1394. | ‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர் பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும், கார் மழை பொழியவும், கழனி பாய் நதி வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.? |
‘ஊருணி நிறையவும் - ஊராரால் உண்ணுதற்குரிய நீர்நிலை நீரால் நிறையவும்; உதவும் மாடு உயர் - பலர்க்கும் உதவத்தக்க இடத்தில் வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம்- உலகத்தார் விழையும் பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் - பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் - மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி -வயல்களில் பாய்கிற ஆறு; வார்புனல் பெருகவும் - மிக்க நீர் பெருகவும்; மறுக்கின்றார்கள்யார் - வேண்டாம் என்று தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’ இவ்வெடுத்துக்காட்டுகளால் இராமன் பிறர்க்கு நன்மை செய்யும் ஒப்புரவாளன் என்பது தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் குறளில் (215) வரும் உவமையினை ஊருணி நிறையவும் என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம், நயனுடையான்கண்படின்” (216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகை யான்கண் படின்“(217) என்னும் குறட்பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழுபயன்மரம்” என்றும் சுருங்கச் சொல்லியுள்ள திறம் எண்ணி மகிழ்தற்குரியது. 81 |