1326. | ‘வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர், செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே, வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால், ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன். |
வெய்யவன் குலம் முதல் வேந்தர் - சூரிய குலத்தில் தோன்றிய முதன்மையான அரசர்களாகிய ; மேலவர் -முன்னோர்களின் ; செய்கையின் - ஒழுக்கத்திலிருந்து ; ஒருமுறைதிறம்பல் இன்றியே - ஒருசிறிதும் வழுவுதல் இல்லாமல் ; வையம் -உலகத்தை ; ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு - அறுபதினாயிரம் ஆண்டுகள் ; நுங்கள்மாட்சியால் - உங்களதுநற்குண நற்செயல்களாகிய பேருதவியால் ; என் புயத்திடைத் தாங்கினேன் - என்தோள்களில் சுமந்தேன். செய்கை - ஒழுக்கம்.முறையும் என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தால்தொக்கது. அரசாட்சி பாரம் ஆதலின் தோள்களில் தாங்குவதாகக் கூறப்பட்டது. 13 |