சீவகன் துறவு
 
3017.
  • காய் களிற்றின் இடை மருப்பின்
  • கவளம் போன்று ஏமாராக் கதியுள் தோன்றி
  • ஆய் களிய வெவ் வினையின் அல்லாப்பு உற்று
  • அஞ்சினேன் அறிந்தார் கோவே
  • வேய் களிய வண்டு அறைய விரிந்து
  • அலர்ந்த தாமரையின் விரை சேர் போதின்
  • வாய் ஒளியே பெற நடந்த மலர் அடியை
  • வலம் கொண்டார் வருந்தார் போலும்
   
3018.
  • சேடு ஆர் பொன் திருமணி வைரத்
  • தொத்து அணிந்து உலகு ஓம்பும்
  • வாடா மாலை வார் தளிர்ப் பிண்டி
  • வாம நின் குணம் நாளும்
  • பாடாதாரைப் பாடாது உலகம்
  • பண்ணவர் நின் அடிப் பூச்
  • சூடாதார் தாள் சூடார் மாலைச்
  • சுடர் மணி நெடு முடியே
   
3019.
  • வையம் மூன்றும் உடன் ஏத்த
  • வளரும் திங்கள் வாள் எயிற்று
  • ஐய அரிமான் மணி அணை மேல்
  • அமர்ந்தோய் நின்னை அமராதார்
  • வெய்ய வெம் நோய் வினை உதைப்ப
  • வீழ்ந்து துன்பக் கடல் அழுந்தி
  • நெய்யும் நுண் நூல் நாழிகையின்
  • நிரம்பா நின்று சுழல்வாரே
   
3020.
  • தொழுதிப் பல் மீன் குழாம் சூழத்
  • துளும்பாது இருந்த திங்கள் போல்
  • முழுதும் வையம் உடன் ஏத்த
  • முதுவாய் வலவையாய் இருந்து
  • அழுது வினைகள் அல்லாப்ப
  • அறைந்தோய் நின் சொல் அறைந்தார்கள்
  • பழுதுஇல் நறு நெய்க் கடல் சுடர்போல்
  • பல்லாண்டு எல்லாம் பரியாரே
   
3021.
  • செழும் பொன் வேய்ந்து மணி அழுத்தித்
  • திருவார் வைரம் நிரைத்து அதனுள்
  • கொழுந்து மலரும் கொளக் குயிற்றிக்
  • குலாய சிங்கா தனத்தின் மேல்
  • எழுந்த பருதி இருந்தால் போல்
  • இருந்த எந்தை பெருமானே
  • அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன்
  • அருவாய்ப் போதல் அழகிதோ
   
3022.
  • குண்டலமும் பொன் தோடும் பைந்தாரும் குளிர் முத்தும்
  • வண்டு அலம்பு மாலையும் மணித் தொத்தும் நிலம் திவள
  • விண்டு அலர் பூந் தாமரையின் விரை ததும்ப மேல் நடந்த
  • வண்டு அலர் பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்
   
3023.
  • நில விலகி உயிர் ஓம்பி நிமிர்ந்து ஒளிர்ந்து பசி பகை நோய்
  • உலகம் இருள் கெட விழிக்கும் ஒண் மணி அற ஆழி
  • அலகை இலாக் குணக் கடலை அகல் ஞான வரம்பானை
  • விலை இலா மணி முடியான் விண் வியப்ப இறைஞ்சினான்
   
3024.
  • தூய்த் திரள் மணித் தாமம்
  • சொரிந்து பொன் நிலம் நக்கப்
  • பூத்திரள் மணி மாலைப்
  • போர்ச் சிங்கம் போதகம் போல்
  • ஏத்த அரிய குணக் கடலை
  • இகல் இன்ப வரம்பானைத்
  • தோத்திரத்தால் தொழுது இறைஞ்சித்
  • துறப்பேன் என்று எழுந்து இருந்தான்
   
3025.
  • முடி அணி அமரரும் முலை நல்லார்களும்
  • புடை பணிந்து இருந்த அப் புலவன் பொன் நகர்
  • கடி மலர்க் கற்பகம் காம வல்லியோடு
  • இடை விராய் எங்கணும் பூத்தது ஒத்ததே
   
3026.
  • ஒத்து ஒளி பெருகிய உருவப் பொன் நகர்
  • வித்தகன் வலம் செய்து விழுப் பொன் பூமி போய்
  • மத்தக மயிர் என வளர்த்த கைவினைச்
  • சித்திரக் காவகம் செல்வன் எய்தினான்
   
