துறவு உணர்த்தல்
 
2918.
  • செம் பொனால் செறிய வேய்ந்து
  • திருமணி முகடு கொண்ட
  • வெம்பு நீள் சுடரும் சென்னி
  • விலங்கிய மாடம் எய்தி
  • அம் பொனால் தெளிந்த பாவை
  • அனையவர்த் தம்மின் என்றான்
  • பைம் பொனால் வளர்க்கப் பட்ட
  • பனை திரண்டு அனைய தோளான்
   
2919.
  • தின் பளித மாலைத் திரள் தாமம் திகழ் தீம் பூ
  • நன்கு ஒளி செய் தாமம் நறும் பூ நவின்ற தாமம்
  • பொன் தெளித்த தாமம் புரி முத்தம் மிளர் தாமம்
  • மின்தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம்
   
2920.
  • ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து இடை எங்கும்
  • மான்று மணம் விம்மு புகை மல்கி நுரையே போல்
  • தோன்றும் மணிக் கால் அமளித் தூ அணையின் மேலார்
  • மூன்று உலகம் விற்கும் முலை முற்று இழையினாரே
   
2921.
  • இன்னது அருள் என்று இளையர் ஏத்த ஞிமிறு ஆர்ப்ப
  • மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்னப்
  • பொன் அரிய கிண்கிணியும் பூஞ் சிலம்பும் ஏங்க
  • மன்னன் அடி சேர்ந்து இறைஞ்சி வாழி என நின்றார்
   
2922.
  • கலவ மயில் கால் குவித்த போலும் கமழ் ஐம்பால்
  • நிலவும் மணி மேகலை நிலா உமிழும் பைம் பூண்
  • இலவ மலர் வாயின் அணி கூர் எயிற்றினீரே
  • உலவும் மனம் வைத்து உறுதி கேண்மின் இது என்றான்
   
2923.
  • வாய் அழல் உயிர்க்கும் ஆழி
  • மன்னவன் குறிப்பு நோக்கி
  • வேய் அழத் திரண்ட மென் தோள்
  • வெம் முலைப் பரவை அல்குல்
  • தோய் பிழி அலங்கலார் தம்
  • தொல் நலம் தொலைந்து வாடிக்
  • காய் அழல் கொடியைச் சேர்ந்த
  • கற்பக மாலை ஒத்தார்
   
2924.
  • கருங் கடல் பிறப்பின் அல்லால்
  • வலம்புரி காணும் காலைப்
  • பெருங் குளத்து என்றும் தோன்றா
  • பிறைநுதல் பிணை அனீரே
  • அருங் கொடைத் தானம் ஆய்ந்த
  • அருந் தவம் தெரியின் மண் மேல்
  • மருங்கு உடையவர்கட்கு அல்லால்
  • மற்றையர்க்கு ஆவது உண்டே
   
2925.
  • விட்டு நீர் வினவிக் கேள்மின் விழுத்தகை அவர்கள் அல்லால்
  • பட்டது பகுத்து உண்பார் இப் பார் மிசை இல்லை கண்டீர்
  • அட்டு நீர் அருவிக் குன்றத்து அல்லது வைரம் தோன்றா
  • குட்ட நீர் குளத்தின் அல்லால் குப்பை மேல் குவளை பூவா
   
2926.
  • நரம்பு ஒலி பரந்த கோயில் நல் நுதல் மகளிர் தூவும்
  • பெரும் பலிச் சோற்றின் ஈதல் பெரிது அரிது ஆகுமேனும்
  • சுரும்பு ஒலி கோதையார் தம் மனை வயின் தூண் தொறு ஊட்டும்
  • அரும் பலி அனைத்தும் ஈயின் அது பொருள் குன்று கண்டீர்
   
2927.
  • அற்றவர் வருத்தம் நீக்கி ஆர் உயிர் கொண்டு நிற்கும்
  • துற்ற அவிழ் ஈதல் செம் பொன் துறக்கத்திற்கு ஏணி ஆகும்
  • முற்று உயிர் ஓம்பித் தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும்
  • மற்று உரை இல்லை மண்ணும் விண்ணும் நும் அடிய அன்றே
   
