1356. | ‘எந்தை ! நீ உவந்து இதம் சொல, எம் குலத்து அரசர், அந்தம் இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி, முந்து வேள்வியும் முடித்து, தம் இரு வினை முடித்தார் ; வந்தது, அவ் அருள் எனக்கும்’ என்று உரைசெய்து மகிழ்ந்தான். |
‘எந்தை - என் தந்தை போன்றவனே ; நீ உவந்து இதம்சொல - நீ விரும்பி நன்மையானவற்றை எடுத்துக் கூற ; எம் குலத்து அரசர் - எம்முடைய சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்கள் ; அந்தம் இல் அரும் பெரும் புகழ்- அழிவு இல்லாத அரியதும் மிக்கதுமாகிய புகழினை ; அவனியில் நிறுவி -உலகில் நிலைபெறச் செய்து ; முந்து வேள்வியும் முடித்து - சிறந்த யாகங்களையும்நிறைவேற்றி ; தம் இருவினை முடித்தார் - தம் நல்வினை தீவினையாகிய இருவினைகளையும் வென்றார்; அவ் அருள் எனக்கும் வந்தது - அந்த அருட்பேறு எனக்கும் கிடைத்தது ;’ என்று உரை செய்து மகிழ்ந்தான் - என்று சொல்லி இன்புற்றான். 43 சுமந்திரன் கூற்று |