தயரதன் மகிழ்ந்து, தன் அரண்மனைக்குப் போதல் 1383. | குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான், ‘தருதி இவ் வரம்’ எனச் சொலி,. உயிர் உறத் தழுவி, சுருதி அன்ன தன் மந்திரச் சுற்றமும் சுற்ற, பொரு இல் மேருவும் பொரு அருங் கோயில் போய்ப் புக்கான். |
குருசில் சிந்தையை - இராமனது மனக் கருத்தை; மனம் கொண்ட கொற்ற வெண்குடையான்- உட்கொண்ட வெற்றி பொருந்திய வெண்குடையை யுடையவனாகிய தயரதன்; ‘இவ் வரம் தருதி -இந்த வரத்தைத் தருவாய்;’ எனச் சொலி - என்று சொல்லி; உயிர் உறத்தழுவி- அவனைத் தன் உயிரோடு பொருந்தும்படி இறுக அணைத்துக் கொண்டு; சுருதி அன்ன - வேதத்தையொத்த; தன் மந்திரச் சுற்றமும் சுற்ற - தன்னுடைய அமைச்சர்களின் கூட்டமும் தன்னைக்சூழ்ந்துவர; பொரு இல் மேருவும் - ஒப்பு அற்ற மேரு மலையும்; பொரு அருங் கோயில்- ஒப்பாவதற்கு அரிய தன் அரண்மனையில்; போய்ப் புக்கான் - போய்ச் சேர்ந்தான். நன்மை தீமைகளை ஆராய்ந்து அரசனுக்குச் சொல்லி நீதி வழி நிறுத்துதல் பற்றி அமைச்சர்களுக்குச்சுருதியை உவமையாகக் கூறினார். மேருவும் - உம்மை. உயர்வு சிறப்பு. 70 |