நகர விலாவணை
 
2971.
  • நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும்
  • நேர் நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம்
  • பார் நிறை அடிகில் பள்ளி தளியொடு சாலை எல்லாம்
  • ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே
   
2972.
  • கோள் புலிச் சுழல் கண் அன்ன
  • கொழுஞ் சுவைக் கருனை முல்லை
  • மோட்டு இள முகையின் மொய் கொள்
  • கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு
  • ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி
  • சுவைத் தயிரொடு ஏந்தி
  • வேட்டவரப் பெறாது வீதி
  • வெறு நிலம் கிடந்த அன்றே
   
2973.
  • மைந்தர் தம் வண்கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல்
  • பைந் துகில் மகளிர் மேவார் பாசிழை பசும் பொன் மாலை
  • சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய்ச்
  • சந்தனச் சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே
   
2974.
  • தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெருங் குவளைக் கண்ணார்
  • மூழி வாய் முல்லை மாலை முலைமுகம் முரிந்து நக்க
  • யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன்
  • ஊழி வாய்க் கொண்டது ஒக்கும் பாடலும் ஒழிந்தது அன்றே
   
2975.
  • அருங்கலம் நிறைந்த அம்பூம் பவழக்கால் திகழும் பைம்பொன்
  • பெருங் கிடுகு என்னும் கோலப் பேரிமை பொருந்தி மெல்ல
  • ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல் என்
  • கருங் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே
   
2976.
  • கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல் விளை அமுதம் அன்னார்
  • முலை உலாய் நிமிர்ந்த மொய்தார் முழவு முத்து உரிஞ்சி மின்னச்
  • சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய்
  • நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக் கூறிற்று அன்றே
   
2977.
  • கூந்தல் அகில் புகையும் வேள்விக் கொழும் புகையும்
  • எந்து துகில் புகையும் மாலைக்கு இடும் புகையும்
  • ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோப
  • மாந்தர் புகழே போல் தோன்றா மறைந்தனவே
   
2978.
  • புல் உண் புரவி புலம்பு விடு குரல் போல்
  • நல்ல வளை போழ் அரவம் நாரை நரல் குரல் போல்
  • கல்லா இளையர் கலங்காச் சிரிப்பு ஒலியும்
  • கொல் யானைச் சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே
   
2979.
  • பொற்பு உடைய பூ மாலை சாந்தம் புனை கலன்கள்
  • கற்பு உடைய மங்கையரின் காவல் அவை இழந்த
  • நற்பு உடைய தேன் ஆர் நறவு நயம் புல்லார்
  • சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே
   
2980.
  • தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கித்
  • தூம்பு ஆர் நெடுங் கைம்மாத் தீம் கரும்பு துற்றாவாய்
  • ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர் பிறர் ஆய்க்
  • காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே
   
2981.
  • நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானைத்
  • தேர் முழங்கு தானைத் திருமாலின் முன் துறப்பான்
  • பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து
  • ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே