தேவிமார் துறவு
 
2991.
  • தெண் திரை நீத்தம் நீந்தித் தீம் கதிர் சுமந்து திங்கள்
  • விண் படர்ந்த அனைய மாலை வெண் குடை வேந்தர் வேந்தன்
  • கண் திரள் முத்த மாலைக் கதிர் முலை நங்கைமாரை
  • வெண் திரை வியக்கும் கேள்வி விசயைகண் அபயம் வைத்தான்
   
2992.
  • கடி மலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்பும் காமர்
  • வடிமலர் மலர்ந்த காம வல்லியும் தம்மைத் தாமே
  • உடை மலர் கொய்து போக உகுத்திடு கின்றது ஒத்தார்
  • படை மலர் நெடுங் கண் நல்லார் பாசிழை நீக்கு கின்றார்
   
2993.
  • தழுமலர்த் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும்
  • செழுமணி நிலத்துச் செம் பொன் திரு முத்த விதான நீழல்
  • எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார்
  • கழுமிய துகிலின் காமன் கண் புடைத்து இரங்க மாதோ
   
2994.
  • நறும் புகை நான நாவிக் குழம்பொடு பளிதச் சுண்ணம்
  • அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைங் கூந்தலாய் பொன்
  • நிறம் தரு கொம்பு நீலக் கதிர்க் கற்றை உமிழ்வவே போல்
  • செறிந்து இருந்து உகுத்துச் செம்பொன் குணக்கொடி ஆயினாரே