விசயமா தேவியார் துறவு
 
2599.
  • நீர் ஏந்தி நெய்ம் மிதந்து நிணம் வாய்ப் பில்கி அழல் விம்மிப்
  • போர் ஏந்திப் பூ அணிந்து புலவு நாறும் புகழ் வேலோன்
  • கார் ஏந்து இடி முரசம் ஆர்ப்பப் காய் பொன் கலன் சிந்திப்
  • பார் ஏந்திச் செல்லும் நாள் பட்டதாம் நாம் பகர்வதே
   
2600.
  • விண் பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து விசும்பு ஏந்தி
  • மண் பால் திலகம் ஆய் வான் பூத்து ஆங்கு மணி மல்கிப்
  • பண் பால் வரிவண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி
  • எண் பால் இகந்து உயர்ந்தாற்கு இசைந்த கோயில் இயன்றதே
   
2601.
  • அடிசில் கலம் கழீஇக் கருனை ஆர்ந்த இள வாளை
  • மடுவில் மதர்த்து உணரா வாழைத் தண்டில் பல துஞ்சும்
  • நெடு நீர்க் கழனி சூழ் நியமம் சேர்த்தி விழவு அயர்ந்து
  • வடி நீர் நெடுங் கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே
   
2602.
  • அல்லி அரும் பதமும் அடகும் காயும் குள நெல்லும்
  • நல்ல கொழும் பழனும் கிழங்கும் தந்து நவை தீர்த்தார்க்கு
  • இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள்
  • வில்லோன் பெருமாட்டி விளங்கு வேல் கண் விசயையே
   
2603.
  • தனியே துயர் உழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடு காட்டுள்
  • இனியாள் இடர் நீக்கி ஏமம் சேர்த்தி உயக் கொண்ட
  • கனியார் மொழியாட்கும் மயிற்கும் காமர் பதி நல்கி
  • முனியாது தான் காண மொய் கொள் மாடத்து எழுதுவித்தாள்
   
2604.
  • வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளம் ஆகச் சொரிந்து ஊட்டப்
  • பண்ணிப் பரிவு அகன்றாள் பைந்தார் வேந்தன் பயந்தாளே
  • அண்ணல் பிறந்த ஆங்கு ஐந்நூற்று ஐவர்க்கு அளந்து ஆன் பால்
  • வண்ணச் சுவை அமுதம் வைக நாளும் கோவிந்தன்
   
2605.
  • தோடு ஆர் புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளைப்
  • பீடு ஆர் பெருஞ் சிறுவர் பயந்தீர் வம்மின் எனப் புல்லி
  • நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறிக்
  • கோடாக் குரு குலத்தை விளக்கிட்டாளை விளக்கினாள்
   
2606.
  • மறை ஒன்று உரைப்பன போல்
  • மலர்ந்து நீண்டு செவி வாய் வைத்து
  • உறைகின்ற ஓடு அரிக் கண்
  • உருவக் கொம்பின் எண்மரும்
  • இறைவி அடி பணிய எடுத்துப்
  • புல்லி உலகு ஆளும்
  • சிறுவர்ப் பயந்து இறைவன்
  • தெளிவீர் என்றாள் திரு அன்னாள்
   
2607.
  • பொங்கும் மணிமுடி மேல் பொலிந்து
  • எண் கோதைத் தொகை ஆகிக்
  • கங்குல் கனவு அகத்தே
  • கண்ணுள் தோன்றி வந்தீர் நீர்
  • எங்கும் பிரியற்பீர் என்று
  • கண்கள் மலர்ந்து இருந்து
  • கொங்கு உண் நறும் பைந்தார்க்
  • கோமான் இங்கே வருக என்றாள்
   
2608.
  • சிங்கம் நடப்பது போல் சேர்ந்து பூத் தூய்ப் பலர் வாழ்த்தத்
  • தங்கா விருப்பின் தம் பெருமான் பாதம் முடி தீட்டி
  • எங்கோ பணி என்னா அஞ்சா நடுங்கா இருவில் கண்
  • பொங்க இடு தவிசில் இருந்தான் போர் ஏறு அனையானே
   
