இராமன் தன் அரண்மனை சேர்தல் 1384. | நிவந்த அந்தணர், நெடுந் தகை மன்னவர், நகரத்து உவந்த மைந்தர்கள், மடந்தையர், உழைஉழை தொடர, சுமந்திரன் தடந் தேர்மிசை, சுந்தரத் திரள் தோள் அமைந்த மைந்தனம், தன் நெடுங் கோயில் சென்று அடைந்தான். | நிவந்த அந்தணர்- உயர்ந்த வேதியரும்; நெடுந்தகைமன்னர் - பெருந்தன்மை பொருந்தியஅரசர்களும்; நகரத்து உவந்த மைந்தர்கள் - அயோத்தி நகரத்தில்வாழும் தன்னைக் காணுதலில் பெருமகிழ்ச்சி யடையும் இளைஞர்களும்; மடந்தையர் - பெண்களும்;உழை உழை தொடர - பக்கங்களிலே சூழ்ந்துவர; சுந்தரத் திரள்தோள்அமைந்த மைந்தனும் - அழகிய திரண்ட தோள்களையுடையஇராமனும்; தன் நெடுங் கோயில் - தனது பெரிய மாளிகையை; சென்று அடைந்தான்- போய்ச் சேர்ந்தான். நிவப்பு - உயர்வு குலம், அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்தோர் அந்தனர் ஆவர். தாடகையைக்கொன்று, சிவன் வில்லை முறித்து, பரசுராமன் செருக்கினை அழித்ததோடு கட்டழகும் நிறைந்திருப்பவையாதலின் இராமன் தோள்கள் ‘சுந்தரத் திரள் தோள்’ என்று சிறப்பிக்கப்பட்டன. மைந்தனும் - உம்மை இறந்தது தழுவியது; தந்தை போனபின் தனயனும் சேர்ந்தான் என்பதை உணர்த்தியது. 71 |