இருது நுகர்வு
 
2668.
  • கார் கொள் குன்று அன கண் கவர் தோளினான்
  • நீர் கொள் நீர் அணி நின்று கனற்றலின்
  • வார் கொள் மென் முலை வம்பு அணி கோதையார்
  • ஏர் கொள் சாயல் உண்டாடும் மற்று என்பவே
   
2669.
  • முது வேனில்

    வேனில் வாய்க் கதிர் வெம்பலின் மேல் நிலைத்
  • தேன் உலாம் குளிர்ச் சந்தனச் சேற்றிடைத்
  • தான் உலாய்த் தடம் மென் முலைத் தங்கினான்
  • பால் நிலாக் கதிர் பாய்தரு பள்ளியே
   
2670.
  • முழுதும் மெய்ந் நலம் மூழ்கலின் நீர் சுமந்து
  • எழுது கண் இரங்கப் புருவக் கொடி
  • தொழுவ போல் முரியச் சொரி பூஞ் சிகை
  • அழுவ போன்று அணி நித்திலம் உக்கவே
   
2671.
  • எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை
  • பழுத்த கற்பகப் பன் மணிக் கொம்பு அனார்
  • அழுத்தி அன்ன அணிவளைத் தோள் மிசைக்
  • கழிக்கும் ஐங் கணைக் காமற்கும் காமனே
   
2672.
  • கார்

    நீர் துளும்பு வயிற்றின் நிழல் முகில்
  • பார் துளும்ப முழங்கலின் பல் கலை
  • ஏர் துளும்ப வெரீஇ இறைவன் தழீஇக்
  • கார் துளும்பு கொம்பின் கவின் எய்தினார்
   
2673.
  • இழிந்து கீழ்நிலை இன் அகில் சேக்கை மேல்
  • கிழிந்து சாந்து அழியக் கிளர் மென் முலை
  • தொழிந்து மட்டு ஒழுகத் துதை தார் பொர
  • அழிந்த மேகலை அம் சிலம்பு ஆர்த்தவே
   
2674.
  • தேன் இறால் அன தீம் சுவை இன் அடை
  • ஆன் அறா முலைப் பால் அமுது அல்லது ஒன்
  • றானும் மேவலர் அச்சுறவு எய்திய
  • மான் அறா மட நோக்கியர் என்பவே
   
2675.
  • கூதிர்

    கூதிர் வந்து உலாவலின் குவவு மென் முலை
  • வேது செய் சாந்தமும் வெய்ய தேறலும்
  • போது அவிழ் மாலையும் புகையும் சுண்ணமும்
  • காதலித்தார் கருங் குவளைக் கண்ணினார்
   
2676.
  • சுரும்பு நின்று அறா மலர்த் தொங்கலார் கவின்
  • அரும்பு கின்றார் கடல் அமிர்தமே எனா
  • விரும்பு கின்றான் இளவேனில் வேந்தன் ஐஞ்
  • சரங்கள் சென்று அழுத்தலின் தரணி மன்னனே
   
2677.
  • குழை முகம் இடவயின் கோட்டி ஏந்திய
  • அழல் நிறத் தேறல் உள் மதி கண்டு ஐ என
  • நிழல் முகப் பகை கெடப் பருகி நீள் விசும்பு
  • உழல் எனா நோக்குவாள் மதி கண்டு ஊடினாள்
   
2678.
  • பருகினேற்கு ஒளித்து நீ பசலை நோயொடும்
  • உருகிப் போய் இன்னும் அற்று உளை என்று உள் சுடக்
  • குருதி கண் கொளக் குணமாலை ஊடினாள்
  • உருவத் தார் உறத் தழீஇ உடற்றி நீக்குவான்
   
2679.
  • நங்கை நின் முக ஒளி எறிப்ப நல்மதி
  • அங்கு அதோ உள் கருத்து அழகின் தேய்ந்தது
  • மங்கை நின் மனத்தினால் வருந்தல் என்று அவள்
  • பொங்கு இள வன முலை பொருந்தினான் அரோ
   
2680.
  • முன்பனி

    கொங்கு விம்மு பூங் கோதை மாதரார்
  • பங்கயப் பகைப் பருவம் வந்து என
  • எங்கும் இல்லன எலி மயிர்த் தொழில்
  • பொங்கு பூம் புகைப் போர்வை மேயினார்
   