2609.
  • கொற்றவி மகனை நோக்கிக் கூறினள் என்ப நும் கோக்கு
  • உற்றதைப் பிறர்கள் கூற உணர்ந்தனை ஆயின் நானும்
  • இற்று என உரைப்பக் கேண்மோ இலங்கு பூண் அலங்கல் மார்பின்
  • செற்றவர்ச் செகுத்த வை வேல் சீவக சாமி என்றாள்
   
2610.
  • நாகத்தால் விழுங்கப் பட்ட நகை மதிக் கடவுள் போலப்
  • போகத்தால் விழுங்கப் பட்டுப் புறப்படான் புன்சொல் நாணான்
  • ஆகத்தான் அமைச்சர் நுண்நூல் தோட்டியால் அழுத்தி வெல்லும்
  • பாகர்க்கும் தொடக்க நில்லாப் பகடு போல் பொங்கியிட்டான்
   
2611.
  • நுண்மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார் தம்
  • கண்வலைப் பட்ட போழ்தே கடு நவை அரவோடு ஒக்கும்
  • பெண்மையைப் பெண்மை என்னார் பேர் உணர்வு உடைய நீரார்
  • அண்ணலைத் தெருட்டல் தேற்றாது அமைச்சரும் அகன்று விட்டார்
   
2612.
  • கல் சிறை அழித்து வெள்ளம் கடற்கு அவாய் ஆங்குக் கற்றோர்
  • சொல் சிறை அழித்து வேந்தன் துணை முலை துறத்தல் செல்லான்
  • வில் சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேல் கண்
  • நல் சிறைப் பட்டு நாடும் நகரமும் காவல் விட்டான்
   
2613.
  • பிளிறுவார் முரசத்தானைப் பெருமகன் பிழைப்பு நாடிக்
  • களிறு மென்று உமிழப் பட்ட கவழம் போல் தகர்ந்து நில்லாது
  • ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் உடைந்த பின் ஒருவன் ஆனான்
  • வெளிறு முன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தலாமோ
   
2614.
  • வனை கலக் குயவன் நாணின் மன்னரை அறுத்து முற்றிக்
  • கனை குரல் உருமின் ஆர்ப்பக் காவலன் நின்னை வேண்டி
  • வினை மயில் பொறியில் என்னைப் போக்கி விண் விரும்பப் புக்கான்
  • புனை முடி வேந்த போவல் போற்று என மயங்கி வீழ்ந்தான்
   
2615.
  • சீத நீர் தெளித்துச் செம் பொன் திருந்து சாந்து ஆற்றி தம்மால்
  • மாதரார் பலரும் வீச வளர்ந்து எழு சிங்கம் போலப்
  • போதொடு கலங்கள் சோர எழுந்து பொன் ஆர மார்பன்
  • யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்னச் சொன்னாள்
   
2616.
  • பிறந்து நாம் பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது ஒன்றும்
  • அறிந்திலம் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்து கின்றாம்
  • கறந்து கூற்று உண்ணும் ஞான்று கண் புதைத்து இரங்கின் அல்லால்
  • இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று எனப் பெயர்க்கலாமோ
   
2617.
  • சுமைத் தயிர் வேய்ந்த சோற்றின் துய்த்து இனிது ஆக நம்மை
  • அமைத்த நாள் என்னும் நாகம் விழுங்கப் பட்டு அன்னது அங்கண்
  • இமைத்த கண் விழித்தல் அன்றி இறந்து பாடு எய்து கின்றாம்
  • உமைத்துழிச் சொறியப் பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம்
   
2618.
  • கடுவளி புடைக்கப் பட்ட கண மழைக் குழாத்தின் நாமும்
  • விடு வினை புடைக்கப் பாறி வீற்று வீற்று ஆயின் அல்லால்
  • உடன் உறை பழக்கம் இல்லை ஒழி மதியத்தை காதல்
  • வடு உடைத்து என்று பின்னும் மா பெருந் தேவி சொன்னாள்
   
2619.
  • இருந்து இளமைக் கள் உண்டு இடை தெரிதல் இன்றிக்
  • கருந் தலைகள் வெண் தலைகள் ஆய்க் கழியும் முன்னே
  • அருந் தவமும் தானமும் ஆற்றுமினே கண்டீர்
  • முருந்து அனைய தூ முறுவல் முற்று இழையார் சேரி
   
