1395.‘பனை அவாம் நெடுங் கரப் பரும யானையாய்!
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன்னுயிர்க்கு,
எனையவாறு அன்பினன் இராமன், ஈண்டு, அவற்கு
அனையவாறு அன்பின அவையும்’ என்றனர்.

     ‘பனை அவாம் நெடுங் கரப் பரும யானையாய் - பனை மரம்
போன்ற நீண்ட  துதிக்கையையும்,அம்பாரியையும் உடைய யானையை
உடைய அரசே!; நினை அவாம் தன்மையை நிமிர்ந்த - உன்னை
விரும்பும் தன்மையை மிகுதியாகக் கொண்டிருந்த;  மன் உயிர்க்கு -
நிலைபேறுடைய உயிர்களிடத்தில்; ஈண்டு இராமன் எனையவாறு
அன்பினன் -
இங்கே இராமன் எவ்வாறு அன்புடையவனாய்
இருக்கின்றானோ;  அனையவாறு அவையும் அவற்கு அன்பின -
அவ்வாறு அவ்வுயிர்களும் அவனிடத்தில்அன்புடையனவாய் இருக்கின்றன;
என்றனர் - என்று கூறினர்.

     இராமன் மக்களிடத்தும், மக்கள் அவனிடத்தும் காட்டிய அன்புத்திறன்
இங்குச் குறிக்கப்பட்டது.பாலகாண்டத்துள் 308 - 312 ஆத்ம பாடல்களில்
இத்தன்மை

     குறிக்கப்பட்டுள்ளமை ஒப்புநோக்கற்கு உரியது. மன்உயிர்க்கு,
அவற்கு - வேற்றுமை  மயக்கங்கள்;‘கு’ உருபு ஏழாம் வேற்றுமையில்
மயங்கியது.                                                   82