நீர் விளையாட்டு அணி
 
2652.
  • உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்
  • படர் கதிர்த் திங்கள் ஆகப் பரந்துவான் பூத்தது என்னா
  • அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன்
  • குடை கெழு வேந்தற்கு இப்பால் உற்றது கூறல் உற்றேன்
   
2653.
  • துறவின் பால் படர்தல் அஞ்சித் தொத்து ஒளி முத்துத் தாமம்
  • உறைகின்ற உருவக் கோலச் சிகழிகை மகளிர் இன்பத்து
  • இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் அமைச்சர் எண்ணி
  • நிறைய நீர் வாவி சாந்தம் கலந்து உடன் பூரித்தாரே
   
2654.
  • நீர் அணி மாட வாவி நேர்ம் புணை நிறைத்து நீள் நீர்ப்
  • போர் அணி மாலை சாந்தம் புனை மணிச் சிவிறி சுண்ணம்
  • வார் அணி முலையினார்க்கும் மன்னர்க்கும் வகுத்து வாவி
  • ஏர் அணி கொண்ட இந் நீர் இறைவ கண்டு அருளுக என்றார்
   
2655.
  • கணமலை அரசன் மங்கை கட்டியங்காரன் ஆகப்
  • பணை முலை மகளிர் எல்லாம் பவித்திரன் படையது ஆக
  • இணை மலர் மாலை சுண்ணம் எரி மணிச் சிவிறி ஏந்திப்
  • புணை புறம் தழுவித் தூநீர்ப் போர்த் தொழில் தொடங்கினாரே
   
2656.
  • தூமலர் மாலை வாளாச் சுரும்பு எழப் புடைத்தும் தேன் சோர்
  • தாமரைச் சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும்
  • காமரு கணையம் ஆகக் கண்ணிகள் ஒழுக விட்டும்
  • தோமரம் ஆகத் தொங்கல் சிதறுபு மயங்கினாரே
   
2657.
  • அரக்கு நீர்ச் சிவிறி ஏந்தி ஆயிரம் தாரை செல்லப்
  • பரப்பினாள் பாவை தத்தை பைந் தொடி மகளிர் எல்லாம்
  • தரிக்கிலர் ஆகித் தாழ்ந்து தட முகில் குளிக்கும் மின் போல்
  • செருக்கிய நெடுங் கண் சேப்பச் சீத நீர் மூழ்கினாரே
   
2658.
  • தானக மாடம் ஏறித் தையலார் ததும்பப் பாய்வார்
  • வான் அகத்து இழியும் தோகை மட மயில் குழாங்கள் ஒத்தார்
  • தேன் இனம் இரியத் தெண் நீர் குளித்து எழும் திருவின் அன்னார்
  • பால் மிசைச் சொரியும் திங்கள் பனிக் கடல் முளைத்தது ஒத்தார்
   
2659.
  • கண்ணி கொண்டு எறிய அஞ்சிக் கால் தளர்ந்து அசைந்து சோர்வார்
  • சுண்ணமும் சாந்தும் வீழத் தொழுதனர் இரந்து நிற்பார்
  • ஒண் மலர் மாலை ஓச்ச ஒசிந்து கண் பிறழ ஒல்கி
  • வெண்ணெயின் குழைந்து நிற்பார் வேல் கணார் ஆயினாரே
   
2660.
  • கூந்தலை ஒருகை ஏந்திக் குங்குமத் தாரை பாயப்
  • பூந்துகில் ஒருகை ஏந்திப் புகும் இடம் காண்டல் செல்லார்
  • வேந்தனைச் சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கிக்
  • காய்ந்து பொன் சிவிறி ஏந்திக் கார் மழை பொழிவது ஒத்தான்
   
2661.
  • வீக்கினான் தாரை வெய்தாச் சந்தனத் தளிர் நல் மாலை
  • ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவச் சாந்தின்
  • பூக் கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரியப் போர் தோற்று
  • ஆக்கிய அநங்கன் சேனை ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே
   
2662.
  • அன்னங்கள் ஆகி அம் பூந் தாமரை அல்லி மேய்வார்
  • பொன் மயில் ஆகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார்
  • இன் மலர்க் கமலம் ஆகிப் பூ முகம் பொருந்த வைப்பார்
  • மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார்
   
2663.
  • பண் உரை மகளிர் மாலை பைந்துகில் கவர்ந்து கொள்ளக்
  • கண் உரை மகளிர் சேர்ந்து கார் இருள் திவளும் மின் போல்
  • பெண் உரைப் பிடிக்கைக் கூந்தல் பொன் அரி மாலை தாழ
  • வெண் நுரை உடுத்து நின்றார் வேந்தன் நோக்கு உண்ண நின்றார்
   
2664.
  • தன் படை உடையத் தத்தை சந்தனத் தாரை வீக்கி
  • ஒன்பது முகத்தின் ஓடி உறுவலி அகலம் பாயப்
  • பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் தூவான்
  • முன்பு அடு குலிகத் தாரை முழு வலி முறுக்கல் உற்றான்
   
2665.
  • மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சிக்
  • கைப்படை மன்னன் நிற்பக் கதுப்பு அயல் மாலை வாங்கிச்
  • செப்பட முன்கை யாப்பத் திருமகன் தொலைந்து நின்றான்
  • பைப்புடை அல்குலாளைப் பாழியால் படுக்கல் உற்றே
   
2666.
  • அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும் புனல் கவர அஞ்சி
  • உடுத்த பட்டு ஒளிப்ப ஒண்பொன் மேகலை ஒன்றும் பேசா
  • கிடப்ப மற்று அரசன் நோக்கிக் கெட்டது உன் துகில் மற்று என்ன
  • மடத்தகை நாணிப் புல்லி மின்னுச் சேர் பருதி ஒத்தான்
   
2667.
  • விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து
  • கொம் என நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய
  • அம் மலர் உரோமப் பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை
  • செம் மலர்த் திருவின் அன்னார் சிகழிகைச் சேர்த்தினாரே