1324.முறைமையின் எய்தினர் முந்தி, அந்தம் இல்
அறிவனை வணங்கி, தம் அரசைக் கைதொழுது,
இறையிடை வரன்முறை ஏறி, ஏற்ற சொல்
துறை அறி பெருமையான் அருளும் சூடினார்.

     முறைமையின் எய்தினர் - அவ் அமைச்சர்கள் அரசவைக்குச்
செல்லுதற்குரிய முறைப்படியே அணுகி ;  முந்தி அந்தம் இல் அறிவனை
வணங்கி
-முதலில் முடிவில்லாத அறிவினையுடைய வசிட்ட முனிவனைப்
பணிந்து ;  தம் அரசைக்கைதொழுது - பின்னர்த் தம் அரசனாகிய
தசரதனைக் கைகூப்பிக் கும்பிட்டு ;  இறையிடை வரன்முறை ஏறி - தம்
இருக்கைகளில் வரிசைக்கேற்ப ஏறி ;  ஏற்ற சொல்துறை அறி
பெருமையான் -
சூழ்நிலைக்குத் தக்கவாறு பேசும் முறைமை அறிந்த
பெருமைக்குரியமன்னன் ; அருளும் சூடினார் - அருட்பார்வையையும்
பெற்றார்கள்.

     அந்தம் இல் அறிவன் - பேரறிவு நிறைந்தவன் ;  பிரம ஞானம்
வாய்க்கப் பெற்றவன். வணங்குதல் - குனிந்து நிலம் தொட்டுப் பணிதல் ;
தண்டன்சமர்ப்பித்தல். கைதொழுதல் - நின்றவாறே கைகூப்பிப் பணிதல்.
இறை - தவிசு.                                                 11