தயரதன் வினாவும் வேத்தவையின் விடையும்

1390.வேறு இலா மன்னரும் விரும்பி, இன்னது
கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன்,
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான்.
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான்.

     வேறு இலா மன்னரும் விரும்பி - கருத்து மாறுபாடில்லாத
மன்னரும் இராமன் முடிசூடுதலை விரும்பி; இன்னது கூறினார் - இவ்வாறு
கூறினர்;  அது மனம் கொண்ட கொற்றவன் -அதனைக் கருத்தில்
கொண்ட தயரதன்;  ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் -
தன்னுள்ளேசுரந்த மகிழ்ச்சியை வெளிப்படாது மறைக்கும் கருத்தினனாய்;
மாறும் ஓர் - பிறிதொரு;அளவை சால்வாய்மை கூறினான் - (அவர்கள்
மனத்தை) அளத்தற்குரிய ஒரு வாய்ச்சொல்லைச்சொன்னான்.

     வேறிலா மன்னர் - கருத்தொருமித்த மன்னர்கள். வாய்மை -
வாய்ச்சொல்.  அளவை சால்வாய்மை - அளந்தறியும் சொல்.          77