2928.
  • மாலைப் பந்தும் மாலையும் ஏந்தி மது வார் பூஞ்
  • சோலை மஞ்ஞைச் சூழ் வளையார் தோள் விளையாடி
  • ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் நறவு உண்ணாச்
  • சீலம் காக்கும் சிறு உபகாரம் உடையாரே
   
2929.
  • மாசித் திங்கள் மாசின சின்னத் துணி முள்ளின்
  • ஊசித் துன்னம் மூசிய ஆடை உடை ஆகப்
  • பேசிப் பாவாய் பிச்சை எனக் கை அகல் ஏந்திக்
  • கூசிக் கூசி நிற்பர் கொடுத்து உண்டு அறியாதார்
   
2930.
  • காட்டு அகத்து ஒரு மகன் துரக்கும் மாக்கலை
  • ஓட்டு உடைத் தாம் எனின் உய்யும் நங்களை
  • ஆட்டியிட்டு ஆர் உயிர் அளைந்து கூற்றுவன்
  • ஈட்டிய விளை மதுப் போல உண்ணுமே
   
2931.
  • புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள
  • கள் அவிழ் கோதையீர் காண்மின் நல் வினை
  • ஒள்ளியான் ஒருமகன் உரைத்தது என்னன்மின்
  • தௌளியீர் அறத் திறம் தெரிந்து கொள்மினே
   
2932.
  • மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும்
  • தேய்தலும் உடைமையைத் திங்கள் செப்புமால்
  • வாய் புகப் பெய்யினும் வழுக்கி நல்லறம்
  • காய்வது கலதிமைப் பாலது ஆகுமே
   
2933.
  • புள்ளி நீர் வீழ்ந்தது பெருகிப் புன் புலால்
  • உள் வளர்ந்து ஒரு வழித் தோன்றிப் பேர் அறம்
  • உள்குமேல் முழுப் புலால் குரம்பை உய்ந்து போய்
  • வெள்ள நீர் இன்பமே விளைக்கும் என்பவே
   
2934.
  • பால்துளி பவள நீர் பெருகி ஊன் திரண்டு
  • ஊற்று நீர்க் குறும் புழை உய்ந்து போந்த பின்
  • சேற்று நீர்க் குழியுளே அழுந்திச் செல் கதிக்கு
  • ஆற்று உணாப் பெறாது அழுது அலறி வீழுமே
   
2935.
  • திருந்திய நல் அறச் செம் பொன் கற்பகம்
  • பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
  • வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்
  • கரும்பு எனத் திரண்ட தோள் கால வேல்கணீர்
   
2936.
  • மந்திர மருந்து இவை இல்லையாய் விடின்
  • ஐந் தலை அரவினை யாவர் தீண்டுவார்
  • சுந்தரச் சுரும்பு சூழ் மாலை இல்லையேல்
  • மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார்
   
2937.
  • பொன் துலாம் பொன் அனீர் தருதும் பாகுநீர்
  • தின்று அலால் சிறுவரை யானும் சொல் சில
  • இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால்
  • வென்று உலாம் வேல்கணீர் விழுத்தக்கீர்களே
   
2938.
  • மெய்ப் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும்
  • கைப்படு சாந்தும் பூவும் கொண்டு அலால் கலக்கல் ஆகா
  • ஐப் படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல்
  • பொய்ப் பட உரைத்தது உண்டோ பொன் அனீர் நம்முள் நாமால்
   
2939.
  • அனிச்சத்து அம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி
  • இனிச் செத்தாம் பிறந்த போழ்தே என்று நாம் இதனை எண்ணித்
  • தனிச் சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கிப்
  • பனித்தும் என்று உற்ற போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம்
   
2940.
  • நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல் மணி உருவம் நீங்கிப்
  • பால் நிறம் கொண்டு வெய்ய படா முலை பையின் தூங்கி
  • வேல் நிற மழைக் கண் தாமும் இமை குறைந்து அழுகி மேனி
  • தான் நிறம் கரக்கும் காலம் தையலீர் மெய்யது அன்றே
   
2941.
  • குஞ்சரம் அயா உயிர்த்து அனைய குய் கமழ்
  • அம் சுவை அடிசிலை அமர்ந்து உண்டார்கள் தாம்
  • இஞ்சி மா நகர் இடும் பிச்சை ஏற்றலால்
  • அஞ்சினேன் துறப்பல் யான் ஆர்வம் இல்லையே