மந்திரக் கிழவரை வருவித்தல் 1315. | புக்கபின், 'நிருபரும், பொரு இல் சுற்றமும், பக்கமும், பெயர்க' என, பரிவின் நீக்கினான், ஒக்க நின்று உலகு அளித்து, யோகின் எய்திய சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான். | புக்க பின் - தசரதன் மந்திராலோசனை மண்டபத்தில் புகுந்த பிறகு ; நிருபரும் - மன்னர்களும் ; பொருவு இல் சுற்றமும்- நிகரற்ற உறவினர்களும் ; பக்கமும் - தன் அன்பிற்குரியநண்பர்களும் ; பெயர்க என - இவ்விடத்தை விட்டு அகல்க என்று சொல்லி; பரிவின்நீக்கினான்- அவர்களை அன்புடன் நீங்குமாறு செய்து; ஒக்க நின்று உலகுஅளித்து- பின்பு அவன் யாவரிடமும் சமமாக நின்று உலகத்தைக் காத்து ; யோகின் எய்திய சக்கரத்தவன் என - அறிதுயிலை அடைந்த சக்கரம் ஏந்திய திருமாலைப் போல ; தமியன் ஆயினான் -தனித்தவன் ஆயினான். மன்னர்கள் முதலியோர் அரசனை அரண்மனையிலிருந்து பின் தொடர்ந்துவந்தவர். சக்கரம் உடைமை, உலகு அளித்தல், தனியனாய் இருத்தல் ஆகியவற்றால் திருமால்தயரதனுக்கு உவமை ஆயினான். யோகு- அறிதுயில். மந்திராலோசனை ஆதலின் அன்புடையராயினும்அவர்களை அன்புடன் அகலச்செய்தான் என்க. 2 |