வசிட்டன் பேச்சு

1346.இருந்த மந்திரக் கிழவர்தம்
     எண்ணமும், மகன்பால்
பரிந்த சிந்தை அம் மன்னவன்
     கருதிய பயனும்,
பொருந்து மன்னுயிர்க்கு உறுதியும்,
     பொதுவுற நோக்கி,
தெரிந்து, நான்மறைத் திசைமுகன்
     திருமகன் செப்பும் :

     நான்முறைத் திசைமுகன் திருமகன் - நான்கு வேதங்களையுடைய
நான்முகனுக்கு மகனாகிய வசிட்டன் ;  இருந்த மந்திரக் கிழவர்தம்
எண்ணமும்
- அங்குக் கூடியிருந்த அமைச்சர்களின் கருத்தையும் ;
மகன்பால் பரிந்த சிந்தை - மகன்மீது அன்புகொண்ட ; அம் மன்னவன்
கருதிய பயனும்
- அந்தத் தயரதன் நினைத்த நினைப்பையும் ;  மன்
உயிர்க்குப்பொருந்தும் உறுதியும்
- அவற்றால் நிலைபெற்ற உயிர்களுக்கு
உண்டாகும் நன்மையையும் ; பொது உற நோக்கி - நடுவு நிலைமை
பொருந்த ஆராய்ந்து ;  செப்பும் -பின்வருமாறு சொல்வபவனானான்.

     பொதுவுற நோக்கல் - விருப்பு வெறுப்பின்றிச் சீர்தூக்கல். வசிட்டன்
பிரமதேவனுக்கு மானச புத்திரனாதலின் அவனைத் ‘திசைமுகன் மகன்’
என்றார்.                                                     33