1317.பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன்
காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் என,
தேவரும், முனிவரும் உணரும், தேவர்கள்
மூவரின் நால்வர் ஆம், முனி வந்து எய்தினான்.

     பூ வருபொலன் கழல் - அழகு பொருந்திய பொன்னால் ஆன வீரக்
கழலை அணிந்த ;  பொரு இல் மன்னவன் காவலின் - நிகரில்லாத
அரசனான தயரதனின்ஆட்சியில் ;  ஆணை செய் கடவுள் ஆம் என -
கட்டளையிடும் கடவுளாக உள்ளான்என்னும்படி ;  தேவரும் முனிவரும்
உணரும்
- தேவர்களும் இருடிகளும் தேடி அறியும்; தேவர்கள் மூவரின்-
தேவர்களான நான்முகன், திருமால், சிவபிரான் என்றுசொல்லப்பெறும்
மூவர்களோடு சேர்த்து ;  நால்வராம் முனிவந்து எய்தினான் - நால்வராக எண்ணப்படுகின்ற வசிட்ட முனிவன்வந்து
சேர்ந்தான்.

     தயரதன் ஆட்சியில் அவனுக்கு ஆணையிடும் ஆற்றல் உடையவன்
வசிட்டன் என்றுவசிட்டனின் ஏற்றம் கூறப்பட்டது. அவன் அமைச்சருள்
முதல்வனும், புரோகிதனும், குலகுருவும் பிரமஇருடியுமாகத் திகழ்தலின்
அவன் வரவு தனியே பிரித்துரைக்கப்பட்டது. பொலன் கழல்-பொன்கழல். 4

அமைச்சர் மாண்பு