2620.
  • உடற்றும் பிணித் தீ உடம்பின் உயிர் பெய்திட்டு
  • அடுத்து உணர்வு நெய் ஆக ஆற்றல் துவை ஆகக்
  • குடித்து உண்ணும் கூற்றம் குடில் பிரியா முன்னே
  • கொடுத்து உண்மின் கண்டீர் குணம் புரிமின் கண்டீர்
   
2621.
  • உழந்தாலும் புத்து அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது
  • இழந்தார் பலரால் இடும்பை நீர் யாற்றுள்
  • அழுந்துமால் அப் பண்டி அச்சு இறா முன்னே
  • கொழுஞ் சீலம் கூலியாக் கொண்டு ஊர்மின் பாகீர்
   
2622.
  • பிறந்தவர்கள் எல்லாம் அவாப் பெரியர் ஆகித்
  • துறந்து புகழ் வேண்டார் ஓர் துற்று அவிழும் ஈயார்
  • அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல்
  • வெறும் பொருள் அது அம்மா விடுத்திடுமின் என்றாள்
   
2623.
  • முல்லை முகை சொரிந்தால் போன்று
  • இனிய பால் அடிசில் மகளிர் ஏந்த
  • நல்ல கருனையால் நாள்வாயும்
  • பொன் கலத்து நயந்து உண்டார்கள்
  • அல்லல் அடைய அடகு இடுமின் ஓட்டு
  • அகத்து என்று அயில்வார்க் கண்டும்
  • செல்வம் நமரங்காள் நினையன்மின்
  • செய்தவமே நினைமின் கண்டீர்
   
2624.
  • அம் பொன் கலத்து அடுபால்
  • அமர்ந்து உண்ணா அரிவை அந்தோ
  • வெம்பிப் பசி நலிய வெவ் வினையின்
  • வேறாய் ஓர் அகல் கை ஏந்திக்
  • கொம்பின் கொள ஒசிந்து பிச்சை எனக்
  • கூறி நிற்பாள் கண்டு
  • நம்பன்மின் செல்வ நமரங்காள்
  • நல் அறமே நினைமின் கண்டீர்
   
2625.
  • வண்ணத் துகில் உடுப்பின் வாய் விட்டு
  • அழுவது போல் வருந்தும் அல்குல்
  • நண்ணாச் சிறு கூறை பாகம் ஓர்
  • கை பாகம் உடுத்து நாளும்
  • அண்ணந்து அடகு உரீஇ அந்தோ
  • வினையே என்று அழுவாள் கண்டும்
  • நண்ணன்மின் செல்வ நமரங்காள்
  • நல் அறமே நினைமின் கண்டீர்
   
2626.
  • மை திரண்ட வார் குழல் மேல் வண்டு
  • ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடிக்
  • கை திரண்ட வேல் ஏந்திக் காமன் போல்
  • காரிகையார் மருளச் சென்றார்
  • ஐ திரண்டு கண்டம் குரைப்ப ஓர்
  • தண்டு ஊன்றி அறிவின் தள்ளி
  • நெய் திரண்டால் போல் உமிழ்ந்து
  • நிற்கும் இளமையோ நிலையாதே காண்
   
2627.
  • என்றலும் சுநந்தை சொல்லும் இறைவிதான் கண்டது ஐயா
  • நன்றும் அஃது ஆக அன்றே ஆயினும் ஆக யானும்
  • ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய்க்
  • குன்று போல் யாதும் இன்றிக் குழைந்து மெய்ம் மறந்து நின்றான்
   
2628.
  • ஓர் உயிர் ஒழித்து இரண்டு உடம்பு போவ போல்
  • ஆரியன் ஒழிய அங்கு ஒளவை மார்கள்தாம்
  • சீரிய துறவொடு சிவிகை ஏறினார்
  • மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே
   
2629.
  • நல் மயில் பொறின் மேல் போய நாளினும்
  • புன்மை உற்று அழுகுரல் மயங்கிப் பூப் பரிந்து
  • இந் நகர் கால் பொரு கடலின் எங்கணும்
  • மன்னனில் ஆகுலம் மயங்கிற்று என்பவே
   
