1372. | ‘நலம் கொள் மைந்தனைத் தழுவினன்’ என்பது என்? நளி நீர் நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான், விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும் அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். |
நலம்கொள்மைந்தனை - நன்மைகள் அனைத்தையும் கொண்ட தன்மகனாகிய இராமனை ; தழுவினன் என்பது என் -தந்தையாகிய தயரதன்அணைத்துக்கொண்டான் என்று சொல்வது எதன்பொருட்டு? ; நளிநீர்நிலங்கள் - பெரிய நீரையுடைய கடலால் சூழப்பட்டமண்ணுலகை ; தாங்குறு நிலையினை - போற்றிக் காத்தற்குரியஇராமனுடைய நிலையை ; நிலையிட நினைந்தான் - அளந்து பார்க்கக்கருதி ; விலங்கல் அன்ன திண்தோளையும் - இராமனுடைய மலைபோன்ற திண்மை வாய்ந்த தோள்களையும் ; மெய்த்திரு இருக்கும் அலங்கல் மார்பையும்- உண்மையான திருமகள் உறையும் மாலையணிந்தமார்பையும் ; தனது தோள் மார்பு கொண்டு - தன்னுடைய தோள்களையும் மார்பையும் கொண்டு ; அளந்தான் - அளவிட்டான். தயரதன் இராமனைத் தழுவியதற்குக் காப்பிய ஆசிரியர் ஒரு காரணம் கற்பித்துக் கூறலின் இது தற்குறிப்பேற்ற அணி. நினைந்தான் - முற்றெச்சம். மன்னன் மார்பில்திருமகள் உறைவதாகச் சொல்வது மரபு. இராமன் திருமாலே ஆதலின் அவன் மார்பில் உறைபவளை‘மெய்த்திரு’ என்றார். 59 |