பெறுதற்கு அருமை
 
2749.
  • பரவை வெண் திரை வட கடல் படுநுகத் துளையுள்
  • திரை செய் தென் கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி
  • அரச அத்துளை அக வயின் செறிந்து என அரிதால்
  • பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறலே
   
2750.
  • விண்டு வேய் நரல் ஊன் விளை கானவர் இடனும்
  • கொண்டு கூர்ம் பனி குலைத்திடும் நிலைக்களக் குறும்பும்
  • உண்டு நீர் என உரையினும் அரியன ஒருவி
  • மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே
   
2751.
  • வில்லின் மாக் கொன்று வெள் நிணத் தடி விளிம்பு அடுத்த
  • பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
  • எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
  • நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே
   
2752.
  • கருவி மா மழை கனை பெயல் பொழிந்து என வழிநாள்
  • அருவி போல் தொடர்ந்து அறாதன அரும் பிணி அழலுள்
  • கருவில் காய்த்திய கட்டளைப் படிமையில் பிழையாது
  • உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே
   
2753.
  • காமன் அன்னது ஓர் கழிவனப்பு அறிவொடு பெறினும்
  • நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி
  • வாமன் நூல் நெறி வழு அறத் தழுவினர் ஒழுகல்
  • ஏம வெண் குடை இறைவ மற்று யாவதும் அரிதே