2681.
  • கூந்தல் இன் புகைக் குவவு மென் முலைச்
  • சாந்தம் ஏந்திய தமால மாலையும்
  • ஆய்ந்து தாங்கினார் அரவ மேகலை
  • காய்ந்து நித்திலம் கடிய சிந்தினார்
   
2682.
  • அளிந்த தீம் பழம் இஞ்சி ஆர்ந்த நீர்
  • விளைந்த வல் விளைவு அரிசி வேரியும்
  • வளைந்த மின் அனார் மகிழ்ந்து சண்பகம்
  • உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார்
   
2683.
  • தொத்து உடை மலர்த் தொங்கல் கண் பொர
  • முத்து உடை முலைக் கண் கண் நொந்த என்று
  • எய்த்து அடிச் சிலம்பு இரங்கும் இன் குரல்
  • கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்ததே
   
2684.
  • பொன் பனிப்பு உறும் பொற்பினார் நலம்
  • அன்பன் இத்தலை அணங்க அத்தலை
  • முன் பனித் தலை முழுதும் நீங்கிப் போய்ப்
  • பின் பனித்தலை பேண வந்ததே
   
2685.
  • பின் பனி

    வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண் மலர்க்
  • கள் செய் மாலையார் கண் கொளாத் துகில்
  • அள்ளி ஏந்திய அரத்த அல்குலார்
  • ஒள் எரிம் மணி உருவப் பூணினார்
   
2686.
  • செந் நெருப்பு உணும் செவ் எலி மயிர்
  • அந் நெருப்பு அளவு ஆய் பொன் கம்பலம்
  • மன்னர் உய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
  • என்னர் ஒப்பும் இல்லவர்கள் என்பவே
   
2687.
  • ஆடல் இன் சுவை அமர்ந்து நாள் தொறும்
  • பாடல் மெய்ந் நிறீஇப் பருகிப் பண் சுவைத்து
  • ஓடு மா மதி உரிஞ்சும் ஒண்பொனின்
  • மாடக் கீழ் நிலை மகிழ்ந்து வைகினார்
   
2688.
  • புரிக் குழல் மடந்தையர் பொம்மல் வெம் முலை
  • திருக் கழல் குருசில் தார் திளைக்கும் போரினுள்
  • செருக் குரல் சிறு பறை சிலம்பு கிண்கிணி
  • அரிப் பறை மேகலை ஆகி ஆர்த்தவே
   
2689.
  • ஏச் செயாச் சிலை நுதல் ஏழைமார் முலைத்
  • தூச் செயாக் குங்குமம் துதைந்த வண்டு இனம்
  • வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர் தம்
  • பூச் செயா மேனி போல் பொலிந்து தோன்றுமே
   
2690.
  • இளவேனில்

    குரவம் பாவை கொப்புளித்துக்
  • குளிர் சங்கு ஈர்ந்த துகளே போல்
  • மரவம் பாவை வயிறு ஆரப்
  • பருகி வாடை அது நடப்ப
  • விரவித் தென்றல் விடு தூதா
  • வேனிலாற்கு விருந்து ஏந்தி
  • வரவு நோக்கி வயா மரங்கள் இலை
  • ஊழ்த்து இணர் ஈன்று அலர்ந்தனவே
   
2691.
  • இளி வாய்ப் பிரசம் யாழ் ஆக
  • இரும் கண் தும்பி குழல் ஆகக்
  • களிவாய்க் குயில்கள் முழவு ஆகக்
  • கடிபூம் பொழில்கள் அரங்கு ஆகத்
  • தளிர் போல் மடவார் தணந்தார்
  • தம் தடம் தோள் வளையும் மாமையும்
  • விளியாக் கொண்டு இங்கு இள
  • வேனில் விருந்தா ஆடல் தொடங்கினான்
   
2692.
  • வேனில் ஆடும் விருப்பினால்
  • வியன் காய் நெல்லிச் சாந்து அரைத்து
  • நான எண்ணெய் கதுப்பு உரைத்து
  • நறுநீர் ஆடி அமிர்து உயிர்க்கும்
  • தேன் ஆர் அகிலின் புகை சேர்த்தி
  • வகுத்து நாவிக் குழம்பு உறீஇ
  • ஆனாப் பளித நறுஞ் சுண்ணம்
  • உகிரின் உழுது ஆங்கு அணிந்தாரே
   
