சுக்ரீவன் கும்பன் போர்
 

7962.குரங்கினுக்கு   அரசும்,   வென்றிக்  கும்பனும்,  குறித்த
                                     வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார்,
மரம்  கொடும்,  தண்டு  கொண்டும்,  மலை  என
                                  மலையாநின்றார்;
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர்.

 

குரங்கினுக்கு    அரசும் - குரங்குகளுக்கு அரசனாகிய சுக்ரீவனும்;
வென்றிக்கும்பனும்   -  வெற்றி  உடைய  கும்பன் என்னும் (அரக்கர்
தலைவனும்);   குறித்த   வெம்போர்   -  (அங்குக்)குறித்துச்  செய்த
கொடியபோர்;   அரங்கினுக்கு அழகுசெய்ய - அப்போர்க் களத்திற்கு
அழகினைச்   செய்ய;  ஆயிரம் சாரி  போந்தார் -  ஆயிரம் முறை
(என்னும்   அளவு)  வலசாரி,  இடசாரியாகச்   சுற்றிச் சுற்றிவந்தார்கள்;
மரம்கொடும் - (அவர்கள்) மரத்தைக் கொண்டும்; தண்டுகொண்டும் -
தண்டாயுதம் கொண்டும்; மலைஎன  மலையாநின்றார் - இருமலைகள்
போரிடுவது      போல்    போரிட்டார்கள்;     கண்டதேவர்    -
அச்செயலைக்கண்ட   தேவர்கள்;  சிரங்களும்   கரமும்   எல்லாம்
குலைந்தனர்
- தலையும் கைகளும் எல்லாம் நடுங்கினர்.
 

கும்பன்  - கும்பகருணன் மக்கள் இருவரில் ஒருவன், மற்றொருவன்
நிகும்பன். அரங்கு - போர்க்களம், சாரிபோதல் - இடவலமாகத்திரிதல்.
 

                                                 (236)