1318.குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,
பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார் ; 
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் ; 
சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார்.

     குலம் முதல் தொன்மையும் - குடிப்பிறப்பினது முதன்மையான
பழமையும் ; கலையின் குப்பையும் - கலை அறிவுகளின் தொகுதியையும்;
பல முதல் கேள்வியும்- பல சிறந்த கேள்வியறிவையும் ;  பயனும் -
அவற்றால் உளதாகும் பயனையும் ; எய்தினார் - பெற்றவர்கள் ;  நலம்
முதல் நலியினும்
- தமக்கு வரும்நலன்கள் வேரோடு கெடுவதாயினும் ;
நடுவு நோக்குவார் - நடுவு நிலைமையையேகாப்பவர்கள் ; சலம் முதல்
அறுத்து
- சினத்திற்கு மூலகாரணமான அகந்தையைக்கிழங்கோடு களைந்து;
அருந்தருமம் தாங்கினார் - அரிய அறங்களைப் போற்றுபவர்கள்.

     அமைச்சர்கள் குடிப்பிறப்பு, கல்பி, கேள்விச் சிறப்பு, நடுவு நிலைமை,
சினமின்மை ஆகிய பண்புகளோடு திகழ்ந்தனர் என்பது கூறப்பட்டது.
குப்பை - தொகுதி, மிகுதி.தாங்குதல் - போற்றிக் காத்தல். சலம் - கோபம்;
வஞ்சனையும் ஆம். முதல் -முதன்மை, சிறப்பு, வேர் என்னும் பல்வேறு
பொருளில் வந்தது.                                             5

அறுசீர் ஆசிரிய விருத்தம்