தேரில் சென்ற இராமனைக் கண்ட பெண்டிர் செயல் 1364. | முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட, மடவார் இறை கழன்ற சங்கு ஆர்த்திட, இமையவர், ‘எங்கள் குறை முடிந்தது’ என்று ஆர்த்திட, குஞ்சியைச் சூழ்ந்த நறை அலங்கல் வண்டு ஆர்த்திட, தேர்மிசை நடந்தான். |
முரசு - பேரிகைகள் ; முறையின் - வரிசையாக ; மொய்ம்முகில் என ஆர்த்திட - ஒன்றுசேர்ந்த மேகம் போல முழங்கவும் ; மடவார் இறை கழன்ற சங்கு ஆர்த்திட - மடப்பம் பொருந்திய பெண்களினுடைய முன்னங்கையினின்று கழன்று விழுந்த சங்கு வளையல்கள் ஒலிக்கவும் ; இமையவர் -தேவர்கள் ; எங்கள் குறை முடிந்தது என்று ஆர்த்திட- எங்கள் வருத்தம்தீர்ந்தது என்று ஆரவாரிக்கவும் ; குஞ்சியைச் சூழ்ந்த- தன் திருமுடியில்சுற்றியிருந்த; நறை அலங்கல் வண்டு - தேன் சொரியும் கண்ணிகளில் மொய்த்தவண்டுகள் ; ஆர்த்திட - ஒலிக்கவும் ; தேர்மிசை நடந்தான் -தேரில் சென்றான். இறை - முன்கை ; சங்கு - வளை; சங்கினால் செய்யப்பட்டமையின் இப் பெயர் பெற்றது. மடவார் என்பது மடப்பம் பொருந்திய பெண்களைக் குறித்தது. 51 |