1367.மண்டலம் தரு மதி கெழு,
     மழை முகில் அனைய,
அண்டர் நாயகன் வரை புரை
     அகலத்துள் அலங்கல்,
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும்,
     நாணொடும், தொடர்ந்த
கெண்டையும் உள ; கிளை பயில்
     வண்டொடும் கிடந்த.

     மண்டலம் தரு மதி கெழு - வட்ட வடிவமாகிய சந்திரன் போலும்
முகம் அமைந்த ;  மழை முகில் அனைய - கரிய மேகத்தைப் போன்ற ;
அண்டர் நாயகன் - தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானது ;
வரைபுரை அகலத்துள்அலங்கல் - மலையை நிகர்த்த மார்பில் உள்ள
மாலையில் ;  தொண்டைவாய்ச்சியர் - கொவ்வைக் கனி போன்ற சிவந்த
இதழ்களைக் கொண்ட மகளிரின்; நிறையொடுங் நாணொடும் தொடர்ந்த-
மனவடக்கமும் நாணமும் ஆகிய பண்புகள் முன்னேபோகப் பின்னே
தொடர்ந்த; கெண்டையும் உள - விழிகளாகிய கெண்டைகளும்உள்ளன;
கிளை பயில் வண்டொடும் கிடந்த - அவை அந்த மாலையில் முன்னரே
தேனைநாடிவந்து உள்ளனவாகிய கிளை என்னும் இசையைப் பழகிய
வண்டுகளோடு தங்கின.

     மண்டலம் தருமதி என்பது முழுமதியைக் குறித்தது. ஈண்டு மதி
ஆகுபெயராய். அதுபோலும் இராமபிரானது முகத்தைச் சுட்டியது.
இராமபிரான் திருமுகத்துக்குச் சந்திரனும்,திருமேனிக்கு மழைமுகிலும் ஒப்பு.
கிளை - கைக்கிளை என்னும் பண்.                               54