பிறவிகள் அறவுரை
 
2848.
  • மாதவன் எனப் பெயர் வரையின் அவ்வரை
  • ஏதம் இல் எயிறு அணி பவள வாய்த் தொடுத்து
  • ஆதியில் அறவுரை அருவி வீழ்ந்து என
  • மா துயர் மலம் கெட மன்னன் ஆடினான்
   
2849.
  • எல்லை இல் அறவுரை இனிய கேட்ட பின்
  • தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும்
  • வல்லையே பணிமின் அம் அடிகள் என்றனன்
  • மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான்
   
2850.
  • கதிர் விடு திருமணி அம் கைக் கொண்டது ஒத்து
  • எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும்
  • அதிர்வு அறு தவ விளக்கு எறிப்பக் கண்டவன்
  • பதர் அறு திருமொழி பணிக்கும் என்பவே
   
2851.
  • முழு நீர் வளை மேய்தலின் முத்து ஒழுகிப்
  • பொழி நீர் நிலவின் இருள் போழ்ந்து அரிசிக்
  • கழு நீர் ஒழுகக் கழு நீர் மலரும்
  • தழு நீரது தாதகி என்று உளதே
   
2852.
  • கயல் பாய்ந்து உகளக் கடி அன்னம் வெரீஇ
  • வியன் நீள் சுடர் வெண் மதி சேர்வது போல்
  • அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும்
  • வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தனவே
   
2853.
  • அவணத்தவர் கூந்தல் அகில் புகையைச்
  • சிவணிச் சிறுகால் கமுகம் பொழில் சேர்ந்து
  • உவண் உய்த்திட மஞ்சு என நின்று உலவும்
  • பவணத்து ஒரு பாங்கினதால் அளிதோ
   
2854.
  • மதியும் சுடரும் வழி காணல் உறாப்
  • பொதியும் அகிலின் புகையும் கொடியும்
  • நிதியின் கிழவன் இனிதா உறையும்
  • பதி பொன் நகரின் படி கொண்டதுவே
   
2855.
  • ஏமம் ஆகிய துப்புரவு எய்திய
  • பூமி மா திலகம் எனும் பொன் கிளர்
  • நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம்
  • காம வல்லி கிடந்தன போன்றவே
   
2856.
  • பைங் கழல் மன்னர் மன்னன் பவணமா தேவன் என்பான்
  • சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி
  • ஐங் கணைக் காமன் அன்னான் அசோதரன் அரச சீயம்
  • தங்கிய கேள்வியாற்குத் தையலார்ச் சேர்த்தினாரே
   
2857.
  • இள முலை பொருது தேம் தார் எழில் குழைந்து அழிய வைகிக்
  • கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும்
  • வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன்
  • விளை மதுத் தேறல் மாந்தி வெற்றிப் போர் அநங்கன் ஆனான்
   
2858.
  • இலங்கு அரி பரந்த வாள் கண் இளையவர் புலவி நீங்கச்
  • சிலம்பு எனும் வண்டு பாடச் சீறடிப் போது புல்லி
  • அலங்கல் வாய்ச் சென்னி சேர்த்தி அரிமதர் மழைக் கண் பில்க
  • நலம் கவர்ந்து உண்டு நண்ணார் நாம் உறக் கழிக்கும் மாதோ
   
2859.
  • மங்கையர் தம்மொடு மடங்கல் மொய்ம்பினான்
  • பங்கயப் பனித் தடம் சேரப் பார்ப்பு அனம்
  • செங் கயல் பேர் இனம் இரியச் செவ்வனே
  • பொங்கி மேல் பறந்து விண் புதைந்தது என்பவே
   
2860.
  • வேய்ந்த வெண் தாமரைக் கோதை போல
  • விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம்
  • ஆய்ந்த முகில் ஆடைத் திங்கள் கண்ணி
  • ஆகாயம் என்னும் அரிவை சாயல்
  • தோய்ந்த தன் காதலன் பற்ற அற்றுச்
  • சொரிகின்ற மேகலை போல் வீழ்ந்த வாளை
  • பாய்ந்து துகைப்பக் கிழிந்த கூழைப்
  • பனித் தாமரை சூழ் பகல் கோயிலே
   
2861.
  • விரும்பு பொன் தட்டிடை வெள்ளிக் கிண்ணம் ஆர்ந்து
  • இருந்தன போன்று இள அன்னப் பார்ப்பு இனம்
  • பொருந்து பொன் தாமரை ஒடுங்கிப் புக்கு ஒளித்து
  • இருந்த கண்டான் இளங் கோக்கள் நம்பியே
   
2862.
  • உரிமையுள் பட்டிருந்து ஒளிக்கின் றார்களைப்
  • பெரும நீ கொணர்க எனப் பேசு காஞ்சுகி
  • ஒரு மகற்கு ஈந்தனன் கோயில் புக்கனன்
  • எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே
   
2863.
  • வட மலைப் பொன் அனார் மகிழ்ந்து தாமரைத்
  • தடம் உறைவீர்க்கு இவை தடங்கள் அல்லவே
  • வட முலை என நடாய் வருடிப் பால் அமுது
  • உடன் உறீஇ ஓம்பினார் தேம் பெய் கோதையார்
   
