1366.நீள் எழுத் தொடர் வாயிலில்,
     குழையொடு நெகிழ்ந்த
ஆளகத்தினோடு அரமியத்
     தலத்தினும் அலர்ந்த ; 
வாள் அரத்த வேல்
     வண்டொடு கெண்டைகள் மயங்க,
சாளரத்தினும் பூத்தன.
     தாமரை மலர்கள்.

     நீள் எழுத் தொடர் வாயிலில் - நீண்ட தூண்கள் அமைந்த
மாளிகைவாயில்களிலும் ; அரமியத் தலத்தினும் - அவற்றின் நிலா
முற்றங்களிலும் ;  குழையொடு - குண்டலங்களொடும் ;  நெகிழ்ந்த
ஆளகத்தினோடு
- அவிழ்ந்தகூந்தலொடும் ;  தாமரை மலர்கள் -
பெண்களின் முகங்களாகிய தாமரை மலர்கள் ; அலர்ந்தன - மலர்ந்தன ;
சாளரத்தினும் - அவை அம் மாளிகைகளின்பலகணிகளிலும் ;  வாள்
அரத்தம் வேல் வண்டொடு கெண்டைகள் மயங்க -
வாளொடும்குருதி
தோய்ந்த வேலொடும் வண்டுகளொடும் கெண்டைகள் கலந்து நிற்க ;
பூத்தன -மலர்ந்தன.

     வீதியில் வந்த பெண்களே யன்றி, வேறு சிலர் மாளிகை
வாயில்களிலும் நிலா முற்றங்களிலும் இருந்து இராமனைக் கண்டனர் என்பது
கருத்து. புருவம் வாளாகவும், செவ்வரிபடர்ந்த கண் குருதி படிந்த
வேலாகவும், கருவிழி வண்டாகவும், புடைபெயரும் கண்கள்
கெண்டையாகவும்கூறப்பட்டன. ஆளகம் - அளகம் என்பதன் நீட்டல்
விகாரம் ;  அளகம் - கூந்தல்.                                   53