கேவலோற் பத்தி
 
3062.
  • முல்லை சூழ் முல்லை வேலி
  • முயலொடு கவரி மேயும்
  • கொல்லை சூழ் குன்றத்து உச்சிக்
  • குருசில் நோற்று உயர்ந்த வாறும்
  • வில் உமிழ்ந்து இலங்கு மேனி
  • விழுத் தவ நங்கை மார்கள்
  • மல்லல் அம் குமரர் வான் மேல்
  • சென்றதும் வகுக்கல் உற்றேன்
   
3063.
  • முழுதும் முந்திரிகைப் பழச் சோலைத் தேன்
  • ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தனத்
  • தொழுதிக் குன்றம் துளும்பச் சென்று எய்தினான்
  • பழுது இல் வாய் மொழிப் பண்ணவன் என்பவே
   
3064.
  • நணிதின் எண் வினை இன்னவை கண் நிறீஇக்
  • துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான்
  • மணியின் மேல் மணி கட்டியது ஒத்து அதற்கு
  • அணியும் ஆய் அலர் ஞாயிறும் ஆயினான்
   
3065.
  • குன்றின் வீழ் அருவிக் குரல் கோடு அணைச்
  • சென்று எலாத் திசையும் சிலம்பின் மிசை
  • நின்றனன் இறை வம்மின நீர் என
  • ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம்
   
3066.
  • செம்பொன் பின்னிய போல் தினைக் காவலர்
  • வெம்பு மும் மத வேழம் விலக்குவார்
  • தம் புனத்து எறி மா மணி சந்து பாய்ந்து
  • உம்பர் மீன் எனத் தோன்றும் ஓர் பால் எலாம்
   
3067.
  • யானை குங்குமம் ஆடி அருவரைத்
  • தேன் நெய் வார் சுனை உண்டு திளைத்து உடன்
  • கான மாப் பிடி கன்றொடு நாடகம்
  • ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர் பால் எலாம்
   
3068.
  • வரிய நாக மணிச்சுடர் மல்கிய
  • பொரு இல் பொன் முழைப் போர்ப்புலிப் போதகம்
  • அரிய கின்னரர் பாட அமர்ந்து தம்
  • உருவம் தோன்ற உறங்கும் ஓர் பால் எலாம்
   
3069.
  • பழுத்த தீம் பலவின் கனி வாழையின்
  • விழுக் குலைக் கனி மாங்கனி வீழ்ந்தவை
  • தொழித்து மந்தி துணங்கை அயர்ந்து தேன்
  • அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர் பால் எலாம்
   
3070.
  • நளி சிலம்பதனின் உச்சி நாட்டிய பொன் செய் கந்தின்
  • ஒளியொடு சுடர வெம்பி உருத்து எழு கனலி வட்டம்
  • தெளி கடல் சுடுவது ஒத்துத் தீ உமிழ் திங்கள் நான்கும்
  • விளிவரும் குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான்
   
3071.
  • பார்க் கடல் பருகி மேகம்
  • பாம்பு இனம் பதைப்ப மின்னி
  • வார்ப் பிணி முரசின் ஆர்த்து
  • மண்பக இடித்து வானம்
  • நீர்த்திரள் பளிக்குத் தூணி
  • சொரிந்திட நின்று வென்றான்
  • மூர்த்தி ஆய் முனிவர் ஏத்தும்
  • முனிக் களிறு அனைய கோமான்
   
3072.
  • திங்கள் நான்கு அவையும் நீங்கத்
  • திசைச் செல்வார் மடிந்து தேம்கொள்
  • பங்கயப் பகை வந்து என்னப்
  • பனி வரை உருவி வீசும்
  • மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான்
  • வெள்ளிடை வதிந்து மாதோ
  • இங்கு நான்கு ஆய
  • திங்களின் உயிர் ஓம்பினானே
   
3073.
  • வடி மலர் நெடுங் கணாரும் மைந்தரும் வரவு பார்த்து அங்கு
  • அடி மலர் பரவ ஏறி ஆர் அமிர்து அரிதின் கொள்வான்
  • கடி மலர்க் கமலத்து அன்ன கையினை மறித்துக் கொள்ளான்
  • முடிதவக் கடலை நீந்தி இன்னணம் முற்றினானே
   