3027.
  • ஏம நீர் உலகம் ஓர் இம்மிப் பால் என
  • நாம வேல் நரபதி நீக்கி நன்கலம்
  • தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான் அரோ
  • காமனார் கலம் கழிக்கின்றது ஒத்ததே
   
3028.
  • மணி உறை கழிப்பது போல மங்கலப்
  • பணி வரு பைந்துகில் நீக்கிப் பால் கடல்
  • அணிபெற அரும்பிய அருக்கன் ஆம் எனத்
  • திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான்
   
3029.
  • மலிந்த நல் மாலைகள் வண்ணப் பூந்துகில்
  • நலிந்து மின் நகு மணி நன் பொன் பேர் இழை
  • மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலைப்
  • பொலிந்தது ஓர் கற்பகம் போலத் தோன்றினான்
   
3030.
  • திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே
  • இருந்தது ஓர் இடி குரல் சிங்கம் பொங்கி மேல்
  • சுரிந்த தன் உளை மயிர் துறப்பது ஒத்தனன்
  • எரிந்து எழும் இளஞ் சுடர் இலங்கும் மார்பினான்
   
3031.
  • அம் சுடர்த் தாமரைக் கையினான் மணிக்
  • குஞ்சி வெண் படலிகைக் குமரன் நீப்பது
  • செஞ் சுடர்க் கருங் கதிர்க் கற்றை தேறு நீர்
  • மஞ்சுடை மதியினுள் சொரிவது ஒத்ததே
   
3032.
  • வேலைவாய் மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது ஓர்
  • காலை வாய்க் கற்பக மரத்தின் காவலன்
  • மாலை வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின்
  • சோலை வாய்ச் சுரும்பு இனம் தொழுது சொன்னவே
   
3033.
  • தம் கிடை இலாத் திருக் கேசம் தன்னையும்
  • கொங்கு உடைக் கோதையும் கொய்து நீக்கினாய்
  • நும் கடை நோக்கி நாம் வாழும் வாழ்க்கையம்
  • எம் கிடையவர் இனி எங்குச் செல்பவே
   
3034.
  • என்றன தேன் இனம் இரங்கு வண்டொடு
  • சென்றன விடுக்கிய செல்வன் பொன் மயிர்
  • இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என
  • மன்றல் உண்டு அவை வலம் கொண்டு சென்றவே
   
3035.
  • மேல் படு கற்பக மாலை வேய்ந்து பொன்
  • ஏற்பு உடைப் படலிகை எடுத்துக் கொண்டு போய்
  • நால் கடல் கடந்து அவன் நமோ என்று இட்டிடப்
  • பால் கடல் பனிமதி போல வீழ்ந்ததே
   
3036.
  • ஏவா இருந்த அடிகள் இவர் வாய்ச் சொல்
  • கோவா மணி கொழித்துக் கொண்டாலே போலுமால்
  • சாவா கிடந்தார் செவிச் சார்த்தின் அப்பொழுதே
  • மூவா அமரர் ஆய் முத்து அணிந்து தோன்றுவரே
   
3037.
  • தோளா மணி குவித்தால் போன்று இலங்கு தொல் குலத்துச்
  • சூளா மணியாய்ச் சுடர இருந்தானை
  • வாள் ஆர்முடி வைர வில் திளைத்து வண்டு அரற்றும்
  • தாள் ஆர ஏத்திப் போய்த் தன் கோயில் புக்கானே
   
3038.
  • புக்கான் சுதஞ்சணனும் பொன் தாமரை மகளிர்
  • தொக்காலே போலும் தன் தேவிக் குழாம் சூழ
  • மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம்பால்
  • தொக்க கடல் போல் சுதங்கள் நிறைந்தனவே
   
3039.
  • பற்று ஆர்வம் செற்றம் முதலாகப் பாம்பு உரி போல்
  • முற்றத் துறந்து முனிகளாய் எல்லாரும்
  • உற்று உயிர்க்குத் தீம்பால் சுரந்து ஓம்பி உள்ளத்து
  • மற்று இருள் சேரா மணி விளக்கு வைத்தாரே
   
3040.
  • கோமான் அடி சாரக் குஞ்சரங்கள் செல்வன போல்
  • பூ மாண் திருக் கோயில் புங்கவன் தாள் சேர்ந்து ஏத்தித்
  • தாம் ஆர்ந்த சீலக் கடல் ஆடிச் சங்கு இனத்துள்
  • தூ மாண் வலம்புரியின் தோற்றம் போல் புக்காரே