புதல்வர்ப் பேறு
 
2701.
  • இவ்வாறு எங்கும் விளையாடி
  • இளையான் மார்பின் நலம் பருகிச்
  • செவ்வாய் விளர்த்துத் தோள் மெலிந்து
  • செய்ய முலையின் முகம் கருகி
  • அவ்வாய் வயிறு கால் வீங்கி
  • அனிச்ச மலரும் பொறை ஆகி
  • ஒவ்வாப் பஞ்சி மெல் அணை மேல்
  • அசைந்தார் ஒண் பொன் கொடி அன்னார்
   
2702.
  • தீம் பால் சுமந்து முலை வீங்கித்
  • திருமுத்து ஈன்ற வலம்புரி போல்
  • காம்பு ஏர் தோளார் களிறு ஈன்றார்
  • கடைகள் தோறும் கடி முரசம்
  • தம் பால் பட்ட தனிச் செங் கோல்
  • தரணி மன்னன் மகிழ் தூங்கி
  • ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி
  • உலகம் உண்ணச் சிதறினான்
   
2703.
  • காடி ஆட்டித் தராய்ச் சாறும்
  • கன்னல் மணியும் நறு நெய்யும்
  • கூடச் செம் பொன் கொளத் தேய்த்துக்
  • கொண்டு நாளும் வாய் உறீஇப்
  • பாடற்கு இனிய பகுவாயும்
  • கண்ணும் பெருக உகிர் உறுத்தித்
  • தேடித் தீம் தேன் திப்பிலி தேய்த்து
  • அண்ணா உரிஞ்சி மூக்கு உயர்த்தார்
   
2704.
  • யாழும் குழலும் அணி முழவும்
  • அரங்கம் எல்லாம் பரந்து இசைப்பத்
  • தோழன் விண்ணோன் அவண் தோன்றி
  • வயங்காக் கூத்து வயங்கிய பின்
  • காழ் ஆர் வெள்ளி மலை மேலும்
  • காவல் மன்னர் கடி நகர்க்கும்
  • வீழா ஓகை அவன் விட்டான்
  • விண் பெற்றாரின் விரும்பினார்
   
2705.
  • தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும்
  • வைத்து வழுஇல் சாதகமும் வகுத்த பின்னர்த் தொகுத்த நாள்
  • சச்சந்தணனே சுதஞ்சணனே தரணி கந்துக் கடன் விசயன்
  • தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே
   
2706.
  • ஐ ஆண்டு எய்தி மை ஆடி
  • அறிந்தார் கலைகள் படை நவின்றார்
  • கொய் பூ மாலை குழல் மின்னும்
  • கொழும் பொன் தோடும் குண்டலமும்
  • ஐயன் மார்கள் துளக்கு இன்றி
  • ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார்
  • மொய்யார் அலங்கல் மார்பற்கு
  • முப்பது ஆகி நிறைந்ததே