3074.
  • ஒளிறு தேர் ஞானம் பாய் மா
  • இன் உயிர் ஓம்பல் ஓடைக்
  • களிறு நல் சிந்தை காலாள்
  • கருணை ஆம் கவசம் சீலம்
  • வெளிறு இல் வாள் விளங்கு செம் பொன்
  • வட்டம் மெய்ப் பொருள்களாகப்
  • பிளிறு செய் கருமத் தெவ்வர்
  • பெரு மதில் முற்றினானே
   
3075.
  • உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவத் திண் தேர்
  • மறப்பு எனும் புரவி வெள்ளம் வந்து அடை பிணி செய் காலாள்
  • திறப்படப் பண்ணிப் பொல்லாச் சிந்தனை வாயில் போந்து
  • சுறக் கடல் அனைய தானை துளங்கப் போர் செய்தது அன்றே
   
3076.
  • தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர் எண்மர் திளைத்து வீழ்ந்தார்
  • களிறு கால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் களத்தின் உள்ளே
  • பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறுவகைத் துவர்ப்பும் பேசின்
  • அளிபடு சிந்தை என்னும் ஆழிவாய் வீழ்ந்த அன்றே
   
3077.
  • மயக்கப் போர் மன்னன் மக்கள்
  • மந்திரியவரும் வீழ
  • வியப்புறு வேத வில்வாய்
  • வேட்கை அம்பு எடுத்திட்டு எய்யக்
  • கலக்கம் இல் அசுபம் என்னும்
  • குந்தத்தால் கணை பெய்ம் மாரி
  • விலக்கித் திண் வெறுப்பு வாளால்
  • விரைந்து உயிர் அவனை உண்டான்
   
3078.
  • கரும்பு எறி கடிகை போன்றும்
  • கதலிகைப் போழ்கள் போன்றும்
  • அரும் பொறிப் பகைவர் தம்மை
  • உறுப்பு அறத் துணித்தும் ஈர்ந்தும்
  • மருந்து எறி பிணியைக் கொல்லும்
  • மருத்துவன் போன்று மாதோ
  • இருந்து எறிந்து எறியும்
  • மூவர் மேல் படை இயற்றினானே
   
3079.
  • செழு மலர் ஆவி நீங்கும்
  • எல்லையில் செறிந்து காயம்
  • கழுமிய உதிரம் போல
  • இமைப்பினுள் கரந்து நீங்கக்
  • கொழுமலர்க் குவளைக் கண்ணிக்
  • கூற்று உயிர் உண்பதே போல்
  • விழுமிய தெவ்வர் வாழ் நாள்
  • வீழ்ந்து உக வெம்பினானே
   
3080.
  • குரோதனே மானன் மாயன் கூர்ப்புடை உலோபன் என்பார்
  • விரோதித்து விரலின் சுட்டி வெருவரத் தாக்க வீரன்
  • நிரோதனை அம்பின் கொன்றான் நித்தை நீள் பசலைப் பேரோர்
  • விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார்
   
3081.
  • புணரி போல் சிறு புன் கேள்விப் படையொடு புகைந்து பொங்கி
  • உணர்வொடு காட்சி பேறு என்று இடை உறு கோக்கள் ஏற்றார்
  • இணர் எரி முழக்கம் அன்ன சுக்கிலத் தியானம் என்னும்
  • கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழப் பட்டார்
   
3082.
  • காதிப் போர் மன்னர் வீழக்
  • கணை எரி சிதறி வெய்யோன்
  • ஓதிய வகையின் ஒன்றி உலகு
  • உச்சி முளைத்ததே போல்
  • வீதி போய் உலகம் மூன்றும்
  • விழுங்கியிட்டு அலோகம் நுங்கி
  • ஆதி அந்த அகன்ற நான்மைக்
  • கொடியெடுத்து இறைமை கொண்டான்
   
3083.
  • பசும் பொனின் உலகில் தேவர் பயிர் வளை முரசம் ஆர்ப்ப
  • அசும்பு சேர் களிறு திண்தேர் அலை மணிப் புரவி வேங்கை
  • விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம்
  • நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார்
   
