சுமந்திரன் இராமனைத் திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தல். 1361. | அலங்கல் மன்னனை அடிதொழுது, அவன் மனம் அனையான், விலங்கல் மாளிகை வீதியில் விரைவொடு சென்றான், தலங்கள் யாவையும் பெற்றனன் தான் எனத் தளிர்ப்பான், பொலன் கொள் தேரொடும் இராகவன் திருமனை புக்கான். |
அலங்கல் மன்னனை அடிதொழுது - மாலை அணிந்த தயரதனைத் திருவடிகளில்வணங்கி ; அவன் மனம் அனையான் - அத்தயரதனது மனத்தை ஒத்தவனான சுமந்திரன் ; விலங்கல் மாளிகை வீதியில் - மலைபோலும் மாளிகைகளையுடைய அரச வீதியில் ; விரைவொடு சென்றான் - விரைவாகச் சென்று ; தலங்கள் யாவையும் -உலகங்கள் எல்லாவற்றையும் ; தான் பெற்றனன் எனத் தளிர்ப்பான் - தானே அடைந்தவன்போல மனமகிழ்ச்சி யுடையவனாய் ; பொலன்கொள் தேரொடும் -பொன்மயமான தேருடன்; இராகவன் திருமனை புக்கான்- இராமபிரானதுதிருமாளிகையில் புகுந்தான். ‘அவன் மனம் அனையான்’ என்பது இராமன் திறத்தில் எல்லாரும் தயரதனைப்போலும் அன்பு நிறைந்த மனத்தராய் இருந்தமை காட்டும். ‘அவ் ஊர்ச், சாதுகை மாந்தர் எல்லாம்தயரதன் தன்னை ஒத்தார்’ (1560) எனப் பின்னும் வருதல் கருதத்தக்கது. அமைச்சன் சுமந்திரன்அரசன் குறிப்பறிந்து நடப்பவன் என்பார் ‘அவன் மனம் அனையான்’ என்றார். இராகவன் - இரகுமரபில் தோன்றியவன் ; தத்திதாந்த நாமம். 48 |