2864.
  • கண்டான் ஒரு நாள் கதிர் மா முடி மன்னர் மன்னன்
  • தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே
  • ஒண் தார் இளங்கோ என்று உழையவர் கூற வல்லே
  • கொண்டு ஈங்கு வம்மின் கொலை வேலவன் தன்னை என்றான்
   
2865.
  • படு கண் முழவும் பசும் பொன் மணி யாழும் ஏங்க
  • இடுகும் நுசுப்பினவர் ஆட இருந்த நம்பி
  • அடிகட்கு அடிகள் அருள் இற்று என்று இறைஞ்ச வல்லே
  • கடி விம்மு தாரான் கழல் கையின் தொழுது சேர்ந்தான்
   
2866.
  • அணி சேர் இடக்கை விரலால் வலத் தோள்
  • மணி சேர் வளை வாய்வதின் வைத்து வலத்து
  • அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையாப்
  • பணியா முடியால் பணிந்தான் இளையோன்
   
2867.
  • கிளைப் பிரிவு அருஞ் சிறை இரண்டும் கேட்டியேல்
  • வினளக்கிய வித்து அனாய் இரு மற்று ஈங்கு எனத்
  • திளைக்கும் மா மணிக் குழை சுடரச் செப்பினான்
  • வளைக் கையார் கவரி கொண்டு எறிய மன்னனே
   
2868.
  • அறம் பெரிய கூறின் அலங்கல் அணி வேலோய்
  • மறம் புரி கொள் நெஞ்சம் வழியாப் புகுந்து ஈண்டிச்
  • செறும் பெரிய தீ வினைகள் சென்று கடிது ஓடி
  • உறும் பெரிய துன்பம் உயிர்க் கொலையும் வேண்டா
   
2869.
  • மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள்
  • ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும்
  • மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர்
  • பொய் உரையும் வேண்டா புறத்து இடுமின் என்றான்
   
2870.
  • முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற
  • அளவில் துயர் செய்வர் இவண் மன்னர் அதனாலும்
  • விளைவு அரிய மா துயரம் வீழ் கதியுள் உய்க்கும்
  • களவு கடன் ஆகக் கடிந்திடுதல் சூதே
   
2871.
  • மடத்தகைய நல்லார் மனம் கரிய மாற்றார்
  • பிடர்த்தலை ஒள் வாள் போல் பிறர் மனைகள் சேரின்
  • எடுப்ப அரிய துன்பத்து இடைப் படுவர் இன்னா
  • நடுக்கு உடைய காமம் விடுத்திடுதல் நன்றே
   
2872.
  • தெருளின் பொருள் வான் உலகம் ஏறுதற்குச் செம்பொன்
  • இருளில் படு கால் புகழ் வித்து இல்லை எனின் எல்லா
  • அருளும் நக வையம் நக ஐம் பொறியும் நையப்
  • பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே
   
2873.
  • பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம்
  • மை படும் வினைத் துகள் வழக்கு நெறி மாயம்
  • செய்த பொருள் பெய்த கலன் செம்மை சுடு செந் தீக்
  • கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான்
   
2874.
  • காமம் உடையார் கறுவொடு ஆர்வம் உடையாரும்
  • தாமமொடு சாந்து புனைவார் பசியின் உண்பார்
  • ஏமம் உடையார்கள் இவர் அல்லர் இவை இல்லா
  • வாமன் அடி அல்ல பிற வந்தியன்மின் என்றான்
   
2875.
  • பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பல் மா
  • யாவை அவை தம் கிளையின் நீங்கி அழ வாங்கிக்
  • காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கிப்
  • போவர் புகழ் நம்பி இது பொற்பிலது கண்டாய்
   
2876.
  • அல்லித் தாள் அற்ற போதும் அறாத நூலதனைப் போலத்
  • தொல்லைத் தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்
  • புல்லிக் கொண்டு உயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்று
  • எல்லையில் துன்ப வெம் தீச் சுட்டு எரித்திடுங்கள் அன்றே
   
2877.
  • அறவிய மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அருளைச் செய்யின்
  • பறவையும் நிழலும் போலப் பழவினை உயிரோடு ஆடி
  • மறவி ஒன்றானும் இன்றி மனத்ததே சுரக்கும் பால
  • கறவையின் கறக்கும் தம்மால் காமுறப் பட்ட எல்லாம்
   
2878.
  • நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர்த்
  • தொடு மணிக் குவளைப் பட்டம் துணையொடு நினைப்பதே போல்
  • கடுமணிக் கயல் கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து
  • அடு மணி ஆவி நீப்பார் அறிவினால் சிறிய நீரார்
   
2879.
  • வீறு அழி வினை செய் காலன் வைர வாள் வலையில் பட்டால்
  • சாறு அழி குவளை மாலையவரையும் தனமும் நீக்கி
  • ஆறு இழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் செம் பொன்
  • ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார்
   