3084.
  • நறு மலர் மாலை சாந்தம் பரூஉத் துளித் துவலை நல்நீர்க்
  • கறை முகில் சொரியக் காய் பொன் கற்பக மாலை ஏந்திச்
  • சிறகு உறப் பரப்பி அன்னம் பறப்பன போல ஈண்டி
  • நிறை கடல் விஞ்சை வேந்தர் நீள் நில மன்னர் சேர்ந்தார்
   
3085.
  • விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன் நிலம் கொள்வதே போல்
  • மண் எலாம் பைம் பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி
  • எண் இலாத் தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடிக்
  • கண் முழுதும் உடம்பில் தோன்றிச் சுதஞ்சணன் களிப்புற்றானே
   
3086.
  • குளித்து எழு வயிர முத்தத் தொத்து எரி கொண்டு மின்ன
  • அளித்து உலகு ஓம்பும் மாலை அகன் குடை கவித்தது ஆங்கு
  • வளிப் பொர உளரும் திங்கள் கதிர் எனக் கவரி பொங்கத்
  • தெளித்து வில் உமிழும் செம் பொன் ஆசனம் சேர்ந்தது அன்றே
   
3087.
  • மணியரும் பதம்

    மணி உமிழ் திருக் கேசம் வானவர் அகில் புகையும்
  • பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓடக் கமழுமால்
  • துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம்
  • அணிதிகழ் அரசுவா அதன் கடாம் சாற்றாதோ
   
3088.
  • முழங்கு திரு மணிமுறுவல் முருக்கு இதழ் கொடிப் பவழத்து
  • தழங்கு குரல் வாய் தளை அவிழ்ந்த மந்தாரம் தவ நாறும்
  • அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம்
  • வழங்கு பொன் வரை வளரும் பைங்கண் மா உரையாதோ
   
3089.
  • உறுப்பு எலாம் ஒளி உமிழ்ந்து உணர்வு அரிதாய் இரு சுடரும்
  • குறைத்து அடுக்கிக் குவித்தது ஓர் குன்றே போன்று இலங்குமால்
  • வெறுத்து இரு வினை உதிர்த்தாற்கு அது வண்ணம் விளம்பலாம்
  • கறுப்பு ஒழிந்த கனை எரிவாய்க் கார் இரும்பே கரி அன்றே
   
3090.
  • வானோர் ஏந்து மலர் மாரி
  • வண்ணச் சாந்தம் பூஞ்சுண்ணம்
  • கான் ஆர் பிண்டிக் கமழ் தாமம்
  • கறை ஆர் முகிலின் நிறம் காட்டும்
  • தேன் ஆர் புகைகள் இவை எல்லாம்
  • திகைப்பத் திகைகள் மணம் நாறி
  • ஆனா கமழும் திருவடிப் போது
  • அமரர் முடி மேல் அணிந்தாரே
   
3091.
  • சுறவுக் கொடிக் கடவுளொடு காலன் தொலைத்தோய் எம்
  • பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி
  • நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகித்
  • துறவு நெறிக் கடவுள் அடி தூமமொடு தொழுதார்
   
3092.
  • பால் அனைய சிந்தை சுடரப் படர் செய் காதி
  • நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகிக்
  • காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள்
  • கோல மலர்ச் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம்
   
3093.
  • முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல்
  • அழுங்கல் வினை அலற நிமிர்ந்து ஆங்கு உலகம் மூன்றும்
  • விழுங்கி உமிழாது குணம் வித்தி இருந்தோய் நின்
  • இழுங்கு இல் குணச் சேவடிகள் ஏத்தித் தொழுதும் யாம்
   
3094.
  • ஏத்தரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி
  • நீத்த அருள் இந்திரனை நின்று தொழுது அமரர்
  • நாத் தழும்ப ஏத்தித் தவ நங்கையவர் நண்ணித்
  • தோத்திரங்கள் ஓதித் துகள் மாசு துணிக்கின்றார்
   
3095.
  • செய்தவனே வினை சேரும் அதற்கு எனும்
  • ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி
  • மொய்ம் மலர் தூய் முனியாது வணங்குதும்
  • மெய் உலகிற்கு விளம்பிய வேந்தே
   
3096.
  • நல்லனவே என நாடி ஓர் புடை
  • அல்லனவே அறைகின்ற புன் நாதர்கள்
  • பல் வினைக்கும் முலைத் தாய் பயந்தார் அவர்
  • சொல்லுவ நீ சுகதா உரையாயே
   