2693.
  • முத்தார் மருப்பின் இடை வளைத்த
  • முரண் கொள் யானைத் தடக்கையின்
  • ஒத்தேர் உடைய மல்லிகையின்
  • ஒலியல் மாலை உறுப்பு அடக்கி
  • வைத்தார் மணி நூற்றன ஐம்பால்
  • வளைய முடித்து வான் கழுநீர்
  • உய்த்து ஆங்கு அதனுள் கொள
  • அழுத்திக் குவளை செவித் தாது உறுத்தாரே
   
2694.
  • புகை ஆர் வண்ணப் பட்டு உடுத்துப்
  • பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து
  • நகை ஆர் கவுள கிண்கிணியும்
  • சிலம்பும் நாய் நாச் சீறடி மேல்
  • பகை கொண்டார் போல் சுமாஅய்க் கண்பின்
  • பரூஉக் காம்பு அனைய கணைக் கால் சூழ்ந்து
  • அகை ஆர்ந்து இலங்கும்
  • பரியகம் தாமே கவினச் சேர்த்தினார்
   
2695.
  • பிடிக்கை வென்று கடைந்தன போல்
  • பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு
  • கடித்துக் கிடந்து கவின் வளரும்
  • காய் பொன் மகரம் கதிர் முலை மேல்
  • உடுத்த சாந்தின் மிசைச் செக்கர்
  • ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்பத்
  • துடிக்கும் கதிர் சேர் துணை முத்தம்
  • திருவில் உமிழ்ந்து சுடர்ந்தனவே
   
2696.
  • குழியப் பெரிய கோல் முன்கை
  • மணி ஆர் காந்தள் குவி விரல் மேல்
  • கழியப் பெரிய அருவிலைய
  • சிறிய மணி மோதிரம் கனலத்
  • தழியப் பெரிய தட மென் தோள்
  • சலாகை மின்னத் தாழ்ந்து இலங்கும்
  • விழி கண் மகர குண்டலமும்
  • தோடும் காதில் மிளர்ந்தனவே
   
2697.
  • நாண் உள் இட்டுச் சுடர் வீச
  • நல் மாணிக்க நகுதாலி
  • பேணி நல்லார் கழுத்து அணிந்து
  • பெருங் கண் கருமை விருந்து ஊட்டி
  • நீள் நீர் முத்தம் நிரை முறுவல்
  • கடுச் சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து
  • தோள் நீர்க் கடலுள் பவள வாய்த்
  • தொண்டைக் கனிகள் தொழுதனவே
   
2698.
  • மாலை மகளிர் அணிந்ததன் பின்
  • பஞ்ச வாசம் கவுள் கொண்டு
  • சோலை மஞ்ஞைத் தொழுதி போல்
  • தோகை செம் பொன் நிலம் திவளக்
  • காலில் சிலம்பும் கிண்கிணியும்
  • கலையும் ஏங்கக் கதிர் வேலும்
  • நீலக் குவளை நிரையும் போல்
  • கண்ணார் காவில் இருந்தாரே
   
2699.
  • மணி வண்டு ஒன்றே நலம் பருக
  • மலர்ந்த செந் தாமரைத் தடம் போலத்
  • அணிவேல் மன்னன் நலம் பருக
  • அலர்ந்த அம்பு ஆர் மழைக் கண்ணார்
  • பணி ஆர் பண்ணுப் பிடி ஊர்ந்து
  • பரூஉக் கால் செந் நெல் கதிர் சூடித்
  • தணியார் கழனி விளையாடித்
  • தகை பாராட்டத் தங்கினார்
   
2700.
  • எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று
  • எழுந்து நான நீர் வளர்ந்து
  • வண்ணக் குவளை மலர் அளைஇ
  • மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
  • உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்
  • ஒலியல் மாலை புறம் தாழக்
  • கண்ணக் கழு நீர் மெல் விரலால்
  • கிழித்து மோந்தார் கனி வாயார்