1376. ‘மைந்த ! நம் குல மரபினில் மணி முடி வேந்தர்,
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க,
ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி,
உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார்.

     ‘மைந்த - மகனே !  நம்குல மரபினில் மணிமுடி வேந்தர் -
நமது சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய முடிசூடி ஆண்ட வேந்தர்கள் ;
தம் தம்மக்களே - தம் தம் பிள்ளைகளே ;  கடன்முறை நெடு நிலம்
தாங்க
- முறைப்படிநெடிய உலகை அரசர்களாகிக் காப்பாற்ற; ஐந்தொடு
ஆகிய முப்பகை
- ஐந்துபொறிகளால் உண்டாகிய மூன்று பகைகளையும்;
மருங்கு அற அகற்றி - வேரோடுநீக்கி ;  உய்ந்து போயினர் -
பிழைத்துப் போனார்கள் ;  ஊழிநின்று எண்ணினும் - அவ்வாறு
உய்ந்தவர்களை ஊழிக்காலம் இருந்து எண்ணினாலும் ;  உலவார் -
குறையார் (எண்ணற்றவர் என்றவாறு)’

     ஐந்தொடு ஆகிய முப்பகை - ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண்,
மூக்கு,செவி ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படும் காமம், வெகுளி, மயக்கம்
என்னும் பகைகள். ஐந்தொடு- ஒடு உருபு ஐந்தால் எனப் பொருள்பட்டுக்
கருத்தாப் பொருளில் வந்தது. ‘ஊழி நின்று எண்ணினும்உலவார்’ என்றது
எவ்வளவு காலம் நின்று எண்ணினாலும் எண்ணி முடிவுகாண முடியாதவாறு
மிகப் பலராவர்என்பதனைக் காட்டிற்று.                           63