3097.
  • மதி அறியாக் குணத்தோன் அடி வாழ்த்தி
  • நிதி அறை போல் நிறைந்தார் நிகர் இல்லாத்
  • துதி அறையாத் தொழுதார் மலர் சிந்தா
  • விதி அறியும் படி வீரனை மாதோ
   
3098.
  • தீ வினைக் குழவி செற்றம்
  • எனும் பெயர்ச் செவிலி கையுள்
  • வீ வினை இன்றிக் காம முலை
  • உண்டு வளர்ந்து வீங்கித்
  • தா வினை இன்றி வெம் நோய்க்
  • கதிகளுள் தவழும் என்ற
  • கோவினை அன்றி எம் நாக்
  • கோதையர்க் கூறல் உண்டே
   
3099.
  • நல் வினைக் குழவி நல் நீர்த்
  • தயா எனும் செவிலி நாளும்
  • புல்லிக் கொண்டு எடுப்பப் பொம் என்
  • மணி முலை கவர்ந்து வீங்கிச்
  • செல்லுமால் தேவர் கோவாய்
  • எனும் இருள் கழிந்த சொல்லால்
  • அல்லி மேல் நடந்த கோவே
  • அச்சத்துள் நீங்கினோமே
   
3100.
  • மணியினுக்கு ஒளி அக மலர்க்கு மல்கிய
  • அணி அமை அம் குளிர் வாசம் அல்லதூஉம்
  • திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் செல்வ நின்
  • இணை மலர்ச் சேவடி கொடுத்த என்பவே
   
3101.
  • பரிநிர்வாணம்

    இகல் இருள் முழு முதல் துமிய ஈண்டு நீர்ப்
  • பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின்
  • இகல் இரு மரை மலர் அளித்த சேவடி
  • தொகல் அருங் கருவினை துணிக்கும் எஃகமே
   
3102.
  • மீன் தயங்கு திங்கள் முக நெடுங் கண் மெல் இயலார்
  • தேன் தயங்கு செந் நாவின் சில் மென் கிளிக் கிளவி
  • வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி அரோ
  • கான் தயங்கி நில்லா கருவினை கால் பெய்தனவே
   
3103.
  • மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
  • பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார்
  • விதியின் களித்தார் அறிவன் விழுக் குணங்கள் ஏத்தித்
  • துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார்
   
3104.
  • ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்திச்
  • சேர்ந்து தவ வீரர் திசை சிலம்பத் துதி ஓதித்
  • தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
  • கூர்ந்து அமிழ்த மாரி எனக் கொற்றவனும் சொன்னான்
   
3105.
  • இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றித்
  • துன்பத்தைச் சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி
  • நின்ற பற்று ஆர்வம் நீக்கி நிருமலன் பாதம் சேரின்
  • அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாமே
   
3106.
  • வாள் கை அம் மைந்தர் ஆயும்
  • வனமுலை மகளிர் ஆயும்
  • வேட்கையை மிகுத்து வித்திப்
  • பிறவி நோய் விளைத்து வீயாத்
  • தேள் கையில் கொண்டது ஒக்கும்
  • நிச்சம் நோய்ச் செற்றப் புன் தோல்
  • பூட்கையை முனியின் வாமன்
  • பொன் அடி தொழுமின் என்றான்
   
3107.
  • தன் உயிர் தான் பரிந்து ஓம்பு மாறு போல்
  • மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
  • இன் உயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
  • பொன் உயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே
   
3108.
  • நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும்
  • உருப்பு உயிர் இருவினை உதைப்ப வீழ்ந்த பின்
  • புரிப் புரிக் கொண்டு போய்ப் பொதிந்து சுட்டிட
  • இருப்பு உயிர் ஆகி வெந் எரியுள் வீழுமே
   
3109.
  • மழைக் குரல் உருமு உவா ஓத மாக் கடல்
  • பிழைத்த ஓர் அருமணி பெற்றது ஒக்குமால்
  • குழைத் தலைப் பிண்டியான் குளிர் கொள் நல்லறம்
  • தழைத் தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே
   
