1345. | அன்னர் ஆயினும், அரசனுக்கு, அது அலது உறுதி பின்னர் இல் எனக் கருதியும், பெரு நில வரைப்பில் மன்னும் மன்னுயிர்க்கு இராமனின் மன்னவர் இல்லை என்ன உன்னியும், விதியது வலியினும், இசைந்தார். | அன்னர் ஆயினும் - (மந்திரக் கிழவர்) அத்தன்மையராயினும் ; அரசனுக்கு - தயரதனுக்கு ; அது அலது உறுதி பின்னர் இல் எனக் கருதியும் -அவ்வாறு செய்வதன்றி நன்மை வேறில்லை என்று எண்ணியும்; பெரு நில வரைப்பில் - பெரிய நிலவுலகத்தில்; மன்னும் மன்னுயிர்க்கு- தங்கியிருக்கின்றநிலைபேறுடைய உயிர்களுக்கு ; இராமனின் மன்னவர் இல்லை - இராமனைப் போலச்சிறந்த அரசர் இல்லை ; என்ன உன்னியும் - என்று நினைத்தும் ; விதியது வலியினும் - விதியின் வலிமையாலும்; இயைந்தார் - (அரசன் கருத்துக்கு)உடன்பட்டனர். தயரதன் விருப்பத்தினை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. அவை : துறவு தயரதனுக்கு நன்மை தரும் என்று எண்ணியமை, இராமனைப்போன்ற சிறந்த அரசர் இல்லை என்று நினைத்தமை, இராமன் காடு செல்வதற்குரிய விதியின் வலிமைஎன்பன. 32 |