வாள் நெடுங் கண் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல
  • அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித்தாளே
   
2597.
  • கடல் படை மன்னர் தம்மைக் காதலின் விடுத்துக் காமன்
  • தொடுத்த கோல் மார்பில் தங்கத் தூமலர்க் கொம்பு அனாளை
  • வடித்த இன் அமிர்தின் ஆரப் பருகலின் மழைக் கண் செவ்வாய்
  • துடித்து வண்டு உண்ணத் தூங்கும் செந் தளிர் ஒத்தது அன்றே
   
2598.
  • இளைமை அம் கழனிச் சாயல் ஏர் உழுது எரி பொன் வேலி
  • வளை முயங்கு உருவ மென் தோள் வரம்பு போய் வனப்பு வித்திக்
  • கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்து எழுந்து ஈன்ற காம
  • விளை பயன் இனிதின் துய்த்து வீணை வேந்து உறையும் மாதோ