3110.
  • மல்கு பூங் கற்பக மரத்தின் நீழலான்
  • நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ
  • பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர்
  • செல்வம் கண்டு அதற்கு அவாச் சிந்தை செய்யுமோ
   
3111.
  • மணி உயிர் பொன் உயிர் மாண்ட வெள்ளியின்
  • அணி உயிர் செம்பு உயிர் இரும்பு போல ஆம்
  • பிணி உயிர் இறுதியாப் பேசினேன் இனித்
  • துணிமினம் எனத் தொழுது இறைஞ்சி வாழ்த்தினார்
   
3112.
  • விண்ணின் மேல் மலர் மழை பொழிய வீங்கு பால்
  • தௌ நிலாத் திரு மதி சொரியத் தே மலர்
  • மண்ணின் மேல் மழ கதிர் நடப்பது ஒத்ததே
  • அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணமே
   
3113.
  • பால் மிடை அமிர்து போன்று பருகலாம் பயத்த ஆகி
  • வான் இடை முழக்கின் கூறி வால் அற அமிழதம் ஊட்டித்
  • தேன் உடை மலர்கள் சிந்தித் திசை தொழச் சென்ற பின் நாள்
  • தான் உடை உலகம் கொள்ளச் சாமி நாள் சார்ந்தது அன்றே
   
3114.
  • உழ வித்தி உறுதி கொள்வார் கொண்டு
  • உய்யப் போகல் வேண்டித்
  • தொழு வித்தி அறத்தை வைத்துத்
  • துளங்கு இமில் ஏறு சேர்ந்த
  • குழவித் தண் திங்கள் அன்ன
  • இருக்கையன் ஆகிக் கோமான்
  • விழ வித்தாய் வீடு பெற்றான்
  • விளங்கி நால் வினையும் வென்றே
   
3115.
  • துந்துபி கறங்க ஆர்த்துத் துகில் கொடி நுடங்க ஏந்தி
  • அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி
  • வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும்
  • கெந்தம் நாறு அகிலும் கூட்டிக் கிளர் முடி உறுத்தினரே
   
3116.
  • முளைத்து எழு பருதி மொய் கொள்
  • முழங்கு அழல் குளித்ததே போல்
  • திளைத்து எழு கொடிகள் செந்தீத்
  • திருமணி உடம்பு நுங்க
  • விளைத்த பின் விண்ணும் மண்ணும்
  • மங்கலம் வகையில் செய்து
  • வளைப் பொலி கடலின் ஆர்த்து
  • வலம் கொண்டு நடந்த அன்றே
   
3117.
  • கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண்
  • பூ அலர் முல்லைக் கண்ணிப் பொன் ஒரு பாகம் ஆகக்
  • காவலன் தான் ஓர் கூறாக் கண் இமையாது புல்லி
  • மூ உலகு உச்சி இன்பக் கடலினுள் மூழ்கினானே
   
3118.
  • பிரிதலும் பிணியும் மூப்பும்
  • சாதலும் பிறப்பும் இல்லா
  • அரிவையைப் புல்லி அம் பொன்
  • அணி கிளர் மாடத்து இன் தேன்
  • சொரி மது மாலை சாந்தம்
  • குங்குமம் சுண்ணம் தேம் பாய்
  • விரிபுகை விளக்கு விண்ணோர்
  • ஏந்த மற்று உறையும் அன்றே
   
3119.
  • தேவிமார் நோற்று உயர்வு

    வல்லவன் வடித்த வேல் போல்
  • மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண்
  • மெல்லவே உறவி ஓம்பி
  • ஒதுங்கியும் இருந்தும் நின்றும்
  • முல்லை அம் சூட்டு வேயின்
  • முரிந்து போம் நுசுப்பின் நல்லார்
  • மல்லல் குன்று ஏந்தி
  • அன்ன மாதவம் முற்றினாரே
   
3120.
  • சூழ் பொன் பாவையைச் சூழ்ந்து புல்லிய
  • காழகப் பச்சை போன்று கண் தெறூஉம்
  • மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு
  • ஏழைப் பெண் பிறப்பு இடியச் சிந்தித்தார்
   
3121.
  • ஆசை ஆர்வமோடு ஐயம் இன்றியே
  • ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின்
  • ஏசு பெண் ஒழித்து இந்திரர் களாய்த்
  • தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்
   