2630.
  • அழுது பின் அணி நகர் செல்ல ஆயிரம்
  • தொழு தகு சிவிகைகள் சூழப் போய பின்
  • இழுது அமை எரி சுடர் விளக்கு இட்ட அன்னவள்
  • பழுது இல் சீர்ப் பம்மை தன் பள்ளி நண்ணினாள்
   
2631.
  • அருந் தவக் கொடிக் குழாம் சூழ அல்லி போல்
  • இருந்து அறம் பகர்வுழி இழிந்து கை தொழுது
  • ஒருங்கு எமை உயக் கொண்மின் அடிகள் என்றாள்
  • கருங் கயல் நெடுந் தடம் கண்ணி என்பவே
   
2632.
  • ஆர் அழல் முளரி அன்ன அருந் தவம் அரிது தானம்
  • சீர் கெழு நிலத்து வித்திச் சீல நீர் கொடுப்பின் தீம் தேன்
  • பார் கெழு நிலத்துள் நாறிப் பல் புகழ் ஈன்று பின்னால்
  • தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள்
   
2633.
  • அறவுரை பின்னைக் கேட்டும் அடிகள் மற்று எமக்கு வல்லே
  • துறவு தந்து அருளுக என்னத் தூ நகர் இழைத்து மேலால்
  • நற விரி தாமம் நாற்றி வானகம் விதானித்து ஆய்ந்து
  • திறவிதின் தவிசு தூபம் திருச் சுடர் விளக்கு இட்டாரே
   
2634.
  • பாலினால் சீறடி கழுவிப் பைந்துகில்
  • நூலினால் இயன்றன நுனித்த வெண்மைய
  • காலனைக் கண் புதைத்து ஆங்கு வெம் முலை
  • மேல் வளாய் வீக்கினார் விதியின் என்பவே
   
2635.
  • தேன் உலாம் மாலையும் கலனும் சிந்துபு
  • பால் நிலாக் கதிர் அன அம் மென் பைந்துகில்
  • தான் உலாய்த் தட முலை முற்றம் சூழ்ந்து அரோ
  • வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார்
   
2636.
  • முன்னுபு கீழ்த் திசை நோக்கி மொய்ம்மலர்
  • நல் நிறத் தவிசின் மேல் இருந்த நங்கைமார்
  • இன் மயிர் உகுக்கிய இருந்த தோகைய
  • பன் மயில் குழாம் ஒத்தார் பாவை மார்களே
   
2637.
  • மணி இயல் சீப்பு இடச் சிவக்கும் வாள் நுதல்
  • அணி இரும் கூந்தலை ஒளவை மார்கள்தாம்
  • பணிவு இலர் பறித்தனர் பரமன் சொன்ன நூல்
  • துணி பொருள் சிந்தியாத் துறத்தல் மேயினார்
   
2638.
  • கன்னியர் ஆயிரர் காய் பொன் கொம்பு அனார்
  • பொன் இயல் படலிகை ஏந்திப் பொன்மயிர்
  • நல் நிலம் படாமையே அடக்கி நங்கைமார்
  • தொல் மயிர் உகுத்த நல் மயிலின் தோன்றினார்
   
2639.
  • பொன் குடம் திரு மணி பொழியப் பெய்த போல்
  • எற்பு உடம்பு எண் இலாக் குணங்களான் நிறைத்து
  • உற்று உடன் உயிர்க்கு அருள் பரப்பி ஓம்பினார்
  • முற்று உடன் உணர்ந்தவன் அமுதம் முன்னினார்
   
2640.
  • புகழ்ந்து உரை மகிழ்ச்சியும் பொற்பு இல் பல் சனம்
  • இகழ்ந்து உரைக்கு இரக்கமும் இன்றி அங்க நூல்
  • அகழ்ந்து கொண்டு அரும் பொருள் பொதிந்த நெஞ்சினார்
  • திகழ்ந்து எரி விளக்கு எனத் திலகம் ஆயினார்
   
2641.
  • அலை மணிக் கவரி மான் தேர் அடு களி யானை பாய்மா
  • நிலம் நெளி கடல் அம் தானை நிரந்து பூச் சுமப்ப மன்னன்
  • சில மலர் தானும் ஏந்திச் சென்று சீர் பெருக வாழ்த்தி
  • இல மலர்ப் பஞ்சிப் பாதத்து எழில் முடி தீட்டினானே
   