2880.
  • துன்னி மற்று அறத்தைக் கேட்டே துகில் நெருப்பு உற்றதே போல்
  • மின்னுத் தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகிப் பெண்பால்
  • அன்னப் பார்ப்பு அன்று கொண்ட தடத்து இடை விடுவித்து இட்டான்
  • பின்னைத் தன் கிளைகள் கூட்டம் பெருந் தகை வித்தினானே
   
2881.
  • மெய்ப்படு முது புண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல
  • ஒப்புடைக் காமம் தன்னை உவர்ப்பினோடு ஒழித்துப் பாவம்
  • இப்படித்து இது என்று அஞ்சிப் பிறவி நோய் வெருவினானே
  • மைப்படு மழைக் கண் நல்லார் வாய்க் கொண்ட அமுதம் ஒப்பான்
   
2882.
  • ஆளியால் பாயப் பட்ட அடு களி யானை போல
  • வாளி வில் தடக்கை மைந்தன் வாய் விட்டு புலம்பிக் காம
  • நாளினும் நஞ்சு துய்த்தேன் நச்சு அறை ஆக நன் பொன்
  • தோளியர்த் துறந்து தூய்தாத் தவம் செய்வல் அடிகள் என்றான்
   
2883.
  • சிறுவன் வாய் மொழியைக் கேட்டே
  • தேர் மன்னன் தானும் சொன்னான்
  • உறு களிற்று உழவ மற்று உன்
  • ஒளி முடித் தாயம் எய்தி
  • அறை கடல் வேலி காத்து உன்
  • அலங்கல் வேல் தாயம் எல்லாம்
  • பெறு தகு புதல்வற்கு ஈந்து
  • பின்னை நீ துறத்தி என்றான்
   
2884.
  • கொலைச் சிறை உய்ந்து போகும் ஒருவனைக் குறுக ஓடி
  • அலைத்தனர் கொண்டு பற்றி அருஞ் சிறை அழுத்துகின்றார்
  • தொலைப்ப அருஞ் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன
  • விலைப் பெரு மணியை முந்நீர் நடுக்கடல் வீழ்த்தது ஒத்தான்
   
2885.
  • காதலம் அல்லம் மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள்
  • ஏதிலம் யாங்கள் எல்லாம் இனிக் கொளும் உடம்பினானும்
  • ஆதலால் சுற்றம் இல்லை அது பட்டவாறு என்று அம் பூந்
  • தாது அலர் மார்பன் அற்புத் தளை அறப் பரிந்திட்டானே
   
2886.
  • நல் பொறி குயிற்றி வல்லான் செய்தது ஓர் நன் பொன் பாவை
  • பொன் பொறி கழல எல்லாப் பொறிகளும் கழல்வதே போல்
  • சொல் பொறி சோர எல்லாப் பொறிகளும் சோர்ந்து நம்பன்
  • இல் பொறி இன்பம் நீக்கி இரு ஆயிரர் சூழச் சென்றான்
   
2887.
  • தணக்கு இறப் பறித்த போதும் தான் அளை விடுத்தல் செல்லா
  • நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும்
  • மணம் புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆகக்
  • கணைக் கவின் அழித்த கண்ணார்த் துறந்து போய்க் கடவுள் ஆனான்
   
2888.
  • துமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும்
  • தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதித் திருவும் ஆர்ந்த
  • காமம் மாசு உண்ட காதல் கதிர் வளைத் தோளினாரும்
  • நாமம் நால் கதியும் அஞ்சி நல் தவத்து உச்சி கொண்டார்
   
2889.
  • ஆசாரம் நாணத் தவம் செய்து அலர்க் கற்பகத் தார்ச்
  • சாசாரன் என்னும் தகை சால் ஒளித் தேவர் கோவாய்
  • மாசாரம் ஆய மணி வான் உலகு ஆண்டு வந்தாய்
  • தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு என்றான்
   
2890.
  • மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள்
  • மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறை வைத்த அதனால்
  • பொன் ஆர மார்ப சிறைப் பட்டனை போலும் என்றான்
  • இன்னாப் பிறவிப் பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான்
   
2891.
  • மஞ்சு இவர் மணி வரை அனைய மாதவன்
  • வஞ்சம் இல் அறவுரை பொதிந்த வாய் மொழி
  • அஞ்சினன் இருந்துழி அம்பு வீழ்ந்து என
  • நஞ்சு உமிழ் வேலினான் நடுங்க வீழ்ந்ததே
   
2892.
  • வார் அணி மணித் துடி மருட்டும் நுண் இடைக்
  • கார் அணி மயில் அனார் சூழக் காவலன்
  • ஏர் அணி மணி முடி இறைஞ்சி ஏத்தினான்
  • சீர் அணி மாதவர் செழும் பொன் பாதமே
   
2893.
  • நலத் திரு மட மகள் நயந்த தாமரை
  • நிலத்து இருந்து இரு சுடர் நிமிர்ந்து செல்வ போல்
  • உலப்பு அருந் தவத்தினால் ஓங்கு சாரணர்
  • செலத் திரு விசும்பு ஒளி சிறந்தது என்பவே