3122.
  • காம வல்லிகள் கலந்து புல்லிய
  • பூ மென் கற்பகப் பொன் மரங்கள் போல்
  • தாம வார் குழல் தையலார் முலை
  • ஏமம் ஆகிய இன்பம் எய்தினார்
   
3123.
  • கலவி ஆகிய காமத்தின் பயன்
  • புலவி ஆதலால் பொன் அம் கொம்பு அனார்
  • உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு
  • இலை கொள் பூணினார் இதயம் போழ்ந்ததே
   
3124.
  • பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள்
  • நாவில் பெண் பெயர் நவிற்றினீர் எனக்
  • காவிக் கண் கடை இடுகக் கால் சிலம்பு
  • ஆவித்து ஆர்த்தன அம்மென் குஞ்சியே
   
3125.
  • நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூங்
  • குஞ்சி ஏற்றது குறிக் கொள் நீ எனாப்
  • பஞ்சின் மெல்லடிப் பாவை பூ நுதால்
  • அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகுமே
   
3126.
  • தவளைக் கிண்கிணித் தாமம் சேர்த்தியும்
  • குவளைக் கண் மலர்க் கோலம் வாழ்த்தியும்
  • இவளைக் கண்ட கண் இமைக்குமோ எனாத்
  • திவளத் தே மலர்க் கண்ணி சேர்த்தியும்
   
3127.
  • பல் மணிக் கதிர்ப் பரவை மேகலை
  • மின் அணிந்து உகத் திருத்தி வெம் முலைப்
  • பொன் அணிந்து பூஞ் சுண்ணம் தைவர
  • நல் மணிக் குழை இரண்டும் நக்கவே
   
3128.
  • செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம்
  • எய்தி யாவையும் உணர்க என்ப போல்
  • மை அவாம் குழல் மடந்தை குண்டலம்
  • நைய நின்று எலாம் நாண நக்கவே
   
3129.
  • செல்வக் கிண் கிணி சிலம்பத் தேன் சொரி
  • முல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந் நலம்
  • புல்லிப் பூண்ட தார் புரள மேகலை
  • அல்குல் வாய் திறந்து ஆவித்து ஆர்த்தவே
   
3130.
  • இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர்
  • கலந்த கள்ளினைக் கை செய்து ஐ என
  • மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே
  • நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே
   
3131.
  • வெம்மை கொண்ட தேன் அமிர்தம் மெல்லவே
  • அம்மை அம் சொலார் ஆர உண்டவர்
  • தம்மைத் தாம் மகிழ்ந்து உறைய இத்தலைச்
  • செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம்
   
3132.
  • நந்தட்டன் தோழன்மார் நோற்று உயர்வு

    நாள் கண் கூடிய நகை வெண் திங்கள் போல்
  • காளை நந்தனும் தோழன் மார்களும்
  • நாளும் நாளினும் நடுங்க நல்தவம்
  • தாளின் ஈட்டினார் தம்மைத் தாம் பெற்றார்
   
3133.
  • பாவனை மரீஇப் பட்டினி யொடும்
  • தீ வினை கழூஉம் தீர்த்தன் வந்தியாப்
  • பூ உண் வண்டு அன கொட்பின் புண்ணியர்
  • நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார்
   
3134.
  • கருவில் கட்டிய காலம் வந்தென
  • உருவ வெண் பிறைக் கோட்டின் ஓங்கிய
  • அருவிக் குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும்
  • திருவின் தோற்றம் போல் தேவர் ஆயினார்
   
3135.
  • அனங்கனைத் தவம் செய அழன்று கண்டவர்
  • மனங்களைக் கவர்ந்திடும் மணிக் கண் வெம் முலைப்
  • பொனம் கொடி மயில் அனார்ப் புல்ல மாப் பிடி
  • இனம் பயில் கடாக் களிற்று இன்பம் எய்தினார்
   
3136.
  • காது அணிந்த தோடு ஒரு பால் மின்னு வீசக்
  • கதிர் மின்னுக் குழை ஒரு பால் திருவில் வீசத்
  • தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோரத்
  • தாமரைக் கண் தாம் இரங்கப் புருவம் ஆட
  • மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும்
  • மணி மழலைக் கிண்கிணியும் சிலம்பும் ஏங்கப்
  • போது அணிந்த தார் உடையப் பொருது பொங்கிப்
  • புணர்முலைகள் போர்க்களம் தாம் கண்ட அன்றே
   
