1379. | ‘ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்றாக நாளும் நம் குல நாயகன் நறை விரி கமலத் தாளின் நல்கிய கங்கையைத் தந்து, தந்தையரை மீள்வு இலா உலகு ஏற்றினான் ஒருமகன், மேல்நாள். |
‘மேல்நாள் - முற்காலத்தில்; ஒருமகன் -ஒப்பற்றவனாகிய பகீரதன்; ஆளும் நல்நெறிக்கு - தாம் நுகரக்கூடிய(வீட்டுக்குரிய) நல்ல வழிக்கு ; அமைவரும் அமைதி இன்றாக - பொருந்தும் தன்மைதன் முன்னோர்களுக்கு இல்லாமற்போனதால் ; நாளும் - (அவர்கள் உய்வின் பொருட்டு) எந்நாளும் ; நம்குலம் நாயகன் - நமக்குக் குல தெய்வமாகிய திருமாலின் ; நறை விரி கமலத் தாளின் - தேன் நிறைந்த தாமரை போலும்திருவடிகளினின்றும் ; நல்கிய கங்கையைத் தந்து - வெளிப்படுத்திய கங்கையாற்றைஇவ்வுலகில் கொண்டுவந்து ; தந்தையரை மீள்வு இலா உலகு - தன் முன்னோர்களை(சகர புத்திரர்களை) மீண்டு வாராத வீட்டுலகத்தில் ; ஏற்றினான் -ஏறச்செய்தான்.’ மக்கட் பேற்றின் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டாகப் பகீரதன் வரலாற்றினை எடுத்துக் காட்டுகிறான். நம்குலம் - இக்குவாகு குலம். மீள்வு இலா உலகு - திருநாடு ; வீடு. 66 |