அறிவர் சிறப்பு
 
2737.
  • ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவு இன்றி விடாது நாறும்
  • பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய்
  • அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டித்
  • திரு விழை துகிலும் பூணும் திறப்படத் தாங்கினாரே
   
2738.
  • நல் தவம் செய்த வீரர் உள வழி நயந்து நாடும்
  • பொற்ற தாமரையினாளின் பூஞ் சிகை முத்தம் மின்னக்
  • கொற்றவன் தொழுது சேர்ந்தார் கொம்பு அனார் வாமன் கோயில்
  • மற்று அவன் மகிழ்ந்து புக்கு மணி முடி துளக்கினானே
   
2739.
  • கடி மலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்து
  • அடி மலர் சூடியவர் உலகில் யாரே
  • அடி மலர் சூடியவர் உலகம் ஏத்த
  • வடி மலர் தூவ வருகின்றார் அன்றே
   
2740.
  • முத்து அணிந்த முக் குடைக் கீழ் மூர்த்தி திருவடியைப்
  • பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
  • பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின்
  • நித்தில வெண் குடைக் கீழ் நீங்காதார் அன்றே
   
2741.
  • கருமக் கடல் கடந்த கை வலச் செல்வன்
  • எரி மலர்ச் சேவடியை ஏத்துவார் யாரே
  • எரி மலர்ச் சேவடியை ஏத்துவார் வான் தோய்
  • திரு முத்து அவிர் ஆழிச் செல்வரே அன்றே
   
2742.
  • வண்ண மா மலர் மாலை வாய்ந்தன
  • சுண்ணம் குங்குமம் தூமத்தால் புனைந்து
  • அண்ணல் சேவடி அருச்சித்தான் அரோ
  • விண் இல் இன்பமே விழைந்த வேட்கையான்