3137.
  • முழுது ஆரம் மின்னும் முலைக் குவட்டினால்
  • மொய்ம் மார்பில் குங்குமச் சேறு இழுக்கி வீழ
  • உழுது ஆர்வம் வித்தி உலப்பு இலாத நுகர்ச்சி
  • விளைத்து அலர்ந்த கற்பகத்தின் கீழ்
  • எழுது ஆர் மணிக் குவளைக் கண் வலையுள் பட்டு
  • இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து
  • இழுதார் மென் பள்ளிப் பூந் தாது பொங்க
  • இருவர் பாலர் ஆகி இன்புறுபவே
   
3138.
  • மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம
  • மாமணியாழ் தீம் குழல்கள் இரங்கப் பாண்டில்
  • பண் கனியப் பாவைமார் பைம் பொன் தோடும்
  • குண்டலமும் தாம் பதைப்ப இருந்து பாட
  • விண் கனியக் கிண் கிணியும் சிலம்பும் ஆர்ப்ப
  • முரிபுருவ வேல் நெடுங் கண் விருந்து செய்யக்
  • கண் கனிய நாடகம் கண்டு அமரர் காமக்
  • கொழுந்து ஈன்று தம் தவம் தாம் மகிழ்ந்தார் அன்றே
   
3139.
  • முருகு உடைந்த பூங் கோதை முத்து அணிந்த தோளார்
  • ஒரு குடங்கைக் கண்ணால் உளம் கழிய ஏவுண்டு
  • அருகு அடைந்த சாந்து அழிய அம் முலை மேல் வீழ்ந்தார்
  • திரு அடைந்த நீள் மார்பின் தேன் துளிக்கும் தாரார்
   
3140.
  • நிலவி ஒளி உமிழும் நீள் இலை வேல் கண்ணார்
  • கலவித் தூது ஆகிய காமக்கை காய்த்திப்
  • புலவிப் படை பயிலப் பூச் செய்த கோலம்
  • உலவித் துறக்கம் ஒளி பூத்தது அன்றே
   
3141.
  • புருவச் சிலை நுதல் பொன் துஞ்சும் அல்குல்
  • உருவத் துடி இடையார் ஊடல் உப்பு ஆகத்
  • திருவின் திகழ் காமத் தேன் பருகித் தேவர்
  • பொருவற்கு அரிய புலக் கடலுள் ஆழ்ந்தார்
   
3142.
  • முகடு மணி அழுத்தி முள் வயிரம்
  • உள் வேய்ந்து முத்தம் வாய்ச் சூழ்ந்து
  • அகடு பசு மணி ஆர்ந்து அங்காந்து
  • இருள் பருகி அடுபால் விம்மிப்
  • பகடு பட அடுக்கிப் பண்ணவனார் தம்
  • ஒளி மேல் நின்றால் போலும்
  • தகடு படு செம் பொன் முக் குடையான் தாள்
  • இணை என் தலை வைத்தேனே
   
3143.
  • ஓம் படை

    முந் நீர் வலம் புரி சோர்ந்து அசைந்து வாய்
  • முரன்று முழங்கி ஈன்ற
  • மெய்ந் நீர்த் திருமுத்து இருபத்து ஏழ்
  • கோத்து உமிழ்ந்து திருவில் வீசும்
  • செந் நீர்த் திரள் வடம் போல்
  • சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார்
  • இந் நீரர் ஆய் உயர்வர் ஏந்து
  • பூந் தாமரையாள் காப்பாளாமே
   
3144.
  • செந்தாமரைக்குச் செழு நாற்றம் கொடுத்த தேம் கொள்
  • அந் தாமரை ஆள் அகலத்தவன் பாதம் ஏத்திச்
  • சிந்தா மணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
  • நந்தா விளக்குச் சுடர் நல் மணி நாட்டப் பெற்றே
   
3145.
  • செய் வினை என்னும் முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேம் கொள்
  • மைவினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ
  • மொய்வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம்
  • கைவினை செய்த சொல் பூக் கை தொழுது ஏத்தினனே