1354.மற்று, அவன் சொன்ன
     வாசகம் கேட்டலும், மகனைப்
பெற்ற அன்றினும்,
     பிஞ்ஞகன் பிடித்த அப் பெரு வில்
இற்ற அன்றினும், எறி
     மழுவாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும்,
     பெரியது ஓர் உவகையன் ஆனான்.

     அவன் சொன்ன வாசகம் கேட்டலும் - வசிட்ட முனிவன் சொன்ன
சொற்களைக் கேட்டவுடன் ;  மகனைப் பெற்ற அன்றினும் - நெடுங்காலம்
மகப்பேறுஇல்லாதிருந்து வேள்வி செய்து இராமனை மகனாகப் பெற்ற அந்த
நாளினும் ;  பிஞ்ஞகன்பிடித்த அப் பெரு வில் - தலைக்கோலமுடைய
சிவபிரான் ஏந்திய பிறரால் வளைத்தற்கு அரியஅந்தப் பெரிய
வில்லானது ; இற்ற அன்றினும் - இராமன் ஆற்றலுக்குப் போதாமல்
கணத்தில் ஒடிந்த நாளினும் ;  எறி மழுவாளவன் - அரசர்களை வெட்டி
வீழ்த்திய மழுஎன்னும் படை ஏந்திய பரசுராமன் ;  இழுக்கம் உற்ற
அன்றினும்
- தோல்வி அடைந்தநாளினும் ;  பெரியது ஓர் உவகையன்
ஆனான்
- மிகுந்த ஒப்பற்றமகிழ்ச்சியுடையவனாக ஆயினான்.

     இராமன் பிறந்த நாளில் தன் ஒருவன் துயரமும், வில் முரிந்த அன்று
சனகனாகிய பிறன் ஒருவன் துயரமும், பரசுராமன் தோல்வியுற்ற நாளில்
மன்னர் குலமாகிய பலரின்துயரமும் அகன்றன. ஆதலின், ஒன்றின்
மற்றொன்று மிக்க மகிழ்ச்சிக்கு அடியாய் அமைந்தது.இராமன் முடிசூடினால்
உயிர்க்குலம் அனைத்தும் இன்புறுமாதலின் அவற்றினும் இன்று பெரியதோர்
உவகையன் ஆயினான். ஈன்ற பொழுதினும் சான்றோன் எனக் கேட்ட
பொழுது தாய் மகிழ்வாள் என்பர்திருவள்ளுவர். தாயேயன்றித் தந்தையும்
மகிழ்வான் என்பது இதனால் போந்தது. பிஞ்ஞகன் : சடை (தலைக்கோலம்)
கொண்ட சிவபிரான் மழு - பரசு. இழுக்கம் - இழிவு; ஈண்டுத்தோல்வியைக்
குறித்தது.                                                     41