தானப் பயன்
 
2829.
  • கூற்று நா அலறுவது அனைய கூர் இலை
  • ஏற்ற நீர்த் துளும்பு வாள் இறைவ ஈங்கு இனிப்
  • போற்றினை கேள்மதி பொரு இல் புண்ணியர்க்கு
  • ஆற்றிய கொடைப் பயன் அறியக் கூறுவாம்
   
2830.
  • கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை துரந்து
  • அடுத்து வார் மயிர்த் துதி அலற ஊதலின்
  • பொடித்த பொன் தாமரை அனைய பொங்கு அழல்
  • இடைக் கிடந்து எவ்வளவு இரும்பு காய்ந்ததுவே
   
2831.
  • காய்ந்த அவ் அளவினால் கௌவும் நீரது ஒத்து
  • ஆய்ந்து அறி கொடையினது அளவில் புண்ணியம்
  • தோய்ந்து உயிர் உடம்பு இவண் ஒழியத் தொக்க நாள்
  • வீந்து போய் வயிற்று அகம் விதியின் எய்துமே
   
2832.
  • திங்கள் ஒன்பதும் வயிற்றில் சேர்ந்த பின்
  • வங்க வான் துகில் பொதி மணி செய் பாவை போல்
  • அங்கு அவர் இரட்டைகள் ஆகித் தோன்றலும்
  • சிங்கினார் இரு முது குரவர் என்பவே
   
2833.
  • இற்று அவர் தேவராய்ப் பிறப்ப ஈண்டு உடல்
  • பற்றிய விசும்பு இடைப் பரவும் மா முகில்
  • தெற்று என வீந்து எனச் சிதைந்து போகுமால்
  • மற்ற அம் மக்கள் தம் வண்ணம் செப்புவாம்
   
2834.
  • பிறந்த அக் குழவிகள் பிறர்கள் யாவரும்
  • புறந்தரல் இன்றியே வளர்ந்து செல்லும் நாள்
  • அறைந்தனர் ஒன்று இலா ஐம்பது ஆயிடை
  • நிறைந்தனர் கலை குணம் உறுப்பு நீரவே
   
2835.
  • சோலை மீன் அரும்பித் திங்கள் சுடரொடு பூத்ததே போல்
  • மாலையும் கலனும் ஈன்று வடகமும் துகிலும் நான்று
  • காலையும் இரவும் இல்லாக் கற்பக மரத்தின் நீழல்
  • பாலை யாழ் மழலை வேறாய்ப் பல் மணிக் கொம்பின் நின்றாள்
   
2836.
  • இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள் மேல்
  • நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்னக்
  • கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பக மாலை தாழக்
  • விலங்கு அரசு அனைய காளை வேனில் வேந்து என்னச் சேர்ந்தான்
   
2837.
  • குண்டலம் குலவி மின்னப் பொன்னரி மாலை தாழத்
  • தெண் கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப
  • விண்டு அலர் மாலை மார்பன் விதியினால் சென்று மாதோ
  • கண்டனன் கலந்த உள்ளம் காதலின் ஒருவர் ஆனார்
   
2838.
  • கொதி நுனைக் காமன் அம்பு கொப்புளித்து உமிழ்ந்து காமம்
  • மதுநிறை பெய்து விம்மும் மணிக் குடம் இரண்டு போல
  • நுதி முகம் முத்தம் சூடி நோக்குநர் ஆவி வாட்ட
  • விதி முலை வெய்ய ஆகித் தாரொடு மிடைந்த அன்றே
   
2839.
  • இமைத்த நும் கண்கள் என்னை இகழ்ந்தனிர் என்று சீற
  • அமைத்து நின் அழகு கோலம் ஆர உண்டு அறுக்கல் ஆற்றாது
  • இமைத்தன வஞ்சி என்ன இளையவள் சிலம்பில் குஞ்சி
  • நமைத்த பூந் தாமம் தோய நகைமுக விருந்து பெற்றான்
   
2840.
  • இன் நகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும்
  • பொன் மலர்க் காவு புக்கும் புரிமணி வீணை ஓர்த்தும்
  • நல் மலர் நான வாவி நீர் அணி நயந்தும் செல்வத்
  • தொல் நலம் பருகிக் காமத் தொங்கலால் பிணிக்கப் பட்டார்
   
2841.
  • பூ முற்றும் தடம் கண்ணாளும் பொன் நெடுங் குன்று அனானும்
  • காமுற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்தத்
  • தாம் உற்றுக் கழிப்பர் தானம் இடையது செய்த நீரார்
  • ஏமுற்றுக் கரும பூமி இருநிதிக் கிழமை வேந்தே
   
2842.
  • அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த்
  • தடம் கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி
  • உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ் கனி மாந்தி வாழ்வர்
  • மடங்கல் அம் சீற்றத் துப்பின் மான வேல் மன்னர் ஏறே