1368. | சரிந்த பூ உள, மழையொடு கலை உறத் தாழ்வ ; பரிந்த பூ உள, பனிக் கடை முத்துஇனம் படைப்ப ; எரிந்த பூ உள, இள முலை இழை இடை நுழைய ; விரிந்த பூ உள, மீனுடை வானின்றும் வீழ்வ. |
மழையொடு கலை உறத் தாழ்வ - மேகம் போன்று வீழ்வனவாகிய கூந்தலொடு உடைகளும் நிலத்தை அடைய ; சரிந்த பூ உள - சிந்திய பூக்கள்உள்ளன ; பனிக் கடை முத்து இனம் படைப்ப - குளிர்ச்சி பொருந்தியகடைக்கண்கள் முத்துக் கூட்டங்களைத் தோற்றுவிக்க ; பரிந்த பூ உள - அவர்கள்எடுத்தெறிந்த மலர்களும் உள்ளன; இளமுலை இழை இடை நுழைய - இளமையான மகளிர்தனங்களில் கிடந்த அணிகலன்களின் ஊடே நுழைதலால் ; எரிந்த பூ உள - கருகிய பூக்களும் உள்ளன ; மீனுடை வானின்று வீழ்வ - விண்மீன்கள் நிறைந்த வானத்திலிருந்து தேவர்கள் வீசுதலால் வீழ்வனவாகிய ; விரிந்த பூ உள - நன்றாகமலர்ந்த மலர்களும் உள்ளன. இராமன் தேர் சென்ற வீதியில் மகளிர் விரகத்தால் சரிந்தனவும், பரிந்தனவும், எரிந்தனவும் ஆகிய மலர்களும், விண்ணவர் மகிழ்ச்சியால் சொரிந்த மலர்களும்கிடந்தன. தாழ்வ, வீழ்வ - வினையாலணையும் பெயர்கள். இளமுலை இழை - ஏழாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை. மகளிர் சூடிய பூக்கள் வீழ்வது தீக்குறி (அபசகுனம்) ஆகும். இராமனுக்குத் துன்பம் நேரவிருப்பதைச் சுட்டுவதாக அமைவன. 55 |