1348.‘புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த
அண்ணலே! இனி, அருந் தவம் இயற்றவும அடுக்கும்;
வண்ண மேகலை நிலமகள், மற்று, உனைப் பிரிந்து
கண் இழந்திலள் எனச் செயும், நீ தந்த கழலோன்.

    ‘புண்ணியம் தொடர் - நற்பயன் தோன்றக் காரணமான; வேள்விகள்
யாவையும் புரிந்த அண்ணலே
- யாகங்கள் எல்லாவற்றையும் செய்த
பெரியோனே ! இனி அரு தவம் இயற்றவும் அடுக்கும் - நீ இனிமேல்
செய்தற்கு அரிய தவத்தைச் செய்தலும்தகும்; வண்ண மேகலை நிலமகள்-
அழகிய மேகலை என்னும் அணியினைப் பூண்ட

     பூமிதேவி ; உனைப் பிரிந்து - உன்னைவிட்டுப்பிரிவதனால்; கண்
இழந்திலள் என -
பற்றுக்கோடு இழக்கவில்லை என்றுசொல்லும்படி; நீ
தந்த கழலோன் செய்யும்
- நீ பெற்ற வீரக்கழலை அணிந்தஇராமன்
செய்வான்.

     ‘புண்ணியம் தொடர்’ என்னும் அடைமொழி, பிறர்க்குத் தீங்கிழைக்கும்
வேள்விகளும் உண்டு என்பதனைக் காட்டியது. தயரதன் நிலமகளுக்குக் கண்
போன்று இன்றியமையாதவனேயன்றிக் கண்ணாக ஆகான். ஆதலின்
அவன் பிரிவால் நிலமகள் பார்க்கும் கண்ணை இழப்பாள்என்பதனினும்
பற்றுக்கோடு இழப்பான் என்பதே தகும். கண் - பற்றுக்கோடு.          35