1391.‘மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது
புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம்,
உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ?
தகவு என நினைந்தது எத் தன்மையால்?’ என்றான்.

     ‘மகன்வயின் அன்பினால் மயங்கி - (தயரதன் அரசர்களை நோக்கி)
என்மகன்மீது கொண்ட பாசத்தினால் அறிவு மயங்கி;  யான் இது புகல -
நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்க; நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் -
(அதற்கு இணங்கி) நீங்கள் சொன்ன இந்தப்பொலிவு பெற்ற வார்த்தை;
உகவையின் மொழிந்ததோ - மன மகிழ்ச்சியினால் புகன்றதோ?;தகவு
என நினைந்தது -
தகுதி என்று கருதியது; எத் தன்மையால் என்றான் -
எவ்வகையினால்’ என்று வினவினான்.

     உகவை - மகழ்ச்சி; உகவையான் நெஞ்சம் உள்ளுருகி என்பது 
நம்மாழ்வார் வாக்கு (திருவாய்மொழி6.2.9).                        78