1397. | ‘செம்மையின், தருமத்தின், செயலின், தீங்கின்பால் வெம்மையின், ஒழுக்கத்தின் மெய்ம்மை மேவினீர். என் மகன் என்பது என் ? நெறியின், ஈங்கு, இவன் நும் மகன்; கையடை; நோக்கும் ஈங்கு’ என்றான். |
‘செம்மையின் - (தயரதன் அரசர்களை நோக்கி) நடுநிலைமையிலும்; தருமத்தின்- அரசியல் அறத்திலும்; செயலின் - நற் செய்கையிலும்; தீங்கின்பால் வெம்மையின்- திச்செயல்களில் கொண்ட வெறுப்பிலும்; ஒழுக்கத்தின் நடத்தையிலும்; மெய்மை மேவினீர்- உண்மையாக இருப்பவர்களே!; இவன் ஈங்கு - இவ்விராமன் இனிமேல்; என்மகன் என்பது என் - என் பிள்ளை என்று சொல்லுவது ஏன்?; நும் மகன் - உங்கள்பிள்ளையாவான்; கையடை - அவனை உங்களிடம் அடைக்கலமாக்கினேன்; ஈங்கு நோக்கும்என்றான் - இங்கே அவ்வாறே கருதிப்பேணுங்கள்’ என்றான். இவனை என்மகன் என்ன வேண்டா; உங்கள் மகனாகக் கொண்டு போற்றுங்கள் எனத் தயரதன் கூறினான்.நோக்கும் - பேணுங்கள்; முன்னிலை வினைமுற்று. 84 |