2642.
  • கடியவை முன்பு செய்தேன்
  • கண்ணினால் காணச் சில் நாள்
  • அடிகள் இந் நகரின் உள்ளே
  • உறைக என அண்ணல் கூற
  • முடி கெழு மன்னற்கு ஒன்று
  • மறு மொழி கொடாது தேவி
  • படிமம் போன்று இருப்ப நோக்கிப்
  • பம்மை தான் சொல்லினாளே
   
2643.
  • காதலன் அல்லை நீயும் காவல நினக்கு யாமும்
  • ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை என்னத்
  • தாது அலர் தாம மார்பன் உரிமையும் தானும் மாதோ
  • போது அவிழ் கண்ணி ஈர்த்துப் புனல் வரப் புலம்பினானே
   
2644.
  • ஏதிலன் ஆயினாலும் இறைவர் தம் அறத்தை நோக்கக்
  • காதலன் அடிகள் என்னக் கண் கனிந்து உருகிக் காசு இல்
  • மா தவ மகளிர் எல்லாம் மா பெருந் தேவியாரை
  • ஏதம் ஒன்று இல்லை நம்பிக்கு இன் உரை கொடுமின் என்றார்
   
2645.
  • திரை வளர் இப்பி ஈன்ற திருமணி ஆர மார்பின்
  • வரை வளர் சாந்தம் ஆர்ந்த வைரக் குன்று அனைய திண் தோள்
  • விரை வளர் கோதை வேலோய் வேண்டிய வேண்டினேம் என்று
  • உரை விளைத்து உரைப்பக் காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான்
   
2646.
  • அடிகளோ துறக்க ஒன்றும் உற்றவர் யாதும் அல்லர்
  • சுடு துயர் என்கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை
  • கொடியை நீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை என்னா
  • இடர் உற்று ஓர் சிங்கம் தாய் முன் இருந்து அழுகின்றது ஒத்தான்
   
2647.
  • சென்றதோ செல்க இப்பால் திருமகள் அனைய நங்கை
  • இன்று இவள் துறப்ப யான் நின் அரசு உவந்து இருப்பேன் ஆயின்
  • என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம் பொன்
  • குன்று அனான் குளிர்ப்பக் கூறி கோயில் புக்கு அருளுக என்றான்
   
2648.
  • பந்து அட்ட விரலினார் தம் படாமுலை கிழித்த பைந்தார்
  • நந்தட்டன் தன்னை நோக்கி நங்கையார் அடிகள் சொன்னார்
  • நொந்திட்டு முனிய வேண்டா துறந்திலம் நும்மை என்னக்
  • கந்து அட்ட திணி திண் தோளான் கற்பகம் மலர்ந்தது ஒத்தான்
   
2649.
  • துறந்த இந் நங்கைமார் தம் தூ மலர் அனைய பாதம்
  • உறைந்த என் சென்னிப் போதின் மிசைய என்று ஒப்ப ஏத்திக்
  • கறந்த பால் அனைய கந்திக் கொம்பு அடுத்து உருவப் பைம் பூண்
  • பிறங்கு தார் மார்பன் போந்து பெரு மணக் கோயில் புக்கான்
   
2650.
  • வடி நிரை நெடிய கண்ணார் மாமிமார் விடுப்ப ஏகிக்
  • கடி நிரை சிவிகை ஏறிக் கதிர் மணிக் குடை பின் செல்ல
  • உடை திரைப் பரவை அன்ன ஒளிறு வேல் மறவர் காப்பக்
  • கொடி நிரைக் கோயில் புக்கார் குங்குமக் கொடி அனாரே
   
2651.
  • முழுது உலகு எழில் ஏத்தும் மூரி வேல் தானை மன்னன்
  • தொழு தகு பெருமாட்டி தூமணிப் பாவை அன்னாள்
  • பொழி தரு மழை மொக்குள் போகம் விட்டு ஆசை நீக்கி
  • வழி வரு தவம் எய்தி வைகினள் தெய்வம் அன்னாள்